Sunday, January 9, 2022

புகைப்பிடிக்கும் பழக்கம்

 எண்பதுகளின் இறுதியில்தான் பாலகுமாரன் எனக்கு நண்பரானார். எழுத்தாள நட்பு என்பது போய் குடும்ப நட்பாக இறுகியது அது. என் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அவர் குடும்பமும், அவர் வீட்டு விசேஷங்களுக்கு நாங்களும் செல்வது வழக்கம். அவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டு. நான் சிகரெட் பிடிப்பவர்களைக் கண்டால் முகம் சுளிப்பவள். என் வீட்டிற்கு முதன் முதலில் அவர் வந்த போது என்னிடம் அவர் முதலில் கேட்டது ஆஷ்ட்ரே இருக்கா? என்றுதான். நான் இல்லை என்றேன். சரி ஏதானம் கிண்ணம் கொண்டு வா என்றார். நான் மிகவும் தர்ம சங்கடமாகவும், வீட்டுக்கு வந்தவரை அவமதிக்க கூடாது  என்பதற்காகவும், ஒரு சிறிய கிண்ணம் கொண்டு வைத்தேன். என்னோடு பேசிக் கொண்டிருந்த அரை மணி நேரத்தில் சங்கிலித் தொடராக சிகரெட்களை எடுத்து ஒன்றிலிருந்து ஒன்று பற்ற வைத்துக் கொண்டே இருந்தார். ஒரு பாக்கெட் தீர்ந்திருக்கும். என் வீடு சிறியது. ஒற்றை அறைதான். எனக்கு அந்தப் புகை மிகவும் ஹிம்சையாக இருந்தது. அவர் என்ன பேசினார் என்பதில் சத்தியமாக என் கவனம் செல்லவில்லை. வாசலுக்கு வந்து வழியனுப்பும் போது இவ்ளோ சிகரெட் பிடிக்கறேளே உடம்புக்கு நல்லதில்லையே பாலா என்றேன்.

சுப்ரமணியம் எவ்ளோ பிடிப்பார்? ஒரு நாளைக்கு ரெண்டா மூணா என்றார். என்னை மடக்கி விட்டதாக நினைத்தாரோ என்னமோ. அன்று முழுக்க நான் மிகவும் வருத்தத்தில் இருந்தேன். என் கணவர் புகைக்கும் விஷயமே திருமணத்திற்குப் பிறகுதான் எனக்குத் தெரியும். எவ்வளவு கெஞ்சியும் என்னால் அவரது அந்தப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை.

அடுத்த சில வாரங்களில் மீண்டும் வீட்டுக்கு வந்தார் பாலகுமாரன். அன்று ஞாயிற்றுகே கிழமை என்பதால் . குழந்தைகள் வீட்டில் இருந்தார்கள். வந்ததுமே ஆஷ்ட்ரே என்றார். சாரி பாலா இங்க வரும் போது நீங்க சிகரெட் பிடிக்காம இருந்தா மகிழ்வேன் என்றேன். என்னை ஒருமாதிரி பார்த்தார். நான் இப்படி சொல்வேன் என்று அவர் நினைக்கவில்லை. அப்டின்னா மறைமுகமா என்னை இங்க வராதேன்னு சொல்ற அப்டிதானே.

இல்லை. தாராளமா வரலாம். ஆனா ஏற்கனவே இங்க ஒருவர் இதே பழக்கத்துடன் இருக்கிறார். அவர் புகை பிடிப்பதையே நான் விரும்பவில்லை. அவரை நான் வீட்டில் புகைக்க அனுமதிப்பதில்லை. என் குழந்தைகளின் உடல் நலம் எனக்கு முக்கியம். உங்களை நான் இதற்கு அனுமதித்தால், உன் நண்பன் நம் வீட்டில் புகைக்கலாம், நான் பிடித்தால் தப்பா என்று என் கணவர் கேட்கக்கூடும். யார் செய்தாலும் இது தவறுதான். தயவு செய்து இந்தப் பழக்கத்தை நீங்கள் விட்டு விடலாமே? அல்லது புகைக்காமல் இருக்க முடியாது என்றால் நீங்கள் இங்கே வரவேண்டாம் என்று சொல்வதில் எனக்கு தயக்கம் ஒன்றுமில்லை என்றேன்.

"சுப்ரமணியம் நிறுத்தறாரா பார்ப்போம்" மறுபடியும் கிண்டலான ஒரு பதில். ஆனால் நான் அப்படி சொன்னதற்கு ஒரு நல்ல பலன் இருந்தது. அதற்குப் பிறகு அவர் என் வீட்டிற்கு வரும் போது ஒரு சிகரெட் கூடப் பிடிக்கவில்லை.

ஒருமுறை சொன்னார், கௌரி கூட எங்கிட்ட கெஞ்சறது, அப்பா இதை விட்ருப்பான்னு. கண்டிப்பா விட்டுர்றேன்னு சொல்லியிருக்கேன். விடணும் பார்ப்போம் என்றார். ஆனால் விடவில்லை.

