Tuesday, December 8, 2020

பொன்ஸாய்

 29. பொன்ஸாய்  (சிசீ7) #ganeshamarkalam

மாமரம் பாத்திருக்கேளா? இதென்ன கேள்வி? நம்மூரில் காமணாச்சே! பாக்காதவா இருப்பாளா என்ன? அப்படித்தான் சொல்லுவேள்னு தெரியும். சரி, 2 அடியவிட குள்ள மாமரம்? அத்தனை சின்னதுன்னா அதை மாங்கன்னு அப்படீம்போம். அப்ப வடு வச்சது? அதெப்படி சாத்தியம்? எங்காத்துக்கு வாங்கோ, பாக்கலாம்.

எங்காத்தில் ரெண்டு பொன்ஸாய் மரங்கள் பாக்கலாம். சில வருஷங்களாவே நான் பொன்ஸாய் கலை கத்துண்டு இதப் பண்ணிண்டிருக்கேன்னா பாத்துக்கோங்கோ. ஆத்துக்குள்ளேயே வளர்ந்துண்டு இருக்கு. அப்பப்ப வெய்யலும் மழையும் காமிச்சுட்டு உள்ளே எடுத்து வச்சுடுவேன். 15 வயசில் ஆர்வம் வந்தது. இப்போ ஓரளவுக்கு எக்ஸ்பெர்ட்னு சொல்லிக்கலாம். நிறையபேர் செய்யரா. ஆன்லைனில் ஸ்கூல் இருக்கு. ஜப்பானில் பொன்ஸாய் பெரீய விஷயம். கலைன்னு சொல்லுவதை விட இதை ஒரு தவம் மாதிரி செய்வா. குட்டி தேசம், சின்ன நிலப்பரப்பு. நிறைய விளைவிச்சுப் பாக்க ஆவல். அதுக்காகவே கண்டுபிடிச்சாப்போல். ஓரிகாமின்னு இன்னொரு கலை. பேப்பர்லேயே வடிவங்களைச் செய்வது.

எனக்கு ஏன் இதில் ஆசை? எல்லாருக்கும் வரணும். இத்தனை பெரீய பரந்து விரிஞ்ச தெசத்தில் வாழக் கொடுத்து வச்சிருந்தாலும் என்ன செய்யரம். நெடுநெடூன்னு அப்பார்ட்மென்ட் கட்டி, 10 குடுத்தனம் தனித் தனியா வீடு கட்டிண்டு காத்தோட்டமா வாழாம அதே இடத்தில் 300 குடும்பங்கள் வாழலையா? கட்டும்போதே நிலத்தடி நீரெல்லாத்தையும் உரிஞ்சிட்டு, காசைக் கொட்டி குடிவந்தவா குண்டி கழுவ தண்ணீர் இல்லாம கிராமத்து விவசாயக் கிணத்துலேந்து லாரீலே மொண்டுண்டு வந்து!.

தரையில் ஒரு இன்ச் மணல் தெரியாத மாதிரி காங்க்ரீட் கொட்டி மொழுகினப்பரமும் மரம் செடி கொடியெல்லாம் வேணும்னா? பொன்ஸாய்தான் தீர்வு. பொன்ஸாய் முறையில் மா பலா எல்லாம் சாத்தியம். இப்படிப் பண்ணிண்டாத்தான் அடுத்த தலைமுறை சிடீலே பழம் சாப்பிடரச்சே இது காய்ச்ச மரம் இப்படித்தான் இருக்கும்னு பாத்துத் தெரிஞ்சுக்கலாம். இல்லைன்னா சயின்ஸ் புஸ்தகம் தான். இல்லை யூட்யூபில்.

