Thursday, December 24, 2020

ஓ...அமெரிக்கா - 7

 🌸🌸🌸🌸7🌺🌺🌺🌺

ஓ...அமெரிக்கா - 7 

என் மகள் சமைத்து சாப்பிடுவது வழக்கம் என்பதால் பொருட்கள் வாங்குவதற்காக அவளுடன் நானும் வால்மார்ட் ஸ்டோருக்கு சென்றேன். உண்மையில் திட்டமிட்டால் கொஞ்சப் பணத்திலேயே அமெரிக்காவில் ஓரளவு டீஸன்டான வாழ்க்கை வாழ முடியும். வெளியே சாப்பிடாமல் சமைத்து சாப்பிடுவது அதில் ஒன்று.

வெளியே காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைவதற்குள் வெயில் சுட்டெரித்தது. உள்ளே நுழைந்ததும் என்னைக் கவர்ந்தது வால்மார்ட்டின் பிரம்மாண்டம். இங்கேயும் நாம் ஐந்து மாடிக் கட்டிடங்களைப் பார்த்திருந்தாலும், அங்கே ஒரே தளத்தில் மிக மிக உயரமான கூரையோடு, ராட்சஸ ஷெல்ஃபுகளில், வித வித விதமான பொருட்களை ரகவாரியாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். Maze போன்ற அந்த அடுக்குகளின் இடையில் நாமே காணாமல் போய்விடுவோம்போல அவ்வளவு பிரம்மாண்டம். இதனால் நான் என் மகளுடன் சேர்ந்தே நடந்துகொண்டிருந்தேன். 

நடக்கும் வழியில் பொருட்கள் கிடைக்கும் இடத்தை அம்புக் குறிகளுடன் காட்டும் போர்டுகள் போதாதென்று ஒவ்வொரு ஷெல்ஃபிலும் என்னென்ன பொருட்கள் இருக்கிறதென்று சிறிய போர்டுகளும் இருப்பதால் புதிதாக செல்பவர்கள்கூட எளிதாகப் பொருட்களை எடுத்துக்கொள்ள முடியும். கிடைக்காத பொருட்களே இல்லை என்று சொல்லும்படி எல்லாப் பொருட்களும் இருந்தாலும் நம் குழந்தைகள் காலப்போக்கில் எதை எங்கு வாங்கினால் பணத்தை மிச்சப் படுத்தலாம் என்று தெரிந்து அதன்படி வாங்குகிறார்கள். 

அநேகமாக எல்லா நாடுகளின் எல்லாப் பொருட்களும் அங்கே கிடைக்கின்றன. இந்திய மசாலாப் பொருட்கள் இங்கே நான் கேள்விப்படாததெல்லாம் அங்கே பார்த்தேன். எல்லாம் ஏற்றுமதியாகும் பொருட்கள். ஒவ்வொரு நாட்டிலும் ஏன், தீவுகளில் கிடைக்கும் அந்தந்த இடங்களுக்குப் பெயர் பெற்ற பொருட்கள் அங்கே நிறைந்து கிடக்கின்றன. 

பில் போடும் இடத்தில் இருப்பவர்கள் பில் போட்டுக்கொண்டே வாடிக்கையாளர்களிடம் சிறு நட்பு உரையாடல்களை செய்வது எளிதான சூழ்நிலையை உருவாக்குகிறது. Consumer durables அங்கே விலை குறைவாகவும், தரம் அதிகமாகவும் இருக்கிறது. அதிலும் சமையலறையில் உபயோகமாகும் ஒவ்வொரு செயலுக்கும் எளிதாக ஒரு மெஷின் அல்லது பொருள் இருக்கிறது.   தவிர எல்லா டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் தேவையான எண்ணிக்கையில் கழிவறைகள். அங்கே எதிர்பாராமல் நான் கேட்ட "ஓடாதடீ" என்ற யாரோ ஒரு தமிழ் அம்மா குழந்தையை சத்தமாக அதட்டியது புன்னகை வரவழைத்தது.

இதைப்போலவேதான் Costco விலும். ஆனால் ஏறக்குறைய நம் உழவர் சந்தைபோல ஆனால் டிபார்ட்மென்ட் ஸ்டோர் வடிவத்தில் இருக்கும் ஸ்ப்ரௌட்ஸ் என்னை அதிகம் கவர்ந்தது. விளைபொருட்கள், அதிலும் விவசாய விளைபொருட்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து அங்கே வருவதால் ஃப்ரெஷ்ஷாக, திரட்சியாக, புதிதாகக் கண்ணாடியிலான கண்டெய்னர்களில் இருக்கும் பொருட்கள் நமக்கு வாங்கும் எண்ணம் இல்வையென்றாலும் வாங்கத் தூண்டுகின்றன. எனக்கு அங்கே மிகவும் பிடித்தது Pecan nuts. ஏறக்குறைய நம் வால்நட்போலத் தோன்றும் அது இன்னும் கொஞ்சம் இனிப்பு சுவையுடன் திரட்சியாக இருக்கிறது. என் விருப்பம் தெரிந்துவிட்டதால் என் மகள் பேகான் பை (Pecan Pie) செய்வதற்காக பேகான் நட் வாங்கும்போது எனக்கும் ஒரு பாக்கெட் வாங்கிக் கொடுத்துவிடுவது வழக்கம். எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான். 

