மராட்டிய மண்ணில் ஒரு பயணம் 28
மும்பை
மும்பை அஜந்தா ஓட்டல்...
நாங்க தங்கின ரூம் மொட்டை மாடிக்கு கீழ இருந்ததால மழைத்தண்ணி சீலிங்ல ஒழுகிbed, bag ,லாம் நனைஞ்சு இருக்கு. போய் கம்ளைன்ட் பண்ணுங்கோங்கறேன்...அவன்தான் என்ன செய்வான் ...ஒரு ராத்திரி அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கறார்..
தலைவிதியேன்னு ஈரம் இல்லாத எடத்துல தூங்க ஆரம்பிச்சா 12 மணிக்கு பெரிய மழை வந்து தபதபன்னு ஒழுகறது...இவரே பொறுக்கமுடியாம இன்டர்காம்ல கூப்ட்டு சொல்றார்..ரூம் பாய் வந்து வேற ரூம் காட்டி எல்லாத்தையும் எடுத்துண்டு போறோம்...
கார்த்தால மும்பை தர்ஷன் 9.00 மணிக்கு. சீக்ரம் எழுந்து காலார மும்பை வீதியில நடக்கறோம்...சூரியன் வரதே தெரியாதபடிக்கு உயரஉயரமான கட்டடங்களுக்கு நடுவுல என்னமோ அந்த எடத்தையே வெலைக்கு வாங்கினப்பல அழைச்சிண்டு போறார்...கண்ணுல பட்ட ஓட்டல்ல சாப்டலாம்னா ஓட்டல் காணோம்...
ஒரு சைக்கிள், அதன் கேரியரில் துண்டோ கைலியோ விரித்து பெரிய அலுமிணிய பாத்திரம், அதில் சில நூறு இட்லிகள், வடைகள், தோசைகள், அதன் மூடி மீது சிறிய பாத்திரங்களில் தேங்காய் சட்டினி, தக்காளி சட்டினி, சாம்பார், ஒரு பையில் பேப்பர் தட்டுகள், பேப்பர். இவற்றைவைத்து சைக்கிள் டியூப்பால் இறுக்கமாகக்கட்டிக்கொண்டு பாம் – பாம் என அலாரம் அடித்துக்கொண்டு வருகிறார்கள். சில தமிழ்ப்பெண்கள் தலைசுமையாய்க்கூட...இவர்கள் பேரே பாம்பாம் இட்லி வாலாவாம்...
ஒரு பெண்ணிடம் வாங்கி சாப்பிட்டுப்பார்க்கலாம்கறார்...தமிழ் பேசறாங்கன்ன உடனே பெரிய நிருபர் மாதிரி அவர்களை பேட்டி எடுக்கறார்...
.மும்பை நகர மக்களின் காலை உணவை பல்லாயிரம் பேர்களுக்கு வழங்கி தங்கள் வயிற்றைக் கழுவி வாழ்கிறார்கள். இவர்களுக்குப் பெயரே பாம் – பாம் இட்லி வாலாக்கள்தான். சைக்கிள் இல்லாமல் தலைச்சுமையாகவும் இட்லி விற்கிறார்கள்.
இவர்கள் மொத்தம் 600 – 700 பேர் இருப்பார்கள். அனைவரும் தமிழகத்தின் மதுரை பகுதியில் இருந்துஇடம் பெயந்தவர்கள். ஆசியாவின் மிகப்பெரிய சேரியான மும்பை தாராவி சேரியில் வாழ்கிறார்கள். காலையில் தினமும் இட்லி - வடைவிற்பதுதான் இவர்கள் வாழ்வாதாரம். இன்று மும்பையில் மிகவும் விரும்பப்படும்காலை உணவு இதுதான். ஒவ்வொரு வீட்டிலும் தினசரி 400 இட்லிகள் அவிக்கிறார்கள். அதை விற்பதன் மூலம் ஒருவர் ரூ 400 – 500 சம்பாதிக்கிறார்கள். ஒரு வீட்டில் இரண்டு மூன்று பேர் இவ்வாறு விற்றால் ரூ 1,000 வரை சம்பாதிக்கலாம்.
