ராயகோபுரம் - சுஜாதா (ஸ்ரீரங்கத்து) கட்டுரை
(கல்கி திருவரங்கச் சிறப்பிதழ் :15-03-1987)
ஜீயர் சுவாமிகளின் விடாமுயற்சியால் இன்று இந்தியாவிலேயே மிக உயரமாக எழுந்திருக்கும் ராயகோபுரத்தைச் சுற்றிலும் என்னுடைய இளமை நினைவுகள் அநேகம் உள்ளன.
அப்போதெல்லாம் அதற்கு மொட்டைக் கோபுரம் என்று பெயர். விஜயநகர ராயர்களின் ஆட்சிக்காலத்தில் விளிம்பில் கட்டப்பட்டதாலோ என்னவோ, ராஜா இனிமேல் காசில்லை, தீர்ந்து போய்விட்டது என்று சொன்னதால் முற்றுப்பெறாமல் விட்டுப்போன கோபுரத்தை முடித்திருந்தாள் எப்படி இருந்திருக்கும் என்று சின்ன வயதில் வீதி பயல்களிடம் கதையளந்திருக்கிறேன். மேகத்தைத் துளைத்துக் கொண்டு ஒரு எவ்வு எவ்வினால் சந்திரன் மேல் அடியெடுத்து வைக்கலாம் என்று நான் சொன்னதை அப்பொழுதே பலர் நம்பவில்லை.
மொட்டை கோபுரத்தை பஸ்ஸ்டாண்டிலிருந்து அணுகும்போது வலப்பக்கத்தில் இருந்த மூலைக்கடையில்தான் என் முதல் சிகரெட் முயற்சி. ராத்திரி வேலையாக பார்த்துக்கொண்டு சிம்னி விளக்கு வெளிச்சம் உள்ள கடையாக தேர்ந்தெடுத்து, முகத்துக்கு குறுக்காக கைத்துண்டு போட்டு மூடிக்கொண்டு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் நோக்கி வாயின் இடது ஓரமாக, “ ஒரு சிகரெட்” என்றேன்.
“என்ன சிகரெட்டு எத்தனையோ சிகரெட் இருக்குது?"
"ஏ ...ஏ ...ஏதாவது"
"கோதை அம்மா பேரன்தானே நீ எதுக்காக மூஞ்சில சவுக்கத்தைப் போட்டு மூடியிருக்கே ?"
பைசா கொடுத்ததையும் பாராமல் ஓடி வந்து விட்டேன்.
ராயகோபுரத்தின் முழு அழகையும் மறைக்கும் வகையில் ஒரு முன்மண்டபம் இருக்கும். ஒரு மாதிரி அசௌகரிய முக்கோணமாக, கூர்ச்சையாக முடியும் அந்த இடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்சம் குரோட்டன்ஸ் வளர்த்து, நடுவே காந்தி சிலை வைத்தார்கள். இந்தியாவிலேயே சிரிக்கும் காந்தி சிலை அந்த ஒரு இடத்தில்தான் உள்ளது.
சிலைக்கு முன் பக்கத்தில் மண்டபத்தை இந்தப் பக்கம் அந்தப் பக்கம் தட்டி போட்டு தடுத்து, கோலா, சோடா, பத்திரிக்கை போன்றவற்றை இருப்பார்கள். அவற்றில் 'சிடரெட்' என்ற பானத்தில் கொஞ்சம் அதிகப்படியாக ஆல்கஹால் இருக்கிறது என்று யாரோ புரளி கிளப்பி விட, வைத்தி நெற்றியில் கைக்குட்டை கட்டிக்கொண்டு, பாட்டில் பாட்டிலாக பானம் அருந்துவான். அப்போதெல்லாம் மதுவிலக்கு அமலில் இருந்ததால் 'கிக்' வேண்டுமென்றால் தெற்கு வாசல் மெடிக்கல் ஷாப்பில் ஜிஞ்சர் பரிஸை நாடவேண்டும். அதைச் சாப்பிட அசாத்திய திறமையும், கான்கிரீட் வேய்ந்த வயிறும் வேண்டும்.
ராயகோபுரத்தை வெள்ளைக்காரன் வரைந்த 'டாக ரோடைப்' என்ற சென்ற நூற்றாண்டு சித்திரத்தில் மேற்சொன்ன மண்டபம் இல்லை. முகப்பில் வைக்கோல் போரும் மாட்டு வண்டி பின்னணியில் ராய கோபுரம் தெரியும். இந்தச் சித்திரம் ஏ கே செட்டியாரின் 'தமிழ்நாடு பயணக் கட்டுரைகள்' என்ற புத்தகத்தில் இருக்கிறது. அந்தப் புத்தகத்தை என்னிடமிருந்து இரவல் வாங்கிச் சென்று இதுவரை திருப்பித் தராத நண்பரே! ஐயா! தயவுசெய்து திருப்பிவிடும்.
