Friday, January 14, 2022

மனதோடுமலர்கள்_50

மனதோடுமலர்கள்_50

அத்யாயம் 50

கதையாசிரியர்: பாஸ்கர் சத்யா 

க்ரோம்பேட்டை மெயின் ரோடில் இறங்கி ராதாநகர் போவதற்குள் நீரஜாவுக்கு எக்ஸைட்மெண்ட். அண்ணு மாமி எப்படி இருப்பாள்? கோவிலுக்கு செல்லும்போது அம்பாள் எந்த அலங்காரத்தில் இருப்பாள் என்ற எதிர்பார்ப்புகளைப் போல. சந்தன அலங்காரம்? வெள்ளிக் காப்பு? மடிசார் பச்சை கலரில்? இல்லை இல்லை மாம்பழக் கலரில் சிவப்பு பார்டர்?

ஆனால் அவளுக்கு தெரியாதா, அவளே ஒரு அழகு, அவளே ஒரு அலங்காரம் என்று? பூவையும் தலை முடியும் எடுத்துவிட்டால் அழகு இருக்காதா என்ன? புன்சிரிப்பு உள்ளத்தின் அழகை வெளிப்படுத்தாதா என்ன? மாலா கொடுத்து வைத்தவள். அம்மனோடு வாழப் போகிறவள்.

அவளைப் பார்த்தவுடனேயே மாலதி வாழ்க்கையில் ஏக்கங்கள் போய் திருப்பு முனைகள் ஒவ்வொன்றாக கிடைத்துக் கொண்டிருக்கின்றனவே? அவள் மயக்கங்களுக்கும் மருந்துகள் கிடைக்க வேண்டும்.

'வா, வா, வா, மாலதி. அக்காக்கு கல்யாணமா? ஏண்டி, உனக்கு இவ்வளவு சிரமம்? நானே மாம்பலத்திற்கு வந்திருப்பேனே. என்ன அழைச்சுண்டு போக இவ்வளவு சிரமப் பட்டிருக்கணுமா என்ன? இந்த பொண்ணு யாரு? உனக்கு ரெண்டு சகோதரிதானே?'

அறிமுகத்துக்குள்ளேயே தன் ஒட்டுமொத்த பரிமாணங்களை காட்டிவிட்டாளே? வாயார கூப்பிட்ட ப்ரேமை; அடுத்தவர்கள் சிரமம் தனக்கு ரணம் என்ற வெளிப்பாடு; முன்பின் அறியாதவர்களையும் தன் சொந்தமாக ஏற்கும் மனப் பக்குவம்.

அசந்துவிட்டாள் நீரஜா. உடனே தன்னையும் அறியாமல் ஓரத்தில் ததும்பிய கண்களோடு ஒரு நமஸ்காரம். அவள் எழுவதற்குள் 'இவ என்னோட ஹாஸ்டல்ல இருக்காம்மா. நீரஜான்னு பேரு.'

எழுந்து நின்றவளின் தலையைத் தடவி, கன்னங்களை வருடி, தன் கன்னங்களில் பட்டென ஒரு திருஷ்டி.

'நன்னா இருடியம்மா. சீக்கிரம் கல்யாணம் ஆகி சந்தோஷமா இருக்க்கணும்.'

'ஹலோ, ஹௌ ஆர் யூ?' கொல்லைப் புறத்திலிருந்து வந்த சந்துரு நீரஜாவைப் பார்த்து.

'ஏண்டா சந்தா, இவளையும் தெரியுமா? என்னல்லாம் நடந்திருக்கு திருச்சியில?'

சிரித்தார்கள். 

'குளிச்சிட்டு கிளம்பிளேனோ? சித்த சந்தாவோட பேசிண்டு இருங்கோ. அதுக்குள்ள தோசைக்கல்ல போடறேன்'

'அம்மா, நீங்க ரெடி பண்ணிண்டு இருங்கோ. நாங்க ராஜி அக்காவை பார்த்துட்டு வரோம்.'

