🙏🏻🙏🏻🙏🏻🙏🏻36🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மராட்டிய மண்ணில் ஒரு பயணம் 36
ஷீரடி
பாபா சிலை பற்றி இவர் சொல்றார்….
பாபா மகாசமாதி அடைந்த முதல் சில ஆண்டுகளுக்கு அவர் சமாதி மீது பக்தர்கள் மலர் வைத்து வழிபட்டனர். இந்த நிலையில் பிரபல ஓவியரும், பாபாவின் தலை சிறந்த பக்தர்களில் ஒருவருமான சாம்ராவ் ஜேகர் என்பவர் சாய்பாபா படத்தை வரைந்தார். அந்த படம் அச்சு அசல் அப்படியே சாய்பாபா உயிருடன் இருப்பது போல இருந்தது.
. சுமார் 35 ஆண்டுகள் அந்த படம் பாபாவின் மகா சமாதியை அலங்கரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள்…. இத்தாலி நாட்டில் இருந்து பால் வெள்ளை நிற பளிங்கு கல் ஒன்று மும்பை துறைமுகத்தில் வந்து இறங்கியது. அந்த கல் தரத்தில் மிகவும் உயர்ந்ததாக இருந்தது. எனவே யாராவது கோடீசுவரர் அதை இறக்குமதி செய்திருப்பார் என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் அந்த பளிங்கு கல்லைக் கேட்டு யாருமே வரவில்லை. மும்பைத் துறைமுக அதிகாரிகள் பல்வேறு வகைகளில் ஆய்வு செய்தும், அந்த பளிங்கு கல்லை இத்தாலியில் இருந்து அனுப்பியது யார்? மும்பைக்கு ஏன் வந்தது? எப்படி மாறி வந்தது? என்பன போன்ற எந்த தகவல்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து அந்த பளிங்கு கல்லை மும்பை துறைமுக அதிகாரிகள் ஏலம் விட்டனர். பணக்காரர் ஒருவர் அந்த கல்லை ஏலத்தில் எடுத்தார். பிறகு அதை அப்படியே சீரடி சாய் தேவஸ்தானத்துக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டார். அந்த பளிங்கு கல்லை பெற்ற பிறகே, அதில் சாய்பாபாவுக்கு சிலை செய்து வைக்கலாம் என்ற எண்ணம் சாய் கமிட்டி உறுப்பினர்களுக்குத் தோன்றியது. சிலை வடிக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்று ஆலோசித்தனர்.
மும்பையைச் சேர்ந்த பிரபல சிற்பி பாலாஜி வசந்தராவ் தாலிம் என்பவரிடம், சிலை செதுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. ஐதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட பாலாஜி சிலை வடிவமைப்புக்காக ஏராளமான விருதுகள் பெற்றிருந்தார். மும்பையில் செட்டில் ஆகி இருந்த அவரிடம் பாபாவின் கருப்பு – வெள்ளை படம் ஒன்றை மட்டும் கொடுத்து, சிலை தயாரிக்க கூறியிருந்தனர். முதலில் களி மண்ணில் பாபா சிலையை பாலாஜி செய்து காண்பித்தார். பிறகு பளிங்கு கல்லை செதுக்கி பாபாவின் சிலை தயாராகத் தொடங்கியது.
பாபாவின் உடல் அமைப்பை வடிவமைக்க பாலாஜி சற்று சிரமத்தை சந்தித்தார். தேர்ந்த சிற்பியான அவருக்கு பாபாவின் ஒவ்வொரு அங்கத்தையும் செதுக்குவது சவாலாக தெரிந்தது.
ஒரு கட்டத்தில் அவருக்கு மலைப்பாகி விட்டது. என்றாலும் பாபா சிலை செதுக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் அவரிடம் குறையவில்லை. கண்ணீர் மல்க அவர் பாபாவிடம் வேண்டினார். “பாபா… இது உங்கள் சிலை. தத்ரூபமாக நீங்களே அதில் காட்சியளிக்க வேண்டும். எனக்கு உதவி செய்யுங்கள்” என்று மனம் உருக கேட்டுக் கொண்டார்.
அன்றிரவு அவர் கனவில் பாபா தோன்றி னார். “நம்பிக்கையும் பொறுமையும் கொண்டால் வெற்றி நிச்சயம்” என்றார். பாபாவின் இந்த ஆசீர்வாதத்தால் சிலை தயாரிப்பு பணியில் வேகம் பிடித்தது. மிக வேகமாக சிலை தயாரானது. பாபாவின் முகத்தை வடிக்கும்போது, பாலாஜி மீண்டும் திணற வேண்டியதிருந்தது. பாபாவின் மூக்கு, கண்களை செதுக்க திணறினார். அன்றிரவு அவர் கனவில் பாபா தோன்றினார்.
