Thursday, December 24, 2020

உடையாத பாத்திரம்

 உடையாத  பாத்திரம்


By. Sudha.T.

Sent for சின்னஞ் சிறுகதை போட்டி. Result awaited.

பவுனு கிழவி பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். 70 வயது மூப்பு மன்றாடியது. வாழ்க்கையின் நிதர்சனமும் தேவையும்  அதை உதறித் தள்ளியது. 'சிலீர்' பீங்கான் கிண்ணம் ஒன்று அவளுடைய நடுங்கும் கைகளில் இருந்து தவறி விழுந்து சிதறியது. ஹாலில் கணவனுடன் அமர்ந்து காப்பி அருந்திக் கொண்டிருந்த வீணா "இந்த வாரத்தில் இது நாலாவது கப்" என்றாள். 

" ஏன் கண்ணாடி பீங்கான் கப்புகளை உபயோகப்படுத்துகிறாய் ? அவற்றை நீயே  அலம்பி விடு , பாட்டி 

வேண்டாமென்றால் நிறுத்திவிடேன்" என்றார் கணவர் சுகுமார்.

"18 வருஷமா நம்ம வீட்டில வேலை செய்யிறா, நம்ம வீட்டு பங்க்ஷன் எல்லாத்திலேயும் சொந்தக்காரங்களைவிட அவ தான் நிறைய உழைச்சிருக்கிறா." 

  "அப்போ நீ தான் முடிவு பண்ணனும்" 

சுகுமார் அலுவலகத்திற்கு கிளம்பிப் போய்விட்டார். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் அவர்களுடையது. பல சமூக சேவை மையங்களில் வீணா சுகுமார் இருவருமே தங்களை ஈடுபடுத்திக்கொண்டு பொறுப்பான பதவிகளில் இருந்தனர்.

வீணாவின் செல்பேசி பாடியது. 

"வீணா, பவுனு பாட்டிக்கு ஏதாவது பணம் கொடுத்து அனுப்பிவிடு, பாவம். வயதான காலத்தில் அவளும் வீட்டில் ஓய்வெடுக்கட்டும். " சுகுமார்  செய்தி அனுப்பியிருந்தார். 

  யோசித்தபடி உள்ளே சென்றாள் வீணா. மகள்  நந்தினியின் மகப்பேற்றின் போது பவுனு உதவியாக  இருந்ததை நினைத்த போதே நன்றியால் நெஞ்சு நிறைந்தது வீணாவிற்கு. 

மகளின் நினைவு வந்ததுமே அவளையும் குழந்தையையும் பார்க்க வேண்டும் போல் இருந்தது வீணாவிற்கு. வெளிநாட்டில் இருப்பவளை  புகைப்பட ஆல்பத்தில் தான்  பார்க்க வேண்டும். 

இதே மாதிரி தானே பவுனு பாட்டிக்கும் இருக்கும். அவள் பெண்ணை காரைக்காலில் கட்டிக் கொடுத்திருக்கிறாள். மருமகன் நல்ல வேலையில் இருப்பதாகவும் பெண்ணும் ஸ்கூல் டீச்சராக வேலை பார்ப்பதாகவும் கூறுவாள். "நீ அவங்களோட போய் இருக்க மாட்டியா?" என்று கேட்டால் "அதெல்லாம் சரியா வராதுமா, அவங்க மாமியார் மாமனார் இருக்கிறாங்க. எப்பவாச்சும் போய் பார்த்துட்டு உடனே வந்துடுவேன்" என்பாள். வேறு குழந்தைகள் இல்லை பவுனு பாட்டிக்கு.

 அடுப்பு மேடையை துடைத்துக் கொண்டிருந்தாள் பவுனு பாட்டி. "பாட்டி, நீங்க கொஞ்சம் உக்காருங்க,"

என்றவாறு காப்பியைக் கலந்து அவளிடம் நீட்டினாள் வீணா. 

"நாளையிலிருந்து புது வேலைக்கார பொண்ணு ஏற்பாடு பண்ணியிருக்கேன், நீங்க அவளுக்கு வேலை சொல்லிக் கொடுக்கணும். உங்களுக்கும் சம்பளம் உண்டு. பென்ஷன் மாதிரி. நீங்க அவள மேற்பார்வை பாருங்க.  போதும்."

வீட்டு வேலை செய்பவர்களுக்கும் ஓய்வு தேவை, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவவும் வேண்டும். நாம் முன்னோடியாக இருப்போம் என்ற முடிவுக்கு வந்தாள் வீணா.

No comments:

Post a Comment