கையில் இருந்த பையை அம்மாவிடம் கொடுத்தாள். செக்கச்செவேல்னு பெரிய மாதுளம் பழங்கள். 'இதெல்லாம் எதுக்குடி?' சொன்னாலும் வாங்கிக் கொண்டாள். அதுதானே முறை.

ராஜி வீட்டில் பயங்கர உபசரிப்பு. 'அண்ணு மாமிய பார்த்ததிலேந்து, என்ன கம்ப்ளீட்டா மறந்துட்ட போல இருக்கே. ஜோக் அபார்ட், ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி ஹாப்பி டு ஹியர் அபௌட் த ப்ரொஸீடிங்க்ஸ். தேங்க் காட்.'

'அக்கா, இவதான் என் ஃபரெண்ட்...'

'நீரஜா. அதான் ஃபோன்ல சொன்னியே. வெல்கம் நீரஜா.'

'வாடா சந்துரு. உள்ள வா. வெட்கத்த பாரு'.

'எனக்கு ஒண்ணும் வெட்கமில்ல. ஏதோ மாதர் சங்கம் கூட்டம் போட்டிருக்கு. டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னு...:

சமயோஜிதமாக ராஜி நீரஜாவை கொல்லைப்புறம் அழைத்துச் சென்றாள். சந்துருவும் மாலதியும் பேசிக் கொள்ள ஏதுவாக.

'உனக்கு ஒரே அலைச்சல் போல இருக்கே. என்னை நெனச்சிண்டு இருக்கியா இல்லையா?'.

'இன்னும் கொஞ்சநாள் தானே. அம்மா இவ்வளவு கஷ்டப் படறா, நானும் முடிஞ்ச அளவு செய்யணுமோன்னோ?'

'புரியறது மாலு. அம்மாவும் நீயும் ரொம்ப பிரயத்தனை படறேள். இருந்தாலும் எனக்குத் தான் தனியா உன்னோட பேசக் கூட முடியல..'

விட்டால் அழுதுவிடுவான் போல இருந்தது. 'ஆச்சு, ஆச்சு. வருத்தப் படாதீங்கோ. ட்ரான்ஸ்ஃபர் மெட்ராஸுக்கு கிடச்ச உடனே, நிறைய டைம் கிடைக்கப் போறது. அப்ப நிறைய பேசலாம்.'

தலையை குனிந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்கும் அது கஷ்டமாகத்தான் இருந்தது.

'நீங்க சமத்து இல்லையா. கொஞ்சம் புரிஞ்சுக்கோங்கோ. எங்க போப்போரோம் ரெண்டு பேரும். சரி, இனிமே வாரத்துல ரெண்டு தடவை ஃபோன்ல பேசறேன். சரியா. நீரஜா வந்துடப் போறா. நார்மலா இருங்கோ'

நேரமும் சூழலும் காதலர்களுக்கு சரியாக அமையாத போது மனங்களில் இருப்பதெல்லாம் மௌனத்தில் கலந்துதானே போகவேண்டும். என்ன செய்வது, கடமை தலை தூக்கும்போது காதல் மொழிகள் அடங்கத்தானே போக வேண்டியிருக்கிறது. காணும் சந்தர்ப்பங்களில் கூட கண்கள் மட்டும்தானே பேசவேண்டியிருக்கிறது.

நீரஜா, மாலதி கொஞ்ச நேரம் ராஜியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

'நம்மாத்து காரிலேயே நான், என் அம்மா, நீரஜா, அண்ணு, சச்சு மாமி, அவ பொண்ணு அட்ஜஸ்ட் பண்ணி போயிடலாம். சந்துருவும் மாலாவும் ட்ரெயின்ல வரட்டும், என்ன நான் சொல்றது?'

'நல்ல ஐடியா அக்கா'. சிரித்துக் கொண்டே நீரஜா.

