Monday, December 14, 2020

ஃபேமிலி பென்ஷன்

 சந்த்ர மௌலீஸ்வரன் என்பவர் முகநூல் பதிவு

என் எதிரே உட்கார்ந்திருந்த அந்த பெண்மணியை நிதானமாக நிமிர்ந்து பார்த்தேன். என் சிநேகிதர் பாலசுப்ரமண்யம் அறிமுகக் கடிதம் கொடுத்து அனுப்பியிருந்தார்

டியர் சந்துரு.. இந்த லெட்டர் கொண்டு வரும் பெண்மணி , என் மனைவியின் தூரத்து சொந்தம்.. இவரது கணவருக்கு வர வேண்டிய பென்ஷன் வரவில்லை.. இவருக்கும் ஃபேமிலி பென்ஷன் உண்டு என்று சொல்கிறார்கள்.. இவர் கணவர் இப்போது உயிருடன் இல்லை.. உன்னால் எதுவும் உதவ முடியுமா என்று சொல்லவும்.

ஏற்கனவே பாலு போனில் சொல்லியிருந்தான்.. தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.

"நீங்க விபரம் சொல்லுங்கம்மா.. உங்க வீட்டுக்காரர் என்ன வேலைல இருந்தாரு"

"காலேஜிலே வாத்தியாரா இருந்தாருங்க"

சாய்வாக ரொம்ப சாவகாசமாக இந்த உரையாடலைத் தொடங்கிய நான், காலேஜ் வாத்தியார் என்ற வார்த்தைக்கு நாற்காலியில் முன்னே வந்தேன்

"என்னோட அப்பா கூட காலேஜ் வாத்தியார் தாம்மா.. விபரமா சொல்லுங்க"

"அவரை வேலைலேர்ந்து டிஸ்மிஸ் செஞ்சுட்டதா சொல்லிட்டு இருந்தாருங்க.. கோர்ட்ல கேசு போட்டிருந்தாரு.. அது முடிஞ்சு போச்சு, பாதகமில்லாம முடிஞ்சு போச்சு பென்ஷன் வரும் அப்படினு சொல்லிட்டு இருந்தாருங்க.. ஆனா ரென்டு மாசத்திலே செத்து போய்ட்டாருங்க"

"உங்க கணவர் தவறிப் போய் இரண்டு மாதங்கள் ஆகிறதா"

"இல்லீங்க அது பத்து வருஷத்துக்கு மேல ஆச்சுங்க.. அவர் கேஸ் முடிஞ்சு போச்சுனு சொல்லி ரென்டு மாசத்துல செத்துப் போனாருங்க"

"மேலே எதும் விபரம் .. பேப்பர்ஸ் வச்சிருக்கீங்களா.. "

'அவரு காலேஜ் விவகாரம் எல்லாம் இந்தப் பொட்டில வச்சிருப்பாருங்க.. அவரு போன பின்னாலே இத நான் நாலஞ்சு தரம் தொறந்து பார்த்தேன்.. ஒன்னும் புரியல"

பெரிய ட்ரங்க் பெட்டி. சிவப்பு கலரில்.. தூக்க ரெண்டு பேர் வேண்டும்..

"பெட்டில என்ன இருக்கு "

மொத்தமும் காகிதங்கள் .. முழ்வதும் வாசிக்க நாலு நாள் ஆகலாம் என்று நினைத்தேன்.

"உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா இந்த பொட்டி . இங்கே இருக்கட்டும்.. நான் ரெண்டு நாள்ல இதெல்லாம் படிச்சுட்டு விபரம் சேகரிச்சுக்கிறேன்.. நீங்க வேற எதுனா சொல்லனுமா"

அந்தப் பெட்டியில் கை விட்டு ஒரு சின்ன கவரை உருவி, " இதிலே சுருக்கமா இருக்குனு ஒரு ஆபிசிலே சொன்னாங்க"

கவரை வாங்காமல் கேட்டேன், " எந்த ஆபிசிலே.. "

"அது தெரிலீங்க.. அவரு தாசில்தாரு ஆபிசுனு நினைக்கிறேன்.. என் வீட்டுக்காரர் கூட  அடிக்கடி பார்த்திருக்கேன்.. அவரு ஒரு தரம் இந்தப் பொட்டில இருக்கிறதெல்லாம் நிதானமா படிச்சாரு.. அவருதான் ஒரு சின்ன பேப்பர்ல எழுதி கவர்லே போட்டு,, இதுல இருக்கு சுருக்கமா விபரம் அப்படின்னு சொன்னாரு"

"அவரு மேற்கொண்டு ஏதும் முயற்சி செய்யலையா.."

