Saturday, January 22, 2022

சிதம்பரம் கொத்ஸு

 எட்டு திக்கும் பேசும் சிதம்பரம் கொத்ஸு !!

மதுரையம்பதியில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் பிறப்பால் வைணவன் என்றாலும் நான் சிவபெருமான் / மஹாவிஷ்ணு என்று பிரித்துப் பார்ப்பது கிடையாது. 

என்னுடைய பணி நிமித்தமாக தென்னாற்காடு மாவட்டம் கடலூரில் இருந்த போது பல முறை சிதம்பரம் போனதுண்டு. அப்போது தவறவிடாமல் செய்த  இரண்டு விஷயங்கள்:  சிதம்பரம் கோயிலுக்குச் சென்று எம்பெருமான் தரிசனம் செய்தது. மற்றொன்று, கத்திரிக்காய் கொத்ஸு.  சாப்பிட்டு மகிழ்வது.

சிதம்பரம் கோயிலில் விசேஷம்,  சம்பாஅரிசி சாதமும் கத்தரிக்காய் கொத்ஸும் சிவபெருமானையே சொக்க வைக்கும் நைவேத்தியம். பாரம்பரியமான இந்த கொத்ஸு  தீக்ஷிதர்களால் செய்யப்படுவது போலவே, சிதம்பரத்தில் சில ஹோட்டல்களிலும் செய்யப்படுகிறது. 

இவைகளில் முதல் இடம் சிதம்பரம் தெரு ரத வீதியில் இருக்கும் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் ஆகும். 

இட்லிக்கு கொத்ஸுதான் துணை.  சட்னி, சாம்பாரா ? அதற்கெல்லாம் இங்கே வேலையே இல்லை.பெரும்பாலான ஹோட்டல்களில் கொத்ஸு பார்சல் கிடையாது.

சிதம்பரம்செல்லும் முன்பே கொத்ஸின் அருமை பெருமைகளை முழுக்க அறிந்திருந்ததால், சுவைத்துப் பார்த்தபோது ‘பெஸ்ட்’ என்று சுவை மொட்டுகள் சான்றிதழ் அளித்தது உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் கொத்ஸுவுக்கே. 

புதுச்சேரி முதல்வரும் பல அமைச்சர்களும் இங்கு வாடிக்கையாளர்களாம். 46 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய ஹோட்டல். பிச்சாவரம் படப்பிடிப்புக்கு வந்த முன்னாள் முதல்வர்எம்.ஜி.ஆருக்கு இங்கிருந்து பார்சல் அனுப்புவார்களாம். சிதம்பரம் நாட்டியாஞ்சலிகலைஞர்களின் வருகை இங்கு கொத்ஸு சாப்பிடாமல் நிறைவு அடையாதாம்!

மாலை4.30 மணிக்குத் தயாராகும் கொத்ஸு  அடுத்த இரண்டே மணி நேரங்களில்தீர்ந்து விடுகிறது. நல்ல கெட்டியான கொத்ஸு. சூடான இட்லிக்கு அப்படி ஒரு கச்சிதமான துணை. சிதம்பரம் கோயிலில் சாப்பிட கொத்ஸுவின் நாவூறும் சுவைக்கு ஈடாக கிட்டத்தட்ட நெருங்கி வருகிறது இந்த ஹோட்டலின் கொத்ஸு. 

பொங்கல், இட்லி, தோசை என்று எல்லாவற்றிற்கும் கொத்ஸுதான். டயட்டாவது ஒன்றாவது என்று எல்லோரையும் சுண்டி இழுக்கிற சுவை.

1969-ல் லக்ஷ்மி நாராயண பட் என்ற மங்களூர்காரரால் தொடங்கப்பட்ட உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் ஹோட்டலின் தற்போதைய உரிமையாளர்அவருடைய மகன் சுப்ரமணிய பட்.

இந்த உணவகத்தின் மேலாளர் நவீன் குமாரை இங்கு பரிமாறப்படும் கத்திரிக்காய் கொத்ஸுவின் உன்னதமான சுவையைப் பற்றிக் கேட்ட போது, “சுவைக்காக நாங்கள் எந்த காம்ப்ரமைஸும் செய்வதில்லை. சிதம்பரம் கோயிலில் செய்யப்படும் கொத்ஸுவில் வெங்காயம் இல்லை. நாங்கள்  இங்கு வெங்காயம் சேர்க்கிறோம், அது மட்டுமே வித்தியாசம். சிறிது வெல்லம் சேர்க்கிறோம். கத்தரிக்காய் நல்ல பிஞ்சாக இருக்க வேண்டும்… அவ்வளவுதான்…அன்றைய தேவைக்கு எவ்வளவு பொடி தேவையோ அதை மட்டுமே அன்றன்று காலையில் ஃப்ரெஷாக  தயார் செய்கிறோம். இதற்குமேல் சொல்ல முடியாது… ஏனெனில் இதுவும் சிதம்பர ரகசியமே” என்றுபுன்னகைத்து வழியனுப்பி வைத்துவிட்டார் 

எனவே கொத்ஸுவின் மகத்துவமே அவர்களுடைய சீக்ரெட் பொடிதான் என்பது பளிச்சென புரிந்தது நமக்கு. 

இது போன்ற பாரம்பரிய சுவையான பதார்த்தங்கள் இப்போது ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்தில் வழக்கொழிந்து வருகின்றன என்பது  நிதர்சனம். 

சம்பா அரிசி சாதமும், இந்த சுவையான கத்திரிக்காய் கொத்ஸுவையும் சாப்பிட்டதால்தான்  சிதம்பரம் நடராஜர் ஆனந்த கூத்தாடுகிறார் என்று நினைக்கிறேன். . 

சிதம்பரம் கத்திரிக்காய் கொத்ஸுவை ரசித்து ருசித்து சாப்பிடுவது மனதும் உடலும், ஒன்றும் ஒரு ஜென் நிலை அனுபவம் என்றால் மிகையாகாது என்று தமிழ் வலைப்பூவில் படித்தேன். மறுக்க முடியாத உண்மை !!

No comments:

Post a Comment