1998 ல் என் கணவருக்கு உடல்நலம் கெட்டது. கழுத்துப் பகுதியில், மூளைக்குச் செல்லும் முக்கியமான தமனியில் அடைப்பு ஸ்ட்ராங் ஆக இருந்ததால் வாஸ்குலர் சர்ஜரி செய்தே ஆக வேண்டிய நிலை. சர்ஜரி செய்யும் பொது ஸ்ட்ரோக் வந்தால் அது பெர்மனன்ட் பெராலிடிக் ஆகி விடும் என்றிருந்தார் டாக்டர். தவிர உயிருக்கு ஆபத்து என்பதும் இருந்தது. கொஞ்சம் ரிஸ்க் ஆன மேஜர் ஆபரேஷன்தான். வீட்டில் என் அம்மா, என் பெண்கள் இருவரையும் பார்த்துக் கொள்ள, தமிழ்நாடு மருத்துவமனையில் என் கணவரை அறுவை சிகிச்சைக்காக சேர்த்திருந்தேன். அவர் ஆபரேஷனுக்காக உள்ளே அழைத்துச் செல்லப்பட, அவர் மீண்டு வருவாரா மாட்டாரா என்ற கேள்வியோடு தன்னந்தனியே நான் வெளியில் அமர்ந்திருந்தேன்.

அப்போது பாலகுமாரன் அங்கு வந்தார். தனியே அமர்ந்திருந்த என்னைப் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் அருகில் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டார். கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளவில்லை. ஆபரேஷன் முடிந்தது. போஸ்ட் ஆபரேடிவ் வார்டில் இருந்தவரைப் பார்க்க, எங்கள் இருவரையும் அழைத்தார் டாகடர். பாலகுமாரனைக் காட்டி இது யார் என்று தெரிகிறதா என்றதும் என் கணவர் பாலா என்றார் மெல்ல. டாக்டர் முகத்தில் சந்தோஷம். நான் கண்களை மூடி கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு டாக்டருக்கும் நன்றி கூறினேன்.

பாலகுமாரன் கிளம்பினார். அதற்குப்பிறகு என் கணவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போது, தன் காரை அனுப்பி வைத்தார். வீட்டுக்கு அவரைப் பார்க்க வந்தார். அவர் கிளம்பும் போது நான் வாசல் வரை வந்தேன். வழியனுப்ப மட்டும் வரவில்லை. "பாலா எனக்கு உங்களோட கொஞ்சம் பேசணும். நீங்க ஆத்துக்கு போனதும் போன் பண்ணுங்கோ" என்றேன். அவரும் போன் செய்தார். கார்ட்லெஸ் இருந்ததால் அதை எடுத்துக் கொண்டு தனியிடம் சென்றேன்.

"பாலா டாக்டர் என்ன சொன்னார் தெரியுமா? சுப்ரமணியத்தின் மூளைப்பகுதி புகைப் பழக்கத்தால் சுருங்கிப் போயிருக்காம். எண்பது வயதில் எந்த அளவுக்கு வயோதிகத்தால் சுருங்குமோ அந்த சுருக்கம் அம்பது வயதிலேயே புகைப்பழக்கத்தால் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரது ஆயுளில் ஏற்கனவே எண்பது வயது முடிந்து விட்டதென்று கருதலாம். இன்னமும் அப்பழக்கத்தை அவர் விடவில்லை என்றால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்றார். நான் இதை எதுக்கு உங்க கிட்ட சொல்றேன்னு புரிஞ்சுப்பேள்னு நினைக்கறேன். கௌரிக்கு கல்யாணம் ஆகணும். சூர்யா நல்ல நிலைமைக்கு வரணும். கொஞ்சம் யோசிங்கோ என்றேன். அவர் எதுவும் பேசவில்லை.

மேலும் ஒரு இரண்டாண்டு ஓடியிருக்கும். ஒரு நாள் அவரிடமிருந்து போன் வந்தது. உஷா சிகரெட்டை நிறுத்திட்டேன். கௌரி என் மனசை மாத்திட்டா. இதை உன்கிட்ட சொன்னா நீயும் சந்தோஷப்படுவன்னு சொல்றேன் என்றார். உண்மையிலேயே மிகவும் மகிழ்ந்தேன். என் கணவரோ கடவுள் அருளால் மீண்டு வந்தும் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நல்லபடி வாழவில்லை., நானும், பெண்களும் எவ்வளவு கெஞ்சியும் கூட எங்களை விட அதுதான் முக்கியம் என்று மீண்டும் புகைத்தார். உதட்டில் உட்கார்ந்த அந்த சிறு நெருப்பு அவரை முழுவதும் விழுங்கி பஸ்மமாக்கி விட்டுதான் ஓய்ந்தது.

