27. கேர் கிவ்வர் (சிசீ7) #ganeshamarkalam
என்ன சொல்ல? பீ மூத்திரம் வாரிப்பொடுவேனு சொன்னா நன்னா இருக்காது. கேர் கிவ்வர். அதான் என் வேலை.
சுகந்தி. வயசு 23. அத்தனை அழகா இருப்பேன். உசரம், வாகான உடம்பு. நர்ஸிங்க் படிப்பு பாதீலே விட்டாச்சு. தொடரணும். வசதியில்லை. துணீல சுத்தி செங்கல்பட்டு ஸ்டேஷன் ப்ளாட்பாரம் கோடீலே கிடந்தேனாம். சுத்தி 3 நாய் பயத்தில் விராட்டு விராட்டுன்னு அலறிண்டு. ட்யூடி ஸ்டேஷன் மாஸ்டர் ரவுன்ட்ஸ் வரச்சே எடுத்துண்டு போய் ரூமில் வச்சிண்டு, டீக்கடை பால் சொட்டு சொட்டா ஊத்தி தூங்கப் பண்ணி. கார்த்தாலே ட்யூடி முடிஞ்சு போரச்சே குழந்தைகள் காப்பகத்தில் விட்டாரம்.
அப்பப்ப கார்டியன் மாதிரி வந்து பாத்திண்டராம். ஹோமில் சொன்னா. “சுகந்தீன்னு பேர் வைங்கோ!” அவர் சிவராமகிருஷ்ணன். அதனால் என்னை பிராம்ணக் குழந்தை மாதிரி பாத்துண்டா. அதென்ன குழந்தையில், அதுவும் காப்பகத்தில் இதெல்லாம் பாப்பாளா? கவனிச்சிண்ட ஆயாவும் தமிழ் பிராம்ணா. 5 வயசு வரைக்கும் அடாப்ஷண் ஆக சான்சஸ் இருந்ததாம். என் வண்டு மாதிரி கண்களையும் சிவந்த தோலையும், கருகரு முடியையும் பாத்ததும் தூக்கி வச்சிண்டு கொஞ்சணும்போல் படுமாம். பொண் குழந்தையை அத்தனை சுலபமா தத்து கொடுக்க மாட்டா. கேட்டுண்டு வரவாளையும் நிறைய ஸ்க்ரீன் செய்வா. கைகூடலை.
அங்கேயே வளர்ந்து, படிச்சு நர்ஸிங்க் சேர்ந்தப்போ காப்பகத்துக்கு வந்திண்டிருந்த கிரேன்ட் நின்னு போக படிப்பும் நின்னது. சாப்பாடு போட்டு எலெக்ரிசிடி பில் கட்டுவதே பெரீசாப் பொச்சு. அப்பத்தான் சென்னையில் “ஹோம் கேருக்கு நிறைய டிமாண்ட் இருக்கு. 1 நாளைக்கு 300 கிடைக்கும். வயசானவா படுக்கையில் விழுந்துட்டவா டாக்டர் சொன்னபடி மருந்து கொடுத்து, பிபி செக் பண்ணி கூடமாட இருந்து குளிப்பாட்டி நடக்க வச்சு பாத்துக்கணும். மாசக் கணக்கு பேசிக்கலாம். வீட்டோட தங்கி சிசுருஷை செய்யணும் ஹோம்லேந்து பொண்கள் பிரியப்படுவாளா?” பிசியோ, பெயின் ரிலீஃப், ஊசி போட, சொல்லிக் கொடுப்பம், பேஷன்ட் நிலமைக்கேற்ப சில ட்ரெயினிங்க். பிடிக்கலைன்னா ரீப்ளேஸ்மென்ட் வந்ததும் ஹோமுக்கு வந்துக்கலாம்னு.
