மராட்டிய மண்ணில் ஒரு பயணம் 26
மும்பை
இனி இவர் பார்வையில்...
மும்பை பயணிக்கும்போது ஆந்திரா பார்டர் தாண்டும் இடத்திலிருந்து அவஸ்தைதான். ஜனங்கள் திபு திபுவென்று வந்து ரிசர்வேஷன் கோச்சில் சர்வ சாதாரணமாக ஏறிக்கொள்கிறார்கள். வழியெங்கும் படுத்துக்கொள்கிறார்கள். பாத்ரூம் போவது என்றால்கூட இவர்களைத் தாண்டித் தாண்டித்தான் போயாக வேண்டும். அங்கும் வரிசை. இஷ்டத்துக்கு அசிங்கம் பண்ணி வைக்கிறார்கள். சகிக்க முடியாது மனிதனால்.
விசாரித்தபோது போதுமான பஸ் வசதி எங்களுக்கு இல்லை என்றார்கள். அலுவலகம் செல்பவர்கள் கூட்டம் காலை எட்டிலிருந்து ஆரம்பித்து விடுகிறது. அவர்கள் பாட்டுக்கு வந்து உட்கார்ந்துகொண்டு, வெளியே அமைதியாக வேடிக்கை பார்த்தவாறே இருந்து, சொல்லாமல் கொள்ளாமல் இறங்கிச் சென்று விடுகிறார்கள். பேசினால்தானே வம்பு என்று நினைக்கிறார்கள் போலும்! போக்குவரத்து வசதி, நம் தமிழ்நாட்டில் எவ்வளவோ பரவாயில்லை. பிற இடங்கள் போய்ப் பார்த்தால்தான் இந்த அருமை தெரியும். நம் தமிழ்நாட்டு ரயிலில், ரிசர்வேஷன் கோச்சில் வந்து உட்கார பயப்படுவார்கள். தப்பித் தவறி வந்து விட்டாலும், ரொம்பவும் பரிந்து கேட்டு உட்கார்ந்து கொள்வார்கள். சங்கடத்துடனேயே பயணம் செய்வார்கள். இது கண்டுகொண்டிருக்கும் உண்மை. ஆனால் இந்த நாகரீகம் துளிக் கூட ஆந்திர எல்லை தாண்டிய பயணத்தில் தென்படவில்லை.
மும்பை செல்வதாக இருந்தால், கோடை காலத்தில் பயணம் செய்யும் வேளை வந்தால் தயவுசெய்து ஏ.சி.யில் போய் விடுங்கள். காசு போனாலும் பரவாயில்லை. இல்லையென்றால் வெந்து தணிந்துவிடும் உடம்பு. “இது மும்பை எக்ஸ்பிரஸ்” இல்லை. “அனல் எக்ஸ்பிரஸ்” என்று கூட நான் சொல்வேன். . திரும்பத் திரும்பச் சொன்ன போது அந்தப் பெயர் கூட நன்றாக இருப்பதாகத் தோன்றியது. வண்டியில் இன்னொரு சங்கடம். அரவாணிகள் வர ஆரம்பித்து விடுகிறார்கள். கைகளைத் தட்டிக்கொண்டே, பாட்டுப் பாடிக் கொண்டு, அசிங்கமான அசைவுகளை வெளிப்படுத்திக்கொண்டு, வந்து பிச்சை கேட்கிறார்கள். யாராவது ஒருவர் கொடுத்தால் அத்தோடு நகர மாட்டேனென்கிறார்கள். ஒவ்வொருவராகப் பிடுங்குகிறார்கள். தர மறுத்தால் அருகில் வந்து அசிங்கப்படுத்தி தொந்தரவு செய்கிறார்கள். இது கண்ட உண்மை.
அரவாணிகளுக்கு வாரியம் ஏற்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது, அவர்களையும் சமூகத்தில் நன்மதிப்போடு நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில். ஆனால் அவர்களின் நடவடிக்கை பலரிடம் இப்படியிருப்பதைப் பார்த்தால் நமக்கு மனம் வேதனையுறும் என்பது உண்மை. மும்பையில் அரவாணிகள் பெரிதும் மதிக்கப்படுகிறார்கள். புதிய வியாபார ஸ்தலங்களை அவர்கள்தான் ரிப்பன் வெட்டித் திறந்து வைக்கிறார்கள்,
மகாபாரதத்தில் முதல் நாள் அரவான் பலி போல. யார் வீட்டிலாவது குழந்தை பிறந்தால் அங்கு அரவாணிகள் கூடி விடுகிறார்கள். அவர்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. வெறும் ஐம்பது நூறெல்லாம் இல்லை. ஆயிரம் இரண்டாயிரம் என்று எடுத்து வைக்க வேண்டும். இது அங்கே நடைமுறையாக உள்ளது. சேட்டுகள் கொடுக்கவும் செய்கிறார்கள். இருக்கு, கொடுக்கிறாங்க என்று நினைத்துக் கொண்டேன் நான்.
