இண்டக்ஷன் ஸ்டவ் ( Induction Stove) அல்லது இண்டக்ஷன் குக்டாப்.
----------------
கேஸ் அடுப்பு மட்டுமல்லாமல் நம்மில் பலர் வீடுகளில் மின்சாரத்தில் வேலை செய்யும் இண்டக்ஷன் குக்டாப் என்றழைக்கப்படும் இந்த இண்டக்ஷன் ஸ்டவ் இருக்கும்.இண்டக்ஷன் என்றால் காந்த சக்தியை வைத்துக்கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்வது என்று அர்த்தம்.
நெருப்பும் இல்லாமல் சூடாக காயிலும் இல்லாமல் எப்படி இது பாத்திரத்தில் இருக்கும் பாலைக் கொதிக்க வைக்கிறது மற்றும் பாத்திரத்தில் இருக்கும் பொருளை சூடாக்குகிறது? அதுதான் விஞ்ஞானத்தின் விந்தை. இது எப்படி சாத்தியமாகிறது என்று தெரிந்து கொள்வோம்.
இண்டக்ஷன் ஸ்டவ் மேற்புறம் கெட்டியான கண்ணாடி பீங்கான் ( Glass ceramic ) கலவையால் ஆனது. இதன் மேல் சூடாக்க வேண்டிய பொருளைக்கொண்ட பாத்திரம் வைக்க வேண்டிய பகுதியை வட்டவடிவமாக வரைந்து வைத்திருப்பார்கள். இந்த வட்ட வடிவமான இடத்தின் கீழ்புறம் தாமிரத்தால் ஆன ஒரு காயில் இருக்கும். இண்டக்ஷன் ஸ்டவ் சுவிட்ச் ஆன் செய்ததும் அந்த தாமிரத்தால் ஆன காயிலில் மின்சாரம் பாய்கிறது. நம் நாட்டில் நம் வீடுகளில் வரும் மின்சாரம் AC எனப்படும் Alternating Current (மாறு மின்னோட்டம்.) இந்த மாறு மின்னோட்டம் ஒரு நொடிக்கு 50 முறை திசை மாறும். ( அதனால்தான் அதற்கு அந்தபெயர்).இந்த AC மின்சாரம் தாமிரத்தால் ஆன காயிலில் பாயும்போது அந்த காயிலின் மேற்புறம் "காந்த புலம்" ( magnetic field) உருவாகிறது. இந்த காந்தபுலமும் AC கரண்டுபோல் திசை மாறிக்கொண்டேயிருக்கும். இதன்மேல் சூடாக்க வேண்டிய பொருளைக்கொண்ட பாத்திரம் வைக்கும் வரை சூடாவதில்லை.
இதன்மேல் சூடாக்க வேண்டிய பொருளைக்கொண்ட பாத்திரம் வைத்தால் காயிலின்மேல்புறம் உருவான காந்தபுலம் அந்த பாத்திரத்தின் அடிப்புறத்தில் மின்னோட்டத்தை உருவாக்குகிறது.இந்த மின்னோட்டத்திற்கு eddy current (சுழலும் மின்னோட்டம்) என்று பெயர்.இந்த மின்னோட்டமும் ஒரு நொடிக்கு 50 முறை திசை மாறிக்கொண்டிருக்கும். பாத்திரத்தின் அடிப்புறம் இந்த மின்னோட்டத்தை எதிர்ப்பதால் (resistance) பாத்திரம் சூடாகிறது. பாத்திரம் சூடாவதால் அதில் உள்ள பொருளும் சூடாகிறது. இவ்வளவுதான் விஷயம்.குக்டாப்பிலிருந்து பாத்திரத்தை எடுத்துவிட்டால் குக்டாப்பிற்கு தெரிந்துவிடும் அதில் உள்ள சென்சார்கள் மூலம்.சிறிது நேரத்திற்குப் பிறகு தானாகவே சுவிட்ச் ஆஃப் ஆகிவிடும்.
முக்கியமான கண்டிஷன் என்னவென்றால் குக்டாப்பின் மீது வைக்கும் பாத்திரம் இரும்பு அல்லது எவர்சில்வரால் ஆன பாத்திரமாக இருக்கவேண்டும். குறிப்பாக சொல்லப்போனால் அந்தபாத்திரம் காந்தத்தால் கவரக்கூடிய (ferromagnetic) பொருளாக இருக்க வேண்டும். பாத்திரத்தில் சூடாக்கவேண்டிய பொருளைப் பொருத்து சூட்டின் அளவைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும்.
இண்டக்ஷன் குக்டாப்பில் எரி சக்தி ( heat energy) வீணாவது மிக மிகக் குறைவு.இதன்மேல் வைக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்வது எளிது.
No comments:
Post a Comment