ராயகோபுரத்தை ஒட்டிய உள்பக்கத்திலிருந்து தெற்குவாசல் என்னும் பிரதான கடைத்தெரு தொடங்கி கோயில் வாசல் வரை செல்லும். கோபுரத்தோடு ஒட்டிய பகுதியில், எதிர் எதிராக இரண்டு ஹோட்டல்கள் எப்போதும் போட்டியாக ஒன்றை ஒன்று லவுட் ஸ்பீக்கர் சங்கீதத்தால் திட்டிக் கொண்டிருக்கும் . இரண்டில் ஒரு ஹோட்டல் மட்டும் எப்போதும் மூடியை திறந்தால் ரோஸ் மில்க், மாடியில் லாட்ஜிங் என்று கொழிக்க, மற்றது எப்பொழுதுமே அழுது வடியும். இது ஏன் என்று எனக்குப் புரிந்ததே இல்லை. இரண்டு ஓட்டல்களிலும் விசேஷம், உள்ளே போய் டிபன் சாப்பிடும்போது பச்சை பெயிண்ட் அடித்த சுவரை உற்றுப் பார்த்தால் கிருஷ்ணதேவராயர் காலத்துச் சிற்பங்கள் தெரியும். இன்றைய ஸ்பெஷல் போர்டு மாட்டிய சரித்திரம்!
ராயகோபுரத்தை கடக்கும்போது ஆர்க்கியாலஜி காரர்களின் நீல போர்டு ஒன்று இருந்ததாக ஞாபகம். அதோடு சேவகர் ஒருவரும் நின்று கொண்டிருந்தார் அவரை ஒரு முறை 'உங்களுக்கு என்ன வேலை' என்று கேட்டதில் அவர் 'போடாங்க.." என்று கெட்ட வார்த்தை பிரயோகித்தார். எதிர் எதிரே கோபுர வாசலில் உள்பகுதியில் இருந்த படிகளில் அப்போது யாரும் ஏறிச் சென்றதாக நினைவில்லை. படிகள் இருந்தனவா என்ன? கண்டா, முண்டா சாமான்கள் நிறைய இருந்தன. கொஞ்சம் நோண்டிப் பார்த்தால் கிருஷ்ணதேவராயர் காலத்து செருப்பு ஏதாவது அகப்படலாம்.
கோபுரத்திலிருந்து தெற்கு வாசலில் நடந்து செல்கையில் வெற்றுக்கு ஒரு நாலு கால் மண்டபம் இருக்கும். இதை கடந்தவுடன் வலது பக்கம் சாத்தார வீதி, இடது பக்கம் தெற்கு அடையவளஞ்சான். ஸ்ரீரங்கத்தில் அத்தனை வருடங்கள் இருந்திருக்கிறேன். தெற்கு அடையவளஞ்சான் தெருவுக்கு ஒரே ஒருமுறைதான் போயிருக்கிறேன். சித்திரை வீதி காரர்கள் மற்ற வீதிகளுக்கு லேசில் போகமாட்டோம். சாத்தார வீதி அப்படி இல்லை. அது கொஞ்சம் கலகலப்பாக இருக்கும். பூ விற்பார்கள். ஸ்ரீஜெயந்திக்கு சப்பரம் கட்டுவதற்கு இங்கு தான் வருவோம். சுவாமிக்கு பூப்பல்லக்கு இங்கு தான் செய்வார்கள். பெட்ரோமாக்ஸ், வாழைமரம் சித்திரத்தை போன்ற நாட்டு மருந்துகள் எல்லாம் இங்கேதான் கிடைக்கும்.
சாத்தார வீதி கலைஞர் கருணாநிதி, தந்தை பெரியார் போன்றவர்கள் எல்லாம் பேசுவார்கள். லவுட் ஸ்பீக்கர் வைத்து சத்தத்தை தெற்கு வாசல் வரை கொண்டு வந்து விடுவார்கள் மூலையில் நின்று கேட்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டிருப்போம். பெரியார் ஸ்ரீரங்கநாதரிடம் ரொம்ப எக்கச்சக்கமான கேள்விகள் எல்லாம் கேட்பார். 'உறையூருக்கு எதற்கு போகிறாய் நீ', 'வாலியை ஏண்டா மறைஞ்சு கொன்னே நீ' என்றெல்லாம்!.
'பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பார்ப்பானை முதலில் அடி' என்பார். அந்தக் கூட்டங்களில் கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு தலைமை தாங்கிய கருப்பண்ண கோனார் தான் எங்கள் தெருவில் பால் டிப்போ வைத்திருந்தார். குடும்பத்திற்கு ரொம்ப சினேகிதர். பார்ப்பனர் எதிர்ப்பையும் பால் வியாபாரத்தையும் அவர் கலக்கவே மாட்டார்.
