Thursday, December 10, 2020

மராட்டிய மண்ணின் ஆன்மீக நினைவுகள்- பகுதி 41

 மராட்டிய மண்ணில் ஒரு பயணம் 42

                த்ரயம்பகேஸ்வரர்

தமிழ் நாட்டுக்கோயில்கள் போல கம்பீரமான ஒரு கோபுரத்தின் முன் வேன் நிக்கறது..ஒரு நீண்டபாதைவழியாக நாம் போகனும். இங்க பலவிதமான கடைகளும், உணவகங்களும் இருக்கு. எப்பவும் பக்தர்களின் கூட்டம் நிறைந்து காணப்படும் கோவில் இது. மேலும், சிறந்த சுற்றுலா தலமாவும் இருக்குறதால கூட்டத்திற்கு குறைவே இல்லை

நாங்க போகும்போது சிலர் சந்தனத்தில் தோய்த்தெடுத்த சூல அச்சு மற்றும் மூன்று கோடுகள் கொண்ட சைவசின்னங்களை நம் நெற்றியில் குறியிடுகிறார்கள். அது ஒருவகையான தர்மம். குறியிட்டுவிட்டு நம்மிடம்  ரூபாய் வசூல் பண்ணிவிடுகிறார்கள் சிலர் கடமையாகவும், சிலர் வியாபாரமாகவும் செய்கின்றனர். எது எப்படியோ அந்த சின்னம் நம் நெற்றியில் அழகாகத்தான் இருக்கு...

புதுசா போறவங்க கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னன்னா கோவில் வளாகத்தினுள் மொபைல் போன்களுக்கு அனுமதியில்லை. சாய்பாபா சமாதி கோவில்போல் இங்கேயும் நம்முடைய மொபைல் போன்களை பாதுகாக்க திடீர்க்கடைகள் முளைத்திருக்கும். அவர்களை தவிர்த்து கோவிலின் அலுவலகம்மூலம் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ இடங்களிலோ இல்லை நாம் சுற்றுலா செல்லும் வாகனத்திலோ விட்டுச்செல்வது உத்தமம்.

ஒருவழியா கோவிலை நாங்கள் அடைந்தோம். பொதுதரிசனத்தில் செல்லமுடியாதளவுக்கு கூட்டம் நின்றுகொண்டிருந்தது. இங்கே சிறப்பு தரிசனத்திற்கு கட்டணமாக ரூபாய் 200 வசூலிக்கப்படுது. கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் அன்னதானத்திற்காக செலவிடப்படுவதாக கோவில் அதிகாரி தெரிவித்தார். 

பொதுதரிசனம் செல்லும், வழியெங்கும் மலர்மாலைகளை தூவியவாறு செல்கின்றனர்.-

இது ஒரு சாதாரண லிங்கமா தெரிந்தாலும், இதற்கு பக்கத்திலிருக்கும் லிங்கம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அந்த லிங்கத்தினுள் மூன்று லிங்கங்கள் இருந்தன.அவைகளும் ஒரே ஆவுடையாரில் இருக்கு...

அந்த சுயம்பு லிங்கத்தில் இருந்து நீர் எப்போதும் ஊறிண்டே இருக்கு. 

இத்தலம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலை மீது அமைந்துள்ள ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திருத்தலத்தில் உள்ள பிரம்மகிரியில் இருந்துதான் கோதாவரி நதி உற்பத்தியாகிறது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளன..

இங்கு சிவனே மலையாக இருப்பதாக ஐதீகம்.

இதற்கிடையில் இந்த கோவிலின் ஸ்தல வரலாறை பார்க்க மறந்திட்டோம் பாருங்க. வாங்க! இங்க ஒரு அறிவிப்பு பலகை இருக்கு. அதில இந்த கோவிலின் ஸ்தல வரலாறு பற்றி தெளிவாக எழுத்திருக்கிறாங்க 

.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வாழ்ந்த கௌதம ரிஷி என்னும் முனிவர் தன் மனைவியோடு இருந்த கடுமையான தவத்தின் பயனாக இங்கு சிவன் தன் ஜடாமுடியில் இருந்த கங்கையை அவிழ்த்துவிட்டார் என்றும் அதுவே இங்கு எப்போதும் நீரூற்றாக ஓடிக்கொன்றிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.அதோடு ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் சுயம்பு வடிவில் இங்கு தங்கியதாகவும் அதனாலேயே இங்கு மூன்று லிங்கங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் கூறப்பட்டாலும், அறிவியல் ரீதியாக, இங்கு நடக்கும் அதிசயத்திற்கான காரணங்கள் இதுவரை புலப்படவில்லை. அறிவியலால் அறிய முடியாது பல ரகசியங்கள் நம் நாட்டில் பல உண்டு என்பதற்கான ஒரு சிறந்த சான்று இந்த நீரூற்று அபிஷேகம் என்றே கூறலாம். 

கோதாவரி நதி கிழக்குநோக்கி தக்காணபீடபூமியில் அமைந்திருக்கும் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசம் வழியாக பாய்ந்து சென்றாலும், இராஜமுந்திரிக்கு அடுத்து இரண்டு கிளைகளாக பிரிகிறது. வடபகுதி கிளைக்கு கௌதமி கோதாவரி என்றும் தென்பகுதி கிளைக்கு வசிஷ்ட கோதாவரி என்றும் சொல்றாங்க.

கட்டண தரிசனம் அதுவும் 200 ரூபாய்ங்குறதால கம்பி தடுப்பு வைத்த  வரிசை கொஞ்சம் குறைவுதான். ஆனாலும் குறிப்பிட்ட இடம்வந்ததும் சன்னதிக்குள் பொதுதரிசன வரிசையும், கட்டண வரிசையும் ஒரே வரிசையாக செல்வதால் கொஞ்சம் தள்ளுமுள்ளு இருக்கத்தான் செய்யும். 

ஆமாம்! இரு நதிகள் சங்கமிக்கும்போது சிறிது ஆர்ப்பாட்டங்கள் இருக்கத்தானே செய்யும்?! நாமதான் கொஞ்சம் கவனமா போகனும் . இந்தமாதிரி இடங்களில் நமது உடமைகள், நகைகள், நம்மோடு வந்திருக்கும் குழந்தைகள், வயசானவங்க மேலயும்  ஒருகண் வச்சிக்கனும். அதேப்போல மத்தவங்களையும் அனுசரிச்சு போகனும். கொஞ்சம் இடைவெளிவிட்டு போகணும். அஞ்சு, பத்து நிமிசம் அதிகமா செலவழிச்சா குறைஞ்சு போயிடாது.

இதுவரை போன கோவில்கள் மாதிரிதான், இக்கோவில்  தூண்கள்லாம் கருப்பு மார்பிளால் ஆனது.   சுவர்கள் முழுக்க சிற்பங்களால் அலங்கரிச்சிருக்காங்க. படிக்கட்டுகள்லாம் மரங்களில் செதுக்கப்பட்டது போல் சிறிய சிறிய சிற்பங்களால் செதுக்கப்பட்டுள்ளன. 

                           தொடரும்




No comments:

Post a Comment