🙏🏻🙏🏻🙏🏻🙏🏻28🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மராட்டிய மண்ணில் ஒரு பயணம் 29
மும்பை
🌹
எலிபென்டாதீவு போனதைப்பத்தி தொடர்ந்து சொல்றார்…..
தீவைச் சுற்றியும் சதுப்பாக இருக்கு.... மூச்சு முட்டிய வேர்கள் மேலே வளர்ந்து நீருக்கு மேலே நீட்டிக்கொண்டு சுவாசிக்கின்றன.நம்ம பிச்சாவரம் மாதிரி...
ஒரு சிறிய படகுத்துறையில் இறக்கி விடுகின்றனர்.
மலையில் ஏறும் வழியின் இருபுறமும் பெட்டிக்கடைகள்-பானங்கள், தின்பண்டங்கள், மேப்புகள், கைவினைப்பொருட்கள்.
மேலே வந்து, எதேச்சையாக வலதுபுறம் திரும்புகையில் மலைக்க வைக்கும் குகையின் வாசல் தெரிகிறது. பார்த்த முதல் கணத்தில் தொல்லியல் இடங்கள் உங்கள் உள்ளத்தைக் கவர்ந்துவிடும். மீண்டும் அந்த இடங்களுக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் போகலாம். ஆனால் அந்த முதல் தோற்றம் மனதில் ஆழப் பதிந்துவிடும். முதலில் சித்தன்னவாசல் போனபோது 25 வயதிருக்கலாம், இன்னமும் சமணர் படுகையின் அன்றைய தோற்றத்தை ஒரு கனவுபோல என் நினைவுகள் பத்திரப்படுத்தி இருக்கின்றன.
அது குகை அல்ல. மாளிகை. திறந்து போட்ட, வாசலற்ற மாளிகை. இரண்டாள் மட்டம் உயரம். 27 மீட்டர் சதுர அறை. பருத்த தூண்கள், சதுரமாய் கீழே தொடங்கி, அலங்கார வளையங்களுடன் மேல் பாறையைத் தாங்குபவை.
இந்திய குடைவரை சிற்ப்பக்கலையின் உச்சம் எனப்போற்றப்படும் இவைகளை பார்க்கையில் களிமண்ணினால் செய்யப்பட்டதா அல்லது பாறைகளில் குடையப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்தாலும் அது வியப்பில்லை. இரண்டு பகுதிகளாக உள்ள இவற்றில் ஒரு பகுதியில் ஹிந்து கடவுள்களின் சிற்பங்களை கொண்ட 5 குகைகளும் மற்றொரு பகுதியில் புத்த மத சிற்பங்களை கொண்ட 2 குகைகளும் உள்ளன.
கி.பி 5ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 8ஆம் நூற்றாண்டிற்குள் இவை கட்டப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவற்றை யார் கட்டினார்கள் என்பதற்கு இன்றும் வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இவ்விடம் முதலில் கிரஹ புரி என்று அழைக்கப்பட்டதாகவும் ஹிந்துக்களின் வழிபாட்டு தலமாகவும் 16ஆம் நூற்றாண்டு வரை இருந்து வந்திருக்கிறது. ஆனால் 1534இல் போர்த்துகீசியர் ஆட்சியின் கீழ் இப்பகுதி வந்த பிறகு அவை வழக்கொழிந்து போய் இருக்கின்றன. இங்குள்ள நாட்டுப்புறக்கதைகளின் படி மகாபாரத யுத்தத்தில் வென்ற பாண்டவர்கள் இக்கோயிலை கட்டியதாக சொல்கின்றனர்.
ஒன்றாம் குகையின் வலது புறத்தில் உள்ள நடராஜர். சிதைந்துள்ளது. பெரியது. கண்களை மூடி மோன நிலை, ஆடலின் அசைவுகளைக் கல்லில் வடித்து, சிலைக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறான் அந்த முகம் தெரியாத சிற்பி. செஞ்சு முடிச்சதும் விரலை வெட்டினான்களோ, கையையே வாங்கிட்டான்களோ.
ஒரு கருவறை. வெளியே காவலுக்கு ரெண்டு துவாரபாலகர்கள். வஞ்சகமில்லாமல் வளர்ந்திருக்கிறார்கள்.
குடைவறைகளில் பெரிய சிலைகள் நம்மூரிலும் இருக்கின்றன. யாரை உதாரணம் சொல்லலாம்னு யோசிச்சா இரண்டு பேர் உடனே மனதில் வந்து நிற்கின்றனர்.
1. சிவன் குடைவறையின் துவாரபாலகர்கள், திருமயம்.
2. பள்ளி கொண்ட பெருமாள், பெருமாள் குடைவறை, திருமயம்
சரி, அவற்றுக்கும் இவற்றுக்கும் அப்படி என்ன வித்தியாசம், எனக்குத் தோன்றியது, அலங்காரம். கல் அலங்காரம். சுழித்திருக்கும் கூந்தல், அலங்கார கிரீடம், உடை நளினம். இவற்றிலெல்லாம் அவர்கள் காட்டும் த்த்ரூபக் காட்சி details அபாரம். அதற்காக, நம்மூரைக் குறைத்து மதிப்பிடலாகாது..அந்த ஊரின் பாறை அப்படி. மென்மையானது. நம்மூர் பாறையில் எடுத்துத் தட்டினால்….? நங்ங்ங்ங்..
