மராட்டிய மண்ணில் ஒரு பயணம் 27
மும்பை
இனி அவள் பார்வையில்...
அக்டோபர் மாஸம்ங்கறதால க்ளைமேட் நல்லா இருக்கு...மலையும் நதியும் மாறி மாறி வந்து கண்ணுக்கும் குளிர்ச்சியா இருக்கு...புனா நெருங்க நெருங்க ட்ரெய்ன் குகை வழியா போறதால பகல்லயே லைட் போட்டு ராத்திரியும் பகலும் மாறி மாறி வந்து ஜாலம் காட்டறது...சிக்கி,சிக்கின்னு என்னவோ விக்கறான்..என்னவோ சிக்கிண்டுடுத்தாமே என்னன்னு இவர கேட்டா,கடலை மிட்டாயாம்..வாங்கித்தறார்...
புனா வந்ததும் மாமா பொண்ணு இங்கதான் இருக்கா எறங்கிடலாமாங்கறார்...அப்பறம் அவரே நாம மும்பைல எதோ கெடச்ச ரூம் பாத்து தங்கிக்கலாம்.. உறவுக்காராளுக்கு கஷ்டம் தரக்கூடாது ..வரும் போது ஒரு நாள் மட்டும் பாத்துட்டுப்போலாம்கறார்..நான் அதுவும் சரிதான்கறேன்..
எதிரே உக்காந்துருக்கற முஸ்லீம் ஜோடிய எங்க சீப் ஆ லாட்ஜ் கிடைக்கும்? ..சுத்திப்பார்க்க ஈஸின்னு விஜாரிக்கறார்.அவா VT ல எறங்கிண்டா எல்லா rangeலயும் லாட்ஜ் கெடைக்கும்கறா...
3.00 மணிக்கு ட்ரெய்ன் VT ஸ்டேஷன் வரது...வெளில வந்தா ஒரே காரும் மனுஷாளும் கூட்டம் அள்றது...திருதிருன்னு முழிக்கறார்..நான் ஒரு சர்தார்ஜி கார் ட்ரைவர்ட்ட டஹர்னே கேலியே கமரா மிளேகான்னு விஜாரிக்கறேன்..இவர் வேணாம்டி கமிஷன் வாங்கிண்டு நம்மளை ஏமாத்துவான்னுட்டு ஏக் ஹசார் (1000)ரூம்கறார்..அவன் பசாஸ் ருப்யோ கோ ட்ராப்ங்கறான்...
சரின்னு ஏறி உக்காரறோம்...
வழில மும்பை சுத்தி பார்க்க ட்ராவல் பஸ் பத்தி கேக்கறார்..நடுவில் ஒரு எடத்துல நிறுத்தி நாளைக்கு போறதுக்கு மும்பை தர்ஷன்னு
அடுத்த நாளைக்கு டிக்கட் புக் பண்ண சொல்றான்...ரெண்டு பேருக்கும் 600/-நேரா அஜந்தாங்கற ஓட்டல்ல நிறுத்தறான்..
1200 ரூபாய் ரூம்கறான்...மூணாவது மாடில 10க்கு 10 ரூம் சின்னதா பாத் அட்டாச்ட்...சரி ஒரு ராத்திரி தங்கறதுக்குதானே சரிங்கறேன்..ஆனா 50 பேசின டாக்ஸிக்காரன் 300/- கேக்கறான்..இவர் எப்படியோ பேரம் பேசி 150 தந்து அனுப்பறார்...
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துண்டு மும்பைல தங்கறது ரொம்ப காஸ்ட்லி ..இன்னிலேர்ந்து 24 மணி நேரத்துக்குள்ள மும்பையை சுற்றிப்பார்க்கணும்(?)நாளைக்கு ராத்திரி ஷீரடி போறோம்..No rest..Google பக்கத்துல மும்பை தேவி கோயில் காட்டறது...வா போலாம்கறார்...ட்ரெய்ன் வந்தது உடம்பெல்லாம் வலிக்கறது...இருந்தாலும் கோச்சிக்கப்போறார்னு கெளம்பறேன்...
வெளில மழை வராப்ல இருக்கு...லக்கேஜ் சிக்கனத்துக்காக எடுத்துண்டு வந்த ஒரே குடைய மாத்தி மாத்தி பிடிச்சிண்டு ஜனக்கூட்டத்துல கூகுள் காட்டற டைரக்ஷன்ல நடந்து போறோம்...வழில காஃபி வாங்கித்தர்றார்…
அப்படியே நடந்து கோயிலுக்கு போறோம்…
இனி இவர் பார்வையில்….
மும்பையின் முதல் தெய்வம் மும்பாதேவி
மேற்கத்திய நாகரீகத்தின் தலைவாசலாகவும், நம் பாரதத்தின் அழகிய நகரமாகவும், பல பெரிய நிறுவனங்களின் தலைமை யிடமாகவும் ,ஆங்கிலேயர்களால் பாம்பே என்று அழைக்கப்பட்டு வந்த இன்றைய மும்பை நகரின் வளமைக்கும்,பெருமைக்கும் காரணமாய் நின்று அந்நகர வாசிகளைக் காத்து நிற்கும் தேவியர் இருவர். ஒன்று அன்னை மஹாலக்ஷ்மி. இன்னொன்று அன்னை மும்பாதேவி.