இந்த குட்டித் தமிழ்நாட்டில் இருந்து தினசரி 3,00,000 இட்லிகள் மும்பை வாசிகளின் காலை உணவாகிறது. மும்பையின் மத்திய, மேற்கு, துறைமுக ரயில் பாதைகளின் சந்திப்பில் சியோன் – மாஹிம் பகுதிகளுக்கு இடையேயான முக்கிய சந்திப்பில் இவர்கள் முகாமிட்டுள்ளார்கள். இங்கிருந்து மும்பையின் சந்து பொந்துகளுக்குள் எல்லாம் தங்கள் சைக்கிள்களில் புகுந்து செல்கிறார்கள்.
அதைவிடக் குறுகிய தாராவி பொந்துகளில் வாழும் அவர்கள் கதை இன்னும் சோகமானது. காலை 4 மணிக்கு அடுப்புப் பற்றவைத்து பிரமாண்டமான நீராவி பாத்திரங்களில் கண் இமைக்கும் நேரத்தில் இட்லிகளை அவித்துக்கொட்டுகிறார்கள். அதாவது ஒரு ஈடில் 100 இட்லிகள் வேகின்றன. அதோடு தேங்காய் சட்டினி, தக்காளி சட்டினி, சாம்பார், வடைகள், தோசைகள் என உலைக்களம் போல அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது.
மத்திய மும்பைப் பகுதி பாட்டியா மருத்துவமனை சோபியா கல்லூரி அருகே மணி சுப்பிரமணியம் 20 ஆண்டுகளாக இட்லி விற்கிறார். “எனது மாமா என்னை இங்கு கூட்டிவரும்போது எனக்கு 20 வயசு. ரஜினிகாந்த் மாதிரி நடிகராகணும்னு கனவு கண்டேன். ஆனால் நடக்கவில்லை. எனக்கு இட்லி அவிக்க மட்டும்தான் தெரியுது’ என்கிறார்.
இப்போது மணி என்றால் இட்லி உலகில் தெரியாதவர் கிடையாது. தினசரி 600 இட்லிகள் விற்கிறார். மும்பை இளைஞர்களுக்கு பருப்பு வடையை அறிமுகம் செய்து அவர்கள் மனதை கொள்ளை கொண்டது இவர்தான். அவரும் அவரது மனைவியும் விடியும் முன்பே எழுந்து வேலைகளை தொடங்குகிறார்கள். வாழ்க்கை முடிவில்லாமல் செல்கிறது. இவரது ரெகுலர் கஸ்டமர் அப்ரீன் அன்சாரி கூறுகிறார்: மணி அண்ணன் இட்லி பூ போல் சுவையாக இருக்கும். வீட்டுக்கும் வாங்கிச் செல்வேன்.’
இதேபோல யதின் ரத்தோர் மணியிடம் 15 ஆண்டுகளாக இட்லி சாப்பிடுகிறார். ”நான் ஐந்து வயதாக இருக்கும்போதிலிருந்தே மணி அண்ணனின் இட்லிகளை சாப்பிடுகிறேன். அவரது சட்டினிக்கு நான் அடிமை” என்கிறார்.
மும்பையில் ஒவ்வொரு நாள் காலையிலும் ஏராளமானவங்க வயித்தை நெறப்புறது எனக்கு சந்தோசமா இருக்கு. இந்த மும்பைதான் எனக்கு எல்லாமும் கொடுத்தது. எனது மகள்கள் சுஜிதா, அஜிதா படிக்கிறாங்க. இந்த யாவாரத்த எப்பிடியெல்லாம் நல்லா செய்யலாம்னு ஐடியால்லாம் கொடுக்காங்க” என்கிறார் மணி.
மணியைப் போல கே பாண்டியும் மும்பைக்கு வேறு வேலையில் சேர வந்தவர் அது கிட்டாமல் இட்லி யாவாரி ஆகிவிட்டார். ”நான் இங்க தனியா இருக்கேன். ஊருக்கு நாந்தான் பணம் அனுப்பணும். சின்ன ரூம்தான். அதுக்குள்ளயே இட்லி அவிச்சு விக்கேன்” என்கிறார்.
”இட்லி மட்டும் இல்ல, மெது வடை, சின்னச் சின்ன தோசையும் போட்டு விக்கேன். காலயில் 3 மணிக்கு எழுந்திருப்பேன். காய்கறிகளை நறுக்குவேன். சமையலுக்கு உதவுவேன். இதன் ஒவ்வொரு விஷயத்தையும் கத்துக்கிட்டு சீக்கிரம் நானே எல்லா வேலையும் செய்வேன்” என்கிறார்.