இது ஒருபக்கம் கிடக்கட்டும். நான் பொன்ஸாய் வச்சிருப்பதையும், எங்காத்து மாமரத்தில் வடு வந்திருப்பதையும் ஊர்பூரா அம்மா தம்பட்டம் அடிச்சுட்டா. அம்மாவாட்டும், அப்பாவாட்டும், ஆரம்பத்தில் :இதெல்லாம் என்ன? வேற எதாவது ஹாபி வச்சுக்கப்பிடாதா?”. தொட்டி, ஸ்பெஷல் கட்டர், ப்ரூனர், கம்பீ, வலை, மண்ணூன்னு ஆத்து ஹாலுக்குள் கொண்டுவந்து களேபரம் செய்யரேன்னும் சிலவாரதுன்னும் வெசா. கண்டுக்கலை. லோலோன்னு வெய்யலில் கண்ட பசங்களோட சுத்தாம ஆத்துக்குள்ளேயே படிக்கர டயம் தவிர்த்து என்னமோ செய்யட்டும்னு விட்டூட்டா. எதுன்னாலும் அவா கண்ணு முன்னாடித்தானே நடக்கரது!

சகிச்சுண்டவா கொஞ்ச நாளைக்கு அப்பரம் ஆர்வமா என்ன செய்யரேன்னு பாக்க ஆரம்பிச்சு, அப்பரம் கேட்டுத் தெரிஞ்சுண்டா. நான் இல்லாதபோது அதோட செல்ஃபீல்லாம் எடுத்துண்டு! இப்போ அப்பா கூட மாட ஒத்தாசை செய்ய ஆரம்பிச்சாச்சு. வடு வச்சதும் அம்மாவோட ஃப்ரெண்ட்ஸ் வரா. எனக்குச் சொல்லாம தொட்டுப் பாக்கராளாம். பெருமை தாங்கலை.

பொன்ஸாய்னா என்னன்னு சொல்லிடணும். கிட்டத்தட்ட நன்னா வளர்ந்த மரச்செடி ஒண்ணை நர்ஸரீல வாங்கிக்கலாம்,  இல்லை ஆத்துலேயே தொட்டியில் வளத்துடலாம். ஒரு அளவுக்கு அது வளர்ந்ததும் அதை ஷேப்பா வெட்டணும். அங்கேதான் ஆரம்பிக்கும். எங்கேந்து பாத்தா நன்னா இருக்கும்னு பாத்து அதன் கிளைகள் எப்படீன்னு சித்தே அடிச் செடீல மண்ண உதுத்துட்டு சொச்சத்தை வெட்டிடணும். காய்ஞ்ச அழுகின இலை, நமக்குத் தோதா வளராத இடங்கள். அது எப்படி வளரணும்னு விருப்பப் படரோமோ அப்படி கம்பி வச்சு ஷேப் செஞ்சுக்கலாம். கம்பிய அழுத்திக் கட்டாம, அதே சமயத்தில் இப்படிப் போன்னு சொல்ராப்போல. ரூட்ஸ் பக்கம் மண்ண கூடிய முட்டும் உதுத்துட்டு அங்கேயும் அடீலே வேரை ப்ரூன் செஞ்சு. அப்பரமா புது ஷேலோ தொட்டீலே சத்து மண்ணை காத்தோட்டமா பரப்பி அதில் இதை நட்டு வச்சுட்டு நீர் தெளிச்சா ஆச்சு.

டேபிளில் நிழலில் போன்ஸை ரெடீ. அப்பப்போ நீரும் வெய்யலும் காமிச்சிட்டா அதுவா வளரும், தன்னிச்சையா இல்லாம நம் சொல்படி. 40நாளுக்கு ஒருக்கா மின்னே செஞ்சாப்புல மண்ணுலேந்து எடுத்து திரும்ப கிளையையும், வேரையும் ப்ரூனிங்க். என்ன செய்யரோம்னா நீண்டு நெடுக்க வளரும் தாவரத்தை சின்னத் தொட்டீல நிறைய சத்துக்கள் கொடுத்து சின்னதாவே ஆனா முழு ஃபார்மோட வளராப்போல். பெரீய மரம் பூத்துக் காய்க்கராப் போலவே இதுவும் செய்யும். அப்படி வடுவச்சது எங்காத்து பொன்ஸாய் மாமரம். ஒரு ஆலமரமும் அரச மரமும் இப்பத்தான் ஆரம்பிச்சுருக்கேன். முதுமையான பெரீய மரங்களை பொன்சாயா கண்டு மகிழ வருஷங்கள் ஆலாம்.