"இல்லீங்க அவரு ட்ரான்ஸ்பர் ஆகி போறதா ஒரு தரம் வந்து சொல்லிட்டுப் போனாரு.. போன் நம்பர் கொடுத்தாரு.. நான் பேசல"

"தப்பா நினைச்சுக்காதீங்க.. இப்ப வருமானத்துக்கு என்ன பண்றீங்க."

" ஊர்ல சொந்த வீடுங்க.. அதுல ஒரு போர்ஷன் வாடகைக்கு விட்ருந்தாரு.. அவங்க இன்னமும் இருக்காங்க.. ஒழுங்கா வாடகை தந்திருவாங்க.. அதுல ஏதோ நடக்குது"

"இந்தப் பொட்டியை யார் கிட்டயும் காமிச்சு உங்க வீட்டுக்காரர் பென்ஷன் சம்பந்தமா கேட்டது இல்லையா"

"இல்லீங்க கொஞ்சம் பயமா இருந்துச்சு.. இவரை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க.. அதுல போலிஸ் வேற வந்துச்சுங்களா.. எனக்கு ரொம்ப பயமா போச்சு"

"பாலு .. லெட்டர் கொடுத்திருக்காரே . அவர் வீட்டம்மா உங்க சொந்தம்னு சொல்லிருக்காரு.. என்னால என்ன முடியும்னு பார்க்கிறேன்.. இங்கே மெட்ராஸ்லே எங்கே தங்கிருக்கீங்க.. "

"வடபழனிலே ஒரு சொந்தக்காரங்க இருக்காங்க ... அவங்க தான் ஊருக்கு வந்து அழைச்சிட்டு வந்தாங்க.. அங்கே தான் இருக்கேன்"

"அவங்க போன் நம்பர் இருக்கா"

தாசில்தார் ஆபிஸ் சிப்பந்தி கையினாலே எழுதிய காகிதத்திலே தொடங்கினேன்

ஏகப்பட்ட டாக்குமென்ட்கள் .. சம்பவங்களை ஒட்ட  வைக்க முழுசாக பத்து  நாள் ஆனது..  நான் ஆவலுடன் தேடிய ஹைகோர்ட் ஜட்ஜ்மென்ட் காப்பி அந்தப் பெட்டியில் இல்லை.. ஆசாமியின் பெயரையும் உத்தியோகத்தையும் வைத்துக் கொண்டு , ஹைகோர்ட் ஜட்ஜ்மென்ட் செக்‌ஷனில் மெனக்கெட வேண்டியிருந்தது

"சார் ஆன் லைன்லே ஜட்ஜ்மென்ட் இருக்குமே சார்"

"ரிப்போர்ட் ஆகலையோ என்னமோப்பா.. .. பதினோரு வருஷம் முந்தினு சொல்றாங்க.. கேஸ் ஃபைலிங் லிஸ்ட் வரிசையா இருக்குமே"

"சார் அது வேற செக்‌ஷன்.."

"ஒரே டேட்டா பேஸ் தானே"

"அதெல்லாம் சரி தான்.. எனக்கு அதை ஆக்ஸஸ் பண்ண ரைட்ஸ் இருக்கனுமில்ல"

"தெரிஞ்ச ஆள்னு தானே உன்கிட்ட வந்தேன்.."

