Monday, December 14, 2020

வில்வம்

 66. வில்வம் ((சிறுகதை சீசன் 5) #ganeshamarkalam

வாசல்ல யாரோ கூப்பிடரா மாதிரி. உக்காந்து பேப்பர் படிக்கரேன். எழுந்து பாக்கணுமா என்ன? இன்னொருக்கா நன்னா கூப்டா போலாம். பீஹாரில் ஏதோ கலாட்டா, சுவாரஸ்யமா இருக்கு. எதுக்கு கலாட்டான்னு தெளிவாப் போடலை ஆனா போலீஸ் சரியா சமாளிக்கலைன்னு விலாவாரியா எழுதியிருக்கான். திரும்பவும் “அய்யா?”.

ஆமாம் கூப்பிட்டா. அழகா “கல்யாணி இல்லம்”னு போர்ட் வச்சு பக்கத்துலே பெல், அடிக்கப் பிடாதா? போரேன். கேட்ல, தகடு போட்டு ரோட்டுலேந்து பாத்தா தெரியப் பிடாதுன்னு. அந்தண்டை குள்ளமா நின்னா தெரியாது. ஆனா நிச்சயம் யாரோ நிக்கரா. போய் எட்டிப் பாக்கரேன். ஒரு மூதாட்டி. தலை நரைச்சு. தாப்பாளை தொறந்து “என்னம்மா, என்ன வேணும். பெல்லை அடிக்கப் பிடாதா?” “பெல் இருக்கா சாமீ! இதோ அடிக்கரேன்.” அடிக்கரா. கை பட்டு நேம் போர்ட் அசங்கிட கோவம் வந்தது.

“அதான் வந்துட்டேனே! எதுக்க்கு பெல்லடிச்சாய்?” “அடீன்னு சொன்னீங்களே?” “சரிதான், என்ன வேணும் சொல்லு”. “கொஞ்சம் வில்வம் பரிச்சுக்கலாமா?” எங்காத்து வாசலில் பெரீசா 2 மாடி உசரத்துக்கு வில்வமரம். எனக்கே மறந்துபோச்சு, இவள் சொன்னதும், மேலே அண்ணாந்து பாக்கரேன். அழகா, பச்சப் பசேல்னு.

28 வருஷம் மின்னாடி வீடு கட்டின புதுசில், ஒருக்கா காஞ்சீவரம் போயிட்டு காரில் வரப்போ நர்சரீலே கொடுத்தான்னு கொண்டு வந்து நட்டது. எதுவோ வாங்கரச்சே “இதையும் எடுத்துக்குங்க” சும்மா தந்தான். காய் வாங்கினா கருகப்பிலை கொசுறு மாதிரி. “எங்கே வைக்க?” “எங்கே வேணும்மாலும் வைங்க. ஜோடியா எடுத்துக்கங்க.” ரெண்டு கன்னு. ஓரு வாரம் அவன் தந்த பாக்கெட்லேயே வச்சு நீர் தெளிச்சிண்டு எங்கே நடலாம்னு குழப்பம். திருவையாத்தில் கங்காவைக் கேட்டா சரியாச் சொல்லுவள்னு போன் போடேன். ஒண்ணு விட்ட அக்கா.

“எங்கே வேணும்னாலும் வைடா, பெரீசா வளரும். திக்கில்லாம”. பின்னாடி இடமில்லை. அப்பார்ட்மென்ட். சிலபேராத்து கிச்சன் காம்பவுண்டுக்கு பக்கத்தில். இது வளர்ந்து அவாத்தில் இடிச்சா சண்டை பொடுவா. வாசப்பக்கம் வச்சாச்சு. ரெண்டையும் எப்படி? கங்கா சொன்னா, “ஏதாவது சிவன் கோவிலில் ஒண்ணு வச்சுடு. பக்கத்தில் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு போனேன். மாடம்பாக்கம் கோவில் பிரசித்தி. ஞாயித்துக்கிழமை ராகுகால பூஜை சரபேஸ்வரருக்கு தடபுடலா செய்வா. குருக்கள் தெரிஞ்சவர்தான். சன்னிதி தெருவில் இடதுகைப்பக்கம் ரெண்டாவது வீடு. “உள்ளே சைடில் நீங்களே நட்டுடுங்கோ. கொண்டுவரா, அங்கேதான் வைக்கச் சொல்வம். வச்சுட்டு தரிசனம் செஞ்சுட்டுப் போங்கோ. புண்யம்.”