7 மணிக்கெல்லாம் விக்ரந்த் சர்க்கிளில் ரெயிலைப்பிடிச்சு வட மும்பையில் உள்ள குஜராத்திகள் அதிகம் வாழும் காட்கோபர் பகுதிதான் அவரது ரெகுலர் பாயிண்ட். பெரிய பாத்திரங்களைத் தலையில் சுமந்து செல்வது கஷ்டமாகத்தான் இருந்தது என்கிறார். ’ஆனால், பழகிவிட்டது. தனது குழந்தைகளுக்கு ஊட்டுவதற்காக அம்மாக்கள் காத்திருப்பாங்கன்னு நெனைக்கும்போது எல்லாம் மறந்து வேகமெடுக்கும். குட்டி, குட்டி இட்லியாக இருப்பதால் குழந்தைகள் வீணாக்காமல் சாப்பிடுவதாகக் கூறுகிறார்கள்” என்கிறார்...
இவர் இந்த மும்பையில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து வேறு வாழ்க்கையைத் தேடிக்கொண்டு முகமிழந்த இலட்சக் கணக்கானவர்களில் துளிகள். இந்த பாம் – பாம் வாலாக்கள் மும்பைக்கு புது அழகு சேர்ப்பது உண்மைங்கறார்…
அங்கேயே இலைல வாங்கி இவர் பிச்சிப்போட்டுக்கறார். எனக்கு இந்த கண்றாவிலாம் வேண்டாம்..மும்பைல இதெல்லாம் சாப்டோம்னு சொன்ன ஊர்ல சிரிப்பாங்கறேன்.
பணம் இருக்குங்கறதுக்காக,ஃபைவ் ஸ்டார் ஓட்டல்ல தங்கி,விதவிதமா சாப்டாதான் சந்தோஷமா?உண்மையான பாரதத்தை தரிசனம்
பண்ணனும்னா,எளிய மனிதர்களின் வாகனங்களில் பயணித்து,எளிய மனிதர்களுடன் தங்கி,அவர்களின்எளிய உணவை உண்டு இந்த எளிய மனிதர்களை சந்தோஷப்படுத்தி நாமளும் சந்தோஷப்படலாமேங்கறார். நீங்க தாராளமா சந்தோஷப்படுங்கோ..ஆனா உங்கள காந்தியா நெனச்சிண்டு என்னை கஸ்தூரிபாவா நெனைக்காதேள்ங்கறேன்.
நான் மட்டும் இட்லியை பார்சல் வாங்கிண்டு ரூமுக்கு வந்து சாப்பிடறேன்.
பரவால்லை..,மல்லிப்பூ மாதிரிதான் இருக்குங்கறேன்...தொடுத்து தலைல வச்சுக்கோங்கறார்...
மும்பை தர்ஷன் பஸ் பணம் கட்டினவன் ஓட்டல் வாசலுக்கே வருவேன்னு சொல்றான் ..எப்படியோ ஒரு ராத்திரி மும்பைல தள்ளிட்டோம்..தர்ஷன் முடிஞ்சு மறுபடி இந்த எடம் வேண்டாம்...ராத்திரியோட ராத்திரியா ஸ்லீப்பர் பஸ்ல ட்ராவல் பண்ணி (ட்ராவலும் ஆச்சு..தூங்கற லாட்ஜும் ஆச்சு)ஷீரடியோ,வேற எங்கயோ போறோம்...மூட்டை முடிச்செல்லாம் (?)ரெடியா எடுத்துண்டு ட்ராவல் பஸ்ல ஏறி மும்பைய சுத்தி பார்த்துட்டு அவன் எறக்கி உடற எடத்துல பஸ் ஏறி வேற ஊர்ங்கறார்...உங்களுக்கு உடம்பு பூரா மூளைன்னு சொல்லிட்டு பகவானே இன்னும் என்ன கஷ்டமோன்னு (மனசுல நெனச்சுண்டு) ரெடியாறேன்...
9.00,9.30ன்னு ஆட்டம் காட்டிட்டு பஸ் வரது..ஒன் டே ட்ராவல் பஸ்ல லக்கேஜோட ஏறர எங்களை எல்லாரும் ஆச்சர்யமா பாக்கறா....
படம் : இட்லி விற்கும் தமிழ்ப்பெண்..

No comments:
Post a Comment