"சரி சரி.. சார்.. ஒரு த்ரீ ஹவர்ஸ் டைம் தாங்க.. நீங்க வேணுமின்னா கிளம்பிப் போங்க.. காப்பி எடுத்துட்டு போன் பண்றேன்.. "

"தாங்க்ஸ்பா.. ஆனா எங்கேயும் போகல.. மேலே எம். ஹெச். ஏ. ஏ லைப்ரரில இருக்கேன்.. போன் எதிர்பார்க்கிறேன்"

"வாங்க சார்.. உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு..எங்கே இந்தப் பக்கம் அபூர்வமாக"

"ஒரு பழைய ஜட்ஜ்மென்ட் காப்பி கிடைக்குமானு தேடி வந்தேன்.. நேரமாகும்னு தோணுது .. அதான் டைம் போகணுமே அதான் புக் படிக்கலாம்னு இங்கே வந்தேன்"

 Most advocates and judges, however great, walk for but a short hour on the stage of the law. They play their parts. Their voices are raised and the pages of the books are filled with their learning. But then they depart. They are remembered by their loved ones and a few friends or grateful litigants. But soon they are forgotten

 Not so with Seervai. He was the advocate's advocate. He lived in tumultuous times for India. He was an example and an inspiration for lawyers and law students in India, and thus for all of us in the company of the common law scattered to every corner of the globe. Seervai was not without faults, as I shall show - for all human beings are flawed. But he was a mighty advocate and a fine scholar

மைக்கேல் டொனால்ட் கிர்பி என்ற ஆஸ்திரேலியா தேசத்து ஜட்ஜ் , HM Seervai குறித்து எழுதிய புத்தகம் முதல் இரண்டு பக்கம் தாண்டுவதற்குள் போன் வந்து விட்டது..

"சார் ஜட்ஜ்மென்ட் கிடைச்சிருச்சு.. வாங்க.. சீக்கிரம் வந்துட்டீங்கன்னா நான் சாப்பிடப் போவேன்"

"ரொம்ப தாங்க்ஸ்பா .. இதோ இப்ப வரேன்"

மனுதாரர், இது வரை தனது சர்வீஸில் எந்த ப்ளாக் மார்க்கும் வாங்கவில்லை.. அரசாங்க கல்லூரியில் வேலை வாங்கித் தருவாதாகக் கூறி ஒரு பெண்ணிடம் காசு வாங்கியிருக்கி ஏமாற்றி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு , டிபார்ட்மென்ட் விசாரணை மூலம் நிரூபணம் ஆனதாலே அவரை பணி நீக்கம் செய்து இலாகா பூர்வமான ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவரது சர்வீஸ் பெனிஃபிட்கள் நிறைய பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால், தன்னை டிஸ்மிஸ் செய்த தேதியிலேயே ரிட்டயர் ஆனவன் என கருத வேண்டும் என்பதை கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்ற அவரது வழக்கு  விநோதமாக இருந்தாலும்.. இதில் முன்னுதாரணங்கள் இருக்கிறபடியால்.. அவரை அந்தத் தேதியிலிருந்து ......"

பதினாறு பக்கம் ஓடியிருந்த வழக்கு விபரம்

"வாங்க சந்துரு.. நீங்க போன் பண்ணப்ப நான் வண்டி ஓட்டிட்டு இருந்தேன்.. சொல்லுங்க என்ன விஷயம்"

"இந்த ஜட்ஜ்மென்ட் பாருங்க.. நீங்க தான் அப்பியர் ஆகியிருக்கீங்க.. உங்க கிட்ட மேலும் விபரம் வாங்கலாம்னு வந்தேன்"

" ஓ.. இந்த கேஸ் முடிஞ்ச பின்னாலே அவரை நான் பார்க்கல.. அவர் செத்துப் போய்ட்டாருன்னு நீங்க சொல்லித்தான் தெரியுது..  எனக்கு மேல் விபரம் தெரியல.. ஆக்சுவலா டிஸ்மிஸ் ஆர்டர் எதிர்த்து ரிட் போடலாம்னு தான் வந்தார்.. நான் தான் சீனியர்கிட்ட பேசிட்டு , இதை கன்டெஸ்ட் பண்ணா பிரயோஜனமில்லை.. இப்படி ஒரு ப்ரேயர் தந்து பார்க்கலாம்னு செய்தோம்.. ஜட்ஜ் ஒத்துகிட்டாரு'

