Tuesday, December 8, 2020

மராட்டிய மண்ணின் ஆன்மீக நினைவுகள்- பகுதி 32

 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻33🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

மராட்டிய மண்ணில் ஒரு பயணம் 32

                   ஷீரடி

கொட்டற மழைல டாக்ஸி போயிண்ட்டே இருக்கு....ஒரு வழியா மீட்டர்  300/- தொடச்சே தாதர்னு கடை  போர்டு தெரிஞ்சு இவர் நிம்மதி பெருமூச்சு விட மெதுவா பஸ்ஸ்டாண்ட் ல நுழையறது. 

உள்ள போய் பஸ்களை நோட்டம் விடறார்...புனா,சூரத்னு இருக்கே தவிர ஷீரடிய காணம்...

கௌன்டர்ல இருக்கறவன் ஷீரடிக்கு  எல்லா பஸ்ஸும் புக் ஆயிடுத்து. வெளில ப்ரைவேட் பஸ் பாருங்கறான்..என்னை உக்கார வச்சுட்டு இவர் விஜாரிக்க போறார்...11.00 மணிக்கு ஒரு ஸ்லீப்பர் பஸ் வருமாம் ஒருத்தருக்கு 400/- டிக்கட் னு புக் பண்ணிட்டு வரார்...

வெளில போய் சாப்டலாம்கறார்..நீங்கதான் ஆசையா ஜீரா ரைஸ் கார்த்தால வாங்கி கொடுத்தேளே அதையே சாப்டுக்கறேன்கறேன்..இவர் மட்டும் போய் மசால் தோசையும் டீயும் சாப்ட்டு வந்து 

“வடக்கத்தி ஹோட்டலில், மசாலாதோசை ‘ஆர்டர் ‘ செய்யாதே. தெற்கத்திய ஹோட்டல்களில் சப்பாத்தி ஆர்டர் செய்யாதே- இது  என்னோட  அனுபவ மொழிங்கறார். (வேகாத மசால் தோசையாம்..நல்லா வேணும் 😁😁)

மணி 11.00 ஆச்சு. பஸ்ஸ காணோம்..இவர் மழைல பஸ்ஸ்டாண்ட் உள்ளுக்கும் வெளிக்கும் அல்லாடி ஒரு வழியா 12 மணிக்கு பஸ் வரது.  

சீரடி மும்பையில் இருந்து250 கீலோமீட்டராம்...5 மணி நேரம் ஆகுமாம்..நிம்மதியா தூங்கலாம்கறார். 

அன்னிக்கு முழுக்க மும்பையை சுற்றியதில் அடித்துப்போட்ட மாதிரி தூக்கம். ....கனவில் கனவு நகரம் விரிந்து மும்பையின் காட்சிகளுடன் இது வரை காணாத ஷீரடியின் கலவையாக...சித்தி விநாயகரும் ,சீரடி பாபாவும், கேட் வே ஆஃப் இந்தியாவும்,கடல் பாலமும்,ஆஃப் ப்ளேட் ஜீரா ரைஸும் கனவில் துரத்தி வர….பலபலவென விடியவும் பஸ் ஷீரடி நெருங்கவும் சரியாக....

ஏற்கனவே திருப்பதி போல தேவஸ்தான காட்டேஜ்கள் பற்றி ஷீரடி மகாத்மியம்ங்கற புத்தகத்தை படிச்சு சொல்றார். 

ஸ்ரீ சாயி சன்ஸ்தான் டிருஸ்டுக்கு சொந்தமான சாயி ஆஷ்ரம் விடுதியில் 1536 அறைகள் உள்ளன. தவிர குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகள்,கூட உண்டுங்கறார் 

இதெல்லாம் வக்கனையா படிப்பீங்க. ஆனா முறையா ஆன்லைன்ல ரிசர்வ் பண்ணிட்டு அழைச்சிண்டு  வராம கடைசி நிமிஷம் வரைக்கும் எங்க போறதுன்னு ப்ளான் பண்ணாம கெடைச்ச பஸ்ல தொத்திண்டு வரவருக்கு இது எதுக்கு?

மொதல்ல பக்கத்துல லாட்ஜ் பாருங்கோங்கறேன். 

அவருக்கு அர்ஜென்டா பாத்ரூம் போகணுமாம். ரயில் மாதிரி ஸ்லீப்பர் வச்சவன் பாத்ரூம் வைக்க மாட்டானோன்னு திட்டிண்டே ரிசர்வேஷன் செய்யாத நிலையில் புதிய ஊரில் எப்படி தேடிப்போவது? ன்னு தவிக்கறார். 

பக்கத்து லாட்ஜ்ல ரூம் 500/- ஆனால் பாத்ரூம் மற்றும் குளியலுக்கு ஒரு மணி நேரம் ஒருத்தருக்கு 30 ரூபாய்ங்கறான்.சரின்னு அர்ஜன்ட்டுக்கு காலைக்கடன் முடித்து குளித்து விடுவோம்.  பின்னர் கோயில் பக்கத்துல போய் தேவஸ்தான க்வாட்டர்ஸ் புக் பண்ணலாம்கறார். ஆனா அங்கயும் இங்கயும் அலைஞ்சு பாத்துட்டு அங்கேயே ஏற்கனவே தந்த 60 ல்,30/- கழிச்சிண்டு 470/- க்கு புக் பண்றார்.  

லாட்ஜ்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துண்டு ஒரு ஷேர் ஆட்டோல கோயில் போறோம்.  செல்போனை வச்சுட்டு ஞாபகமா ஐடி கார்ட் எடுத்துண்டு..கபகபன்னு பசி ..எப்ப தரிசனம் முடிஞ்சு வருவோம்னு தெரியாதுங்கறதுனால எதிரே இருந்த உடுப்பி ஓட்டல்ல நுழையறோம்.  இட்லி வடை காபின்னு நம்ம ஊர் டேஸ்டோட…

கோயில் வாசல்ல திருப்பதி மாதரி எதேதோ வரிசை..எதுல நுழையறதுன்னு குழப்பம். ஒருத்தர் சொல்றார்...எதிர்  ஆஃபீஸ் போய் முதலில் ஐடி கார்டு காண்பித்து போட்டோ எடுத்துண்டு அவங்க தர ஐடில போட்டிருக்கற நேரத்துல போகணும்கிறார்.  

பத்தே நிமிஷத்துல 3 ம் நம்பர் கேட்வழியா நுழைய பாஸ் கெடைச்சு உள்ளே போறோம்.  திருப்பதி மாதிரி வழில சூடா பால் தரா…

திருப்பதி மாதிரி சீரடியிலும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. திருப்பதியில் ஜருகண்டி, ஜருகண்டி என்பார்கள். சீரடியில் பக்தர்களை சலோ, சலோ... என்று சொல்லி விரைவுபடுத்துகிறார்கள். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் வேறு வழியின்றி பக்தர்கள் கையை பிடித்தும் இழுத்தும் விடுவார்களாம். 

க்யூவில் போகும் போது சாயி பாபா சரித்திரத்தையும் கோயில்ல உள்ள ஒவ்வொரு எடத்தைப்பத்தியும் சொல்லிண்டு வரார்…

படங்கள்மும்பையின் சில காட்சிகள்

(By சுஜாதா&வெங்கடேசன்…6381369319)






No comments:

Post a Comment