இப்பெல்லாம் திடீர் திடீர்னு மாவடு பாக்க வரா. அம்மாக்கு குளோஸ் ஃப்ரெண்ட் சாந்தி. பக்கத்துலேதான் ப்ரிகேட் மில்லெனியத்தில். “என்னடீ காமாட்சி ஊருக்கெல்லாம் தெரிஞ்சிருக்கு என்னண்டை சொல்லாம மறைச்சுட்டாய்?” “என்ன மாமி?” “உங்காத்தில் குட்டி மாமரம் காய்ச்சிருக்காமே? சொன்னா வந்து பாக்க மாட்டேனா? அது என்னடீ குட்டி மாமரம்? காமீ!” சுவாதீனமா வந்து ஹால் சோபாவில் உக்காந்தாச்சு. பேப்பர் படிச்சிண்டிருந்த அப்பாவை மாமி உக்காந்த வேகம் உலுக்கித்து. அப்பாவை விட 2 வயசு பெரியவர். வாத்ஸல்யமா பழகுவர். அப்பாவுக்கு மாமி சரிசமமா உக்காந்தது மேட்டர் இல்லை. சோஃபா தாங்குமான்னுதான் கவலைப்படுவர்.

ஹாலோட ஒட்டினாப்போல் சமையல். ஓபன் டிசைன். உள்ளே படிச்சிண்டிருந்தவன், “வாங்கோ மாமி ஆத்தில் எல்லாரும் சௌக்கியமா? வாங்கோ மாவடு காமிக்கரேன்”. “அதுக்கு எங்கே போணம்?” “பால்கனீக்கு”. “இப்பத்தான் உக்காந்தேன், எழுந்தெல்லாம் வரமுடியாது. இங்கேயே வந்து காமி”. சரீன்னுட்டு தட்டையா இருந்த தொட்டிய எடுத்துண்டு வந்து மாமிக்கு எதுத்தாப்போல் பிடிச்சிண்டு நிக்கரேன். கொஞ்சம் கனக்கும். நேத்துத்தான் நீரும் விட்டதா! “எங்கேடா மரம்?” “இதோ உங்க கண் மின்னாடி இருக்கே!? கையோட கொண்டு வந்த மூக்குக் கண்ணாடிய எடுத்து மாட்டிண்டு பாத்துட்டு “என் மடீல வை பாப்பம்!”

ஆச்சர்யப்பட்டுப் போனா. மாவிலைதான், சின்னசின்னதா. பிச்சு வாசல்ல தோரணம் கட்டினா எப்படி. வடுவ தேடிக் கண்டு பிடிச்சுட்டு அதைத் தொடப் போரப்போ “வேண்டாம் மாமி. ரெம்ப நாஸூக்கு. இன்னும் வளரும். சித்தே பெரிசாகும். பழுக்குமான்னு பாக்கணும், பிச்சுப் போட்டுடாதீங்கோ”. சொல்லீட்டு மடீலே வச்சேன். பொறந்த குழந்தையை மடீலே போட்டு கொஞ்சிக்கோன்னு சொன்னாப்போல் முகத்தில் சந்தோஷம். சித்தே நாழி பாத்துட்டு “வாங்கிக்கோடா. உங்கம்மாவ காபி எடுத்துண்டு வரச்சொல்லு. இதை எப்படி செஞ்சாய்னு சொல்லித்தா நானும் செய்யணும்”. “அதெல்லாம் உங்களால் முடியாது,” சொல்லிண்டே போட்டிருந்த காபிய கொண்டு வந்த அம்மா பக்கத்தில் உக்காந்துண்டா.