"ஆமாம் ஜட்ஜ்மென்ட் முழுசும் வாசிச்சேன்.. டிஸ்மிஸ் ஆன தேதியில் இவர் ரிட்டயர் ஆனவர் என்று கருதலாம்னு கோர்ட் ஜட்ஜ்மென்ட்.. இவரும் அதை வச்சிட்டு பென்ஷன் ப்ரபோசல் ரெடி பண்ணிட்டு இருந்திருக்கனும்.. ஆனா துரதிர்ஷ்ட வசமா ரெண்டு மாசத்திலே செத்துப் போய்ட்டாரு.. வீட்டுல யாருக்கும் விபரம் தெரியல.. பசங்க கிடையாது.. .. இதுல பாருங்க.. இவர் டிஸ்மிஸ்னு சொன்ன தேதியே ஜட்ஜ்மென்ட்டுக்கு இரன்டு வருஷம் முந்தி.. அதாவது ரென்டு வருஷம் கேஸ் நடந்திருக்கு ..  இவருக்கு ரென்டு வருஷம் ரென்டு மாசம் பென்ஷன் மத்த பெனிஃபிட்ஸ்.. செத்துப் போன தேதிலேர்ந்து இன்னி வரைக்கும் அந்தம்மாவுக்கு ஃபேமிலி பென்ஷன்.. தொடர்ந்து ஃபேமிலி பென்ஷன்.. இத்தனையும் கிடைக்க வழி செய்யனும்"

"ஆமாம் ஆமாம்.. ஏன் சந்துரு பேசாம ஒரு மான்டமஸ் கேளுங்களேன்.. உங்களை கோர்ட்டிலே பார்த்து நாளாச்சு"

" இல்லீங்க.. இதை கோர்ட்டுக்கு போகமாலே சால்வ் பண்ணலாம்னு நினைக்கிறேன்.. அதுவுமில்லாம have you exhausted all remedies and approaching this court under Article 226 அப்படினு இப்பெல்லாம் அடிக்கடி கேக்கிறாங்களாமே"

"உங்களுக்கு குசும்புங்க.. அது இன்னமும் போகலை.. இதை எங்கிருந்து ஆரம்பிக்கனும் இப்ப"

"முதலில் அவர் வேலை செய்த கல்லூரியில் இருந்து தான் தொடங்கனும்.. அங்கேர்ந்து டைரக்டர் ஆஃப் காலேஜ் எஜுகேஷன்.. அங்கேர்ந்து ஏ. ஜி எஸ் ஆபிஸ்.. தேவைப்பட்டா செகரட்ரி டு கவர்ன்மென்ட்... இன்னமும் சில படிக்கட்டுகள்.. red tape கலாச்சாரம்"

"ஓ இத்தனை இருக்கா... எப்படியும் ஒரு வருஷம் ஆகுமா"

" தெரியல.. அப்பாவோட வேலை செய்த ஒரு ப்ரொஃப்சர் தான் இப்ப டைரக்டர் ஆஃப் காலேஜ் எஜுகேஷன்.. அவருக்கு அட்ரஸ் பண்ணி முதலில் ஒரு விபரமான பெட்டிஷன் தயார் செய்யனும் .. அவர் மனசு வச்சா நாலஞ்சு மாசத்திலே முடியலாம்"

"hope she gets some lakhs "

"ஆமாம் ஆமாம் நிறைய லட்சங்கள் கிடைக்கணும்.. நிறைய அலையணும்.. நெட்வொர்க் பண்ணனும்.. நான் கிளம்பறேன் இன்னொரு நாள் சாவகாசமா பேசலாம்"

அப்பாவின் பெயரால், டைரக்டர் ஆஃப் காலேஜ் எஜுகேஷனில், காகிதங்கள் நகர்ந்தன.. ஏ. ஜி எஸ் ஆபிசிலில் சம்பத் இருந்தபடியால் ரொம்ப சிரமம் இருக்கவில்லை.

