Monday, December 14, 2020

தனுஷ்கோடி

 24. தனுஷ்கோடி (சிறுகதை சீசன் 5) #ganeshamarkalam

40மீட்டரே அகலம். வந்த பாதையை விட்டூட்டு பாத்தேள்னா சுத்தி கடல். ஆகாசம் மட்டுமே. இப்பத்தான் முகுந்தராயர் சத்திரத்துலேந்து தனுஷ்கோடி வரைக்கும் 10கிமீக்கு ரோட் போட்டுருக்கா. அதுக்கப்புராம் அரிச்சமுனை வரைக்கும் இன்னொரு 4 கிமீ. போனாத் தெரியும் வாழ்க்கை பத்தி பூரா புரிஞ்சிடும். போரவரைக்கும் தெரியலை.

எல்லாரும் போரா, சுற்றுலாத்தலம்னு நானும் கிளம்பிட்டேன். மதுரைக்கு ஒரு ஆபீஸ் வேலையா வந்துட்டு சனி ஞாயிறு சும்மாத்தானே இருப்பம், சிலதப் பாத்துட்டு சென்னைக்கு போலாம்னு. டிவிஎஸில் வேலை. அவாளுக்கு மின்னே மதுரைதான் தலமையகமா இருந்தது. இப்போ இங்கேயும் கம்பேனி வச்சிருக்கா. ஒரு குவாலிடி ப்ராப்ளம் சீர் செய்யன்னு கூப்பிட்டிருந்தா. ஆஸ்த்தான கன்சல்டென்ட். நன்னா கவனிச்சிண்டா. “கார்த்திகேயன், பேஷா போயிட்டு வாங்கோ” காரைத் தந்துட்டா.

கார்த்தாலே 6 மணிக்கு சொக்கிக்குளத்துலேந்து கிளம்பி 9க்கு ராமேஸ்வரம். மோசமான ரோடு. வளைஞ்சு வளைஞ்சு இப்பத்தான் அகலப்படுத்த வேலை நடந்தாரது. ராமநாதசுவாமி தரிசனம் ஆச்சு. “தீர்த்தத்துலேல்லாம் குளிக்கலையா?” ட்ரைவர் கந்தசாமி கேட்டான். அக்னி தீர்த்தத்தில் அடிச்சு மோதின அலையைப் பாத்ததுமே பயம் வந்தது. “இல்லை, இன்னொருக்கா குடும்பத்தோட வரச்சே பாத்துக்கலாம்”. அந்த உலகப் பிரசித்தி பெற்ற பிரஹாரத்தை சுத்தி வந்தேன். யாருமே அப்படிப் பண்ணலை. ஏகாந்தமா இருந்தது. ஆனா வந்தது தனுஷ்கோடி பாக்கணும்னு.

ராம லக்ஷ்மணா, ஆஞ்சநேயரோட முழு வானர சேனை கால் பதிச்சு நடந்த இடம். ராமேஸ்வரத்துலேந்து முகுந்தராயர் சத்திரம் 12கிமீ. அங்கே போரப்போவே நல்ல காத்து. சவுக்கு மரங்களூடே தெரிஞ்ச கடல் இப்போ ரோடுகிட்டேயே. தண்ணீர்லேயே போய் நிறுத்துவானோன்னு பட்டது. ஏன்னா ரோடு போகப்போக குறுகிண்டு. புதுசா போட்ட ரோட் இன்னும் மந்திரி வந்து தொறக்கலைன்னு காரை சத்திரத்துக்கு அப்பாலே விடலை. அங்கே கூட்டம். வலதுகைப் பக்கம் ஆர்பரிக்கும் கருநீலக் கடல். அத்தனை ஆக்ரோஷமா. அதைக் கட்டுப்படுத்த கறுங்கல் வச்சு அது சரிஞ்சுடாம இருக்க நைலான் வலை போத்தி. கொஞ்சமே மணல். சில தெகிரியமான டூரிஸ்ட். இந்தண்டை சலனமில்லாம குளம்போல் அதே கடல். அதில் மண்ணில் புதெஞ்சு போனாலும் ஓடும்படியா 4வீல் ட்ரைவோட மேடடார் வேன். “தலைக்கு 300ரூ வாங்கிண்டு தனுஷ்கோடி கூட்டிட்டு போவாங்க அங்கெ 1 மணிநேரம் கழிச்சு திரும்ப கொண்டாந்து வுடுவாய்ங்க, நீங்க போயிட்டு வாங்க சார்.” கந்தசாமி ஊக்கம் தந்தான்.