“காமாட்சி, உம்பையன் இப்போ மரம் வளப்பதைத் தவிர என்னடீ பண்ணிண்டிருக்கான்?” “மார்ச்சில் BE முடிக்கரான் மாமி. கேம்பஸில் செலெக்டட். நேர இன்ஃபோசிஸ்”. “தெரிஞ்ச இடத்தில் ஒரு வரன் இருக்கு. ஜெயநகர் 5த் ப்ளாக். இப்பெல்லாம் தள்ளிப் போட்டா கல்யாணம் நடக்காது. இவாத்தில்; பண்ணலாம்னு சொன்னா. உன் பையனுக்கு பாக்கலாமா?” “செய்யலாம்!” பேப்பரை கடாசிட்டு அப்பா பதில் சொல்லிட்டர். என்னடா இது மாவடு பாக்கரேனு வந்துட்டு இன்னும் வேலையில் ஜாயின் செய்யலை எனக்கு வேட்டு வைக்கராளேன்னு பயந்தேன். ஆனா இந்த பெங்களூரில், 24 வயசில் படிப்பு முடிச்சதும் கல்யாணம் பண்ணிண்ட தம்ழ் பிராம்ணப் பையன் நானாத்தான் இருக்கணும். 1 வருஷத்தில் கிரஹஸ்த்தனாயாச்சு.

சித்ரா BCom. CA பண்ணி பீரபல ஆடிட்டரா ஆணம்னு ஆசையாம். கல்யாணத்தை செஞ்சுண்டு படீன்னுட்டா. அவாத்தில். மீட் செஞ்சப்போ சொன்னா. “அதுக்கென்ன படியேன். நான் சம்ப்பாதிக்கரேன். எங்காம் 4 பெட்ரூமோட எலிட்டா ப்ராமினேடில். உனக்கூன்னு ஸ்டடி ரூம் வச்சுட்டா ஆச்சு”. “ஒரு கண்டிஷண்”. “என்ன?” “இப்பத்தைக்கு குழந்தை பெத்துக்க மாட்டேன். உங்காத்தில் பெரியவா அடம் பிடிச்சா எனக்கு பொல்லாத கோவம் வரும்”. சொல்ரப்பவே மூக்கு துடிச்சிண்டு உதட்டை சுழிச்சு, கண்ணை பெரீசா தொறந்துண்டு. கோவம் வந்தா எப்படி இருக்கும்னு வெள்ளோட்டம் காமிச்சா. அப்போ அவள் சாதாரணமா இருந்ததை விட அழகா தெரிஞ்சதால்தான் கல்யாணத்துக்கு சம்மதம் தந்தேன்னு அப்பரம் அவகிட்டே சொல்லி கலாய்பேன். “அப்படிப் பாக்கன்னு என்னை அடிக்கடி உசுப்பேத்த வேண்டாம்”

ரெம்பவே மார்டெர்ன் சிந்தனைகள் அவளுக்கு. பொன்ஸாய் பத்திச் சொன்னதும் எங்காத்தில் செஞ்சிண்டிருப்பதை பாத்ததும் பிரம்ச்சுப் போயிட்டா. “கேள்விப் பட்டுருக்கேன், இன்டெர்னெட்டில் பாத்ததொட சரி நேரில் இதில் இத்தனை கலை வண்ணம் இருக்கா?” “இந்தமாதிரி செய்யரப்பொ தவம் இருப்பதா இரு ஃபீல் கிடைக்கரது. மனசு சாந்தப் பட்டுப் போரது ஸ்ட்ரெஸ் பஸ்டரா பாக்கரேன். நம்மைப் போல் ஒரு உயிருள்ள ஜீவனை விதவிதமா ஷேப்பில் கட்டுப்பாட்டுக்குள் வளர்த்துப் பாத்து கைமீறிப் போகாம பாதுகாத்து, வேணும்கர போஷாக்கும் தந்து வச்சுப்பது? சாதாரண பெரீய மரத்தை விட அதே ஸ்பீஷீஸ் பொன்ஸாய் வகை அதிக வருஷங்கள் உயிர் வாழ சாத்தியம் இருக்காம். அப்படீன்னா அந்த உயிரினத்தின் ஆயுளை நாம நீடிச்சுக் கொடுக்கரம்.”