எங்காம் கோவில்லேந்து 6 கிமீ தூரம். ஜோடியா ரெண்டு மரமும் வளர்ந்தது. போரச்சே பாப்பேன். என்னமோ ரெட்டைக் குழந்தை பொறந்து அதில் ஒண்ணை தத்துக் கொடுத்துட்டாப் போல. எனக்கு குழந்தைகள் இல்லை. தனிக்கட்டை. கல்யாணமே செஞ்சுக்கலை. நடராஜன்னு தாத்தா வச்ச பேர். அப்பா கல்யாணசுந்தரம். நமக்குத்தான் ஆலை ஆத்துக்காவது கல்யாணினு வச்சுடலாம்னு. அதில் அப்பா பேரும் சேர்ந்து. ரெம்பப்பேர் கல்யாணி உங்க பொண்ணா, அம்மாவா, ஆத்துக்காரியான்னு கேப்பா. க்யூரியாஸிடி. பூனையா இருந்தா கொன்னுடும்.

வில்வ இலையை என்ன செய்வேள்? தனிக் கட்டை கோவிலுக்கு பரிச்சி தருவேளா? நான் எங்கே கோவில் குளம்னு? எப்பவாவது. கடவுள் பக்தி இல்லைன்னு கிடையாது. அம்மா அப்பபா இருந்த வரைக்கும் பண்டிகைக்கு போவேன். இப்ப என் வேலை உண்டு நான் உண்டுன்னு. ரெண்டு மாசம் மின்னாடி ரிடயர் ஆயாச்சு. இப்ப போவேனோ என்னவோ.

எல்லாம் ஒட்டுக்க ஞாபகம் வந்து அண்னாந்து பாத்திண்டுருக்கேன். இவள் என்னையே பாத்தூண்டு. பரிச்சுக் கொடுப்பானா மாட்டானா? யோசிக்கரா. “தொரட்டி இல்லையேம்மா”. “ஒட்டடைக் கம்பு இருந்தா போதும் சாமி, அடிச்சா உடெஞ்சு விழும்”. சரி பாவம் வயசானவள் கேக்கரா கொடுக்க முடியாதுன்னு விரட்டுவானே! “பரிச்சிட்டு போய் என்ன செய்வாய்”. “கோவிலுக்கு தருவேன். அதுக்குத்தான்”. “சரீ. உள்ளே வா.” ஒட்டடைக் கொம்பை எடுத்துண்டு வரேன். மாடிப்படி ஏறி பால்கனீலே நின்னுண்டு அடிக்கரேன் ஒண்ணும் விழக்காணும். பிரம்மப் பிரயத்தனம் செஞ்சு ரெண்டு மூணு கிளை விழ “இது போதும், இறங்கி வந்திடிங்க.” பெர்மிஷன் தந்தா.

“இங்கேயே ஆய்ஞ்சு எடுத்துக்கரேன், குடிக்க தண்ணீ கொடு”. எனக்குத்தான் வேணும், கையை இப்படியும் அப்படியும் வீசி தோள்பட்டை வலிக்கரது. இவள் வெறுமனே அண்ணாந்து வேடிக்கை பாத்தவள். இவளுக்கு எதுக்கு? தந்தேன்னு வச்சுக்கோங்கோ.

மும்மூணு இலையா கிள்ளிக்கரா. முள் கையில் படாம லாகவமா எடுத்து கிளையை தூர வீசிட்டு. நிறைய இலை கும்பாச்சியா கிடெச்சிருக்கு. தேறினதே பை நிறைய கொண்டுத்து. பை கொடூன்னு என்னண்டையே கேட்டா. “நல்ல தொரட்டியா, ஊக்கு வச்சது ஒண்ணு வாங்கி வச்சுக்க சாமி.” அவள் போட்டுட்டுப் போன முள்ளுக்கிளை அப்புரப் படுத்த நான்தான் மெனெக்கெட வேண்டியதாப் பொச்சு. கார்த்தால குப்பை வண்டி வரும் எடுத்துண்டு போகச் சொல்லிடலாம்.