திகில் நிறைந்ததா இருந்தது அந்த பயணம். நிஜக்கடல் சித்தே தூரத்தில் அலை மோதிண்டு. ஆனா வேன் போர இடம் 2அடி தண்ணீரில் ஷேலோ வாடர்ஸ்னு சொல்லுவாளே. எந்தப் பாதையில் போணம்னு இவாளுக்கு தெரிஞ்சிருக்கு. 20நிமிஷத்தில் தனுஷ்கோடி கொண்டாந்து விட்டூட்டான். “சார் 1 மணி கொடுப்பம், சுத்திட்டு வாங்க. இன்னும் தள்ளீப் போனீங்கன்னா நேரம் ஆகும், அடுத்த வண்டீலே வரலாம்.” சீட்டைத் தந்தான். எனக்கு அரிச்சமுனை (பேரப் பாருங்கோ!) வரைக்கும் போணம்னு ஆசை. “தனியா யாரும் போகமாட்டாங்க, உங்க இஷ்டம்!” இளநீர் விக்கரவ சொல்ல, கொஞ்ச தூரமாவது போயிடணும்னு நடையை எட்டிப் போட்டேன். வரச்சே தனுஷ்கோடி பாத்துக்கலாம். லேட் ஆனா அடுத்த வண்டீலே போலாம். மணி 11தான் ஆச்சுன்னுட்டு.

லோகத்தில் அத்தனை ஏகாந்தமான இடமுண்டோன்னு. தூரத்தில் என்னை மாதிரி சில ஆண்கள். வெய்யல் லேஸா தகிக்கா ஆனா அது தெரியாம கடற்காத்தும். 2கிமீ போனதும்தான் மின்னே போனவா திரும்பி வரதைப் பார்த்தேன். “இன்னும் எவ்ளோ தூரம்?” “ரெம்ப போக் வேண்டாம்னு திரும்பிட்டம். 1கிமீ இருக்கும்”. ஆனா நான் அப்படியில்லை. கடைசீ வரைக்கும் போயிட்டேனே. கடல்தான் ஆகாசம்தான், நின்ன நிலப்பரப்புத்தான். மனுஷாளே இல்லை. இத்தனை வனாந்திரமான இடத்தில் என்னென்னவோ நடந்து முடிஞ்சிருக்கு. ஆகாசமும் கடலும் நிலமும் சங்கமம் ஆர இடம் அப்படி ஒரு உலுக்கு உலுக்கி எடுத்தது.

எல்லாரும் தனுஷ்கோடியில் கும்பலோட கும்பலா அழிஞ்சு போன கட்டிடங்களை பின்னாடி வச்சு போடோ எடுத்துண்டுட்டு இளநீரும் மாங்காய் பத்தையும் வாங்கி சாப்டூட்டு வந்துடரா. சிலர் இன்னும் கொஞ்சம் தள்ளீப் போய் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செஞ்சுட்டு கடலில் குளிச்சுட்டு வரா. யார் அரிச்சமுனை நுணீக்கு போய் “டேய் ராவணா உன்னை சும்மா விடமாட்டேன் இதோ வரேன். வந்து துவம்ஸம் செய்யப் போரேன்னு நிப்பா? அன்னைக்கு நான் கட்டி முடிச்ச ரோட்டில் ரவுண்டானா மாதிரி இருக்கே அங்கே நின்னுண்டு சத்தமா சொல்லீட்டு திரும்பரேன். ராவணந்தான் இப்போ இல்லையே? யார்கிட்டே சவுண்ட் விடராய்? கேக்கலாம். என்னுள்ளே இருக்கும் அகங்காரம்தான் ராவணன். நல்ல ஃபீல் கிடெச்சது.

