Tuesday, December 8, 2020

மராட்டிய மண்ணின் ஆன்மீக நினைவுகள்- பகுதி 30

 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻30🙏🏻🙏🏻🙏🏻🙏🏻


மராட்டிய மண்ணில் ஒரு பயணம்     பகுதி 30

மும்பை

(சுஜாதா வெங்கடேசன்)

இவர்ட்ட எலிபென்டா போன கதையை கேட்டு முடிக்கறதுக்கும் மகாலஷ்மி கோயில் வரதுக்கும் சரியா இருக்கு…

இந்தக்கோயில் ரொம்ப பழமையானதாம். 

மும்பை மாநகர் மீது அந்நியர் படையெடுத்தபோது, கோயிலுக்கு பாதகம் விளையுமோ என்று அஞ்சிய பெரியோர்கள், மகாலட்சுமி சிலையை கடலுக்குள் மறைச்சு வைச்சாளாம்.  போர்த்துகீசியர் காலத்தில், தம் வணிக வளர்ச்சிக்காக  மும்பையின் 7 தீவுகளை ஒன்றாக இணைக்கும் திட்டம் உருவானது. ஆனால் திட்டம் ஆரம்ப கட்டத்திலேயே பல தடைகளை சந்தித்தது.

இறுதியாக மகாலட்சுமி, தனக்குக் கோயில் எழுப்பினால், திட்டம் நிறைவேறும் என்று சொல்லி, இருப்பை உணர்த்தினாள். அதன்படியே கிருஷ்ண மோரே என்பவரின் முயற்சியால், மகாலட்சுமி உள்பட முப்பெரும் தேவியரும் கடலிலிருந்து கிடைக்க, மூவரையும் முறைப்படி பிரதிஷ்டை செய்து பூஜைகளும் மேற்கொண்டார்கள். 

அதன் பிறகு தீவுகளை இணைக்கும் பணி குறிப்பிட்ட நாளில் முடிந்தது. இந்தியாவின் தொழில் நகரமாக மும்பை வளர்ந்தது. முதல் முதலாக அங்கு ரயில் போக்குவரத்தும் துவங்கப்பட்டது. அனைத்தும் அன்னை மகாலட்சுமியின் அருள் என்று சொல்லி, மும்பை மக்கள் மெய் சிலிர்த்தனர்.

மகாலட்சுமி வெளிப்பட்ட ஜூன் 17, அன்று மகாலட்சுமியை பல்லக்கில் சுமந்து நெடுந்தொலைவு ஊர்வலம் வருவதை லட்சக்கணக்கான பக்தர்கள்  கண்டுகளிப்பர். நூற்றுக்கணக்கான வியாபாரிகள் செந்தாமரையுடன் வந்து தாயாரை  தரிசனம் செய்கின்றனர். மாலை சூடிய கழுத்தோடு வந்து தரிசனம் செய்தால் இல்வாழ்க்கை வளமாகும் என்பதால், புதுமண தம்பதிகள் நிறைய பேரை இந்தக் கோயிலில் தினமும் காணலாம். கோயிலுக்கு பின்புறம் கடலுக்குள் மூன்று  ஊற்றுகள் உள்ளன. இந்த நீரூற்றின் தண்ணீர் இனிப்புசுவையாக இருப்பது அதிசயம்.

ஒருவரது வாழ்வில் கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றும் இருந்தால்தான் அவரது வாழ்க்கை நல்ல நிலையில் இருக்கும் என்பது மக்களது நம்பிக்கை. இவை மூன்றில் நடைமுறையில் மற்ற இரண்டையும் விட செல்வம்தான் அதிக முக்கியத்துவத்தை பெறுகிறது. அதை நோக்கியே மக்களின் மன ஓட்டமும் செல்கிறது. இதனால் மனித மனங்களைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். 

நமக்கு ஒரு விசயம் புரிவதில்லை. நம்மைச் சுற்றியிருக்கிறவர்கள் உயரும்போதுதான் நாமும் உயர்வோம் என்று. அதே நேரத்தில் செல்வம் நமக்கு எளிதில் கிடைப்பதில்லை. அதற்கென நிறைய மெனக்கெடல்கள், தியாகங்கள் செய்யவேண்டியிருக்கும். தொழிலில், கல்வியில் அதிக கவனம் செலுத்தி நம் குறிக்கோள்களை அடைய முயற்சிக்க வேண்டும். அது மட்டும் போதுமா என்றால், இல்லை நிச்சயம் இல்லை. லட்சுமியின் அருள் வேண்டும். அவள்தானே செல்வத்தின் அதிபதி.. அப்படி லட்சுமியை வழிபட்டால் நாலு தலைமுறைக்கும் செல்வம் சேர்க்கலாம்.

