Thursday, December 24, 2020

ஓ... அமெரிக்கா - 6

 ஓ... அமெரிக்கா - 6 

இரவில் நான் பார்த்த டெம்ப்பிக்கும் பகலில் தெரிந்த அதே இடத்திற்கும் அத்தனை வித்தியாசம். நாங்கள் காலையில் வாக்கிங் போய்க்கொண்டிருந்தோம். சூடு அதிகம் என்பதால் சூரியன் உதிப்பதற்கு முன்னும், பின்னும் மட்டுமே மக்களை வெட்ட வெளியில் பார்க்க முடிகிறது. மற்ற சமயங்களில் கார்களில் பயணம் மட்டுமே. 

காலையில் ஏகப்பட்டபேர் வாக்கிங், ஜாகிங் ஷூக்களில், தனியாக, செல்லப் பிராணிகளோடு என்று போய்க்கொண்டிருந்தார்கள். ஆரோக்கியத்தில் ஈடுபாடு மட்டுமல்லாமல் அதிகமாகிக்கொண்டே போகும், எல்லோராலும் எளிதாக சமாளிக்க முடியாத மருத்துவச் செலவுகளும் இந்த ரெகுலர் உடற்பயிற்சிகளுக்குக் காரணம். ஏறக்குறைய எதிர்ப்படும் எல்லோருமே புன்னகைத்துக்கொண்டு, ஹாய், ஹலோ சொல்லிக்கொண்டு சென்றது இனிமையாக இருந்தது. டெம்ப்பி டௌன் லேக் என்று சொல்லப்படுகிற செயற்கை ஏரிவரையில் நாங்கள் சென்று திரும்பினோம். 

பாலைவனமான அரிஸோனாவை வறட்சியாக எதிர்பார்த்தால் நாம் ஏமாந்தோம். பார்க்கிற இடமெல்லாம் பச்சையாக செடிகளும், மரங்களும், புல்தரையுமாக இருந்தது. அதிலும் சாலையை ஒட்டிய கட்டிடங்கள் எல்லாமே, வீடுகளையும் சேர்த்து பசுமையாகக் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. வறட்சியான சூழ்நிலையில் தாக்குப் பிடிக்கும் மரங்களும், அதுவரையில் நானறியாத பெரிய கேக்டஸ் வகைத் தாவரங்களும் சாலையின் இருபுறமும் வளர்க்கப்பட்டிருந்தன. 

சாலைகள் அகலமாகப் பல லேன்களைக் கொண்டதாக இருக்கின்றன. ஊருக்கு வெளியே செல்லும் சாலைகள் அநேகமாக இடதுபுறம், வலதுபுறம் என்று இரண்டு தனித்தனிச் சாலைகளாக இருப்பதால் நெருக்கடியில்லாமல் இருக்கின்றன. சாலைகளில் அவ்வப்போது பெரிய போர்டுகளில் சாலைகளின், ஊர்களின், திருப்பச் சாலைகளின் (exit) பெயர்களைக் கொண்ட போர்டுகள் வந்துகொண்டே இருப்பதால் கார் ஓட்டுபவர்களுக்கு மிக உதவியாக இருக்கிறது. மற்றபடி எல்லோரும் GPS உபயோகிக்கிறார்கள் 

சாலைகளை வாக்குவம் க்ளீனர் கொண்டு சுத்தம் செய்கிறார்கள். கொட்டிக் கிடக்கும் உலர்ந்த இலைக்குப்பையையும், சாலையோரப் பெரிய மரங்களின் இலைகளை ட்ரிம் செய்து சேகரித்ததையும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ட்ரக்கில் இருக்கும் பெரிய மெஷினில் அங்கேயே அரைத்துக் கூழாக்கி உரமாக்கி எடுத்துச் செல்கிறார்கள். 

சாலைகளின் இருபுறமும் ஸ்பீட் லிமிட் போர்டு அங்கங்கே வைத்திருப்பதால் அந்த லிமிட்டுக்குள் வராத கார்களுக்கு டிக்கெட் கொடுக்கிறார்கள். தவிர எல்லா சிக்னல்களிலும் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதால் தவறு செய்யும் கார் ஓட்டுநர்கள் உடனடியாக டிக்கெட் கொடுக்கப்படுகிறார்கள். டிக்கெட் அதாவது ஃபைன் என்பது பலநூறு டாலர்கள் என்பதால் கார் ஓட்டுபவர்கள் மந்திரம் போட்டதுபோல அதீதக் கவனத்துடன் கார் ஓட்டுகிறார்கள். 

ஒருமுறை நாங்கள் காரில் சென்றுகொண்டிருந்தபோது எதிரில் ஒரு கார் தவறான திசையில் வந்துகொண்டிருப்பதாக காருக்குள் உட்கார்ந்திருந்த எல்லோருடைய மொபைலுக்கும் (என்னுடையதையும் சேர்த்து) செய்தி வந்தது. அது வயர்லெஸ் செய்தி என்பதால் எங்கள் அனைவருடைய ஃபோனிலும் பேசிக்கொண்டிருந்த கால்கள், பாடல்கள், பார்த்துக்கொண்டிருந்த செய்திகள் எல்லாம் தடைப்பட்டு பின்னரே மீண்டன. 