'அம்மா கிட்ட கேட்டுக்கறேன்' என்று மாலதி சொன்னதும், 

'வேற வெனையே வேண்டாம். தானும் சந்துருவும் ட்ரெயின்ல வரோம்னு சொல்லிடுவா. நீ வேணா பாரேன்'

தோசை ஒவ்வொன்றாக போட்டாள் இருவருக்கும்.

'இப்பத்தான் சச்சு வந்துட்டு போனா. அவ பொண்ணு ஆத்துல இல்லையாம். அதனால அவ மட்டும்தான் வரா. எமகண்டம் முடிஞ்சோண்ண இங்க வர சொல்லிட்டேன்.'

இவர்கள் சாப்பிட்டு முடியும்போது, ராஜி வந்தாள்.

'அண்ணு குட்டி, என்ன சூப்பரா ஒரு கல்யாணத்த முடிச்சுட்டேள் போல இருக்கே.'

'நான் எங்கேடி முடிச்சேன். ஏதோ அம்பாள் மாலதி பக்கம் இருந்தா. நல்ல படியா போயிண்டிருக்கு. அப்படியே லலிதாவுக்கும் முடிஞ்சுட்டா...'

'அப்படியே ஒங்க சந்தா கல்யாணத்தையும் முடிச்சுடுவேளாக்கும்.'

எல்லோரும் சிரித்தார்கள். 'ஆனாலும் மாமி கெட்டிக்காரிதான். ஜானாவோட வருங்கால மாமியார் உங்களோட ஃப்ரெண்டாமே. உங்க நல்ல மனசுக்கு எப்படியெல்லாம் அமையறது பாருங்கோ?'

'அது இருக்கட்டும். சச்சு பொண்ணு வரலையாம். அதனால நானும் சந்தாவும் ட்ரெயின்ல வரோம். நீ இவாள அழைச்சுண்டு அங்க வந்து சேந்துடு.'

'அண்ணு கிழவி, இப்ப நான் சொல்றபடிதான் நீங்க கேட்கணும். மாலாவும் ஒங்க சந்தாவும் ட்ரெயின். நாமெல்லாம் என்னோட காரில். ஓகேவா?'

'சொன்னா கேளுடி, ஏதாவது அவாத்துல தப்பா நெனச்சுக்கப் போறா டி. நானே வயத்துல நெருப்ப கட்டிண்டு அலையறேன், கண் திருஷ்டி படாம இருக்கணுமேன்னு.'

'அதெல்லாம் இல்ல. அவா ரெண்டு பேர் மட்டும் ட்ரெயின். சொல்லிட்டேன். இதுக்கு நீங்க மாட்டேன்னு சொன்னா, நான் வரல நிச்சயதார்த்தத்துக்கு.'

'என்ன மாலதி உம்முனு இருக்க. அவ ஏதேதோ சொல்றா. நீ கமுக்கமா இருக்கே. எல்லாரும் பேசி வெச்சுண்டு ஏதோ பண்றேள்னு தெரியறது.'

'உங்க ரெண்டு பேர் பிரச்சனைய நீங்களே பார்த்துக்கோங்கோ அம்மா'.

நீரஜா எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.

'சரி, அவன் எங்கே, உருப்படாதவன்.'

'வாசல்ல அவன் ஃபரெண்டோட பேசிண்டிருக்கான். அவன் கிட்ட சொல்லிப் பாரேன்..வீட ரெண்டு பண்ணிடுவான்.'

ராஜி திட்டம் போட்டது போலவே ஒன்றரை மணி முடிந்ததும் மாலாவுடன் சந்துரு கிளம்பினான் ட்ரெயின் பிடிக்க. இன்னும் அரை மணி நேரத்தில் மற்றவர்களும் ராஜி காரில்.

ரெயிலில் கூட்டம் சிறிதும் இல்லை, ஞாயிற்றுக் கிழமை ஆதலாலும், ப்பீக் அவர்ஸ் இல்லாததாலும்.