கடந்த இரண்டு முறை போன போது மும்பையை முழுதாய் பார்க்கவில்லை என்பதால் மும்பை பற்றிஎழுதப்பட்ட புத்தகத்தை படித்து பயணத்தை திட்டமிட பிரிக்கிறேன்.
மும்பை கனவுகளின் நகரமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாழ்வியல் முறைகளுக்காகவும், பாலிவுட்டின் இல்லமாகவும் பிரபலமாக அறியப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உலக மக்கள் அமெரிக்காவை கண்டு கனவு காண்பதை போல, இந்திய மக்கள் மும்பைக்காக கனவு காண்கிறார்கள்.
மும்பையின் ஜனக் கூட்டமும், பல்வேறு இடங்களும், பலவகைப்பட்ட வழிபாடுகளும், எண்ணற்ற உணவு வகைகளும் அதன் வெவ்வேறு நிறங்களை பளிச்சென எடுத்துக்காட்டுகின்றன.இதன் காரணமாக மும்பை நகரம் இந்தியாவின் தனித்துவம் மிக்க சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.
மும்பை நாட்டின் அனைத்து நகரங்களுடனும் சாலை, ரயில் மற்றும் விமானம் மூலமாக நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் முதல் முறையாக மும்பை வரும் போது கண்டிப்பாக ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர முடியும். இந்தியாவின் மற்ற நகரங்களை ஒப்பிடும் போது மும்பையின் வாழ்க்கை முறையில் புகுந்திருக்கும் நவீனம் உங்கள் கண்களை உறுத்தலாம்.
மும்பை உங்களுக்கு யாவற்றையும் தர காத்திருக்கிறது. இங்கு நீங்கள் ஷாப்பிங் செல்லலாம், உணவு வகைகளை ருசிக்கலாம், நள்ளிரவு கலாச்சாரத்தில் உங்களை ஐக்கியப் படுத்திக் கொள்ளலாம் என்று இன்னும் எத்தனையோ அம்சங்கள் இருக்கின்றன.
இந்நகரத்தின் ஃபேஷன் ஸ்ட்ரீட் மற்றும் பாந்த்ராவில் உள்ள லிங்கிங் ரோடு இரண்டுமே மிகவும் புகழ்பெற்ற தெருவோர ஷாப்பிங் பகுதிகள். அதோடு நீங்கள் அந்தி நெருங்கும் வேளையில் கடற்கரைக்கு சென்று சாண்ட்விச், குல்ஃபி, ஃபல்லூடா, பானி பூரி, மகாராஷ்டிர வடா பாவ் போன்ற பண்டங்களை சுவைக்கலாம்.
மும்பையில் உள்ள ஜூஹு பீச், சௌப்பாத்தி பீச் மற்றும் கோரை பீச் மூன்றும் பிரசித்தி பெற்ற கடற்கரைகள். இதில் குறிப்பாக கோரை பீச் இயற்கை காதலர்களுக்கும், தனிமை விரும்பிகளுக்கும் ஏற்ற இடமாக இருக்கும்.
இந்தியாவில் இருக்கக் கூடிய சுற்றுலாத் தலங்களில் மும்பை பரப்பளவில் மிகவும் பெரியது. எனவே மும்பையை சுற்றிப் பார்க்க காரின் உதவி இருந்தால் சிறப்பாக இருக்கும். முக்கியமாக மும்பையின் மதிய நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்பதால் பயணிகளுக்கு ஏதாவதொரு வாகனம் கண்டிப்பாக தேவைப்படும்.
குயின்ஸ் நெக்லஸ் என்று அழைக்கப்படும் மரீன் டிரைவ் பகுதியிலும், இதர தெற்கு மும்பை பகுதிகளிலும் டபுள் டக்கர் பெஸ்ட் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை யாவும் வேண்டாம் என்று சிறிய சாகசத்தை அனுபவிக்க விரும்பும் பயணிகள், மும்பையின் வேகமான போக்குவரத்தான லோக்கல் ரயிலில் பயணம் செய்து மும்பையை சுற்றிப் பார்க்கலாம். இந்த ரயில்கள் மும்பையின் சர்ச் கேட் நிலையத்திலிருந்தும், வி.டி நிலையத்திலிருந்தும் புறப்படுகின்றன.