அன்னைக்கு சாயங்காலம், வில்வ மரம் நினைவுக்கு வந்ததில் கோவிலுக்குப் போனா என்னன்னு தோணித்து. சைக்கிள எடுத்துண்டு தேனுபுரீஸ்வரர் கோவிலுக்குப் போரேன். அன்னைக்கு பிரதோஷமாம். கோவில் வாசலில் நம்மாத்துக்கு வந்த கிழவி. அட, இங்கே என்ன செய்யரா? பூ விக்கரா. கேக்கிரவாளுக்கு 10ரூபாய்க்கு ஒரு கைப்பிடீன்னு வில்வம். அப்படியா சேதி? எங்காத்தில் பரிச்சதை நீ இங்கே கொண்டு வந்து வியாபாரம் செஞ்சு காசு பாக்கரையா? அவளாண்டை என்னத்துக்கு சண்டை? வச்சுக்கரேன்! அவளை பாக்காத மாதிரி உள்ளே போயிட்டு சாமி பாத்துட்டு வந்தாச்சு.

சைக்கிளை மிதிச்சிண்டே வரச்சே கணக்குப் பண்ரேன். 30 பிடி இலை இருக்கும். அப்படீன்னா 300ரூ கிடைக்கும். நல்ல லாபம். இல்லை என் மரத்தில். தொரட்டி என்னுது. அத்தனையும் லாபம். மனசின் ஓரத்தில் நல்லதுதானே நம்பாத்து வில்வம் ஈஸ்வரனுக்கத்தானே போய் சேர்ந்ததுன்னு பட்டாலும் 300ரூபாய் நஷ்டம்னும் பட்டுடுத்து. இருக்கட்டும் கிழவி திரும்ப வந்தா கேட்டுடணும்.

ரெண்டுவாரம் ஆச்சு. அடுத்த பிரதோஷத்துக்கு சரியா கிழவி வந்துட்டா. “ஐயா, வூட்டிலே இருக்கீங்களா?” நன்னா மாட்டிண்டா இன்னைக்குன்னு போரேன், என்னைப் பாத்து சிரிக்கரா! “அன்னைக்கு கோவிலுக்கு வந்து கண்டுக்காம போயிட்டீங்க, உங்களுக்கு வில்வம் ஃப்ரீயா தந்திருப்பேனே!” “இப்ப எதுக்கு வந்தாய்?” “இலை வேணும். தொரட்டி வாங்கி வைக்கச் சொன்னேனே, செஞ்சீங்களா?” “அவளை திட்ட வார்த்தைகளை சேகரிச்சு வச்சிருந்தவன் பக்குன்னு சிரிச்சுட்டேன். எத்தனை உரிமையோட தொரட்டி வாங்கிட்டயான்னு கேக்கரா! “இரு! உனக்காக ஒரு தொரட்டி செய்யரேன், பொருமையா இரு” ஒட்டடைக் கம்பில் நுணீலே இருந்த பரஷ் அகட்டிட்டு மூங்கில் கொம்பை சாய்ச்சு வச்சு சணக்கயித்தால் இறுக்க கட்ரேன். சுலபமா கிளையில் கொக்கி மாட்டி இழுக்க முடிஞ்சது. விழுந்ததை ஆசையா ஆய்ஞ்சு எடுத்துண்டு கிளம்பினா.

