Tuesday, December 8, 2020

மராட்டிய மண்ணின் ஆன்மீக நினைவுகள்- பகுதி 38

 மராட்டிய மண்ணில் ஒரு பயணம் 39

                   சனி சிங்னாப்பூர்

பாபா தரிசனம் முடிந்து ப்ரசாதம் வாங்கிண்டு வெளில வரோம்.  

கார்த்தால சாப்ட்ட இட்லி வடை ஜீரணமாயி நல்ல பசி. உடுப்பி ஓட்டல் வாவான்னு கூப்படறது..இவருக்கு எப்பவும் ஓட்டல்ல ஒரே மாதிரி சாப்படறதுல என்ன அனுபவம்? பெரிய பந்தில கோயில் ப்ரசாதம் ,அன்ன தானம்னா அந்த வித்யாசமான அனுபவம் பிடிக்கும்பார்.  எனக்கும் சுடச்சுட சுத்தமா பரிமாறுவாங்கறதுல இஷ்டம்தான்..,அதனால அன்னதானகூடம் எடம் விஜாரிக்கறார்.  ஆட்டோல ஏறி போக சொல்றா…

ப்ரமாண்டமா கட்டடம்.க்யூல நின்னு டோக்கன் வாங்கிண்டு உள்ள போறோம்.  சுமார் 1000 பேர் சாப்படற மாதிரி பெரீஇய ஹால்.  எவர்சில்வர் ஸ்டூல் போட்டு 

நீட்டா டேபிள்..பரிமாற பாபா பக்தர்கள்னு ….

வரிசையா உட்கார வச்சுட்டு பரிமாற ஆரம்பிக்கறா…

இவர் சிருங்கேரி,உடுப்பில சாப்ட்ட மாதிரி சூடா சாதம், கறியமுது,பாயாசம்னு வரும்..ஃபுல் கட்டு கட்டலாம்னு பெல்ட்ட தளர்த்திக்கறார்.  ஆனா சப்பாத்தி,சாதம்,ரசம் ,தொட்டுக்க எதோ சுண்டல் மாதிரி...எல்லோரும் பாபா ப்ரசாதம்னு பக்தியா சாப்படறா..எப்படியோ சாப்பிடும் முன் பாபாவை வாழ்த்தி பாபா பக்தர்களுடன் சாப்பிட்டது வித்யாசமான அனுபவம்ங்கறார்.

அந்த ஹால் மாடியில் மகாராஷ்டிர டூரிசம் சார்பில் ம்யூசியம் பார்க்கறோம் 

ரூமுக்கு வந்து ரெஸ்ட் எடுத்துண்டு ஊர் திரும்ப இன்னும் 3 நாள் இருக்கு. இங்கயே தேவஸ்தான காட்டேஜ் கெடச்சா புக் பண்ணின்டு இங்க சுத்தி இருக்கற ஊரெல்லாம் பாத்துட்டு கடைசி நாள் புனா போய் ட்ரெய்ன் ஏறலாம்கறார். அடுத்த ரெண்டு நாளைக்கு 200/- க்கு காட்டேஜ்ல எடம் கெடைக்கறது..

        வேன்ல சனி சிங்னாப்பூர் வரவாளை கூப்படறான்...65 கிமீ ல இருக்காம். சனி பகவான் ஷேத்ரமாம். சரின்னு ஏறிக்கறோம். 150/- தரிசனம் முடித்து திரும்ப...வழக்கப்படி புளி மூட்டை மாதிரி அடைக்கறான்.  எப்படியோ ஜன்னல் சீட் கெடைக்கறது..

மராட்டிய க்ராமங்கள் வழியா போறது..ரெண்டு பக்கமும் மாதுளை குட்டியான மரத்துல பழுத்து தொங்கறது.  கரும்பு வயல்கள்காத்துல அசையறது. 

செக்கு மாதிரி மாட்டை சுத்த வச்சு கரும்பு ஜூஸ் எடுக்கற கடைகள்.  நின்னு ஜூஸ் சாப்படறோம்.  டீசல்ல ஓட்டி சுத்துச்சூழல பாழாக்காம இயற்கை ஜூஸ். 

வழில சனி சிங்கனாப்பூரபத்தி கதை சொல்றார். 

                         இந்த ஊர்ல யார் வீடிலேயும் வாசல் கதவு மட்டுமல்ல ஜன்னல் கதவுகள் கூட கிடையாது. அது மட்டுமா? இந்த ஊரில் வங்கியும் இருக்கிறது. அங்கும் கதவுகள் கிடையாது. அட கார் வேனுக்கு கூட கதவு இல்லன்னா பாத்துக்குங்கோ…

இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு எந்த வித திருட்டுகளோ அல்லது அசம்பாவிதங்களோ நடக்காமல் சனி பகவான் பாதுகாத்து வருவதாக அந்த ஊர் மக்கள் நம்பி வருகின்றனர்.

அட இது எப்படி சாத்தியம் என உங்களுக்கு நினைக்க தோன்றும். இன்றும் இது சாத்தியமாகியுள்ளது. இதற்கு பின்னால் சொல்லப்படும் கதை...                            

ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் அந்த சிறிய கிராமத்தில் கடும் மழை பெய்து  மக்கள் வெள்ளத்தால் கடும் அவதிப்பட்டனர். 