தனது முகத்தை மட்டும் பல்வேறு கோணங்களில் காட்டினார்.
என் முகத்தின் அமைப்பை நன்றாக நினைவில் வைத்துக் கொண்டு சிலையை செய் என்று கூறி மறைந்தார். மறுநாள் காலை விழித்த போது பாபாவின் அற்புதத்தை எண்ணி, எண்ணி சிற்பி பாலாஜி வியந்தார். காலை 7 மணிக்கு சிற்பக் கூடத்துக்கு சென்றபோது அவருக்கு மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. சிற்பக் கூடத்தின் கதவைத் திறந்ததும் அங்கு ஒரு ஒளி வெள்ளம் உருவானது. அந்த ஓளியில் சாய்பாபா தோன்றினார். ஆச்சரியத்தில் உறைந்த பாலாஜி, கைக்கூப்பி வணங்கி விட்டு, பாபாவைப் பார்த்து அவர் கண், புருவம், காது, மூக்கு உள்ளிட்ட முக அமைப்பை அப்படியே தத்ரூபமாக செதுக்கினார்.
முக வடிவமைப்பு பணி முடிந்ததும், சாய்பாபா, அந்த பளிங்கு கல் சிலைக்குள் ஊடுருவி மறைந்தார். ஆக பாபா, அந்த சிலைக்குள் புகுந்து விட்டதை சிற்பி பாலாஜி உணர்ந்தார். ஆச்சரியத்தில் இருந்து மீள அவருக்கு நீண்ட நேரமானது. 1952-ம் ஆண்டு பாபா சிலையின் 99 சதவீத பணிகள் முடிந்து விட்டன. அப்போது எதிர்பாராத ஒரு சிக்கலை சிற்பி பாலாஜி எதிர்கொள்ள நேரிட்டது. பாபாவின் சிலையை நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் அவர் இடது காலை ஊன்றி, அதன் மீது தனது வலது காலை தூக்கிப் போட்டு அமர்ந்திருப்பதை பார்த்து இருப்பீர்கள்.
அந்த வலது காலின் மீது இடது கையை பாபா ஊன்றியிருப்பார்.
அந்த இடது கால் முழங்கால் பகுதியில் மட்டும் ஒரே ஒரு இடத்தை செதுக்கினால், சிலை செதுக்கும் பணி முடிந்து விடும். அந்த இடத்தில் ஏதோ காற்று இடைவெளி ஏற்பட்டிருந்தது போல காணப்பட்டது. அதில் கவனக்குறைவாகச் செதுக்கினால், ஒட்டு மொத்த சிலைக்கும் சேதம் ஏற்பட்டு விடலாம் என்ற அபாயம் இருந்தது. சிற்பக் கூடத்தின் பணியாளர்கள் அனைவரும், சிலையின் அந்த பகுதியில் உளியைக் கொண்டு செல்லப் பயந்தனர். எனவே பாலாஜியே உளியை கையில் எடுத்து பாபாவை நினைத்துக் கொண்டே, அந்த பகுதியை செதுக்கத் தொடங்கினார்.
அடுத்த வினாடி….. அந்த பகுதியில் முழங்கால் அமைப்பு எப்படி இருக்க வேண்டுமோ அதே மாதிரி சிலை வடிவத்துக்கு வந்தது. தேவை இல்லாத பகுதி மட்டும் கீழே விழுந்தது. இப்போது பாபா சிலை கன கச்சிதமாக தயாராகி விட்டது. அப்போது பாலாஜி வசந்தராவ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
அன்றிரவு சிற்பி பாலாஜி கனவில் பாபா மீண்டும் தோன்றினார். “இனி இது போன்று என் உருவில் நீ எந்த சிலையையும் செய்யக்கூடாது. இது ஒன்றே போதும். நலமாக வாழ்வாய்” என்று கூறி மறைந்தார்.
பாபாவின் உத்தரவை பாலாஜி வசந்தராவ் அப்படியே ஏற்றுக் கொண்டார். 1970–ம் ஆண்டு தனது 82-வது வயதில் மரணம் அடைந்த அவர் தம் வாழ்நாளில் வேறு எந்த பாபா சிலையையும் செய்யவில்லை. அவர் செதுக்கிய பாபா சிலை சுமார் 5.5 அடி உயரம் கொண்டது. பாபா உயிருடன் இருப்பது போலவே தோன்றும் அற்புத சிலை. 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி விஜயதசமி திருநாளில் பாபாவின் 36-வது சமாதி தினத்தன்று அந்த சிலை சமாதி மந்திரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சமாதி மந்திருக்குள் நாம் நுழைந்ததும், அந்த சிலையில் உள்ள பாபா நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.
No comments:
Post a Comment