“நீ போரியாடி சுகந்தி? சம்பாதிப்பது உனக்கே சொந்தம். ஏஜன்ஸி 8% கமிஷன் கொடுத்துட்டு மிச்சத்தை வச்சுக்கலாம்.” சரீன்னு போனேன். எனக்குத்தான் போக்கிடம் இல்லையே, ஹோம்லேந்து விடுபட்டுப் போராப்போல் பண்ணிக்காம என்னை அவா ஹையர் செஞ்சுப்பதா கான்ட்ரேக்ட் போட்டு அனுப்பினா. சின்ன பேகில் மாத்துத் துணி வச்சிண்டு கிளம்பியாச்சு. ரெம்ப நாளைக்கப்பரம் தன்னிச்சையா வெளியுலகம். ஹோமின் பாதுகாப்புலேந்து விலகி. எக்ஸைட்டடா.
மொதல்ல வயசான மாமா. ரெண்டு காலும் பேரேலெடிக். 4 வருஷமாச்சு. பெட் சோர். இல்லாத்துக்கு மருந்து. குணமாப் போரதில்லைன்னு தெரியும். உசுரு இருக்க முட்டும் கேர் தேவை. 1 மாசத்துக்கு மேல் என்னால் முடியலை. ஆம்பளைன்னு இல்லை. இடுப்புக் கீழே உணர்ச்சியத்துப் போனப்பரம் ஆம்பிளை என்ன பொம்பிள என்ன? மனுஷ உடல். ஆனா எப்பவும் திட்டிண்டே இருப்பர். தனக்கு இப்படி ஆகிடுத்தே! ஆதங்கம் மூளைய கசக்கிப் போட்டுடுத்து. இயலாம போனதை நம்மண்டை காமிப்பர். நான்தான் அவரை படுக்கையில் தள்ளிட்டது போல். சொல்லித்தான் அனுப்பிச்சா. அவர் பையனோ மாட்டுப்பொண்ணோ லவலெசமும் என் சார்பில் பேசி அவரை மட்டுப் படுத்த முயற்சிக்கலை. ஏஜன்சீல வேற பாக்க முடியுமான்னு கேட்டுண்டேன். பங்கஜம் மாமிக்கு கேர் கிவரா சேர்ந்துண்டேன்.
அனகாபுத்தூரில் பெரீய வீடு. பங்கஜம் தனியா இருக்கா. 4 பெட்ரூம் ஹாலும் கிச்சனும். பால்கனி. ஒரு பெட்ரூம் மாடீலே. மாடெர்ன இழைச்சுக் கட்டியிருக்கான்னு சொல்லுவமே, அப்படி. நன்னா வாழ்ந்த குடும்பம். சுவத்தில் பலவிதமா பிராயத்தில் குடும்ப போடோ. மாமி ஆத்துக்காரரோட, அப்பரம் பிள்ளையோட – அவர் 7 வயசுலேந்து 40வரைக்கும் பற்பல போஸில். ஆத்துக்காரர் 4வருஷம் மின்னாடி டாடா காட்டிட்ட. புள்ளையொட குடும்பப் படமே மாட்டலை..
பங்கஜத்துக்கு என்ன பிர்ச்சனை? ஓல்ட் ஏஜ். 77. பெஷன்ட் ஃபைலில் இருக்கு. அதெல்லாம் இப்ப ஓல்ட் ஏஜ்ஜான்னா இல்லை. ஹீனமாப் போன உடம்பு. சரீரத்தை தூக்கிண்டு நடக்க காலில் வலுயில்லை. எலும்பெல்லாம் வீக்காம். விழுந்துட்டா நொறுங்கிடுமாம். தானே சமைச்சு சாப்பிடெல்லாம் ஆகாது. பெட்லேயே எல்லாமும். வீல் சேர் இருக்கு. அதில் தூக்கி உக்காத்தி வச்சு உலாப் போலாம். அதுலேயே அடீலே டாய்லெட் அட்டேச்ட். யூரின் பேக் வச்சுண்டுட்டா.