😀😀

அதைப்போலவே கேக் மற்றும் குக்கீஸ் செய்யும் அடிப்படைப் பொருட்கள் விலை மலிவாக இருப்பதால் வாங்கி செய்து சாப்பிடுவது ரெடிமேட் கேக், குக்கீஸ் வாங்கும் விலையைவிட மிக மலிவாக இருக்கிறது.

தேங்காயும், வாழைப்பழங்களும் பெரியதாகத் திரட்சியாக இருந்தன. 

இங்கே நாம் காணும் பல காய், கனிகள் அங்கே மிஸ்ஸிங். அதற்குப் பதிலாக வேறு வேறு ஆஸ்பாரகஸ், பேசில், ப்ராக்கலி, செலரி, ஏப்ரிகாட் போன்ற காய், கனிகள் அங்கே இருந்தது எனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆனாலும் வெப்பம் அதிகமான இடம் என்பதால் இங்கே காணப்படுகிற கத்தரிக்காய் (அங்கே எக் ப்ளான்ட் என்று சொல்கிறார்கள்) போன்ற சில காய், கனிகளையும் பார்த்தேன். இங்கே விலை கூடிய, அரிதில் கிடைக்கும் செர்ரி, ப்ளூ பெர்ரி, ப்ளாக் பெர்ரி, லிச்சி வகைப் பழங்கள் அங்கே விலை மலிவாக இருந்ததால் அங்கேயே ஆசைதீர சாப்பிட்டு முடித்துக்கொண்டேன். 

இதுவல்லாமல் நம் இந்திய உணவு சமைக்கத் தேவையான பொருட்களுக்கு அங்கங்கே இண்டியன் ஸ்டோர்ஸில் எல்லா வகையான சாமான்களும் ஏறக்குறைய கொஞ்சம் அதிக விலை என்றாலும் கிடைத்து விடுவதால் இந்திய சமையல் செய்வது கடினமாக இல்லை. கடை வைத்திருப்பவர்களில் அநேகர் வட இந்தியர்கள்.

அங்கங்கே வெண்டிங் மெஷின்களில் தண்ணீரும், பாலும் கிடைக்கிறது. குழாயில் வரும் தண்ணீர் குடிக்கும் அளவுக்குத் தரமாக, சுத்தமாகவே இருந்தாலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரையே குடிக்கப் பயன்படுத்துகிறார்கள்.

மேசீஸ் ஸ்டோர்ஸ் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். தங்க நகைகள் பல்வேறு அழகான elegant டிசைன்களில் வித விதமான semi precious stones வைத்து ஏகப்பட்ட வெட்டுக்களுடன் (cuts) ஜொலிக்கிறது. தங்கம் நம்மைப்போல 22, 24 கேரட்டுகள் அங்கே இல்லை. விலை அதிகமாகிவிடும் என்பதாலோ தெரியவில்லை. ஆனால் 10, 14, 18 கேரட்டுகள் அங்கே சர்வ சகஜம். வெள்ளைத் தங்கமும், வெள்ளி நகைகளும்கூடப் பிரபலமாகத்தான் இருக்கின்றன.

அமெரிக்கர்கள் நகைகளைவிட உடைகளிலும், காலணிகளிலும் அதிக விருப்பம் உடையவர்களாக இருப்பதால் மேசீஸ், கோல், JCPenney, டார்கெட் போன்ற டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலேயே அதிகம் காணப்படுகிறார்கள். அங்கே கிடைக்கும் தோல் பொருட்கள், பைகள், பெல்ட்டுகள் நல்ல தரமுடன் அதிக நாட்கள் உழைக்கின்றன. அதைப்போல இங்கே இப்போது பிரபலமாக இருக்கும் க்ளார்க்ஸ் ஷுஸ் ஸ்டோர்ஸ் அங்கே மிகப் பிரபலமாக இருப்பதோடு, அதன் காலணிகள் தரமாகவும், டாலர்களில் ஓரளவுக்கு சரியான விலையிலும் இருக்கின்றன.

இதைப்போல என் கவனத்தைக் கவர்ந்த இன்னொரு ஸ்டோர் வேரா ப்ராட்லீ அவுட்லெட். கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில், அழகழகான பெய்ஸ்லீ டிசைன்களில், அளவுகளில், வித விதமான உபயோகங்களுக்கு ஏற்ற பைகள், டவல்கள், சோஃபாக்களின் மேல் போடப்படும் த்ரோக்கள், மூடிக்கொண்டு தூங்கும் மிங்க்குகள், பர்ஸ்கள் என்று கொட்டிக்கிடக்கின்றன. நமக்கு எதை வாங்குவதென்று திகைப்பு வருவது உண்மை. பயணம் செய்யும்போது நம் சூட்கேஸ்களில் உபயோகப்படுத்தும் அட்ரஸ் tags கூட இருந்தது 'எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள்?' என்று ஆச்சர்யம் தந்தது.

Ancila Fernando

No comments:

Post a Comment