Friday, January 14, 2022

பார்த்தசாரதி விலாஸ், திருவானைக்கா

 பார்த்தசாரதி விலாஸ், திருவானைக்கா (ஸ்ரீரங்கம்)

திருச்சி BHEL செல்லவேண்டிய கட்டாயம் வந்தது. எங்கள் நண்பர்கள் குழாத்தில் ஒருவர் ஸ்ரீரங்கம் பெருமாளைப் பார்க்கலாமா? என்று கேட்டால் உடனே போட்டது போட்டபடி ஓடிவந்துவிடுவார். அவரிடம் BHEL சென்றுவிட்டு, ஸ்ரீரங்கம் செல்லலாமா என்று கேட்டபோது, ஸ்ரீரங்கம் ரங்கநாதரை முதலில் தரிசித்துவிட்டு, பிறகு BHEL போகலாம் என்றார்.  டிரைவருடன் உள்ள கார் அவருடையது என்பதால் சரி என்றேன். மேலும் இரண்டு நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு கிளம்பினோம். 

கார் தானம் செய்த நண்பர் எங்களுடன் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து, ஸ்ரீ ரங்கநாதரை ஏகாந்தமாகச் சேவித்துவிட்டு, என்னுடைய BHEL வேலையை முடித்துவிட்டு, திருவானைக்காவல்                              ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புகேஸ்வரரைத் தரிசிக்க சென்றபோது, அவர் மிகத் தீவிர வைணவர் என்பதால் காரிலேயே இருந்துவிட்டார். 

நாங்கள் அம்மனையும், ஸ்வாமியையும் தரிசித்துவிட்டு வெளியே வரும்போது, நான்தான் ஆரம்பித்தேன். காரில் ஏறி அமர்ந்தவுடன், என்னுடன் வந்த இரண்டு நண்பர்களில் ஒருவர், காரிலேயே அமர்ந்துவிட்ட தீவிர வைணவ நண்பரிடம், 'ஸ்ரீதர், ஏதோ பார்த்தசாரதி விலாஸ் நெய்தோசை சாப்பிடலாம்னு சொல்றான். என்ன செய்யலாம்?" என்றார். நண்பர் முகம் உடனே மலர்ந்தது. "செமையா இருக்கும்டா. இவ்வளவு தூரம் வந்துட்டோம் போகலாம்". என்றார். 

ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் ஆலய நுழைவாயிலின் முன்புறம் உள்ள தெருவில் (மேல விபூதி பிரகாரம்) வலதுபுறம் திரும்பி சிறிது தூரம் நடந்தால் வண்ணமயமான பெயர் பலகையுடன் பார்த்தசாரதி விலாஸ் நம்மை வரவேற்கிறது. 

மிக பழமையான கட்டிடம், உள்ளே நுழையும்போதே அந்த கால தூண்கள், படங்கள் என்று நம்மை பின்னோக்கி இழுத்து செல்கிறது. மர மேஜைதான், அதில் உட்கார்ந்து நாம் சுற்றி பார்க்கும் போது வாழை இலை வைத்து தண்ணீர் வைக்க, என்ன வேண்டும் என்று கேட்கும்போதே அடுத்த இலைகளை பார்த்தால் எல்லோரும் முறுகலாக தோசையை ஒரு கை (வாய்?) பார்த்துக் கொண்டு இருந்தனர். சரி, நாமும் அவ்வாறே செய்யலாம் என்று அங்கே மிகப் பிரபலமான நெய்தோசை வேண்டும் என்று ஆர்டர் செய்ய, சப்ளையர் "நாலு சூப்பர்" என்று அங்கிருந்தே குரல் கொடுத்து அகன்றார். 

நம் மேசைக்கு அடுத்த மேசையிலிருந்த பெரியவர், "இங்க புதுசா வரீங்களா?" என்று கேட்டுவிட்டு, நாம் பதில் செல்லும்முன் அவரே, " 'சூப்பர்' என்றால் இங்கு நெய் தோசை, 'மாவு' என்றால் ஊத்தப்பம்" என்று விளக்கவுரை கொடுத்தார். பேராசிரியர் கு ஞானசம்பந்தனுக்கு உறவாக இருக்கலாம் என்று நினைத்தேன். 

இந்தக் கடையைப் பற்றித் தெரியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. திருச்சி மக்களும் இக்கடையைப் பற்றி மிகவும் சிலாகித்துப் பேசுகிறார்கள். 

"சூப்பர் எனப்படும் நெய் தோசைக்கு,  சின்னவெங்காய சாம்பார், காரச் சட்னி, தேங்காய் சட்னியை சைட் டிஷ்ஷாகக் கொடுத்தாலும், வெறும் தோசையாகச் சாப்பிட்டாலே சுவை அள்ளும்" என்றார் தோசையை சாம்பாரை குழைத்து வாயில் திணித்தவாறே அந்தப் பக்கத்து மேசை பெரியவர். அருகிலிருந்த நண்பன், "ஹி இஸ் யாப்பிங் டூ மச்" என்றான் அமெரிக்க ஆங்கிலத்தில். 

