Sunday, January 9, 2022

சென்னை To பெங்களூரு பகுதி 21

 🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🙏🏻🌹🌹🙏🏻🙏🏻

சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 21

பைலா குப்பே கோயில ரசிச்சுண்டே கான்டீன் இருக்கான்னும் பாத்துண்டு வரேன். 

 கோவில் நுழைவாயிலில் இரண்டு பக்கமும் புத்தரின் வாழ்க்கைச் சம்பவங்களை விளக்கும் இரண்டு பெரிய சித்திரங்கள் உள்ளன. உள்ளே  சிவப்பு நிற மேலங்கி அணிந்த லாமாக்கள் புன்சிரிப்புடன் கைகூப்பி நம்மை வரவேற்கின்றனர். பளபளக்கும் பளிங்குக்கற்கள் பதிக்கப்பட்ட பெரிய கூடம் உள்ளது.

மண்டபத்தின் கோடியில் அமைந்துள்ள மேடையில், தனித்தனி பீடங்களின் மேல் மூன்று புத்தர் சிலைகள் உள்ளன. நடுவில் உள்ள புத்தர் சிலை பீடத்துடன் சேர்த்து 40 அடி உயரம் கொண்டது. மற்ற இரு புத்தர் சிலைகளும் ஏறக்குறைய அந்த அளவிலேயே உள்ளன. 

இந்த மூன்று திருமேனிகளிலும் ஸ்வஸ்திக் சின்னம் பல இடங்களில் காணப்படுகின்றது. 

மூன்று புத்தர்களும் தங்க நிறத்தில் தகதகவென்று மின்னுகின்றனர். ஆசையே துன்பத்துக்கு காரணம்னு சொன்ன தங்க புத்தர் சிலையை பார்க்கறச்சே நான் ஆசைப்பட்டு இவர் வாங்கித்தராத மயில் டாலர் போட்ட ரெட்டை வடம் சங்கிலி நெனவுல வரது..ஆனாலும் இப்ப பசிக்கு இட்லியோ இடியாப்பமோ கெடைக்காதான்னு ஆசையா இருக்கு...

புத்தர்கள் அமர்ந்திருக்கும் பீடங்களின் மேல் சிங்கம், யானை, குதிரை, மயில் மற்றும் மனிதத் தலையோடும் பறவையின் உடலோடும் காணப்படும் ஒரு பறவை சிற்பங்கள் புடைப்பு சிற்பங்களாகக் காணப்படுகின்றன. இவை நல்ல சின்னங்களாகக் கருதப்படுகின்றன. 

இரண்டு பக்கச் சுவர்களிலும் புத்தரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விளக்கும் ஏராளமான ஓவியங்கள் உள்ளன. மேடையின் மேல் வழிபாட்டுச் சடங்குகளுக்கு உபயோகிக்கப்படும் பல பொருட்கள் காணப்படுகின்றன. மேடைக்கு எதிரே வரிசையாக பெஞ்சுகள் போடப்பட்டிருக்கின்றன. அதனையொட்டி தரையில் மரப்பலகைகள் உள்ளன. பெஞ்சின் மேல் அவர்கள் பிரார்த்தனையின்போது படிக்கும் புனித நூல்கள் பட்டுத் துணியினால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. பிரார்த்தனையின்போது பட்டுத்துணிகளை எடுத்துவிட்டு புனித நூல்களைப் படிக்கிறார்கள். இந்த புனித நூல்கள் ஓலைச்சுவடிகளைப்போல உள்ளன.

இந்த புனித நூல்களில், திபெத்தியர் வழிபடும் புத்த மதப் பிரிவைச் சார்ந்த மந்திரங்கள் திபெத்திய மொழியில் எழுதப் பட்டிருக்கின்றன. தலைமைப் பொறுப்பை ஏற்று வழிபாட்டை நடத்தும் லாமாக்களுக்கென்று தனியாக ஒரு இடம் உண்டு. அருகில் இசைக்கருவியான நீண்ட குழல்கள் இரண்டு உண்டு. ஆங்காங்கே சிறிதும் பெரிதுமாக முரசுகள் காணப்படுகின்றன. இவர்களின் வழிபாட்டுச் சமயத்தில் மணிகள் ஒலிக்கின்றன. சங்குகள் ஊதப்படுகின்றன. வழி பாட்டை நடத்தும் லாமாக்களின் கையில் சிறிய மணிகள் காணப்படும். இந்த மணிகளை அடித்தால் வழிபாடு நடக்கும் இடத்தில் தீயசக்திகள் அணுகாது என்று கருதப்படுகிறது. அதைப்போலவேதான் சங்கின் ஒலியும்.

வெண்ணெய்யால் எரியும் விளக்குகள் ஏற்றி வைக்கப் படுகின்றன. நறுமணம் கமழும், புகை எழுப்பும் ஊதுவத்தி போன்ற பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் வைத்திருக்கிறார்கள். மலர்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

வழிபாடு சமயத்தில் அங்கே இருக்கும் லாமாக்களும் மற்றவர்களும் "ஓம் மணி பத்மே ஹம்' என்னும் மந்திரத்தை ஓதுகின்றனர். அவர்கள் ஓதும் மந்திரங்களில் மிகவும் முக்கிய மான மந்திரம் இது. "ஓம்' என்னும் சொல் அவர்கள் கருத்துப்படி புத்தரின் இதயத்தைக் குறிப்பிடு வதாகவும்; மணி என்னும் சொல் செல்வம் என்பதைக் குறிப்பிடுவதாகவும்; பத்மே என்னும் சொல் தாமரைப் பூவைக் குறிப்பிடுவதாகவும்; ஹம் என்னும் சொல் புத்தரை அடைய, ஒவ்வொருவரும் புத்தராக மாற உதவுகிறது என்றும் கூறுகிறார்கள். அங்கு பிரார்த்தனை செய்ய வரும் ஒவ்வொருவரும் புத்தரோடு நெருக்கமாக ஆகமுடியும்; அல்லது அவர்களே புத்தராக மாற முடியும் என்று வழிபாட்டை தலைமையேற்று நடத்தும் லாமாக்கள் கூறுகிறார்கள். 

இதெல்லாம் சரி கான்டீன் இல்லாட்டாலும் நம்ம பெருமாள் கோயில்ல தர மாதிரி பொங்கல் புளியோதரைன்னு ப்ரசாதம் தரமாட்டளோ?




No comments:

Post a Comment