கோயில் சின்ன மலைமாதிரி பாறை மேலே இருக்கு …ஒரு தாமரைப்பூவை வாங்கிண்டு  படி ஏறி போய் சேவிக்கறோம். 

கோலாப்பூர் மாதிரிதான்..நம்ப ஊர் தாயாரை பார்த்துட்டு மகாலஷ்மின்னா இப்படித்தான்னு மைன்ட் செட் ஆனதாலே முழுசா ஈடுபாடு வரலைதான்.லஷ்மிகிட்ட வேண்டிக்க என்ன இருக்கு?..எவ்ளோ லஷ்மி கடாஷம் வந்தாலும் இவர் மாறப்போறதில்லைன்னு பெருமூச்சு விட்டுண்டு “அம்மா தாயே இவருக்கு நீ கொடுத்து இருக்கறதை அனுபவிக்கற மனசக்கொடு”ன்னு வேண்டிக்கறேன்…

சாப்பாட்டு சமயம்கறதால தரிசனம் முடிச்சிட்டு சாப்ட்டுட்டு பஸ்ஸுக்கு வரசொன்னதால ஒரு ஓட்டல் போறோம். வழக்கப்படி இவர் தனக்கு தாளி சொல்றார். எனக்கு ஜீரா ரைஸ் சொலறேன். அவன் ஃபுல் ப்ளேட் கொண்டு வந்துடறான். என்னால சாப்பிட முடியல. இவர் “ஏன் வேஸ்ட் பண்றன்னு” என்ன மொறைச்சிட்டு அவன்ட பாதியை பார்சல் பண்ணித்தரச்சொல்லி இன்னிக்கு ராத்திரிக்கு ஒனக்குன்றார்.  தலை விதியேன்னு லக்கேஜோட வச்சுக்கறேன். 

பஸ் மறுபடியும் ஊரை சுத்திண்டு ஒரு மால் வாசல்ல நிக்கறது. எதோ 4டி ஷோவாம். போய்ட்டு வாங்கோன்றான். 200 ரூ டிக்கட் வாங்கிண்டு எல்லோரும் போறா. இவர் “நம்ம ஊர்ல இல்லாத ஷோவா? கமிஷனுக்காக கொண்டு நிறுத்திட்டான். 

நாம அவா பாத்துட்டு வர வரைக்கும் வெளில நடந்தே மும்பையை சுத்தி பார்க்கலாம்னு “

அழைச்சிண்டு போறார். வெயில் கொளுத்தறது. கொஞ்சம் நடந்த ஒடனே ஒரே மாதிரி ப்ரமாண்ட பில்டிங் பார்த்துட்டு பஸ்ஸை மிஸ் பண்ணிடுவோம்னு பயம் வந்து மறுபடி மால் வாசல்லேயே “ஜில்லுனு இருக்கு .உக்காந்துண்டு வாட்சப் மெசேஜ் பாக்கலாம்கறார்.”

அரை மணி ஆகியும் அவாள்ளாம் வரலன்ன ஒடனே “வா மால் உள்ள சுத்திப்பாத்துட்டு வரலாம்கறார்”. அரைகுறையா கட்டிண்டு இன்னும் ஃபினிஷ் ஆகாத மால்.நாலாவது மாடி வரைக்கும் போய் மும்பையோட அழகை பார்க்கலாம்னு அழைச்சிட்டு போறார்.  நாலு பக்கமும் கான்க்ரீட் காடுகள் ..தூஊரத்துல கடல் அலைகள் புரண்டு வர்றது திவ்யமாதான் இருக்கு.

“அப்படியே நாலு பக்கமும் மெதுவா பாத்துண்டே வா..இதான் 4D ஷோ”ங்கறார். கூகுளை தொறந்து ஒவ்வொரு பக்கமும் என்ன இருக்குன்னு எக்ஸ்ப்ளெய்ன் பண்றார். 

அப்படியே கீழப்பார்த்தா நிறுத்தியிருந்த எடத்துல பஸ்ஸக்காணோம்.




No comments:

Post a Comment