இவருக்கு கேர் கிவிங்க் சித்தே ஈஸிங்கலாம். பத்திய சமையல் பண்ணி போட்டுட்டு நமக்கு வேணும்கிரதை பண்ணிச் சாப்டுக்கலாம். சிலவெல்லாம் அவரோடது. பெரீய பெட்ரூம் அவர் பையனோடது என்னை யூஸ் செஞ்சுக்க சொல்லீட்டா. பக்கத்தில்தான். மாமி பெல் அடிச்சா கேக்கும். எதாவதுன்னா போணம். நன்னா பெசரா. கான்வெர்ஸேஷன் பாஸிபிள். பொழுது போகும். மூணு வேளை மருந்தும் 2நாக்கொருக்கா ஊசி ஒண்ணு. ப்ரெஸ்க்ரிப்ஷன்படி வச்சுண்டு கொடுத்துட்டா ஆச்சு.
சேரரப்போவே சொன்னா. “சமுத்தா நடந்துக்கோ குழந்தை. பிடிக்கலைன்னா டிஸ்மிஸ் செஞ்சுடுவேன்”. என்னை இன்ட்ரோ செய்யன்னு வந்த ஏஜன்ஸி கேர்ல் “அப்படியெல்லாம் அடிக்கடி ஆள மாத்த முடியாது, நல்ல கேர் கிவர் கிடைக்க 15 நாளாவது ஆகும். சுகந்தியை தொறத்திட்டியான்னா அசிங்கப்பட்டுப் போவீங்க”. பயமுறுத்தினா. பாவம்
10நா எல்லாம் ரொடீன்னா ப்ளான் படி நடந்தது. புது இடம் இத்தனை வசதியா பெட், ஏஸி, ஜன்னல் கர்டெயின், அட்டேச்ட் பாத் டாயிலெட், சமையல் ஃப்ரம் மாடுலர் கிச்செனெல்லாம் என்னை புளகாங்கிதப் படுத்தவே சரியாத் தூக்கமே வரலை. ஒருக்கா ஊசி போடரச்சே கண் சொக்க “என்னடீ பொண்ணே சரியாத் தூக்கமில்லையா. உன் ரூமில் ராத்திரி தூங்காம என்னத்தை செஞ்சிண்டிருக்காய்? காரணத்தைச் சொன்னேன். “மின்னாடி இருந்த மலையாளி நர்ஸ் என்னால் எழுந்து நடமாட முடியாதுன்னுட்டு ராத்திரியானா தன் பாய் ஃப்ரெண்டை கூட்டி வச்சிண்டு குடுத்தனமே செஞ்சாடீ. எனக்குத் தெரியாம வீகெண்டில் முழு அகத்தையும் புழங்கிண்டு, கண்டுபிடிச்சு தொறத்தினேன். நீயும் அப்படி ஏதாவது செஞ்சியான்னா தெரியும் சேதி. ஒரு புது பங்கஜத்தை பாக்க வேண்டியிருக்கும்”. “எனக்கு பாய்ஃப்ரெண்ட் இல்லை மாமி!”
இப்படி ஒண்ணச் சொல்லி என் மனசில் சில எண்ணங்களை வளர்த்துட்டான்னு பட்டது. தூங்கரப்போ சொப்பனம் வரும். நானும் அப்படி – அதாவதுமுன்னே இருந்த கேர் கிவர்போல் – நடந்துக்கராப் போல்.
