#ஆதிகுடி காபி க்ளப்.
திருச்சி WB ரோட்டில் உள்ள 101 ஆம் ஆண்டைக் கொண்டாடும் ஒரு ஹோட்டல். என்றும் என் நினைவிலும், நாவிலும் நிற்கும்.
100 வருடங்களான ஹோட்டல்கள் அரிதிலும் அரிது. ஆனால் பழமையைக் காப்பதில் இவர்களுக்கு நிகர் எவருமில்லை.
ஓடும், தகரமும் வேய்ந்த கூரை. ஆடம்பரமில்லா எளிமையான பெயர்ப் பலகை. இரண்டு அறைகள் கொண்ட ''ஒரு வீடுன்னும் சொல்ல முடியாது ; ஒரு ஹோட்டல்ன்னும் சொல்ல முடியாது'' ரக அமைப்பு.
உள்ளே நுழைந்ததும் எதிரே தேக்கு மர ஷோ - கேஸ். அதனுள் இனிப்பு, கார வகைகளும் இலைகள், தாள்கள் மற்றும் பஞ்சு மிட்டாய் கலரில் நூற்கண்டு ஆகியவை பார்சல் கட்ட வாகாகக் காத்திருக்கும்.
முனகும் நாற்காலியில் உட்கார்ந்ததும் கல்லா பெட்டியில் இருக்கும் முதலாளி பெரிய கொண்டை கொண்ட பிரிட்டிஷ் காலத்து காற்றாடியை சுழல விடுவார். சுழற்சியை உறுதி செய்யும் வண்ணம் ஒவ்வொரு நான்காவது நொடிக்கும் ஒரு 'டக்' சத்தம் கேட்கும். மற்றபடி காற்றெல்லாம் வராது.
சர்வர் /சப்ளையர் பெரும்பாலும் வேட்டியை மடித்துக் கட்டியிருப்பார்கள். சிலர் சட்டை கூட அணிய மாட்டார்கள். மை.ம.காமராசன் அம்பியை நினைவுறுத்தும் தோற்றம். நட்புடன், ''என்னண்ணா சாபிட்றீங்க ''ன்னு கேட்டுக்கொண்டே தண்ணீர் மற்றும் சாம்பார் சட்னி கொண்ட சிறிய வாளிகளை மேஜையில் வைப்பார்கள்.இலையில் சாப்பிட்ட பின் நாம் தான் எடுக்க வேண்டும். [இவ்வேலையில் பெரும்பாலும் அமர்த்தப்படும் குழந்தை தொழிலாளர்கள் அங்கு இல்லை]
சுவைதான் இங்கு உரக்க பேசும். வகை வகையாக, திங்கள் -கேசரி, செவ்வாய் -அக்கார வடிசல், புதன் -பன் அல்வா, வியாழன் -வெள்ளை கேசரி [தேங்காய் துருவல் சேர்த்து நிறத்தைத் தவிர்ப்பது] வெள்ளி -கோதி[கோதுமை] அல்வா, சனி -பாதாம் அல்வா & ஞாயிறு -ஜாங்கிரி என நிதமும் ஒரு ஆவர்த்தனம். சில மணிகளில் தீர்ந்து விடும். வெறும் இனிப்பும், காபியும் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு கொசுறாக மிக்சர், காரா பூந்தியென ஏதாவது ஒரு கைப்பிடி காரம் ; இனிப்பின் சுவை காபியின் சுவையைத் தாக்காதிருக்க.
12 மணிக்கு அவர்களின் ஸ்பெஷல் மெது பகோடா/தவளை வடை. ஷோ- கேஸில் வைக்கக் கொண்டு வரும்போது வழி, வழி என்று கட்டியம் கூறியவாறு வருவது இரு அறைகளுக்கும் பகோடா ரெடி என்று தெரிவிக்கும் சூட்சமம்.
சௌகர்யத்தை விட ருசியை விரும்புவர்கள், கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்து கொண்டால், நாவின் நரம்புகளுக்குக் கொண்டாட்டம்தான்.
ஆறு நாட்கள் ஆரோக்யத்திற்கும், ஒரு நாள் சங்கோஜம் இல்லாமல் சுவைக்கும் சாப்பிட வேண்டும் என்பது என் கருத்து. சுவையில்லா வாழ்க்கை என்ன வாழ்க்கை ?!
[30 வருடங்கள் முன்பு இருந்த நிலை.இப்போதும் அப்படியே இருக்கிற தெனக் கேள்விப்பட்டேன். திருச்சி சென்றால் ஒரு நடை போய் வாருங்கள்]
No comments:
Post a Comment