மும்பை மாநகரில் மால் கலாச்சாரம் படர ஆரம்பித்து 10 வருடங்கள் கடந்து விட்டன. அதோடு இந்தியாவின் மிகவும் ஆடம்பரமான மால்கள் மும்பையில் தான் செயல்பட்டு வருகின்றன.
அதிலும் சமீபத்தில் ஃபீனிக்ஸ் பகுதியில் திறக்கப்பட்ட பல்லேடியம் மாலில் குக்கி, வெர்சேஸ், பர்பரிஸ் போன்ற இளைஞர்களின் மனம் கவர்ந்த பிராண்டுகள் எக்கச்சக்க வகைகளில் கிடைக்கின்றன. அதோடு, பல்லேடியம் மாலில் கலிஃபோர்னியா பீசா உள்ளிட்ட உயரிய உணவகங்கள் ஏராளமாக இருக்கின்றன.
மும்பையின் ஆன்மீக முகமும் பயணிகளின் மனதை கவரும் அம்சங்களில் ஒன்று. குறிப்பாக சித்திவிநாயக் கோயில் மற்றும் ஹாஜி அலி மசூதி இரண்டும் தனித்துவமான வரலாற்றை கொண்ட ஆலயங்கள். இந்த இரண்டு ஆலயங்களும் அருகருகே இருப்பதோடு, இவைகளின் கட்டிடக் கலை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.
ஆனால் இந்த ஆலயங்கள் எப்போதும் கூட்டமாகவே இருப்பதால், நீங்கள் இங்கு எந்த நேரத்தில் வரலாம் என்பது குறித்து உங்கள் நண்பர்களிடமோ, வழிகாட்டி ஒருவரிடமோ கேட்டு தெளிந்து கொள்வது நல்லது. இல்லையேல் ஜன நெரிசலில் நீங்கள் மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு. எனவே சித்திவிநாயக் கோயிலுக்கு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை வருவதை தவிர்ப்பது சிறந்தது.
மும்பையின் நள்ளிரவு வாழ்கை நாடு முழுவதும் பிரபலம். ஆயினும் இந்த வாழ்க்கை மற்ற இந்திய நகரங்களில் நடப்பது போல் அல்லாமல் மிகவும் பாதுகாப்பானது. முக்கியமாக பாலியெஸ்த்தெர்ஸ், டோட்டெஸ், தி எல்போ ரூம் மற்றும் 21 டிகிரிஸ் ஃபேரன்ஹீட் ஆகிய இரவு விடுதிகளில் ஏதேனும் ஒன்றை பயணிகள் தேர்வு செய்து கொள்ளலாம்.
மும்பையின் கொலாபா பகுதியில் உள்ள புகழ்பெற்ற பேட் மியாஸுக்கு சென்று அப்பகுதியின் பிரசித்தி பெற்ற உணவு வகையான ரூமலி ரொட்டி ரோல்களை சுவைக்கும் அனுபவம் வித்தியாசமானது. இந்த பேட் மியாஸுக்கு வராமல் மும்பையின் இரவு வாழ்க்கை பூர்த்தி அடையாது என்பது மும்பை வாசிகளின் கருத்து.
மும்பை மாநகரத்தில் சமீபத்தில் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் திறக்கப்பட்ட ஐஸ் பார் பயணிகளிடையே மிகவும் பிரபலம். அதுவும் 34-வது மாடியில் அமைந்திருக்கும் இரவு விடுதி மின்விளக்கின் வெளிச்சத்தில் ஜொலிக்கும் அழகை நாள் பூராவும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
மும்பையை கார்களில் சுற்றிப் பார்க்க முடியாதவர்கள் 'மும்பை தர்ஷன்' என்று அழைக்கப்படும் சுற்றுலாப் பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பேருந்து கேட் வே ஆஃப் இந்தியாவிலிருந்து புறப்பட்டு மும்பையின் அனைத்து பகுதிகளையும் சுற்றிக் காட்டிவிட்டு மீண்டும் உங்களை கேட் வே ஆஃப் இந்தியாவிலேயே கொண்டு வந்து விட்டு விடும்.
எப்படி பார்த்தாலும் மும்பை மாநகரம் வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் சுற்றிப் பார்த்து மகிழ எண்ணற்ற அம்சங்களை கொண்டுள்ளது. அதோடு மும்பை நகர போக்குவரத்து வசதிகள் மலிவானதாகவும், சௌகரியமாகவும் இருக்கிறது.
படங்கள் மும்பை சில காட்சிகள்
No comments:
Post a Comment