“இந்தாம்மா சித்தே நில்லு”. “என்ன சாமி காசு கேப்பீகளா?” “அதெல்லாம் வேண்டாம். இந்த முள்ளுக் கொம்பை எடுத்துட்டு போய் அந்தண்ட வீசிடு. இங்கே இருந்தா குப்பை அள்ளரவன் முள் குத்துதூன்னு போன வாட்டி 20ரூ என்னண்டை கேக்கரான். நீ வில்வம் வித்து காசு பண்ன நான் இலையும் சும்மா தந்துட்டு 20ரூ வேர மேலுக்கு சிலவு”. “கொடு சாமீ”ன்னு கட்டி எடுத்துண்டா. கட்ரப்போ முள் அவ கையில் குத்த “ஆ”ன்னு அவள் மனசுக்குள் சொன்னது என் காதில் விழுந்ததே! பாவம்னு தோணித்து. நாமளே முள்ளைத் தூக்கிப் போட்டிருக்கலாமே. அவள் போனதும் வாசலில் கூர்கா வர அவனை கடைத் தெருவுக்குப் போய் நல்ல கனமா ஹூக் வச்ச தொரட்டி வாங்கிண்டு வரச் சொன்னேன். இனிமேல் நிறைய சுலபமா பரிச்சுப் பொடலாம்.

ஆத்தில் சும்மா இருக்கும் எனக்கு பிரதோஷம் எப்ப வரும்னு கேலண்டரைப் பாக்கிர அலவுக்கு ஆய்ப் போச்சு. என்னமோ தெரியலை இந்த கிழவி வருவதும் இவளுக்கு நான் பரிச்சுப் பொடுவதும், எல்ல வில்வமும் அந்த தேனுபுரீஸ்வரருக்கு அர்ச்சனைக்கு போக அளவிட முடியாத புண்யத்தை எனக்கே தெரியாம நான் அனுபவிப்பதா மனசில் குதூகலம். கோவிலுக்கு போரேனோ இல்லையோ, இவள் அங்கே உக்காந்துண்டு ப்ரிஸ்க் பிசினெஸ் பண்ணுவதை மனக் கண்ணில் பாக்க முடிஞ்சது. இவள் செய்யும் தொழிலுக்கு நான்தான் ரா மெடீரியல் சப்ளயர். 35 வருஷம் இங்க்ளீஷ் எலெக்ட்ரிகல்ஸில் பர்சேஸில் இருந்துட்டு ஜிஎம்மா ஒய்வு பெற்றவனுக்கு இப்படி!

தனிக்கட்டைக்கு 15 நாளைக்கு ஒருக்கா பேச்சுத் தூணை. அக்கம்பக்கத்தில் யாரும் உன்னோட பெச மாட்டாளா, சொந்தம் இல்லையா, கல்யாணம் செஞ்சுக்கலை சரி, நட்பே கிடையாதான்னு கேக்கலாம். இந்த கதையில் ரெண்டே பாத்திரங்களாப் பொச்சுன்னு நீங்க வருத்தப் படுவது புரியறது. இருக்கா. கூடப் பொறந்த தம்பீ பெச மாட்டான். எப்பவாவது அவன் பொண் “பெரீப்பா எப்படி இருக்கேள்”னு விசாரிப்பள். வலசர்வாக்கம்தான். ஆனா தூரத்து சொந்தமாச்சு. பெரீய ஆத்தில் தனியா இருக்கான், சென்னைக்குப் போனா சௌரியமா ரெண்டுநா தங்கிக்கலாம். சாப்பாடுக்குத்தான் ஹோட்டலுக்குப் போணம்னு அலுத்துண்டே தங்கிட்டுப் போர சுற்றம். “சமையலுக்கு யாரையாவது போட்டுக்கப் பிடாதா? கரிசனம் வேற.

நட்பு நிறைய. ஆனா ஒத்தை பிராம்ணன்னு எதுக்கும் வருந்தி அழைப்பதில்லை. ஏனோதானோன்னு பத்திரிகை சொல்லுவா. அதாவது போனில் விஷயத்தை சொல்லி பத்திரிகை அனுப்பரேன்னு அனுப்பாம விடுவதை அப்படிச் சொன்னேன். அதான் இந்த கிழவி அத்தனை முக்கியமாப் பொச்சு.