இரும்புக் கல்லில், தோசை மாவை எடுத்து முறுகலாக வார்த்து, கணக்கே இல்லாமல் இரண்டு மூன்று கரண்டி நெய் எடுத்து ஊற்றுகின்றனர். சிறிது நேரத்தில் நெய் தோசை வந்து இலையை நிறைத்தது. இலையில் விழுந்த வேகத்தில் சூடான தோசையில் இருந்து வந்த ஆவி நெய் மணத்தையும் தன்னோடு பரப்பியது. நெய் தாராளமாக விடப்பட்ட பொண்ணிற தோசையில் மாஸ்டர் தோசைக் கல்லில் மாவை ஊற்றி சுழற்றியதால் ஏற்பட்ட ரேகை காவி நிறத்தில் வளையமாய் இருந்தது. ரொம்ப மெல்லிதாகத் தகடு போல வார்க்கப்பட்ட தோசையை மயக்கும் நெய் வாசத்துடன், ரேகைகள் தெரிய, அந்தப் புகழ்பெற்ற சின்ன வெங்காயச் சாம்பாருடன் தொட்டுச் சாப்பிடுகையில் தோசை வெகு வேகமாக வாயில் கரைந்தது.

80 வருஷமா இருக்கும் மிகப் பிரபலமான இந்தக் கடையில் 60 வருஷத்துக்கு முன்னாடி கச்சேரிக்குத் திருச்சிக்கு வந்தவங்கத் தொடங்கி, மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் முதல் சினிமா பிரபலங்களான நடிகர் திலகம், ஜெமினி, ஜெய்சங்கர் வரை அனைவருமே எங்களது கஸ்டமர்கள் தான் என்கிறார் கடை உரிமையாளர்.  "இது மாதிரி பல முக்கியப் புள்ளிகள் இன்னும் எங்க கஸ்டமரா இருக்குறாங்க" என்கிறார் கடையின் உரிமையாளர் வைத்தியநாதன், இந்த நெய் தோசையின் சுவை, நெய் மணம் மற்றும் சாம்பாரின் பிரத்யேகச் சுவைக்கான காரணம் குறித்தும் பேசுகிறார்.

”1943-ல எங்க அப்பா அனந்த நாராயண அய்யர்தான் இந்தக் கடையை ஆரம்பிச்சாங்க.கிட்டத்தட்ட 80 வருஷமா  இந்த ஹோட்டலை நடத்திட்டு வர்றோம். நான் 1987ல இருந்து இப்போ வரை நடத்திட்டு வர்றேன். எனக்கு அடுத்தப்படியா ஜெர்மனியில் வேலை பார்க்கும் என்னுடைய மகன் இந்த ஹோட்டலை நடத்துறதுக்கு பயிற்சி எடுத்துட்டு இருக்கான். எங்க கடையில போடுற தோசைக்கு மௌஸு அதிகமா இருக்கக் காரணமே விறகு அடுப்புதான். நீங்க என்னதான் கேஸ், எலெக்ட்ரிக் ஸ்டவ்ன்னு விதவிதமா அடுப்பு வச்சி செஞ்சாலும் விறகு அடுப்புக்கு இணையா எதுவுமே கிடையாது. ஒரு கரண்டி மாவைக் கல்லுல ஊத்துனா எல்லா பக்கமும் சரியா வேகும். அதேபோல, நெய்யையும் நாலு பக்கமும் ஊத்தணும். நல்ல அனுபவமுள்ள மாஸ்டர், அவங்களோட மாவு அரைக்குற பதமும், காவேரி தண்ணியும், அதை வார்த்தெடுக்குற இரும்பு தோசைக் கல்லும்தான் எங்க தோசையோட ருசிக்குக் காரணம். ஒரு நல்ல பணியாளர் கிடைச்சா கண்டிப்பா தொழில் எவ்ளோ பெருசா வேணாலும் மாறும்" என்கிறார் மிக உறுதியாக. 

"நெய் தோசை' மட்டும் இல்லை எங்க கடையில கிடைக்குற 'ரவா பொங்கலு'ம் ரொம்ப பேமஸுங்க! " என அவர் சொல்லி கொண்டு இருக்கும்போதே 'ஏன்டா 10 மணிக்கு வந்தோம், காலை 6 மணிக்கே வந்துருக்கலாமே' என நம் மனது ஏங்கத் தொடங்கியது. "எங்க கடையில காலையில 5.15க்கு ஆரம்பிக்குற ரவா பொங்கல் சாம்பாரின் டேஸ்ட்டுனால காலையில 6.15குள்ள அது வித்து தீந்துடும்" எனச் சொல்லி ஆச்சர்யப்படுத்தினார் வைத்தியநாதன்.

திருச்சி மற்றும் திருச்சியைச்சுற்றி ஆன்மிகப் பயணம், அல்லது சுற்றுப்பயணம் மேற்கொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாக ஒரு முறையேனும் பார்த்தசாரதி விலாஸில் சாப்பிட்டுப் பார்த்து என்ஜாய் பண்ணுங்க. 

திங்கள்கிழமை லீவு ! எனவே திங்களன்று செல்வத்தைத் தவிர்க்கவும்.



No comments:

Post a Comment