விஷயமறிந்து ஓடி வந்தார் பாலா.  சுப்ரமணியத்தின் பாஸ்போர்ட் சைஸ் படத்தை எடுத்துக் கொண்டு போய் பெரிது படுத்தி பிரேம் செய்து கொண்டு வந்ததும், பத்திரிகைகள் சிலவற்றிற்கு செய்தி கொடுத்ததும் அவர்தான். பதிமூன்றாம் நாள் காரியத்தன்று போன் செய்தவர், எல்லாம் நல்லபடி முடிந்ததா என்று விசாரித்ததோடு, இனி நான் உங்காத்துக்கு வர மாட்டேன் என்றார். ஏம்ப்பா என்றேன். சுப்ரமணியம் இல்லாத வீட்டுக்கு வரப் பிடிக்கல என்றார். அந்த அளவுக்கு என் கணவர் எல்லோராலும் நேசிக்கப்பட்டவர். ஆனால் அவர் நேசித்ததென்னமோ சிகரெட்டை என்பது எங்கள் துரதிருஷ்டம். சொன்னாற்போல் போல் பிறகு தன் மரணம் வரை பாலா என் வீட்டுக்கு வரவில்லை. நான் மட்டுமே எதற்கேனும் அவர் வீட்டுக்குச் சென்று வருவது வழக்கம். .

சுப்ரமணியம் இறந்த பத்திருபது நாட்களில் பாலாவின் மகள் கௌரியின் கல்யாணம் நடந்தது. நான் செல்லவில்லை. பெண்களை மட்டும் அனுப்பி வைத்தேன்.  தன் பெண் குழந்தைகளை மடியில் அமர்த்தி தாரை வார்த்துக் கொடுப்பதென்பது   ஒவ்வொரு தகப்பனுக்கும்  எப்பேர்ப்பட்ட பரவசமான  தருணம்.  ஆனால் சுப்பிரமணியம் அது பற்றி யோசிக்கவில்லை.  அந்தக் கொடுப்பினை அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால் நானும் ஒதுங்கி நிற்க வேண்டிய நிலை. நான் செய்யாத தவறுக்கு எனக்கும் சேர்த்து கிடைத்த  தண்டனை.

இதை எதற்கு இப்போது எழுதுகிறேன் என்றால், என் கணவரின் நினைவு நாள் இம்மாதம் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிகரெட் பற்றிய விழிப்ப்புணர்வு பதிவு எழுதுவது வழக்கம் என்பதால் இம்முறை இதை எழுதுகிறேன். புகைப்பழக்கத்தை பாலகுமாரன் விட்டு விட்டாலும் கூட, அவர் ஏற்கனவே அதிகப்படியாக புகைத்திருந்த காரணத்தால் அதன் பாதிப்பு அவரது உடல்நலத்தை எப்படி எல்லாம் சீர் குலைத்தது என்பதை அவரே விவரமாக எழுதியுள்ளார். அதைத் தனி பதிவாகப் போடுகிறேன். துன்பத்தை அனுபவித்தவர்களால்தான் மற்றவர்கள் அத்தவறைச் செய்யாதிருக்க சரியானபடி உபதேசிக்க முடியும்.

என் கணவரின் கடைசி நாட்களை கண்ணாமூச்சி என்று ஒரு சிறுகதையாக எழுதியிருந்தேன். அதை இப்படித்தான் முடித்திருப்பேன்.

////தொலைபேசி நீண்ட நேரம் அடித்தது. ஓடிச்சென்று எடுத்து பேசினேன். அவர்தான்.

"என்னம்மா என்ன விசேஷம் அங்க"

ஆமாம் விசேஷம்தான். உங்களுக்கு நாளைக்கு பத்து. கண்டிப்பா சாப்ட வந்துடுங்கோ"

"வந்துடறேனே. என்ன மெனு?"

"உங்களுக்கு பிடிச்ச எல்லாம் இருக்கும். உப்பில்லாம"

"சிகரெட் உண்டா?"

உண்டு. நிக்கோட்டின் இல்லாம"////

எனவே மீண்டும் சொல்கிறேன்.உங்களில் எவருக்கேனும் இந்தப் பழக்கம் இருந்தால் நிறுத்தி விடுங்கள். இது மெல்லக் கொல்லும் விஷம் என்பதை மறந்துவிட வேண்டாம். கீழ்க்கண்ட இணைப்பில் பாலகுமாரன் எழுதியது உள்ளது. 

https://www.facebook.com/nilavidya/posts/2195723770450408

கீழ்க்கண்ட போட்டோ ஒரு தீபாவளியன்று அவர் தன் குடும்பத்தோடு என் வீட்டிற்கு வந்த மகிழ்வான தருணத்தில்  எடுத்தது.

இந்தப்பதிவுக்கு யாரும் கண்ணீர் இமோஜி எல்லாம் தயவு செய்து இட வேண்டாம்.  எனக்கு கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பது பிடிக்காது. முடிந்தால் யாரேனும் ஒருவரையாவது புகைப்பழக்கத்திலிருந்து மாற்றப் பாருங்கள்.

No comments:

Post a Comment