அனா பாருங்கோ 1 வருஷமா கரெக்டா வந்திண்டிருந்தவள் திடீர்னு ஒரு பிரதோஷத்துக்கு இலை வேணும்னு வரலை. வேற எங்கேயாவது கிடெச்சிருக்கும். ஆனா அடுத்த வாரமும் வராதது மனசை என்னவோ செஞ்சது. இன்னைக்குத்தான் பிரதோஷம், அடுத்த வாரம் சிவராத்திரியும் சேர்ந்துக்க. வரலைன்னா? நம்மாத்து வில்வம் கோவிலுக்கு போகாம எப்படி? நானே தொரட்டியால பரிச்சு, இலையைக் கிள்ளி ஒரு பை நிறைய ரொப்பீண்டு கிளம்பரேன். பாத்து கொடுத்துடலாம்னு. இல்லை.

பக்கத்து பூக்கடை பொண்கிட்டே “இங்கே ஒரு கிழவி பூ, வில்வம் விக்குமே அது எங்கே?” “அதுவா? உட்ம்பு சரியில்லை, கால் ஒடிஞ்சு படுத்திருக்கு”. “எங்கே வீடு, போய் பாக்கலாமா?” “நீ ஐயறு அவுக வீட்டுக்கு எதுக்கு, வில்வம் கொண்டாந்தியா, என்னண்டை கொடு”. “வீடு எங்கேன்னு சொன்னா தரேன். நீ வித்துக்க”. “குளத்தை சுத்தீப் போ, செல்வகணபதி நகரில் பூவாயி பாட்டீன்னு கேளு”. கண்டுபிடிச்சு போயாச்சு. சின்ன ஓட்டு வீடு. இவள் வந்தா ஐயான்னு கூப்பிடுவாள். நாம பூவாயீன்னு எப்படி? “அம்மா வீட்டில் யாராவது இருக்கீங்களா?”

மொள்ள கழியை ஊணிண்டு வரா. என்னை பாத்ததும் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. “என்னம்மா வரவேயில்லை அதான். இலை கொண்டாந்தேன், அங்கே கொடுத்திட்டு இங்கே”. “உள்ளெ வாங்கய்யா?” ரெம்பவே குனிஞ்சு போனேன். உள்ளே கயித்துக் கட்டிலில் ஒரு முதியவர். படுத்த படுக்கையா. “என் புருஷன், 3 வருஷமா பேச்சில்ல. நான்தான் பாத்துகிடுதேன். வழுக்கி விழுந்து இப்படி ஆகிச்சு. உன் வீடு வரைக்கும் நடக்க முடியாது, அதான்”.

இவளுக்கே 70க்கு மேலே! அவருக்கு? கிழிஞ்ச நாரா. இவள் பாத்துப்பாளா? எப்படி? வீட்ளே வேற யாருமில்லை. சட்டுன்னு என்னை நொந்துக்கரேன். ஓங்கி அறைஞ்சுக்கணும் போல் பட்டது. பிச்சாத்து 300ரூபாய்க்கு அலைஞ்சனே, அது இவளுக்கு 33000 பெருமே! நாம ஏன் இப்படீ இருக்கம்? அதான் நம்பளை தனியா அல்லாட விட்டிருக்கார் அந்த தேனுபூரீஸ்வரர்.

பர்ஸ்லேந்து 3000 நீட்டரேன். “என்ன காசெல்லாம் தரீங்க? காசு எங்களுக்கு ஒண்ணும் செய்யாது. செய்யரத்துக்கு ஏதாவது வேணும். அதான் பூ வியாபாரம். வில்வம். வந்ததும் பரிச்சுக் கொடுக்கர மவராசன் நீங்க. கோவிலுக்கு வில்வம் தந்தா சந்தோசமா இருந்திச்சு.  ரெண்டு வாரமா சங்கடமாப் பொச்சு”. “இனிமேல் நான் பரிச்சிட்டு வந்து தரவா?” “அப்படியா? கால் குணமார வரைக்கும் செய்வியா?” செய்யரேன்.

திரும்பி வரச்சே சைக்கிளில் ஏறி ஓட்டிண்டு வரத் தோணாம தள்ளீண்டே 6 கிமீ வந்திருக்கேன்.

No comments:

Post a Comment