இருவரும் பக்கத்தில் பக்கத்தில். இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவள் அருகில் அமர்ந்து கொண்டு வந்தான்.

'என்ன இவர், முனிவர்னு நினைப்பா?' மாலதியின் மனம் சற்று ஸ்பரிசத்திற்கு ஏங்கியது.

சட்டென்று அவன் தோளில் முகம் புதைத்து அவன் கட்டியிருந்த கைகளை விலக்கி ஒரு கையை தன் கையோடு இணைத்துக் கொண்டாள்.

எதிர் பார்க்கவில்லை அவன். நெஞ்சு பட பட. என்ன செய்வதென்றும் தெரியவில்லை அவனுக்கு. என்ன வித்தியாசமா இன்னிக்கு இவள். கையை பிரிக்க நினைக்கும் அவன் மனம், அதே மனம் தடுக்கவும் செய்கிறது. அவன் அவனாக இருக்க முயற்சிக்கிறான். முடியவில்லை.

அவன் சட்டையில் பெருத்த ஈரம். அழுகிறாளா? எஸ். ஏன்? புரியவில்லை. நிலைமையை அவன் வசம் கொண்டு வருகிறான் மெள்ள மெள்ள.

'ஏய், என்ன அசடாட்டம். ட்ரெயின்ல யாராவது பார்க்கப் போறா.'

'பார்த்தால் பார்க்கட்டும்' விசும்பலோடு அவள் தைரியம்.

சற்று நேரம் அமைதி காக்கிறான். 'லெட் மீ கிவ் ஹர் சம் டைம் டு ரிலாக்ஸ் பை ஹர்ஸெல்ஃப்'.

'என் மேல கோபமா? நான் உங்களோட பேசலைனு?'.

இப்போது அழுகை இல்லை. ஆனால் கெஞ்சும் குரல்.

'அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் தான் தேவையில்லாம உன்னை ராஜி ஆத்துல ஃபீல் பண்ண வெச்சுட்டேன்னு நெனைக்கிறேன்.'

'என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா'. இந்த கேள்வி அபத்தம்னு அவளுக்கே தெரியாதா என்ன? இருந்தாலும் கேட்டாள்.

'புடிக்காது. இப்ப என்ன' இதுவும் அபத்த பதில்னு இருவருக்கும் தெரியாதா என்ன?

விருட்டென தன் கையை விலக்கிக் கொண்டாள் அவனிடமிருந்து. கோபத்தை காட்டுகிறாளாம்.

இப்போது அவள் கையை பிடித்து இழுத்து தன் கையுடன் சேர்த்துக் கொள்கிறான்.

'உன் கேள்வி எவ்வளவு தப்போ, அதே அளவு என் பதிலும் தப்பு. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். எவ்வளவு பிடிக்கும்னு கேட்கப் படாது. அளவே இல்லாமல் பிடிக்கும். போதுமா.'

தலையை குனிந்து கொண்டே அவன் விரல் ஒவ்வொன்றிலும் சொடக்கு போட முயற்சித்துக் கொண்டே வந்தாள்.

சைதாப்பேட்டை தாண்டிவிட்டது ட்ரெயின். அடையாற்றின் மேலுள்ள பாலத்தில் இப்போது. தடக் தடக் சத்தம், இவர்கள் மனங்கள் போடும் சத்தத்தை போல.

மாம்பலம் வந்தாச்சு. இறங்கியாச்சு.

வழிந்த கண்ணீருக்கு கர்சீஃப் தேவைப் பட்டது அவளுக்கு. இவனே கொடுத்தான். முதன் முறை ஒரு ஆணின் கர்சிஃப். அவள் கண்களை துடைத்த போது கர்சீஃபில் இருந்த இவன் வாசம் அவளுக்கு உஷ்ணத்தை கொடுத்து மனதை தேற்றியது.

தொடரும்

No comments:

Post a Comment