Tuesday, December 8, 2020

தி கிராண்ட் ஸ்வீட்ஸ்-பட்டுப் போன ஒரு பாரம்பர்யம்

 🌹🌹🌹ஒரு முகநூல் பதிவு


தி கிராண்ட் ஸ்வீட்ஸ்

பட்டுப் போன ஒரு பாரம்பர்யம்

திங்கட்கிழமை - மிளகுபொங்கல்

செவ்வாய்கிழமை – கேசரி
புதன்கிழமை – சாம்பார் சாதம்
வியாழன் – வெண்பொங்கல்
வெள்ளிக்கிழமை – சர்க்கரைப் பொங்கல்
சனிக்கிழமை – புளியோதரை
ஞாயிற்றுக்கிழமை – க்ஷீரான்னம்

இது தவிர தினமும் வெண்ணெய் போட்டு பிசைந்த ,மோர்மிளகாய் தாளித்த தயிர்சாதம் காலை, மதியம் தேங்காய் சாதம் அல்லது எலுமிச்சை சாதம் ஒரு நாள் தவறாமல். பண்டிகை நாட்களில் பால் பாயசம்

இதையெல்லாம் படித்தவுடன் உங்களுக்கு பட்டென்று எது நினைவுக்கு வருகிறது.

யோசித்து சொல்லுங்கள்………..

அன்று கங்கா ஸ்வீட்ஸில் ப்ரெட் வாங்கிக்கொண்டு இருந்தபோது பக்கத்தில் இருந்தவர் தூள் பக்கோடா போடுங்க என்றார். அதைப் பார்த்தவுடன் எனக்கு ப்ரோக்கன் சேவரீஸ் மட்டும் இல்ல 50% ஆஃபரில் வழங்கப்படும் ஸ்வீட்ஸ் ஞாபகம் வந்தது. உங்களுக்கும் ஞாபகம் வந்துவிட்டால் நிச்சயம் நீங்கள் அதை அனுபவித்தது நினைவுக்கு வந்திருக்குமே….

ரொம்ப பீடிகை போடறேன்னு பாக்கறீங்களா? ஆமாங்க ஒரு பட்டுப்போன பாரம்பரியத்தின் பசுமை மாறாத நினைவுகள் அது. ஒவ்வொரு நாள் காலையும் அக்கம்பக்கத்தில் வேலை செய்யும் பெண்மணிகள், ஆட்டோக்காரர்கள் பத்துமணிக்கு அந்த இடத்தில் அணிவகுத்து நிற்கிறார்கள் என்றால் தயிர்சாத விநியோகம் தொடங்கிவிட்டது என்று அர்த்தம், அதேபோல் பள்ளிப்பிள்ளைகள் வந்துவிட்டனர் என்றால் லெமன் ரைஸ், இல்லாட்டி தேங்காய் சாதம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர் என்று அர்த்தம்.

2000த்தின் தொடக்கத்தில் அந்த இடத்துக்கு பக்கத்தில் வீடு வாங்கிக்கொண்டு வந்த எங்களுக்கு அது ஒரு இமாலய ஆச்சர்யம். அன்னத்தை விற்பதென்பது மகாபாவம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அதற்கு ஈடாக அன்னதானம் செய்தால் அந்த பாவம் அண்டாது என்ற நம்பிக்கையின் மூலதனமே நீங்கள் மேற்கண்ட பத்திகள். பாலகுமாரன், விகடனில் அப்பம் வடை தயிர்சாதம் என்று ஒரு தொடர் எழுதினார். மாயவரம் ரயில்வே ஸ்டேஷனில் சின்னதாக ஆரம்பிக்கும் அந்த வியாபாரம் பின்னர் பல ஹோட்டல்களாக மாறும் அந்த தொடரில் ஆரம்பத்தில் ரயில்வே ஸ்டேஷனில் வியாபாரம் செய்யும்முன் குடும்ப பெரியவர் சொல்லும் வார்த்தைகளே , யாரேனும் அன்னத்திற்கென கையேந்தினால் தர்மம் இடுவாய் என்று வரும்.

