Thursday, December 24, 2020

சம்பந்தி சாயம் வெளுத்தது

 சம்பந்தி சாயம் வெளுத்தது 

கதிர்வேல் மும்மரமாக தன் தலைக்கு டை அடித்துக் கொண்டிருந்தார். கிச்சனில் அவர் மனைவி மீனாட்சி அல்வா கிண்டுவதற்காக அரைத்து வைத்திருந்த பாதாம் முந்திரி விழுது கதிர்வேல் முகத்தை ஃபேஸ் மாஸ்க் ஆக அலங்கரித்துக் கொண்டிருந்தது.

   கடந்த வாரம் நாளிதழில் வந்த விளம்பரமே இதற்கெல்லாம் காரணம். "டிவி சீரியலில் அப்பா ரோலில்  நடிக்க மிடுக்கான ஆண் தேவை " விளம்பரத்தைப் பார்த்த உடன் கதிர்வேல் குதூகலமாக ஐஸ்வர்யா ராய்க்கும் அமலா பாலுக்கும் தந்தையாக நடிப்பது போல் தன்னைத்தானே கற்பனை பண்ணிக்கொண்டு களத்தில் இறங்க தயாராகி விட்டார்.

 கதிர்வேலின் சம்பந்தி ராகவனும் இதற்கு ஒத்து ஊதினார். "உங்களுக்கு என்னங்க?  ஃபிட்டா இருக்கீங்க! " நம் மருமகளின் தந்தை. ஐஸ் தான் கொஞ்சம் வைப்போமே என்று மத்தினால் கடைந்து எடுத்த வெண்ணையை போன்ற அவருடைய வார்த்தைகள் கதிர்வேலின் மனதில் வழுக்கிக் கொண்டு சென்றது. அது உண்மையும் கூட. வங்கியில் பணி புரிந்தாலும் அடிக்கடி நண்பனின் மரப்பட்டறைக்குச் சென்று அங்கு தொழிலாளர்களுடன் மரம் இழைத்தல் போன்ற  வேலைகள் செய்வதால் 60 வயதிலும் அவர் உடல் உரம் ஏறி உறுதியாக இருந்தது. 'தேகப் பயிற்சி செய்யலாமே' என்று மீனாட்சி கூறினால் "ஃப்ரண்டை பார்த்த மாதிரியும் ஆச்சு எக்சர்சைஸும் ஆச்சு" என்று கதிர்வேல் பதில் கூறுவார். 

"என்னங்க, சம்பந்தி வீட்டில நாளைக்கு பூஜை வச்சிருக்காங்க, நம்மள சாப்பிட கூப்பிட்டு இருக்காங்க" என்றாள் மீனாட்சி. 

"நாளைக்கு தானே முதல் நாள் ஷுட்டிங் எனக்கு, வரச் சொல்லி இருக்காங்க" 

ராகவனுக்கு போன் செய்தார் கதிர்வேல். "சம்பந்தி, மதியம் ஒரு மணிக்கு தானே வரச் சொல்லி இருக்காங்க உங்கள, நீங்க 12 மணிக்கு சாப்பிட்டுவிட்டு கிளம்பிடலாம், நானே உங்கள காரில் கொண்டு விட்டுடறேன் "என்றார் ராகவன்.

மறுநாள் குறித்த நேரத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றடைந்தார் கதிர்வேல். அவரை வரவேற்ற டைரக்டர் சுருக்கமாக காட்சியை விளக்கினார். "நீங்க வில்லனுக்கு பக்கபலமான அடியாள். சாயப்பட்டறை கழிவுகள் ஆற்றில் கலப்பதை ஹீரோ எதிர்க்கிறார். வில்லன் ஹீரோவ அடிக்கும்போது நீங்க சாயம் கலக்குற மத்து எடுத்து  அதால ஹீரோவ நீங்களும் அடிக்கிறீங்க. மேக்கப்மேன், இவருக்கும் மேக்கப் போட்டு விடுங்க"

மேக்கப்மேன் கதிர்வேலின் முகத்தில் கரேல் என்று எதையோ பூசி, தலைமுடியை நன்றாக கலைத்துவிட்டு , இடுப்பில் பட்டாபட்டி அண்ட்ராயர் தெரிய ஒரு லுங்கியும், கழுத்தில் பளபளவென்று ஜிகினா கலரில் ஒரு பெரிய கைக்குட்டையையும் கட்டிவிட்டான். கதிர்வேலுக்கு கண்ணாடியில் தன்னைப் பார்க்க சகிக்கவில்லை. பத்துப் பன்னிரண்டு முறை  ரீடேக்குகள் ஆகி ஒருவழியாக ஷூட்டிங் முடிந்தது. 

எல்லோருக்கும் டீ வந்தது. ஏதோ ஒரே இரைச்சலும் சண்டையுமாக வெளியிலிருந்து கேட்டது. கதிர்வேல் எட்டிப்பார்த்தார். "எங்க கோரிக்கைகள நிறைவேற்றாம, எங்க சங்கத்து ஆளுங்கள நடிக்க கூப்பிடாம புதுசா ஒருத்தர கூப்பிட்டு ஷூட்டிங் நடத்தி விடுவீங்களா? டேய் யார்ரா அவன்? வெட்டாம விடமாட்டோம் " என்ற கூச்சல் கேட்டு வெலவெலத்து போனார் கதிர்வேல். வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டோம் என்று புரிந்துவிட்டது அவருக்கு.

மெல்ல நழுவி வேறு வாசல் வழியாக வெளியில் வந்து தன் நடிப்பு ஆசைக்கு ஒரு பெரிய முழுக்கு போட்டார் கதிர்வேல்.

No comments:

Post a Comment