சாத்தார தெரு முனையிலிருந்து சற்று முன்னே போனா, கடைத்தெருவில் ஜவ்வாது, புனுகு, சந்தனம் எல்லாம் விற்பார்கள். கடைக்காரனின் சீட்டுக்கு அடியில் ஒரு கூண்டு வைத்து புனுகுப் பூனை சுற்றி சுற்றி நடந்து கொண்டிருக்கும்.
நான் பார்த்த முதல் ரோபாட் இந்தக் கடையில் கையில் வாசனாதி திரவியங்கள் வைத்துக்கொண்டு தலையை லேசாக ஆட்டிக்கொண்டிருந்த நாமம் போட்ட விளம்பரச் செட்டியார் பொம்மை !.
அந்தக் கடைக்கு அருகில், எதிரில் மண்டபத்தின் தூணருகில் தரைமட்டத்துக்கு இரண்டடி கீழே முகம் முழுவதும் வெண்ணைய் அணிந்துகொண்டு அடுத்த கிருஷ்ண ஜெயந்திக்கு காத்திருக்கும் பாதாள கிருஷ்ணன். சந்நிதியின் முன் நடக்கும் உறியடி உற்சவம். எங்கள் கீழவாசல் உறியடி போல அவ்வளவு விஸ்தாரமாக இருக்காது. முதுகு பூராவும் நாமம் போட்டுக்கொண்டு ஒரு ஆள் வந்து அலங்கார ஜகடை மூலமாக தொங்கிக் கொண்டிருக்கும் குட்டி குட்டி தயிர் சட்டிகள் வைத்த ஃபிரேமை ஒரே வீசு வீசி உடைப்பதை பெருமாள் பார்த்திருந்துவிட்டு அவசரமாக புறப்பட்டுப் போய் விடுவார்.
ராயகோபுரத்தை ஒட்டியிருந்த சந்துகளில் ஒரு மாதிரி சொதசொதவென்று கருப்பு பன்றிகளும் முனிசிபல் ஆயுதங்களுமாக இருக்கும் ஒரு தடவை கோட்டை மெயின் கார்டு கேட்டுக்கு போய்விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தபோது ஒரு திருடன் அந்த சந்தில் ஓடி மறைவதை பார்த்தேன். ராஜகோபுரத்திற்கு வெளியே ஆர்ச்சு வளைவாக ஒரு வாசல் இருக்குமே அதனுள் ஒரு காலனி ஓட்டு வீடுகளாக உண்டு. அந்த காலனியை எல்லாம் நாங்கள் ஸ்ரீரங்கமாகவே கருத மாட்டோம். திருடன் அந்தக் காலனியிலிருந்து வெளிப்பட்டு ராயகோபுரத்தை ஒட்டிய சந்தில் மறைந்தான் அவனை துரத்திக் கொண்டு வந்தவர்களில் ஒன்றிரண்டு பேர் உள்ளே போய் நாற்றம் சகிக்க வில்லை என்று திரும்பி வந்து விட்டார்கள். மதிலெல்லாம் ஏற முடியாது. இங்கேதான் திரும்ப வந்தாக வேண்டும் என்று திருடனுக்கு காத்திருந்தார்கள். பேருக்கு பேர் கம்பு கொடி குச்சி, புளிய மிளாறு என்று வைத்திருந்தார்கள். எனக்கு திருடன் வெளியே வராமல் இருக்கவேண்டுமே என்று கவலையாக இருந்தது அந்தப் பக்கம் மடக்க ஒரு கோஷ்டி போயிருந்தது.
அந்தத் திருடன் பொறுமை இழந்து அல்லது நாற்றம் சகிக்காமல் வெளியே வந்து வசமாக மாட்டிக் கொண்டான். அவர்கள் அவனை பந்தல் காலில் கட்டில் தர்ம அடி அடித்தார்கள். ஒரு குட்டிப் பையன் கூட இடைவெளி வழியாக அவனை எட்டி உதைத்து, 'திருடுவியா' 'திருடுவியா' என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவன் பதிலேதும் சொல்லாமல் ஒவ்வொரு அடித்தவரையும் புதியவரை போல பார்த்து கொண்டே இருந்தான். வாயோரத்தில் ரத்தம் தெரிந்தாலும்.
