மராட்டிய மண்ணில் ஒரு பயணம் 46
அஜந்தா
அடுத்ததாக ஷீர்டியிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவிலுள்ள அஜந்தா…சிவகாமியின் சபதம் படிச்சவாளுக்கு தெரியும். நாகநந்தி, புலிகேசி,மூலிகை ரகசியம். ...
. சுமார் ஆறு மணிநேரப் பயணம் மேற்கொள்ளவேண்டியிருக்கும். தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால், கூடுதலாக ஒரு மணி நேரம் பிடிக்கக்கூடும். செல்லும் வழியிலேயே எல்லோரா குகைக்கோயில்கள் இருந்தாலும்கூட, முதலில் அஜந்தாவுக்குச் சென்று குகைக்கோயில் மற்றும் ஓவியங்களைப் பார்த்து ரசித்துவிட்டு, அடுத்த நாள் எல்லோராவைப் பார்வையிடுவது நல்லது. அஜந்தாவுக்கு திங்கள்கிழமையன்றும், எல்லோராவுக்கு செவ்வாய்க்கிழமையன்றும் விடுமுறை என்பதால் அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அஜந்தா கிராமத்தில் காலை நேரத்தில் குளிக்க, நிறைய இடங்கள் இருப்பதால் அறை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. குடும்பத்துடன் செல்பவர்கள் தங்கள் உடைமைகளை வைத்துக்கொள்ள வேண்டுமானால் ஓர் அறை எடுத்துக்கொள்ளலாம்.
அஜந்தா கிராமத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அஜந்தா குடைவரைகள் அமைந்திருக்கின்றன. அஜந்தா கிராமத்திலிருந்து தொல்லியல் துறையினர் மூலம் ஏற்பாடு செய்யும் வாகனங்கள் மூலமே பயணிக்கமுடியும். கூட்டத்தைப் பொறுத்து அஜந்தா கிராமத்தில் சில மணிநேரங்கள் காத்திருக்க நேரிடும். அஜந்தாவில் மட்டும் 28 குடைவரைகள் இருப்பதால், அனைத்தையும் தரிசிக்க விரும்புபவர்கள், ஷீர்டியிலிருந்து இரவோடு இரவாகப் பயணித்து, அதிகாலை நேரத்தில் அஜந்தாவை அடைந்துவிடுவது நல்லது.
1,500 வருடங்களுக்கும் மேலாக புதரில் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷம் என்பதுடன், ஓவியக்கலையின் சிறப்பை உலக மக்களுக்கு உணர்த்திய அஜந்தாவைப் பார்த்து ரசிப்பது நமக்குள் பரவசத்தை ஏற்படுத்தும். மழைக்காலத்தில் சென்றால் மேலிருந்து வகோரா ஆறு அருவியாக விழுவதைப் பார்த்தபடி குடைவரைகளைக் காண்பது கூடுதல் பரவசத்தை அளிப்பதாக இருக்கும்.
2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய மக்களின் வாழ்க்கை முறை. கலை, கட்டிடக்கலை போன்றவை உன்னத நிலையில் இருந்ததை இந்த ஓவியங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
புத்தர் தன்னுடைய உருவத்தை ஓவியங்களாகவோ, சிற்பங்களாகவோ உருவாக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவருக்குப் பின் வந்த சீடர்கள் புத்தமதக் கொள்கைகளை வெளி உலகத்துக்குச் சொல்லவும், பரப்பவும் விரும்பினர். அதனால் புத்தரின் உருவத்தை ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் வடித்தனர். இயற்கையான குகைகள் மட்டுமல்லாமல் செயற்கையான குகைகளையும் உருவாக்கினர். மழைக் காலங்களில் தங்குவதற்கு மடாலயங்களையும், வழிபடுவதற்கு வழிபாட்டு ஸ்தலங்களையும் அமைத்தனர்.
அஜந்தா குகைகள் வகோரா நதியின் பள்ளத்தாக்கில் சயாத்ரி குன்றின் மேல் அமைந்துள்ளன. அமைதியான அழகான சூழல் கொண்ட இந்த இடத்தில் 30 குகைகள் உருவாக்கப்பட்டன. இவை குதிரையின் குளம்பு போன்ற வடிவத்தில் அமைந்துள்ளன. இந்தக் குகைகள் இரு காலகட்டங்களில் கட்டப்பட்டுள்ளன. கி.மு. 2-ம் நூற்றாண்டில் சாதவாகன மன்னர்கள் 9, 10, 12, 15 எண்களுடைய குகைகளை அமைத்திருக்கிறார்கள்.
