👩🏿🦰🧑🦰🧑காலம் தோறும் பெண்🧒👩🏻👦🏾
7. அகலிகை
By ஹேமா பாலாஜி |
அகலிகை தமிழ் மொழியில், அஹல்யா சமஸ்கிருத மொழியில். அழகே உருவானவள், நிகரில்லாத அழகுடையவள் என்ற பொருள் பெற்ற பெயருடையவள் அஹல்யா எனும் அகலிகை.
இவளைப் பற்றி பல கதைகள் புனைவாகவும் காப்பிய வடிவாகவும் பாடல்களாகவும் வெண்பாக்களாகவும் பல கோணங்களில் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. பெண்ணிய சிந்தனைகள் உருவான போதே அகலிகை பெரும் முக்கியத்துவம் பெற்ற பேசு பொருள் ஆகிவிட்டாள். எத்தனையோ எழுதிவிட்டார்கள் அகலிகையின் வாழ்க்கையை, நெறியை, இலக்கணத்தை. கற்பென்ற சொல்லுக்கு சனாதன தர்மத்தின் இலக்கணம் என்ன என்பதை துல்லியமாக வரையறுக்க முடியவில்லை. அக்காலம் தொட்டு பெண்ணியம் உச்சத்தில் இருக்கும் இன்று வரையுமே பெரும் சர்ச்சைக்குள்ளானவள் அகலிகை
அகலிகை என்பவள் யார்? எந்த நாட்டு இளவரசி? எந்த சபையின் பேரரசி? சற்று விரிவாகப் பார்ப்போம். இவளின் தோற்றம் மானுடர்களைப் போல பிறப்பால் உருவானதல்ல. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி வாசுகி எனும் பாம்பை கயிராகத் திரித்து இமய மலையை மத்தாக்கி பாற்கடலை கடைந்த போது பல்லாயிரக்கணக்கான விசேஷப் பொருட்களும், உயிரனங்களும் தோன்றின.
காமதேனு என்ற வற்றாத மடியுடைய தெய்விகப் பசு, வெண்ணிறப் புரவி, ஐராவதம் எனும் வெள்ளை யானை, பாரிஜாத மலர், கற்பக விருட்சம், அப்ஸரஸ்கள் எனும் தேவ கன்னியர், செல்வத்தின் அதிபதியான லஷ்மி தேவி போன்றோர் தொன்றியதாக ஐதீகம். அவற்றுடன மற்றொரு பெண் வடிவமும் தோன்றியதாம்.
ஆயிரம் நட்சத்திரங்கள் மிளிர்ந்தாலும் ஒற்றை நிலவுக்கு ஈடாகாது என்பது போல அவள் அத்தனை பிரகாசமாகவும், கடைந்தெடுத்த சிற்பம் போலவும் தோன்றினாளாம். திவ்ய அலங்கார பூஷிதையாக ஈரேழு உலகத்தில் இருக்கும் அழகை எல்லாம மொத்தமாக கொட்டி வார்த்தது போல் இருந்தாளாம். அவள் தான் அகலிகை.
அவளை தனதாக்கிக் கொள்ள சப்த ரிஷிகளுள் ஒருவரன கௌதம முனிவருக்கு ஆவல் எழுந்தது. அதே சமயம் தேவலோகத்தின் அதிபதியான இந்திரனுக்கும் அவளை அடையும் ஆசை எழுந்தது. இருவரின் விருப்பத்தையும் அறிந்த பிரம்மா அவர்களுக்கிடையே ஒரு போட்டி வைத்தார். இருவரில் யார் இருபக்கமும் தலையுடைய பசுவைப் பார்த்து சாட்சியுடன் நிருபிக்கிறார்களோ அவர்களுக்கே அகலிகை உரித்தானவள் என்கிறார்.
உடனே ஞானப்பழத்தைத் தேடி முருகன் மயிலில் புறப்பட்டது போல் இதோ ஈரேழு லோகமும் சென்று முன்புறமும் பின்புறமும் முகம் கொண்ட பசுவை தேடிக் கண்டுபிடித்து வருகிறேன் எனச் சொல்லி இந்திரன் புறப்பட்டுப் போனான். முனிவரோ இது என்ன விந்தையாக உள்ளதே? இருபுறமும் முகம் கொண்ட பசு இருப்பது எங்கிருந்து சாத்தியம்? என யோசித்தவாரே தபோ வனத்தில் தியானத்தில் அமர்ந்துவிட்டார். அப்போது அங்கு வந்த நாரதர் ‘முனிவரே மிகவும் கவலையாக உள்ளீர்களே வாருங்கள் அருகிலுள்ள கோசாலைக்குச் சென்று உமக்கு தீர்வு கிடைக்கிறதா என பார்த்து வரலாம்’ என்று கூறி அழைத்து சென்றார்.
ஆனால் எங்கு தேடியும் இருபுறமும் முகமுள்ள பசுவை காண முடியவில்லை. முனிவர் நாரதரிடம் ‘இது சாத்தியமே இல்லையே? பிரம்ம தேவன் இப்படி ஒரு சோதனையை எனக்கு ஏன் அளித்தார்?’ என்று புலம்பினார். அவருக்கு இந்திரனிடம் தோற்றுவிட்டால் சிறுமை பட்டு போய்விடுவோமே என்ற கவலையுடன் நிகரில்லாத அழகி அகலிகை தன் கைவிட்டுப் போய்விடுவாளே என்ற விரக்தியும் தோன்ற திரும்பி நடக்க ஆரம்பித்தார்.
தொடரும்
No comments:
Post a Comment