பக்கத்து வீடு என்பதாலும், மாமனார் செகரட்டரி என்பதாலும் தீபாவளிக்கு அங்கிருந்து ஒரு பெரிய தட்டு வழிய அசார்டட் ஸ்வீட்ஸ் , அரைகிலோ மிக்சரும் வரும், ஒருமுறை ஒரு கல்யாணத்திற்கு பருப்புத்தேங்காய் ஆர்டர் கொடுக்க செல்கையில் அந்த ஓனரையும், அவரின் மகளையும் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் சொன்னார், அன்னத்தை விக்கக்கூடாதுன்னு சொல்வாங்க, அதற்கு ஈடா ஏதாவது பிரசாதம் பண்ணி விநியோகம் பண்ணினா அது தர்மமாயிடும். இது வயிற்றுப் பிழைப்புக்கு, அது ஆத்ம சாந்திக்கு என்றார், பசுமரத்தாணி போல் மனதில் பதிந்துவிட்டது. சாயந்திர வேளைகளில் அங்கு ஸ்வீட்ஸ் அல்லது காரம் வாங்க வரும் பலரும் தொன்னையில் பரப்பி வைத்திருக்கும் கேசரியைப் பார்த்து என்ன விலை என்று பாய்ந்தோடி வந்தாலும், இல்ல சார் பிரசாதம் இது, ஃப்ரீதான் என்று தொன்னையில் நெய் வழிய முந்திரி மிதக்க தருவார்கள். சாமான்கள் வாங்குவோருக்குத்தான் என்று வாய் சொன்னாலும், கைகள் தடுக்காது. அதிர்ஷ்டம் இருந்தால் இன்னொரு தொன்னை கிட்டலாம். இல்லாவிட்டால் எவ்வளவு பெரிய கங்காளத்தில் வந்தாலும் நிமிடத்தில் காலியாகிவிடும்.

தானமாக கொடுப்பதென்பது தரத்தில் ஒப்புமை காணமுடியாமல் இருக்கவேண்டும் என்று நம்பிய நல்லமனிதர் அவர். முந்திரி இல்லாத ஒரு பிரசாதத்தைக் கூட நீங்கள் காணமுடியாது. தூய நெய் தான், சாம்பார் சாதம் முதற்கொண்டு சின்ன வெங்காயம் , பறங்கிக்காய், சௌசௌக்கு இடையில் முந்திரி மிதக்கும். ரெண்டு தொன்னை வாங்கினால் உங்க டின்னர் ஓவர். வீட்டிற்கு திடீர்னு யாராவது விருந்தாளி வந்துவிட்டால் பின்பக்கமாக ஓடிப்போய் ஒரு தொன்னை கேசரி வாங்கிக்கொண்டு ரெண்டு சமோசா வாங்கி வந்து கொடுத்து காப்பி போட்டுக்கொடுத்தால் டிபன் பிரச்னை சால்வ்டு. எத்தனையோ முறை குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு தயிர்சாதம் வாங்கிவந்திருக்கிறேன்.

நாங்கள் எங்காவது ஊருக்குப் போனால் கூட ஏதாவது பண்ணட்டுமான்னு மாமனார் கிட்ட கேட்டா, நீ ஒண்ணும் சிரமப்படவேண்டாம். ரெண்டு தொன்னை வெண்பொங்கல் வாங்கிக்கறேன். நீ வேலையைப் பாருன்னு சொல்லிடுவார். ஒரு பெரும் மழைநாள். சுடச்சுட சமோசா வாங்கிட்டு வர அங்கே போனேன். ஒரு பெரிய ட்ரேயில் மணக்க மணக்க க்ஷீரான்னம் (கல்கண்டுபொங்கல்). மழைங்கறதால் யாரும் வரல மேம். உங்களுக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோங்கன்னு டேபிளில் இருந்த அந்த பெண் சொன்னாள்.

ஆறு தொன்னை வழிய அடைத்து வீட்டிற்கு எடுத்து வந்தேன். ராத்திரி எங்க டின்னர் ஓவர். ராத்திரி ஆளுக்கு ஒரு டம்ளர் சுக்குக் கஷாயம் தான், பின்னே அவ்வளவு நெய்யும் முந்திரியையும் முழுங்கினா என்னத்துக்கு ஆறது…

முழுக்க முழுக்க பெண்கள் தான். சரியாக ஏழாவது மணிக்கு கடை மூடப்பட்டுவிடும். என் மாமியார் சில சமயம் சொல்லுவார். ஒரு முறுக்கு சுத்த தெரிஞ்சா போதும், அங்க போய் முறுக்கு சுத்தி பொழச்சுக்கலாம். வேலை செய்யறவங்களுக்கு பிஎஃப்லேர்ந்து எல்லா வசதியும் உண்டு. இந்த ஆம்பிளைங்ககிட்ட மாட்டிண்டு அல்லாட வேண்டாம்னு சொல்லுவார். அந்த அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பு.

