👩🏿🦰🧑🦰🧑காலம் தோறும் பெண்🧒👩🏻👦🏾
9. கைகேயி
By ஹேமா பாலாஜி
கைகேயி. ராமாயண கதாபாத்திரங்களிலேயே மிகவும் தனித்தன்மை வாய்ந்த வித்தியாசமான பாத்திரம். தசரத மன்னனின் பட்டத்து மகிஷிகளுள் மூன்றாவது அரசி. மிக இளம் வயது ராணி. இருப்பினும் திட சித்தமும், ஆளுமையும் பொருந்திய மிகச் சிறந்த அறிவாளி. வீரமும் விவேகமும் கொண்ட பேரழகி.
கேகய நாட்டு மன்னன் அச்வபதியின் மகள். கேகய நாட்டு இளவரசி என்பதால் கைகேயி என அழைக்கப்பட்டாள். இயற்பெயர் சரஸ்வதி. அச்வபதி மன்னன் தனக்கு சரஸ்வதி தேவியைப் போன்ற மகள் வேண்டும் என ஆசைப்பட்டு யாகம் செய்து அதன் பலனாக தேவியின் அருளில் பிறந்தவள் கைகேயி. சரஸ்வதி தேவியே குழந்தை வடிவில் மன்னனுக்கு மகளாக அவதரித்ததாக வரலாறு.
கேகய நாட்டு மன்னனுக்கு சிறப்பம்சம் ஒன்று உண்டு. அவர் பல வித்தைகளில் கரை கண்டவர். மிகச் சிறந்த தர்மவான். வேதங்களிலும் கலைகளிலும் அபார தேர்ச்சி உள்ளவர். அதில் ஒன்றுதான் பூர்வ ஜென்மத்தை கண்டறியும் ஆற்றல். அவரிடம் துன்பம் பிரச்னைகள் என வரும் அரசர்களுக்கு அவரவர்களுடைய பூர்வ ஜென்மத்தை தன் ஆற்றலால் கண்டறிந்து அதற்கேற்றபடி பலாபலன்களும் அதை நிவர்த்தி செய்ய பரிகாரங்களும் கூறி அனுப்புவது அவர் வழக்கம்.
குழந்தைப் பருவம் முதலே தந்தைக்கு பிரியமானவளாகவும் எப்போதும் தந்தையைச் சுற்றி சுற்றி வரும் செல்லக் குழந்தையாகவும் வளர்ந்து வந்தாள் கைகேயி. அதனால் அவரிடமிருந்த எல்லா ஞானங்களையும் கைவரப் பெற்றாள். போர் பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றவள் கைகேயி.
ஒரு நாள் தன் சகோதரர்களுடன் அரண்மனைத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கே திடீரென கொழுத்த காட்டுப் பூனை வந்துவிட்டது. அவளுடைய சகோதரர்கள் எல்லாம் பயந்து பின் வாங்க கைகேயி மட்டும் மிகவும் தைரியமாக அதன் பின்னே துரத்திச் சென்று தன்னிடம் இருந்த சிறு கத்தியாலேயே அதை குத்திக் கிழித்துக் கொன்றாள். தன் சகோதரர்களுக்கு வந்த ஆபத்தை தனி ஒருவளாய் சமயோஜிதமாக சமாளித்து போக்கினாள் கைகேயி.
பின்னொரு நாளில் சம்பராசுரன் என்ற அசுரனுடன் தசரதன் போர் புரிய சென்ற போது, அவன் தேருக்கு சாரதியாக சென்றாள் வீராங்கனை கைகேயி. உச்சகட்டமான போரின் போது தேரின் அச்சு முறிந்துவிட, தன் கணவன் உயிர் காக்கவும், போர் தடைபடாமல் அவன் வெற்றி பெறவும் தன் கட்டைவிரலையே தேரின் அச்சாணியாக்கினாள் கைகேயி. அவளின் பதி பக்தியும் திடசித்தமும் கண்டு அசந்து போனான் தசரதன். தன் உயிரை பணயம் வைத்து தன்னவன் உயிரைக் காத்ததாலும் போரில் வெற்றி பெற அவளின் துணிச்சலான முடிவு காரணமானதாலுமே கைகேயிக்கு கேட்ட வரம் எதுவாகினும் அளிப்பதாக வாக்கு கொடுத்தான் தசரதன்.
மீண்டும் நாம் கைகேயின் பதின் பருவத்துக்கு வருவோம். பால்யம் முதல் தந்தையை சுற்றியே வளர்ந்தவள் ஆகையால் கைகேயிக்கும் தன் தந்தையைப் போலவே பூர்வ ஜென்மம் கண்டறியும் ஆற்றல் கைவரப் பெற்றது. தன் தந்தையின் வழியில் அவளும் தன்னை நாடி வருபவர்களின் துயரைத் தீர்க்க வழி சொன்னாள்.
ஒரு நாள் தனக்கு புத்திர பாக்கியம் இல்லாத குறையை போக்கும் வழி கேட்டு அச்வபதி மன்னனை நாடி வந்தான் தசரதன். அவனுக்கு பலன் சொன்னவளோ கைகேயி. ‘அரசே தாங்கள் பூர்வ ஜென்மத்தில் உலகுக்கே ஒளி வழங்கும் சூரியனாக இருந்துள்ளீர்கள். அப்போது உங்களுக்கு காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி என மூன்று மனைவியர் இருந்தனர். இப்பிறவியில் தசரதனாக பிறந்துள்ளீர்கள். காயத்ரி தான் உங்கள் இப்போதைய முதல் மனைவி கௌசல்யை, இரண்டாவது மனைவி சாவித்ரி இப்போது சுமத்திரை மூன்றாவது மனைவி சரஸ்வதி தான் நான். என்னையும் மணந்த பின் எங்கள் மூவர் மூலமாக உங்களுக்கு கடவுள் அவதாரமே மகன்களாக அமையும். திருமண விஷயம் குறித்து என் தந்தையுடன் பேசிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி அனுப்பினாள்.
தொடரும்
No comments:
Post a Comment