மும்பாதேவியின் பெயராலேயே அந்நகரம் மும்பை ஆயிற்று. மீனவ மக்களின் குலதெய்வமான மும்பாதேவியின் ஆலயம் மும்பையின் முக்கிய வியாபாரத் தலமான பூலேஷ்வர் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு அருளாட்சி செய்யும் அன்னையின் ஆலயம் சிறிதானாலும், அனுதினம் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் மகிமை பெற்றது. அன்னை மும்பாதேவி பார்வதி தேவியின் அவதாரம் எனப் போற்றப்படுகிறாள். மும்பை இவ்வளவு செல்வச் செழிப்போடு இருப்பதற்குக் காரணம் இவளே என்பது மும்பை வாசிகளின் நம்பிக்கை.
இவ்வாலயம் தோன்றியதற்கான புராணக் கதை இது. பல்லாண்டுகளுக்கு முன் ‘மும்பாரக்’ என்ற அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். அதன் பயனாக அவன் முன் தோன்றிய பிரம்மா, அவன் கேட்டபடி எப்பொழுதும் இறவாத வரம் கொடுக்க, அதைப் பெற்ற ஆணவத்தால் தேவர்களையும், பூவுலக மக்களையும் கொடுமைப்படுத்த,அனைவரும் மகாவிஷ்ணுவிடம் அடைக்கலம் புகுந்தனர்.
மகாவிஷ்ணு,சிவபெருமான் இருவரின் அம்சமாக எட்டு கரங்கள் கொண்ட சக்தி தேவியை அவனுடன் போரிட்டு,அழிக்க அனுப்பினார்,ஸ்ரீமந் நாராயணர். வெகு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற போரின் இறுதியில் மும்பாரக்கின் மரணம் நெருங்கிய நேரம்,மும்பாரக், தேவியை வணங்கி ஒரு வரம் வேண்டினான். தேவி அவனுடைய பெயரையே கொண்டு,அவ்விடத்திலேயே கோயில் கொண்டு, தீயோரை அழித்து, நல்லோரை வாழவைக்க வேண்டினான். அதனாலேயே தேவிக்கு ‘மும்பாரக் தேவி’ என்று பெயர். நாளடைவில் ‘மும்பா தேவி’யாகக் குறுகிவிட்டது.
600 ஆண்டுகளுக்கு முன் கடலோர மீனவர்களின் குல தெய்வமாக விளங்கிய தெய்வத்திற்கு, ‘முங்காதேவி’ என்ற மீனவப் பெண் அளவற்ற பக்தியால் தன் பெயரையே அன்னைக்கு வைத்து பூஜித்து வந்ததால்,முங்காதேவி என்றழைக்கப்பட்டு நாளடைவில் ‘மும்பாதேவி’ யாகி விட்டதாகவும் ஒரு கதை உண்டு.
மும்பாதேவி ஆலயம் இன்றைய விக்டோரியா டெர்மினஸ் கடற்கரையோரமாக இருந்ததாயும், பிரிட்டிஷார் துறைமுகம் கட்ட வேண்டி கோவிலை அழித்து விட்டதால், சமீபத்தில் ஆலயம் 150 ஆண்டுகளுக்கு முன் பூலேஷ்வரில் புதிதாக அமைக்கப்பட்டதாயும் கூறுகின்றனர். எது எப்படியிருப்பினும் தேவியின் சக்தி மிகவும் அதிகம்.
மும்பாதேவியின் முகம் மட்டுமே பெரிதாகக் காட்சி தரும். அலங்கார ஆடையுடன், சிரத்தில் வெற்றி கிரீடம், மூக்கில் பெரிய மூக்குத்தி, கழுத்தில் அழகான நெக்லஸ், எட்டு கரங்களில் விதவிதமான ஆயுதங்களோடு, கருணை பொங்கும் அழகு விழிகளோடு காட்சி தரும் அன்னையின் தரிசனம் கண்களை நிறைக்கிறது. நினைத்ததை நிறைவேற்றும் மும்பாதேவியின் சன்னிதிக்கு இடப்புறம்,சிம்ம வாகனத்தில் ஸ்ரீஜகதம்பா என்ற பெயரில் துர்கா தேவியும், மயில் வாகனத்தில் ஸ்ரீஅன்னபூரணியும் அருள் பாலிக்கிறார்கள்.
ஆலயத்திற்கு வெளியே கணபதி, சந்தோஷிமா,அனுமன், சிவபெருமான் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னிதி உள்ளன. தினமும் இரண்டு வேளை ஆர்த்தி நடைபெறும். இங்கு நவராத்திரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு தினமும் ஒரு அலங்காரம், தினம் ஒரு வாகனம். திங்களன்று சிவபெருமானுக்குகந்த நந்தி வாகனம்,வெள்ளியன்று மகாலட்சுமிக்கான அன்ன வாகனம், நவராத்திரி முழுவதும் அம்மனின் தரிசனத்திற்கு குறைந்த பட்சம் நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும்.
வேண்டியோர்க்கு வேண்டும் வரம் தந்து,வளமான வாழ்வை அருளும் மும்பை நகரின் பட்டத்து ராணியாய் விளங்கும் மும்பாதேவி இந்நகரின் முதல் தெய்வம்,இவ்வூரைக் காத்து நிற்கும் காவல் தெய்வம்,அனைவரின் கண் கண்ட தெய்வமும் கூட!
தேவியை வேண்டின்டு வழில ஒரு ஓட்டல்ல சாபுதானா வடை சாப்பிட்டு மழைல ரூமுக்கு திரும்பறோம்...ரூம் ஒரே வெள்ளக்காடா இருக்கு…
படங்கள் மும்பா தேவி கோயில்...




No comments:
Post a Comment