Tuesday, December 8, 2020

பத்து செகண்ட் முத்தம் - சுஜாதா

 கைமாறு என்பதற்கான சரியான ஆங்கிலச் சொல் என்ன?

இந்தக் கேள்விக்கு பதிலளிக்கு முன்பாக, அரைமணி நேரத்திற்கு முன்பாக வாசித்து முடித்த சுஜாதாவின் “பத்து செகண்ட் முத்தம்” குறுநாவல் பற்றிய என பார்வையைப் பகிர விரும்புகிறேன்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் வாசித்த சுஜாதா புத்தகம் இது. வாசித்து முடித்த போது “ஏன் இதை இது நாள்வரை வாசிக்காது விட்டுவிட்டேன்” என்று என்னையே கேட்டுக் கொண்டேன்.

நாவலின் தலைப்பு.“ பத்து செகண்ட் முத்தம்”. கமலஹாஸன் ஸ்டைலில் எதுக்கடா நாவலுக்கு இந்த முத்தத் தலைப்பு என்று நாவலை வாசிக்க ஆரம்பித்தபோது நினைத்தேன். ஆனால் வாசித்து முடித்தபோது, எழுத்தாளரின் “கைவண்ணம்” தெரிந்தது.

அஃதாவது, நூறு மீட்டர் ஓட்டத்தை 11.7 செகண்டில் சாதித்த தமிழரசியை, ஒலிம்பிக்கிற்கு தயார்படுத்த பத்து செகண்டில் ஓடச் சொல்கிறார் கோச் ராஜ்மோகன். ‘10 செகண்ட்ல நூறு மீட்டர் தூரத்துல இருக்கற டேப்பை முத்தமிடணும்’ என்கிறார். அதுதான் பத்து செகண்ட் முத்தம்.

இதுதான் சுஜாதாயிஸம்...

மாமா ராஜ்மோகனின் திடீர் மரணம் தமிழரசியை உலுப்பியெடுத்துவிடுகின்றது. அதிலும் தன்னை “அவர் காதலித்ததாகவும், என்னைப் புதைச்ச இடத்தில புல்லு முளைச்சு, என் மார்மேல யாராவது ஓடினாச் சரி” என்று கடிதத்தில் எழுதி வைத்துச் சென்றது, அவளை ஒரேயடியாகக் கவிழ்த்து விடுகின்றது.

“அந்த மனுஷனுக்குச் செய்யுற சின்னக் கைம்மாறு, கேட்ட பத்து செக்கன்டிலே டேப்பை தொட்டே ஆவது” என்று சொல்லிவிட்டு, தன்னை நோக்கி இழுத்த காதலனின் கைகளை உந்தித் தள்ளிவிட்டு

“பத்து செகன்ட் முத்தம் எல்லாம் அப்புறந்தான்‘ என்று போடுகிறாள் ஒரு போடு!

இங்கே இந்தக் கேள்வியின்“கைம்மாறு” என்பது என்னவென்று உங்களுக்குப் புரிந்திருக்கும்.

செய்நன்றி மறவாது இன்னொன்றைச் செய்தல்தான் கைம்மாறு. ஆங்கிலத்தில் recompense என்று சொல்லலாம். தமிழில் இதைப் பிரதியுபகாரம் என்று கூடச் சொல்லலாம்.

இந்தக் குட்டி நாவலில் சுஜாதாவின் முத்திரை பதித்த மற்றோர் இடம்.

ஒரு குருவி வாங்க ஆசைப்படுகிறாள் தமிழரசி.

மனோகர்: ‘அதையெல்லாம் வளர்க்கிறது கஷ்டம்”

“வளர்க்கறதுக்கில்லை. வாங்கிக் கூட்டில இருந்து திறந்து வெளிய விட்டுர்றதுக்கு” என்றாள் தமிழரசி .

“சரிதான். வெளிய விட்டாப் பத்து நிமிஷத்தில செத்துப் போயிரும். காக்கா, பருந்து ஏதாவது அல்வாத்துண்டு மாதிரி கொத்திக்கிட்டுப் போயிரும். சில பறவைகளை எல்லாம் வெளிய விடக்கூடாது!” ”

ஒரு பெரிய விடயத்தை எவ்வளவு அழகாகச் சொல்கிறார் சுஜாதா?

அலெக்ஸான்டர் த கிரேட்-வாளெடுத்த போராளி

சுஜாதா த கிரேட்- பேனாமுனைப் போராளி

No comments:

Post a Comment