சாலை நெருக்கடியைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைக் காப்பாற்றவும் கார் பூலிங்கை (car pooling) மிகவும் ஊக்கப்படுத்துகிறார்கள். இதனால் 1+, 2+ அல்லது 3+ என்று டிரைவர் + மற்ற பயணிகளைக் கொண்டிருக்கும் HOV (High occupancy vehicles) என்று சொல்லப்படுகிற கார்கள் மட்டும் வலது பக்க சாலையின் கடைக்கோடி இடதுபக்க லேனில் வேகமாகத் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 'ரஷ் அவர்' என்று சொல்லப்படுகிற காலை 6 - 9, மாலை  3 - 7 ஓட்ட முடியும். 

அதைப்போல ஏதாவது எமர்ஜென்சி என்றால் மட்டுமே காரை ஓரத்தில் நிறுத்த முடியும். மற்றபடி நம் ஊரில் மாதிரி சாலை ஓரங்களில் பார்க்கிங் அனுமதி இல்லை. சாலையின் இடதுபுறத்தில் எமர்ஜென்சி pull over க்கென்று இருக்கும் இடத்தில் மட்டுமே காரை எமர்ஜென்சிக்கும் நிறுத்தமுடியும். எந்தெந்தக் காரணங்கள் எல்லாம் எமர்ஜென்சி pull over ல் வருகிறது என்பது கார் ஓட்டுபவர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இத்தனையும் போக்குவரத்து பாதிக்கப்படாமலும், விபத்துக்கள் நேராமல் இருக்கவும் மிகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கட்டிடங்கள் எல்லாம் மணல் நிறைந்த பாலைவனப் பகுதிக்குப் பொருத்தமான சாம்பல், மண் அல்லது ப்ரௌன் நிற வண்ணங்களில் பெயின்ட் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால் உறுத்தாமல் அந்தப் பின்னணிக்கு மிகப் பொருத்தமாக, இயற்கையாக இருப்பதுபோல் தோன்றுகிறது. அலுவலகக் கட்டிடங்கள் மட்டும் பளபளக்கும் கண்ணாடி ஜன்னல்களைக் கொண்டு அலங்காரமாகத் தெரிகின்றன. மற்றபடி அவற்றுக்கும் அதே வண்ணங்கள்தான். இதனால் பழைய கௌபாய் படங்களில் வரும் அதே ப்ரௌன் பின்னணியில் புதிய கட்டிடக்கலை என்ற வகையில் மட்டுமே மாற்றம் இருப்பதுபோலத் தோன்றுகிறது. வீடுகள் horizontal ஆக நீளமாக இருந்தால் அலுவலகங்கள் vertical ஆக உயரமாக இருக்கின்றன.

சாலையில் பஸ்கள், இரண்டு சக்கர வாகனங்கள் குறைவு. அமெரிக்காவின் அதீதக் குளிர் அல்லது வெப்பம் திறந்தவெளிப் போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை என்பதே காரணம். எப்போதாவது லைட் ரெயிலையும் பார்க்கலாம். மற்றபடி கார்கள், கார்கள், கார்கள் மட்டுமே. கார்களில் இத்தனை வகைகளா என்று வியந்து போனேன். இங்கே பெரிதாக நினைக்கும் கார்கள் எல்லாம் அங்கே சிறியவை என்று நினைக்கும் அளவுக்கு அத்தனை பெரிய கார்கள். இரண்டு சீட்கள் கொண்ட கார்களிலிருந்து பல சீட்கள் கொண்ட கார்கள்வரை, மூடிய, திறக்கும் கார்கள், ட்ரக்குகள் என்று வித விதமான கார்கள். ட்ரக்குகள் என்பது இங்கே இருப்பதுபோல அல்ல. முன்னால் இரண்டுபேர் உட்கார்கிற மாதிரியும், பின்னால் பொருட்கள் எடுத்துச் செல்கிற மாதிரியும் வசதியாக இருக்கிறது. அதுவும் அத்தனை சைஸ்களில், விதங்களில். அப்பப்பா...

கார் ரென்டல் அங்கே செழித்துக் கொண்டிருக்கும் ஒரு பிஸினஸ். ஊரைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏர்போர்ட்டிலிருந்து ஃப்ரீ ஷட்டில் பஸ்கள் மூலமாகக் கார் ரென்டல் அலுவலகங்களுக்குக் கூட்டிப் போகிறார்கள். ஆன்லைன் மூலமாக முன்கூட்டியே புக் செய்திருந்தாலும்,  இல்லாவிட்டாலும். ரென்டல் சார்ஜ் காரின் சைஸ் (பெரியதா, சிறியதா), மேக், கார் எடுப்பவரின், ஓட்டுபவரின் வயது, மணி நேரங்கள், இன்ஷூரன்ஸ் இவற்றைப் பொறுத்தது.



No comments:

Post a Comment