கடவுளை மனதாரப் பிராத்தித்ததன் பேரில் ஆற்றில் வெள்ளம் வடிந்தது. அப்போது கரையருகே ஒரு தூண் வடிவிலான கல் அடித்து வரப்பட்டு ஓதுங்கி இருப்பதைக் கண்டனர். அந்த கல்லைக் கல் என நினைத்துத் தொடுவதற்கே அப்பகுதி மக்களுக்குப் பயமாக இருந்தது. சிலர் இது ஏதோ விநோதமான பொருள் என நினைத்தனர். அப்பொழுது ஒருவர் ஒரு குச்சியை வைத்து அந்த கல்லைக் குத்தியதாகத் தெரிகிறது. அப்பொழுது அந்த கல்லிலிருந்து ரத்தம் வந்ததாகச் சொல்லப்படுகிறது.

அதை அகற்ற முயற்சித்த போது பலர் ஒன்று சேர்ந்தும் முடியவில்லை. அப்போது தாய் மாமனும் அவரது சகோதரி மகனும் சேர்ந்து முயற்சித்தால் இக்கல்லை அகற்ற முடியும் என வானத்தில் அசரீரி ஒலிக்க, அவ்வாறான இருவரை அழைத்து வந்து கல்லை அகற்ற கல் அசைந்தது. 

அதை ஊரின் நடுவே ஓரிடத்தில் ஸ்தாபித்து வழிபட்டனர். மாமன், சகோதரி மகன் இருவர் கனவிலும் சனிஸ்வரர் தோன்றி கல்லாய் வந்திருப்பது தான் தான் என்றும் எனக்கு அங்கு எழுப்படும் கோவிலில் மேற்கூரை இல்லாது வெட்டவெளியில் வைத்து வழிபடும்படி கூறியும் தன்னால் அவ்வூருக்கும் மக்களுக்கும் மேன்மையே கிட்டும் எனக் கூறி மறைந்தார். 

ஊர் மக்களும் அவ்வாறே செய்து வழிபட ஊர் நல்ல நிலையை அடைந்தது. 

பின்னர் வீடுகளில் கதவுகள் இருந்தால் அதை எடுக்கச் சொல்லி ஊர்த் தலைவர் உத்தரவிட்டார். இந்த ஊர் மக்கள் எல்லாம் கதவில்லாத வீடுகளில் தான் இருக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். அப்பொழுது தான் சனிபகவானின் அருள் கிடைக்கும் என அவர்கள் நம்பினர்..

அப்பொழுது ஊர் மக்கள் சேர்ந்து கதவில்லாமல் இருப்பதால் இந்த ஊரில் திருட்டு சம்பவங்கள் அல்லது பாதுகாப்பற்ற சம்பவங்கள் எதுவும் நடக்கக் கூடாது எனச் சனிபகவானிடம் வேண்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அன்று முதல் இந்த ஊரில் திருட்டுகளே நடக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

இங்குள்ள சனிஸ்வரருக்கு காலை 4.30 மணி தொடங்கி இரவு 10 மணி வரை ஆர்த்தி நேரம் தவிர, இடைவிடாது எள் எண்ணையால் பக்தர்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. 

விசேஷ நாட்களில் சுமார் 10000 லிட்டர் எள் எண்ணை அபிஷேகத்துக்கு வருமாம். 

சனி பகவானை தரிசனம் பண்ணிட்டு ஊர சுத்தி பார்க்கறோம். 

ஆம். வீடுகளுக்கு கதவுகள் கிடையாது. வீடோ கடையோ வியாபாரம் முடிந்த பின் குறுக்கே ஒரு பலகையை வைச்சிடறாங்க. . கேட்டோம்.  இங்கு திருடுபவர்கள் கண் குருடாகியும் சித்தம் குழம்பியர்வகளாகவும் மாறி விடுவார்களாம். 

கதவு இருக்கிறது என்பதற்காக பிரிஜ் போன்ற சாதனங்களை உள்ளூர் மக்கள் உபயோகிப்பதில்லையாம். வாகனங்கள் கூட கதவு இல்லாத வாகனங்களையே உபயோகிக்கிறார்களாம். 

சனிக்கிழமை, சனிப்ரதோஷம், அமாவாசை, இங்கு வெகு ஜனக் கூட்டம் இருக்குமாம். . அன்று அபிஷேக சிறப்பு வழிபாடுகள் உண்டு. ஏழரைசனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனி உள்ளோர் இங்கு வழிபட நன்மைகள் கிட்டும்னு சொல்றா…

பகவானை வேண்டின்டு வேன்ல ஏறறோம். 

வழில மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டறது. 

மறு நாள் நாசிக் பஞ்சவடி போறதுக்கு ப்ளான் பண்ணிட்டு நைட் சப்பாத்தி (ஓசிலதான்)சாப்பிடறோம்....  

                          அடுத்து பஞ்சவடி


படங்கள் சனி சிங்னாப்பூர்



1,கோயில்2,கதவில்லாத (தூசு வராதிருக்க கண்ணாடி ஸ்லைடு டோர் மட்டும்)யூகோ வங்கி 3,கதவில்லா வீடு

No comments:

Post a Comment