கி.பி. 5-ம் நூற்றாண்டில் ஹரிசேனா மன்னர் 20 குகைகளை அமைத்துள்ளார். அஜந்தா குகைகள் கி.பி. 7-ம் நூற்றாண்டுவரை பலரும் தங்கும் இடமாக இருந்துள்ளது. கி.பி 7-ம் நூற்றாண்டில் இந்தியா வந்த சீனப் பயணி யுவான்சுவாங் அஜந்தா குகைகளைப் பார்வையிட்டிருக்கிறார். பிறகு அஜந்தா குகைகளின் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது. மரங்களும் புதர்களும் அடர்த்தியாக வளர்ந்து குகைகளை முற்றிலுமாக மறைத்துவிட்டன. அதனால் குகை பற்றி யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.
1819-ம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஜான் ஸ்மித் வேட்டையாடச் சென்றபோது இந்தக் குகைகளைக் கண்டுபிடித்தார். மீண்டும் அஜந்தாவின் பெருமை வெளி உலகுத்துக்குத் தெரிய ஆரம்பித்தது.
மிகப் பெரிய தூண்களுடன் கூடிய மண்டபங்கள், புத்தரின் சிலைகள், ஓவியங்கள் என ஒவ்வொரு பகுதியும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அஜந்தா ஓவியங்களில் அடர்ந்த ஆரஞ்சு, நீலம், பச்சை போன்ற நிறங்கள் காணப்படுகின்றன. குறிப்பிட்ட பாணியில் ஓவியங்களைத் தீட்டியுள்ளனர்.
முதலில் உளியால் பாறைகளைச் செதுக்கி, அதன்மீது களிமண், சுண்ணாம்பு, வைக்கோல் துகள், சாணம் ஆகியவற்றால் தயாரித்த கலவையைப் பூசியுள்ளனர். ஈரமாக இருக்கும்போதே இயற்கையான நிறமிகளை வைத்து ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். திறமையான தொழில்நுட்பம் தெரிந்தவர்களால் மட்டுமே இவற்றை உருவாக்கியிருக்க முடியும். 1500 ஆண்டுகள் கடந்தும் இந்த ஓவியங்கள் நிலைத்து இருப்பதற்குக் காரணம் அந்த கலைஞர்களின் நுட்பமே!
முதல் குகை இன்றுவரை மிக நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மிகப் பெரிய புத்தர் உருவம் இங்கே செதுக்கப்பட்டுள்ளது. நேராகப் பார்க்கும்போது புன்னகையுடனும் பக்கவாட்டில் சோகமாகவும் தெரியும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது!
இரண்டாவது குகை மடாலயமாகப் பயன்பட்டிருக்கிறது. இங்குள்ள சுவரில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. 6-வது குகை இரண்டு அடுக்காக அமைக்கப்பட்டுள்ளது. கி.மு. 2-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட 9-வது குகையைத்தான் ஜான் ஸ்மித் கண்டுபிடித்தார். 10-வது குகை மிகவும் பழமையானது. சாரநாத்தில் புத்தரின் முதல் பிரசங்கம், ஜாதகக் கதைகள் போன்றவை இங்கு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
16-வது குகை ஓவியங்களுடன் கூடிய மிக அழகான குகையாகக் கருதப்படுகிறது. 17-வது குகையில் சுவற்றில் மட்டுமல்லாமல் மேற் கூரையிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 26-வது குகையில் படுத்திருக்கும் நிலையில் புத்தரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது, அதன்கீழ், அவருடைய சீடர்கள் கவலையாகவும், தேவதைகள் மலர்ந்த முகத்துடன் புத்தரை வானுலகுக்கு வரவேற்பது போலவும் செதுக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு குகைகளிலேயே, உங்கள் எண்ணத்தை நிறைக்கும் ஓவியங்கள் அள்ள அள்ளக் குறையாமல் வந்து விடும். வந்து நிற்பது பிட்சுக்கள் பூமி. அவர்கள் அழிந்தாலும், அவர்களின் ஆன்மாக்கள் உறைந்துள்ள ஒரு அமானுட சாட்சியம் அந்த குகைகளும், சிற்பங்களும் ஓவியங்களும்.
No comments:
Post a Comment