சும்மா இருக்கப்போ வீடு முழுக்க சுத்தி வருவேன். கார்த்தாலே காம்வாலி சரளா வந்து வீட்டை பெருக்கித் தொடச்சு பத்துப் பாத்திரம் தேய்ச்சு, துணி துவச்சு உணத்திட்டுப் போவள். அவளோட பெசிண்டே ஹவுஸ் டூர். மாடீலே துணி உலத்திண்டே ஒருநா சரளா சொல்ரா, “கிளவிக்கு நிறைய சொத்து உண்டு. பீரோ லாக்கரில் நகை நட்டெல்லாம் இருக்கலாம். வீடே 2 கோடிக்கு போகும். என்னத்தை சம்பளம் வாங்கப் போராய். மாசம் 10ஆயிரமா? ஒரு வைரத் தோடு கிடெச்சுதுன்னா செட்டில் ஆகிடலாம். என்ன சொல்ராய்?” “அது சரி!. இப்படியெல்லாம் எப்படி யொசிக்க முடியறது? தப்பில்லையா? பண உதவி வேணும்னா மாமிகிட்டே கேக்கலாமே! கொடுத்து உதவ மாட்டாங்களா என்ன? உதவ வந்த இடத்தில் கன்னம் வைப்பது பாவம். இனிமேல் என்னண்டை இப்படி பேசாதே. யாரண்டையும் சொல்லலை. இன்னொரு வாட்டி இப்படி எண்ணம் உனக்கு இருக்குன்னு தெரிஞ்சா மாமி கிட்டே சொல்ல வேண்டியிருக்கும்”.
அப்பரம் சரளா அந்தப் பேச்சை எடுக்கலை. ரெண்டுநா உம்முன்னு சுத்தி வந்தா. அப்பரம் சகஜமாயிட்டா. என்ன ஒண்ணு எப்பவாவது “கிளவி தூங்கிடுச்சா?” கேட்டுட்டு என்ன சமைச்சிருக்கேன்னு கேட்டு வாங்கிப்பா, இல்லை அந்த டிவீய ஆன் செய் படம் பாக்கணும்பா. அவளொத்தவள்தான் நானும் ஆனா அப்பப்போ எனக்கு கிடெச்சுட்ட வாழ்வுக்கு நான் தகுதி இல்லைன்னும் அவள் ரெம்பவே கஷ்டத்தில் உழளராப் போலவும் ஃபீல் விடுவள். “நாமெல்லாம் உழைக்கும் வர்க்கம், இந்த பேஷன்ட் வசதியா இருப்பதால் இங்கேயே தங்கிக்குமெனக்கு அதில் கொஞ்சம் வாசனை பிடிச்சுக்க முடியரதே தவிர அடுத்த பெஷன்ட் சின்ன 1ரூம் செட்டில் இருந்தா நானும் என்ன செய்வேன்?” அப்பரம்தான் அவளுக்கு புரிஞ்சது.
ஒருநா பங்கஜம் மாமிய வீல் சேரில் வச்சு டாய்லெட் கிட்டே தள்ளிண்டு போய் பாட்டி பண்ண வச்சு, டப்பாவ கழட்டி கொட்டிக் கழுவி எல்லாம் செஞ்சதை பாத்திண்டிருந்த சரளாக்கு கண்ணில் ஜலம். “எப்படி இதெல்லாம் செய்யர? முன்னப் பின்ன தெரியாத இந்தம்மாவுக்காக?” சொன்னேன். “எனக்கு எல்லா பெஷன்ட்ஸும் உறவுக்காரவங்களா அகிடுவாங்க. அநாதையா பொறந்துட்ட எனக்கு இப்படி சேவை செய்ய ஒருத்தர் கிடைப்பதே புண்யம்னு நினைக்கரேன். இவுங்களுக்கு சொந்தம்னு பலர் சூழ இருந்தாலும் நான் செய்வதை அவுங்க செய்யப் போவதில்லை. இப்படிப்பட்ட வயசில் முடியாமப் போனவங்களுக்கு என்னைப் போல கேர் கிவர்ஸே உறவா அமைஞ்சிடும். கடைசீ காலத்தில் இப்படி ஏற்பட்ட உறவுதான் அடுத்த ஜென்மத்தில் தொடரும். எனக்கு அடுத்த ஜென்மத்தில் அநாதை பட்டம் வந்துடாம பாத்துக்கரேன்.”
கண்ணை விரிச்சு கேட்டுண்டிருந்தவள் புரிஞ்சாப்போல் தலை ஆட்டிட்டுப் போனா. ஆனா அவள் கண்களில் தெரிஞ்ச பாவம் அவள் சட்டுன்னு என்னை கடவுள் ஸ்தானத்துக்கு உசத்தி சித்தேநாழி வச்சிண்டிருந்துட்டு கீழே இறக்கிட்டுப் போராப்போல் தோணித்து.