முழுசாக ஏழு மாசம் பத்து நாள் ஆனது.. அதிகம் லீவு போட தேவையிருக்கவில்லை.. ஐந்து நாள் லீவு போட்டிருப்பேன்..

மொத்தமே நாலு ஆர்டர்கள்.. மூன்று cheque கள்.. அந்தப் பெண்மணியின் கையில் தந்தேன்.

"இது உங்க வீட்டுக்காரர் உயிரோட இருந்தப்ப வர வேண்டிய பென்ஷன். DCRG இத்தியாதி .. இதற்கான ஆர்டர்.. அதுக்கான செக்.

உங்க கணவர் Pensioners Family Security Fund க்கு ஆப்ஷன் தந்திருந்தாருக்காரு.. அதுனாலே அவரோட மரணத்தின் போது உங்களுக்கு வர வேண்டிய தொகைக்கான ஆர்டர்.. அந்த செக்

உங்களோட ஃபேமிலி பென்ஷன்.. நிர்ணயம் செய்து ஆர்டர்.. .. இத்தனை வருஷம் உங்களுக்கு வரவேண்டிய ஃபேமிலி பென்ஷன் மொத்தமும் தந்துட்டாங்க அதுக்கான ஆர்டர் அந்த செக் இது

இனிமே மாசா மாசம் உங்க பென்ஷன் உங்க bank கணக்கிலே நேரடியா சேர்ந்துரும் .. அதுக்கான ஆர்டர் .. இது.. ,, இன்னி தேதிக்கு மாசம் ___ ரூபா வரும் .. உங்க ஒருத்தருக்கு தாராளமா போதும்.. யார் தயவும் இல்லாம நீங்க கௌரவமா இருக்கிறதா நினைச்சுக்கலாம்.. மனுஷ ஒத்தாசை தேவைப்படும்.. அது மட்டும் தயங்காம பாலுகிட்ட சொல்லுங்க

நான் சொன்ன மாதிரி எல்லா காசையும் பத்திரமா போஸ்ட்  ஆபிசிலே போட்டு வைங்க ...வட்டி வரும்.. பாலுகிட்ட போன்ல சொல்லிருக்கேன்.. அவரு பார்த்துப்பாரு.. இந்த ட்ரெயின் காலேல உங்க ஊர் போய்டும்.. பாலு ஸ்டேஷனுக்கு வரேன்னு சொல்லிருக்காரு.. அவரைப் போன் பணணச் சொல்லுங்க"

"தம்பி நீங்க் இத்தனை நாள் அலைஞ்சிருக்கீங்க.. லீவு போட்டுட்டு வந்திருக்கீங்க.. பத்து மாடியெல்லாம் காலைத் தாங்கி தாங்கி நடந்திருக்கீங்க.. நிஜமா சொல்றேன்.. இந்த வயசிலே எனக்கு இத்தனை லட்சங்கள் காசு வரும்னு நினைக்கவே இல்லை உங்களுக்கு நான் ஒன்னுமே செய்யலையே.. மனசுல தப்பா நினைச்சுக்காதீங்க.. காசு எதுனா தந்திட்டுப் போகட்டுமா"

"ரொம்ப சங்கடப்பட்டுக்காதீங்க.. எனக்கு ஒன்னும் வேண்டாம்.. அப்படி ரொம்ப நீங்க வருத்தமா நினைச்சீங்கன்னா .. ஒரு பத்து ரூபா தாங்க.. வெறும் பத்து ரூபா.. உங்க நினைவா ஒரு பேனா வாங்கி வச்சுக்கிறேன்"

"என்ன தம்பி வெறும் பத்து ரூபாயா"

"ஆமாம்.. பத்து ரூபா தான்.. பாருங்க ட்ரெயின் கிளம்பப் போகுது.. சிக்னல் போட்டுட்டாங்க.. சீக்கிரம் தாங்க"

மடிக்கப்படாமல் பத்திரமாக அந்த பத்து ரூபாய் தாள்  டயரியிலே வைத்திருக்கிறேன் ..கூடவே  அந்த ஆர்ட்களின் நகல்கள்..

( From my timeline 2 june 2013)

No comments:

Post a Comment