சரீன்னு திரும்ப தனுஷ்கோடிக்கு வந்தாச்சு. என்னோட இறங்கின டூரிஸ்ட் போய் புதுசா 3 வேனில் வந்தவா.

தனுஷ்கோடீலே என்ன இருக்கு? ஒண்ணுமே இல்லை. அதான் விசேஷம். மின்னா அழகா நிலத்தின் கோடீலே மின்னின ஊர் இப்போ இல்லை. “ஆங்கிலத்தில் ஸ்பூக்கி என்ட் என்சேன்டிங்க் ப்ளேஸ்” அப்படீம்பா. 56 வருஷங்களுக்கு மின்னாடி இருந்த ரயில் நிலயம், போலீஸ் ஸ்டேஷன், ஆஸ்பத்திரி, இலங்கை தலைமன்னார் போகன்னு நிக்கும் போட்கள் நிறைந்த சின்ன துறைமுகத்தோட வாழ்ந்த 2000 பேர் அன்னைக்கு ராத்திரி அடிச்ச பெரீய சூராவளீலே காணாமப்போன அக்ரமம் நடந்த இடம். இருப்பது இருக்கப் போவதில்லை, எதுவும் சாஸ்வதம் இல்லைன்னு சொல்லித்தர, நாம போய்க் கத்துக்க ஒரு இடம்.

20அடி உயரத்துக்கு அலைகள் எழும்பி ஊரையே கொண்டு போயிருக்குன்னா பாத்துக்கோங்கோ. அப்பெல்லாம் தொலைத் தொடர்பு வசதிகள்னு சொல்லிக்க ஒண்ணுமில்லை. “கட்டு கடகட”ன்னு தந்திக் கம்பீல செய்தி வந்தாத்தான் உண்டு. என்ன நடந்தது? ஏன் தனுஷ்கோடிக்குப் போன ரயில் திரும்பலைன்னு 4நா கழிச்சு கேக்க ஆரம்பிக்க முழுசா 7 நாட்களுக்கு அப்புரமா பேப்பரில் வந்ததாம். படிச்சேன். இப்போ பழமுதிர்நிலயத்தின் வாசப்படீலே வழுக்கி விழுந்த கிழவன் வீடியோ ரெண்டே நிமிஷத்தில் தரவேற்றம் செய்யப்பட்டு உலகம் பூரா பாக்கரா. லைக் போடுவா.

நான் பாக்கரேன், ஒரு 10 மீட்டருக்கு அப்போ இருந்த அதே தண்டவாளம், எதுத்தாப்போலே அந்த காலத்து ரெயில்வே ஸ்டேஷன் வாடர் டேங்க், அந்தண்டை இடிஞ்சு விழாம நிக்கும் சர்ச்சின் சுவர்கள் இத்யாதி. இது நடந்ததும், இது மனுஷா வாழத் தகுதியில்லாத ஊர்னு அரசாங்கம் அறிவிச்சதும் தனுஷ்கோடி இன்னும் பிராபல்யமாக ஆரம்பிச்சது வாஸ்த்தவம். பலபேர் அட்வென்சருக்காக இங்கே போக ஆரம்பிச்சா. அப்புரம் ராணுவம் வச்சு எல்லாரையும் தடுத்தா. 15 வருஷமா சுற்றுலாத் தலமா மாத்தி, இப்போ கடைசீக் கோடிமுனை வரைக்கும் ரோட்டையும் போட்டுத் தந்துட்டு தொறந்து விடப்போரா. என்ன ஒண்ணு, சாயங்காலம் 5க்குள் எல்லாரும் முகுந்தராயர் சத்திரத்துக்கு இல்லை ராமேஸ்வரத்துக்கு வந்துடணும். விடிஞ்சதும் கார்த்தாலெ திரும்ப போய்க்கலாம்.

