Tuesday, December 8, 2020

மராட்டிய மண்ணின் ஆன்மீக நினைவுகள்- பகுதி 37

 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻38🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

மராட்டிய மண்ணில் ஒரு பயணம் 38

                   ஷீரடி

மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வேப்ப மரத்தடியில் இருந்த பாபாவை எல்லாரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக துவாரகாமாயி மசூதியில் தங்குவதற்கு அழைத்து சென்றனர்.

அந்த சமயத்தில் அந்த மசூதி மிகவும் இடிந்து, தகர்ந்து பழுதுபட்ட நிலையில் இருந்தது. நிறைய பக்தர்கள் மசூதியை செப்பனிட்டுத் தர முன் வந்தனர். அதை ஏற்காத பாபா தானே அதை சீரமைத்து, தினமும் துவாரகாமாயியில் விளக்குகள் ஏற்றி ஜொலிக்க செய்தார்.பாபா, அந்த மசூதியின் உள்ளே இடது பக்க நேர் ஓரத்தில் அமர்வதை வழக்கமாக கொண்டிருந்தார். 

அங்கு இருந்துதான்  அவர் இந்த உலகமே வியக்கும் வண்ணம் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி காட்டினார். இதனால் பாபாவை நம்பிய மக்களுக்கு துவாரகாமாயி தலம், கலங்கரை விளக்காக மாறியது.

மன சஞ்சலத்துடன் வந்த ஒவ்வொருவரும் துவார காமாயியில் காலடி எடுத்து வைத்த மறுநிமிடமே, தங்கள் மன பாரம் நீங்கி விட்ட உணர்வை பெற்றனர். 

சாய்பாபா தன் கடைசி மூச்சை துவாரகாமாயியில் தான் விட்டார். எனவே சாய்பாபாவின் அருள் நிரம்பப் பெற்றதாக துவாரகாமாயி கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புடைய துவாரகாமாயிக்கு நாம  அவசியம் ஒரு தடவையாவது நேரில் சென்று தரிசித்து பலன் பெற வேண்டாமா?

 சமாதி மந்திரை ஒட்டி யபடி அருகிலேயே துவாரகாமாயி உள்ளது.. அங்குதான் தூனி எனும் நெருப்புக் குண்டம் உள்ளது. இந்த நெருப்பு சாய் பாபாவால் ஏற்றி வைக்கப் பட்டது. பல ஆண்டுகளை கடந்து அந்த நெருப்புக் குண்டம் இரவு-பகலாக இப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.

இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான வரலாறு உள்ளது. சாய்பாபா சுக்கா எனும் மண்குழல் மூலம் புகை பிடிப்பார். அதற்கு நெருப்பு தேவைப்படும் போதெல்லாம் பாபாவின் பக்தர்கள் வெளியில் சென்று வாங்கி வருவார்கள். ஒருதடவை மகல்சாபதி “பாபா... நெருப்பு பெறுவதற்காக அடிக்கடி வெளியில் செல்வது சிரமமாக உள்ளது. எனவே இங்கேயே நிரந்தரமாக நெருப்பு இருக்கும்படி செய்யுங்கள்” என்றார். உடனே பாபா, “நிரந்தரமாகத்தானே..... செய்து விடலாம்” என்று கூறி தன் கையில் இருந்த குச்சியால் தரையில் தட்டினார். உடனே அங்கிருந்து நெருப்பு பீறிட்டு வந்து எரிந்தது.

அதில் மட்டை தேங்காய், மரக்கட்டைகள் மற்றும் நறுமணப் பொருட்களை எரித்தனர். இதன் மூலம் கிடைத்த சாம்பல் “உதி” என்று அழைக்கப்பட்டது.

உதி பற்றி பாபா கூறுகையில், “இந்த நெருப்பில் இருந்து வரும் சாம்பல், என் சக்திகள் அனைத்தையும் ஒருங்கே கொண்டது. இதற்காகவே சீரடியில் அக்னி பகவான் நிரந்தரமாக குடியேறி விட்டார். எனவே இதை அருள்பிரசாதமாக பயன்படுத்துங்கள்” என்றார்.

அந்த உதியை பாபா, தன் பக்தர்களுக்கு திருநீறாக கொடுத்தார். இன்றும் இந்த உதி எனும் சாம்பலை சர்வரோக நிவாரணியாக பக்தர்கள் கருதுகிறார்கள். இத்தகைய சிறப்புமிக்க நெருப்பு குண்டம் தற்போது தகரத்தால் சுற்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளது. நாம் அதை தொட்டு வணங்கலாம்.

துவாரகாமாயியை அடுத்து சுமார் 50 அடி தூரத்தில் சாவடி உள்ளது. சாவடி என்றால் மக்கள் கூடிப் பேசும் பொது இடம். அந்நாளில் யாத்திரீகர்கள் தங்கிச் செல்லவும் இந்தச் சாவடி பயன்பட்டது. இரண்டு அறைகள், ஒரு வராண்டா கொண்ட சிறு அமைப்பை கொண்டது சாவடி. 

இன்று பளிங்கு மாளிகையாக இருக்கும் இந்த சாவடி அந்த நாளில் பாபாவின் திருவடி பட்டு பலரது நோய்நொடிகளை தீர்த்த புனித மண்ணைக் கொண்டிருந்தது. 

வியாழக்கிழமைகளில் பாபாவின் திருவுருவம் துவாரகாமாயியில் இருந்து சாவடிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.பாபாவின் அருள் நிறைந்த இடங்களுள் சாவடி முக்கியமானது. 

.பாபா பயன்படுத்திய நாற்காலி, சக்கர நாற்காலி, பலகை, பல்லக்கு, விசிறி போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

லெண்டித் தோட்டம்:

இங்கு தான் பாபா முற்பகலில் தனியே செருப்பு அணிந்து உலாவி வந்தார். இதன் நடுவில் நந்தா விளக்கும், தந்தாத்ரேயர் உருவச் சிலையும் உள்ளன. தத்தருக்குப் பின்புறம் எதிர் திசை நோக்கியபடி ஸ்யாம சுந்தர் குதிரை உருவச் சிலை உள்ளது. லெண்டியில் உள்ள கிணறும் பாபாவின் திருக்கரங்களால் நீர் இழுத்துப் பயன்படுத்திய பாக்கியம் பெற்றது.

மாருதி கோயில்:

சாவடியின் பின்புறத்தில் சுமார் 100 அடிக்குள் அனுமார் கோயில் உள்ளது. இதில் இரண்டு அனுமார் சிலைகள் உள்ளன. சிலைகளுக்குச் செம்மண் குழைத்துப் பூசியுள்ளனர். அவைகளின் மேல் இலைகள் சாத்தப்படுகின்றன.

இக்கோயிலும் பாபாவோடு சம்பந்தப்பட்டதே.

(By சுஜாதா&வெங்கடேசன்…6381369319)

படங்கள் துவாரகாமயி,உதி நெருப்பு,சாவடி,பாபா குளிக்கும் கல்,






No comments:

Post a Comment