சிவனார் கல்யாணம்
மாப்பிள்ளை பெண்ணின் ஆளுயர சிற்பங்கள், அதில் உள்ள நளினம், வானில் மிதக்கும் தேவர்கள் அசத்தல் பேனல்!
அற்புதமான புடைப்புச் சிற்பங்கள்..வெகு நளினமான அலங்காரங்கள் கொண்டது. பார்வதி உட்கார்ந்திருக்கும் அழகாகட்டும், துவாரபாலகர்களின் சடைமுடி பாணியாகட்டும், திரிமூர்த்தி கொண்டிருக்கும் ஒரு ஓங்கார அமைதியாகட்டும், மலைக்கவைக்கும் பிரமாண்டம். மேற்கிந்திய கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் மிகச் சிறந்த உதாரணம் எலிஃபெண்டா.
ஆனால் மனம் வருந்தும் வகையில் சிற்பங்கள் அனைத்தும் அழிந்துள்ளது. மனித அழிவுகள், இயற்கை அழிவுகள். அது தவிற போர்த்துகீசியர்கள் துப்பாக்கி வைத்துச் சுட்டுப் பயிற்சி எடுத்துள்ளதாக சில செய்திகள் கிடைக்கின்றன. இப்படிப்பட்ட சிற்பங்கள் முழுமையாகக் கிடைத்திருந்தால், காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.
முடிவடையாத குகைகள் ஒரு வெறுமையான உணர்வைத் தோற்றுவிக்கின்றன. முடிவடையாத முயற்சி, யாரோ ஒரு சிற்பிக் கூட்டத்தின் முடிக்கப்படாத செயல்திட்டம், முழுமையாக வெளி வராத கனவு. யார் கண்டார்கள், இந்த இடத்தில் இவ்வளவு பெரிய சிற்ப சாம்ராஜ்ஜியத்தை அமைத்த கூட்டத்தின் வீழ்ச்சியின் சாட்சியாகவும் இருக்கலாம்.
முடிவடையாத குகைகளை நிறைய பேர் குறிப்பிடுவதில்லை. எலிபெண்டாவிலும் சரி, அஜந்தாவிலும் சரி, இந்த முடிவடையாத குகைகள் எனக்குத் தந்த உணர்ச்சிகள் உக்கிரமானவை, விளக்கிச் சொல்ல முடியாதவை. வெரிச்சோடிப்போன வீட்டை நினைவு படுத்துபவை, ஆண்டு முடித்த சொத்தை நினைவு படுத்துபவை. ஒரு இனத்தின் வீழ்ச்சியை நினைவு படுத்துபவை. இந்த இடத்தின் வரலாற்றில் முடிவாகக்கூட இருக்கலாம். ‘இத்தோட நான் முடிந்துவிட்டேன்’ என்று அந்த இடம் எனக்குக் கூறுவதாக உணர்கிறேன்.
அடர்ந்த கானகத்தின் ஒற்றைப் பாதை வழியாக மலையேறுகிறோம்...
மேலே ஏதோ பீரங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். வந்தது வந்தோம் கழுதை அதையும் பார்த்திட்டுப்போவோமே.
ஆனால் போகும் வழியில் அங்கங்கு காடு விலகி கடல் தெரியும் காட்சி, சட்டென்று மனத் தெளிவையும் மகிழ்ச்சியையும் அளிக்கக்கூடியது
திரும்பிச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது நண்பர்களே. திரும்பி படகை நோக்கி நடக்கையில் முதல் குகையை கடக்கிறோம். ஏதோ கண்கள் நம் மீது பதிவதாக உணர்கிறோம். உள்ளே அதே துவாரபாலகர் அதே கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்தார்.
மலைப்பூட்டும் இந்த குகைகளை தவிர்த்து தீவில் ஷாப்பிங் செய்யவும் நிறைய இருக்கின்றன. ஒரு குட்டித்தீவில் என்ன கிடக்கும் என நீங்கள் நினைத்தால் உங்கள் நினைப்பை பொய்யாக்கும் வகையில் இங்கே இருக்கும் சந்தையில் நாம் வாங்கிச்செல்ல ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன. பளிங்குக்கல்லினால் செய்யப்பட்ட சிறு சிறு சிற்பங்கள், கைத்தறி ஆடைகள், வேலைப்பாடுகள் நிறைந்த மரச் சிற்பங்கள் என இங்கு ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. குழந்தைகளுடன் வந்தால் பொழுதுபோக்க இங்கிருக்கும் சிறிய ரயிலில் தீவுக்குள் ஒரு பயணம் போகலாம்.
எங்கு சாப்பிடல்லாம்?
மகாராஷ்டிரா மாநில சுற்றுலாத்துறை நடத்தும் உணவகம் இந்த தீவில் இருக்கிறது. நியாமான விலையில் இந்திய உணவு வகைகள் இங்கே கிடைக்கின்றன. இது தவிர காட்டுப்பழங்கள், தேநீர் போன்றவற்றை குகைகளுக்கு பக்கத்தில் நாம் வாங்கலாம்
இந்த எலிபெண்டா தீவினுள் மக்கள் இரவு தங்க அனுமதியில்லை. ஆனாலும் பகல் நேரத்தில் ஓய்வு எடுக்க விரும்பினால் மகாராஷ்டிரா அரசு நடத்தும் தாங்கும் விடுதி உள்ளது. இங்கிருந்து மாலை 5 மணிக்குள் வெளியேறிவிட வேண்டும்.
படங்கள் எலிஃபென்டா
(By சுஜாதா&வெங்கடேசன்…6381369319)
No comments:
Post a Comment