நடந்த களைப்பு, வெய்யல். எல்லாம் சேர்ந்துக்க அடுத்த வேனில் போலாம்னு உக்காந்துக்கரேன். இளநீர் ஒண்ணை வாங்கி உரிஞ்சிண்டே. கொக்கோகோலா கிடெச்சது. அந்த கருமத்தை ஏன் குடிக்கணும்? இத்தனை தூரம் வந்துட்டு இங்கே கடை போட்ட 10பேருக்கு ஏதாவது வியாபாரம் செஞ்சு தரணும்னு சில படங்களையும் சிப்பியாலான மாலையும். திரும்ப ஒருக்கா ரோட்டை கீராஸ் செஞ்சு அந்த சர்ச் பக்கம் போய் அந்தண்டை கடலை பாத்துட்டுப் போணம்னு போனா தெருவோரமா இருக்கும் மதகில் ஒரு மீனவக் குடும்பம்.

அப்பா அம்மா ஒரு சின்னப் பொண். அத்தனை அழகா அந்தப் பொண் பாவாடை போட்டுண்டு. குடும்பத் தலைவனுக்கு வயசு 40 இருக்கும். அவன் வீட்டுக்காரிக்கு 32. கருப்பா இருந்தாலும் அத்தனை அழகு. அவள் ஜாடையா பொண் அமைஞ்சது அவன் செஞ்ச புண்யம். ஏன்னா அப்பாவைக் கொண்டு பொறந்திருந்தால் சப்பை மூக்காய்ப் போய் ஸ்கூலில் கேலி செய்வா நிச்சயம்.

குழந்தைக்கு 4 வயசிருக்கும். என்னைப் பாத்ததும் “மாலை வாங்கிக்கங்க”. கையை நீட்டரா. அதில் மூணு பாசிமணி மாலை. “எவ்வளவு” “10ரூக்கு ஒண்ணு”. மழலை சொல்லீத்தே! 3ஐயும் வாங்கிண்டு 50ரூ தரேன். சில்லரை இல்லைங்கரா. “பரவாயில்லை வச்சுக்கோ!” அப்பாக்காரன் “சில்லரையாத் தாங்க சாமீ. பிள்ளை கிட்டே இனாமாத் தராதீங்க, கெட்ட பழக்கம் வரும். மூணு மாலைக்கு 30ரூ போதும்”. “என்கிட்டே 10ரூபாய் தாளில்லையே. குழந்தைக்கு ஏதாவது வாங்கிக்கட்டுமேன்னு தந்தேன். இந்த இடத்தில் நீங்க குடும்பத்தோட எப்படி?”

“நாங்க மீன் பிடிக்கரவங்க. மத்த இடங்களில் இல்லாம தனுஷ்கோடீலே மட்டும் பலவகையான மீன்கள் கிடைக்கும். அதிகம் கப்பல் போட்டெல்லாம் போகாத இடமா நிறைய மீன் வளம். கடலுக்குள் போனா சாயங்காலத்துக்குள் வந்துடுவம். ராமேஸ்வரத்தில் மீன் சந்தை. இல்லை நடுத்தரகங்க கொண்டுகிட்டுப் போய் ராமநாதபுரம் சந்தைலே வித்து காசு கொண்டாந்து கொடுப்பாய்ங்க. மண்டபத்தில் ஆர்மீ கேம்ப் வந்துடுச்சு. அங்கே படகை கொண்டு போக முடியாது. பாம்பன் பாலத்துகிட்டே விசைப் படகுக்காரங்க போட்டீ. இங்கேதான் நம்ப தொழில் பல வருஷமா”.