ஒருநா பங்கஜம் மாமி என்னைப் பத்தி நிறைய விசாரிச்சா. எல்லாத்தையும் சொன்னேன் அப்படியா, செங்கல்பட்டு ஹோமா, இதில் எப்படி - கேட்டுண்டா. என்ன தோணித்தோ “எங்கூடவே இருந்துடரையா? கடைசீ வரைக்கும்!”
“கடைசீ வரைக்கும்னா? அதான் உதவணும்னு வந்திருக்கேனே! நீங்க தொறத்தி விடாதவரைக்கும் இருக்கத்தானே போரேன்”. “அதுக்கில்லை. அது வேற இது வேற. கடைசீ வரைக்கும் இருப்பேன்னு வாய் வார்த்தைக்கு சொன்னாலும் அதில் நிறைய நிம்மதி கிடைக்கும்டீ. அதான் அப்படி கேட்டேன். சொல்லு இருக்கியா?” சொல்ரதில் என்ன? “இருக்கேன்”
அப்பத்தான் தோணித்து, இவாளப் பத்தியும் கெட்டுத் தெரிஞ்சிண்டா என்ன? “உங்களுக்கு சொந்தம்னு யாருமில்லையா? போடோவில் இருப்பவா சிலரை புரியரது. 40 வயசில் உங்க புருஷன் ஜாடையில் ,யார் அவர்? உங்க பையனா?” முழிய உறுட்டி முறைச்சுப் பாக்கரா. “சொல்லேண்டாம்னா வேண்டாம். என்னைப் பத்தி இத்தனை சொன்னேன். உங்களையும் உங்க குடும்பத்தையும் தெரிஞ்சுக்க ஆசை இருக்காதா? அதுவும் கடைசீ வரைக்கும் இருக்கணும்னா?”
“ஆமாம் என் பையன் மஹேஸ்வரன். ஜெர்மெனீல இருக்கான். சொந்தத்லேயே ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வச்சர் இவன் அப்பா. அங்கேயெ செட்டில். பாத்து பல வருஷமாச்சு”. “அவர் குடும்ப போடோ ஒண்ணு கூட வச்சுக்கலையா?” “இருந்தது. தூக்கி கடாசிட்டேன்!” “ஏன், ஏதாவது மனஸ்தாபமா? என்னாச்சு? ஒரே புள்ளைங்கரேள்”
“அவனும் அவன் ஆத்துக்காரியும் இவர் காரியத்துக்காக வந்திருந்தா. நீ தனியா இருக்கப் போராய். அத்தனை சேஃப் இல்லைம்மான்னுட்டு பீரோ லாக்கரில் இருந்த இந்த வீட்டுப் பத்திரம், என் 120 பவுன் தங்க நகை, வைரத் தோடு, அட்டிகை எல்லாத்தையும் எடுத்து வச்சிண்டு பிளேன் ஏறிப் போயிட்டா. என்னை கூட கூட்டிண்டு போணம்னு தோணலைடீ” கண்லேந்து கரகரன்னு ஜலம். அச்சச்சோன்னு தோணித்து.
“எங்காத்து மாமா ஃபேமிலி பென்ஷன்லேதான் என் ஜீவனமும் உன் சம்பளமும் கொடுத்தாரது. மகராசன். அவர் செஞ்ச ஒரே தப்பு என்னையும் கூட அழைச்சிண்டு போலை”. மாமிய அப்படியே கட்டிப் புடிச்சுக்கரேன். குலுங்கிக் குலுங்க அழுரா, அழுகய நிறுத்த ரெம்ப நாழி ஆச்சு.
இப்பத்தான், அதாவது மாமிய மார்போட வச்சிண்டப்போத்தான் நான் உண்மையான கேர் கிவ்வரா உணர்ந்தேன்.
No comments:
Post a Comment