சித்ராவும் “அப்படீன்னா பொன்ஸாய் வகைகள் இன்ன பிர மரத்தைப் போல நம் ஆயிட்காலத்தையும் தாண்டி உயிர் வாழுமே. நாம பாத்துண்டப்போல் நமக்கப்பரம் யார் ஆசையா பாத்துப்பா. அதான் கவலை! ரோட்டோர மரம் அது பாட்டுக்கு யார் தயவில்லாம இருந்துடும். இது நம்மாத்து குழந்தைப்போல். குழந்தையாவே ஆயுசுப்புரா ஒண்ணை ஆத்தில் வளத்துட்டு சட்டுன்னு நாம கிளம்பிப் போயாச்சுன்னா? அதை அம்போன்னு விட்டுடாம ஏற்பாடு செஞ்சுட்டுத்தான் போணம்”. அவளும் இது குறித்து சொல்ல எனக்கு சித்தே அதிகமாவே அவள்மேல் ப்ரீதி ஏற்பட்டது.

சித்ரா இப்போ சிடீலே பெரீய ஆடிட் ஃபெர்மில் வேலை. நான் இன்ஃபோசிஸ் விட்டூட்டு IBMஇல். 2 வயசில் ஒரு பொண் குழந்தை. ‘உன் பேர் என்னடீ குழந்தை’னு கேட்டுப் பாருங்கோ. “ரம்யா ராமக்ருஷ்ணன்”. முழுசா சொல்லுவள். அப்பா கோண்டு. ஆத்தில் ரெண்டு கார். சித்ரா ஒண்ணை தனக்குன்னு வச்சிண்டுட்டா. என்னுதில் ரம்யாவ கேட்டட் கம்யூனிடீக்கு வெளீல அழைச்சுண்டு போய் ஸ்கூல் வேன் வர வரைக்கும் காத்திருந்து ஏத்திட்டு என் ஆபீஸுக்குப் போவேன். இப்படி ஒரு ரொட்டீன். மாமரம் வடுவிட்டதோட சரீ. ஆனா பொன்ஸாய் ஆலமரம் குட்டியூண்டு விழுது மாதிரி காமிக்க ஆரம்பிச்சதுதான் ப்ரேகிங்க் ந்யூஸ். அதைப் பாக்கன்னு கூட்டம் அப்பப்போ. இப்பவும் பொன்ஸாய் செஞ்சு பாக்க ஆர்வம் குறையலை. ஞாயித்துக் கிழமை இந்த மரங்கள் மின்னாடி உக்காந்துண்டுட்டா கடந்து போன முழு வாரத்து ஸ்ட்ரெஸை நிமிஷமா கரைச்சுடலாம்.

இப்படிப் போயிண்டிருக்கப்போத்தான் ஒருநா அபீஸில் மீட்டிங்கில் இருந்தவனை அப்பா போனில் கூப்பிட்டா. “டேய் ராமா ஆத்துக்கு உடனே கிளம்பி வரமுடியுமா?” “என்னப்பா? என்ன விஷயம்? அம்மாக்கு ஏதாவது உடம்பு முடியலையா?” “அதெல்லாம் இல்லை ரம்யா ஸ்கூல்லேந்து வந்தவள் மயக்கம் போட்டுட்டா, பக்கத்தில் டாக்டர் கிட்டே வந்தம். என்னன்னு சொல்ல இன்னும் டெஸ்டெல்லாம் எடுக்கணும்னு சொல்ராடா, பயமா இருக்கு”. மீட்டிங்கை கேன்ஸல் செஞ்சுட்டு வந்தேன். சித்ராவுக்கும் சொல்லி அவளும நேர கிருஸ்ணராஜா லேஅவுட் எதுக்கே இருக்கும் அப்போலோ.

ராத்ரி 11 இருக்கும், “இப்போ பரவாயில்லை கார்த்தாலே ஆத்துக்கு அழைச்சிண்டு போய்க்கலாம். அடுத்த மாசம் திரும்பவும் காமிங்கோ. டாக்டர் ப்ருந்தா ஜெனரல் பிசீஷியன். என்ன பிர்ச்சனைன்னு கேட்டதுக்கு “சொல்ல முடியலை. ஆனா வி சஸ்பெக்ட் ட்வார்ஃபிஸம் சிம்ப்டம்ஸ் இன் தி சைல்ட். குணப்படுத்திடலாம். இப்போ இதுக்கெல்லாம் சிகித்ஸை இருக்கு”.

இடிஞ்சு போய் உக்காந்தேன்.

(Dwarfism-வளர்ச்சியின்மை)



No comments:

Post a Comment