நான் ஓரத்திலிருந்து அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு அடியும் என் மேல் விழுவது போல தோன்றியது. என்ன சார் திருடிவிட்டான் என்றதற்கு லட்சுமண ராவ் வீட்டில் திருட வந்ததாகவும், எடுத்து கட்டியிலிருந்து எட்டிப் பார்த்ததாகவும், ராயர் பெண் வீட்டுக்கு விலக்காக இருந்ததால் மாடியிலிருந்து கூச்சல் போட தாவிக்குதித்து ஓடிப் போய்விட்டான் என்றும் சொன்னார்கள். போலீஸ்காரர்கள் வந்து 'திருடனை அடிக்காதீர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று விடுவித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பிறகு அந்த திருடனை என் வாழ்நாளில் மறுபடி பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை
நான் போன வாரம் பம்பாய் கம்ப்யூட்டர் மாநாட்டுக்கு சென்றிருந்த போது கிராஸ் மைதானத்தில் எக்ஸிபிஷன் ஹாலுக்கு ஹால் நடந்து அலுத்துப்போய் ஒரு ஓரமாக நின்றபோது ஒரு ஆள் என்னருகே வந்து "நீங்கதானே...." என்றார்.
"ஆமாம் நான் தான்..." என்றேன்
"நீங்கள் ஸ்ரீரங்கம் என்று கேள்விப்பட்டேன் போட்டோவை பார்த்து இருக்கேன் சந்தோஷம் நீங்களும் கம்ப்யூட்டரா?"
"ஆம்"
"நானும் உங்களை போலவே ஸ்ரீரங்கம், கம்ப்யூட்டர்"
"ஸ்ரீரங்கத்தில் எங்கே?"
"அம்மா மண்டபத்தில் இருந்தேன். ஸ்ரீரங்கத்தில் மறக்கமுடியாத ராயகோபுரத்துக்கு முன்னால் ஒரு தடவை என்னை கம்பத்தில் கட்டி உதை உதை என்று உதைச்சிருக்காங்க"
"அப்படியா இந்த வருஷம்"
"1949 "
வாட் எ சர்ப்ரைஸ் அந்த சம்பவத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன் பந்தல் காலில் கட்டிவச்சு....நீங்கதானா அந்தத் திருடன் ! இப்போ என்ன பண்றீங்க?"
"கலிஃபோர்னியாவில் கம்ப்யூட்டர் சயின்டிஸ்ட் ஆக இருக்கேன். நீங்க கூட என்னை அடிச்சீங்களா?"
"சேச்சே. நல்ல வேளை உங்களை போலீஸ்காரர் வந்து அழைச்சுட்டு போய்ட்டாரு. ஆச்சரியமான விஷயம் ஸ்ரீரங்கம் திருட்டிலிருந்து கலிஃபோர்னியாவில் கம்ப்யூட்டரா?"
"திருடவில்லை ஒண்ணுமில்லை சார்" என்றார்
"அப்படியா ! பின்னே எதுக்கு உங்களை துரத்தி வந்து அடிச்சாங்க?"
"இதைச் சொன்னால் கதை பண்ணி விடுவாங்க அன்னைக்கு லட்சுமண ராவ் பொண்ணை...மாலினி, மாலினின்னு வாட்டசாட்டமாக இருப்பா தெரியுமா.."?
"தெரியாது" என்றேன் அவசரமாக.
"அவளைப் பார்க்கத் தான் மாடிக்கு போய் இருந்தேன். மாட்டிக்கிட்டேன் ஓடி வந்து விட்டேன். பாவம் அந்த பொண்ணு சமயோசிதமாக திருடன் திருடன் என்று கத்திட்டாள் நான் திருடன் இல்லை அந்த மாலினியை தான் பார்க்க வந்தேன் என்று சொல்லி இருந்தாள் அவளை பெண்டு நிமிர்த்தி இருப்பார் அவள் அப்பா"
"அந்த அடி எல்லாம் ஒரு பெண்ணை காட்டிக்கொடுக்காமல் இருக்கத்தான் வாங்கி கொண்டீர்களா"
"ஆமாம் ஐ வாஸ் வெரி ரொமான்டிக் அட் தட் டைம். அந்த மாலினி இப்போ எங்க இருக்கான்னு கூட தெரியாது"
ராய கோபுரத்தை சுற்றி பல நினைவுகள் இப்போது மொட்டை கோபுரத்தைப் பூர்த்தி செய்துவிட்டார்கள். கும்பாபிஷேகம், கும்பல், மந்திரிகள், கலசங்கள்...இவைகளுக்கெல்லாம் மத்தியில் எனக்கு ஒரு இழப்பு இருக்கிறது. முற்றுப்பெறாததை முற்றுப் பெறாமலே வைத்திருப்பதில் இருக்கும் அழகையும், கவிதையையும் இழந்து விட்டிருக்கிறோம். வீனஸ் டி மிலோவின் கரங்களை யாரும் ஒட்ட வைக்க முயற்சி செய்யவில்லை. கொலீஸியம் போன்றவைகளையும், கிரேக்க நாகரிகத்தின் தூண்களையும், ஏன் விஜயநகரத்தையுமே யாரும் கான்க்ரீட் போட்டு மூடிவைத்திருக்கிறார்களா?
அபத்தம் !
No comments:
Post a Comment