“தங்க ஜாகை எங்கே?” “இங்கேதான். அதோ குடிசை!” காமிக்கரான், எனக்கு ஒண்ணும் புலப்படலை. வெயிலில் கண் கூசவே பாத்தூட்டதா சொல்லி சமாளிச்சேன். “மாசத்துக்கு எவ்வளவு வருமானம் வரும்?” “ஐயா நீங்க வேற. ஒரு 300 கிடெச்சா பெரீசு. எங்களுக்கு பத்தும். அடுத்த வருஷம் புள்ளய ஸ்கூலில் சேக்கணும் அப்பத்தான் கஷ்டப் படுவம். அதுக்குத்தான் என் வூட்டுக்காரி பாசிமணி வாங்கிட்டு வந்து கோத்து வரவங்ககிட்டே விக்கலாம்னு சொல்லீச்சு. நாங்க கோத்த முத 3 மாலையை நீங்க வாங்கிட்டீங்க சாமி. உங்க கை ராசியான கை. வந்த 1 மணியிலேயே எல்லாம் வித்தாச்சு. எங்க கிட்டே யாரும் வரலை. நீங்க மட்டும்தான். தனுஷ்கோடி வரவங்க எல்லாம் என்னமோ வூட்டுலே சாப்டாம கிளம்பி வந்தாப்போல வாங்கித் திங்கத்தான் வந்ததுபோல் நடந்துக்கராங்க”.

நன்னா கமென்ட் அடிக்கரான். இவனும் ஏதாவது சாப்பிடர சமாச்சாரம் வியாபாரம் செய்ய வேண்டியதுதானே? கேட்டேன். “அதுக்கு முதல் வேணுமே. கொஞ்சம் கையில் காசு சேக்கணும், அப்புரம் கடலுக்குள் எல்லா நாளும் போகமுடியாது. மீன் கிடைக்காத மாதங்கள் நிறைய. ஏதாவது செய்யணும்.” இவர்கள் வாழ்க்கையை பத்தி நினைச்சா கண்ணீரும் கடல்போல் உப்புக் கரிக்குமோ!

இவாளோட பேசிண்டே அடிக்கடி வேன் நிக்கும் இடத்தையும் கண்காணிச்சுக்க வேண்டியிருக்கு. ஏன்னா கடைசீ வேன் 5 மணிக்காம். இன்னும் 30நிமிஷம் இருக்கு. மிஸ் ஆனா என்ன ஆகும்? இவங்களையே கேப்பம். கேக்கரேன். “ஆமாம் கஷ்டம்தான். வேன் இல்லைன்னா இப்படியே அரைகுறையா ரோட் போட்டிருக்காங்களே அதில் நடந்து சத்திரம் போயிடலாம் சாமி. அப்பாலே பஸ் கிடைக்கும். ஆனா மணிக்கு ஒண்ணுதான். அதுவும் 6 மணி வரைக்கும்”. “இல்லை அங்கே என் காரும் ட்ரைவர் கந்தசாமியும் இருக்கான்”. “எங்கே சார் போவீங்க? ராமநாதபுரமா?” “மதுரை. தனுஷ்கோடி பாக்கணும்னு வந்தேன். நாளைக்கு நகரத்தார் கோவில்கள், செட்டிநாடு பக்கம் போலாம்னு ஆசை. ஆமாம்? நீங்க இப்போ எங்கே போவீக்க, டூரிஸ்டெல்லாம் போயிடுவாங்களே? இங்கே ஒண்ணும் இருக்காதே, என்கூட வரீங்களா?”

“அன்னைக்கு அப்படித்தான் சாயங்காலம் வந்துடு, பெரீய மழை வரும்போல இருக்குன்னு சொன்னாங்க சாமி. நாங்க போகலை. ரெண்டுநாளா நல்ல மழை. நின்னுடும்னு இருந்துட்டம். ஆனா பெரீசா ஒரு ராக்ஷச அலை எங்களை கொண்டே போயிடுச்சு”.

அதிர்ந்து போனேன். “எப்ப?” “அது நடந்து அம்பது வருஷத்துக்கு மேலே ஆயிடுச்சு சாமி. கணக்கு வச்சுக்கலை. நீங்க பத்திரமா போயிட்டு வாங்க.” மதகுலேந்து மூணுபேரும் ஒட்டுக்க எழுந்துக்கரா. கால் தரையில் பதியாம அடி எடுத்து வைக்கராப் போல் இல்லாம அப்படியே மிதந்துண்டு குடிசைன்னு அவன் கைகாட்டிய திசையில் போரா.

எனக்கு ஈரக்குலை உறைஞ்சுபோன ஃபீல்.

No comments:

Post a Comment