தட்டையோ முறுக்கோ, ஓரம் உடைந்தால் கூட அவை ப்ரோக்கன் என்று அறிவிக்கப்பட்டு 50% தள்ளுபடியில் விற்கப்படும். அதேபோல் சற்று நிறம் மாறிய சிப்ஸ் என்றாலும் அம்பது பர்செண்ட் தான். தீபாவளி போன்ற விஷேஷ தினங்களில் ஒரு அரைகிலோ மைசூர்பாக் 20 ரூபாய் என்று வாங்கியிருக்கிறேன். தீபாவளிக்கு அடுத்த நாட்களில் , அனைத்து மில்க் ஸ்வீட்களும் 20, 30 ரூபாய்க்கு தரப்படும். அதற்காக தரமற்றவை என்று சொல்லவிட முடியாது. தினம் புத்தம் புதியதாக தரப்பட வேண்டும் என்பதற்கான ஏற்பாடு அது. நெய்யில் செய்யப்பட்ட பெரிய தோசைக்கல் சைஸ் அதிரசம் இரண்டாக விண்டுவிட்டதால் ஆறு ரூபாய்க்கு வாங்கி வந்திருக்கிறேன்.

அதேபோல் நெய் சொட்டச்சொட்ட மைசூர்பாகு தூள் கிடைக்கும். வாங்கிவந்து காய்கறி வடிகட்டியில் வடியவைத்தால் அரைகிலோக்கு குறையாமல் நெய் மிதக்கும். நெய்யை வடிகட்டிவிட்டு மீண்டும் கிளறினால் அழகாக வில்லைகளாக வரும். கிலோகணக்கில் மைசூர்பாகு இம்மாதிரி செய்து அவரோட ஆபீஸுக்கு, என் பையனின் ஸ்கூல் டீச்சர்ஸ் ஒவ்வொருவருக்கும் டப்பா டப்பாவாக கொடுத்திருக்கிறேன். கிருஷ்ணஜெயந்தியின் முடிவில் வெல்லச்சீடை ப்ரோக்கன் ஒரு கிலோ ஐம்பது ரூபாய்க்கு வரும். கிலோகணக்கில் வாங்கி எல்லாருக்கும் தந்திருக்கிறேன்.

இரண்டு வருடங்கள் வெளியூரில் சுற்றியபின் 2006 அல்லது 2007 என நினைக்கிறேன். ஒரு காலை வேளையில் ஏதோ ஸ்வீட்ஸ் வாங்கியபின் , தொன்னை இல்லையா எனக்கேட்க, ஒரு ப்ளாஸ்டிக் கவரில் இருந்து ஒரு சின்ன ப்ளாஸ்டிக் டிஸ்போசபிள் கப்பில் கையினால் தேங்காய் சாதத்தை எடுத்துத் தந்த அந்த நிமிடம் ஒரு மாபெரும் சரித்திரத்தின் இறுதி யாத்திரை தொடங்கிவிட்டதை உணர முடிந்தது.

வெளிநாட்டில் பல வருடம் கழித்து விட்ட அந்த நண்பர், ஏதோ ஒரு வேளையாய் சென்னை வந்தபின் , இன்னிக்கு செவ்வாய்க்கிழமை தானே, கேசரி எப்போ கொடுப்பா?

அதெல்லாம் வழக்கொழிஞ்சு போயாச்சு மாமா! அவங்களுக்கே அதெல்லாம் ஞாபகமிருக்குமான்னு தெரியல……

சரி 50% ப்ரோக்கன்ல ஒரு தட்டை வாங்கிண்டு வந்து தர்றியா?

இப்போ அதுவும் இல்ல. மிஞ்சிப்போனா 20% இல்லாட்டி 30%. ஒரு பத்து இல்லாட்டி பதினைஞ்சு ரூபாதான் வித்தியாசம், அதுக்கெதுக்கு தூள் வாங்கறது, முழுசாவே வாங்கிக்கவேண்டியதுதான்.

ஒரு நிமிடம் திக்பிரமையடைந்து போனவர், சரி, அப்படின்னா ஆத்துக்கு பக்கத்தில் ஆனந்தபவன் இருக்கு, அங்கயே வாங்கிக்கறேன்னு கிளம்பி போனார்.

வழியனுப்ப வாசலுக்கு போனேன். கிராண்ட் ஸ்வீட்ஸ் என்ற மாபெரும் அதிசயம், இப்போது அடையாளமாய் மட்டுமே மாறிப்போய்விட்டதொரு துயரத்தின் நீண்ட நிழல் அங்கே படர்ந்து கொண்டிருந்தது.

No comments:

Post a Comment