Saturday, January 22, 2022

மனதோடுமலர்கள்_69

மனதோடுமலர்கள்_69

அத்யாயம் 69

கதையாசிரியர்: பாஸ்கர் சத்யா 

சனிக்கிழமை காலை பதினோறு மணி. திருப்பூரிலிருந்து வைத்தீஸ்வரன் பேசினார்.

'மாமி, அவர் ஃபேமிலி அக்கமொடேஷனுக்கு ஒத்துண்டுட்டார். ஆனா, அந்த பையன் அங்க வேலையில சேருவதற்கு முன்னாடி கல்யாணப் பத்திரிக்கையை ஏர் மெயிலில் அனுப்ப சொன்னார். நீங்க அவாகிட்ட பேசி எப்படி பண்ணனுமோ பண்ணிக்கோங்கோ. என் நம்பரையும் அந்த பையனாத்தில கொடுத்து என் கிட்ட பேச சொல்லுங்கோ. நான் பேசிக்கறேன்.'

'அப்புறம் மாமி, லலிதாவுக்கு பாஸ்போர்ட் இருக்காதுன்னு நெனைக்கிறேன். மாலதிய என் கிட்ட பேச சொல்லுங்கோ. நான் அவ கிட்ட எப்படி அதுக்கு ஏற்பாடு பண்றதுன்னும் சொல்றேன்.'

சந்தோஷத்திற்கு அளவே இல்லை அண்ணுவுக்கு. 'லலிதா ரொம்ப அதிர்ஷ்டக்காரி. பிள்ளையாரப்பா, அந்த கொழந்தைக்கு எல்லாத்தையும் விக்னமில்லாம முடிச்சு கொடப்பா.'

இப்ப அம்பாளை விட்டுவிட்டு பிள்ளையாரை பிடித்துக் கொள்கிறாள். காரியத்துக் கேத்தவாறு வேண்டுதலை வைக்க ஸ்வாமிகளா பஞ்சம்?

மாலதியின் புதுவீட்டிற்கு செல்கிறாள். அப்போது அங்கு சமையலறையில் பிஸியாக இருந்தனர் இருவரும்.

விவரத்தை மாலதியிடம் சொன்னாள். 'அம்மா, சாப்பாடெல்லாம் முடிச்சிட்டு ரெண்டு மணிக்கு நம்மாத்துக்கு வந்து அவரோட பேசி என்ன செய்யணுமோ செய்யறேம்மா. நீங்க விஜாரப்படாம இருங்கோ.'

'நேரம் கூடி வந்துண்டிருக்கும்போது அஸமஞ்சமா இருந்துடாதீங்கோ. அவ்வளவு தான் எனக்கு வேணும்.'

மாலதி இரண்டு மணிக்கு வந்து வைதீஸ்வரனோடு பேசி விவரங்களை அறிந்து கொண்டாள். அப்பாவிடம் பேசினாள். ட்ரான்ஸ்ஃபார்மர் வேலைகளில் தான் பிஸியாக இருப்பதாகவும் எப்படியாவது அவளையே எல்லாவற்றையும் முயற்சி செய்யுமாறு சொல்லிவிட்டார்.

லலிதாவை அழைத்துக் கொண்டு மாம்பலம் வந்து ஸ்ரீமதியை சந்தித்தாள். விவரங்கள் விவாதிக்கப் பட்டன.

புதன் கிழமை மாலை லலிதாவை க்ரோம்பேட்டை புது வீட்டில் வைத்து ஒரு ஃபார்மலாக பெண் பார்க்க வருவதற்கு சம்மதம் தெரிவித்தார்கள் பட்டாபி வீட்டிலிருந்து. 

வேலூரிலிருந்து பெற்றோர்கள் மற்றும் ஜானா அன்று காலையே வருவது நிச்சயம் ஆயிற்று. திருப்பூரிலிருந்து வைதீஸ்வரன், உமா, மற்றும் கற்பகம் சுரேஷுடன் வர சம்மதித்திருந்தனர். மில்லில் முக்கியமான காரணத்தால் ஸ்ரீதர் வர இயலவில்லை.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, நம் சந்துருவோ புது பதவியில் வேலைப் பளுவில் காதலிக்க கூட நேரமின்றி அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தான்.

மாலதி மெட்ராஸ் வந்தும் இருவரும் தனித்து பேசிக்கொள்ள முடியாத நிலை.

லலிதாவை பெண் பார்த்தாகி விட்டது.

ஒருபுறம் முகூர்த்த நாள் குறிப்பு மற்றும் லலிதா கல்யாண லௌகீக பேச்சுக்கள். இன்விடேஷன் பிரிண்ட் அடிக்க வேண்டுமே?

இன்னொரு புறம் சந்திரசேகருக்கு தெரிந்த பாஸ்போர்ட் ஏஜெண்ட் மூலம் பாஸ்போர்ட் ஏற்பாடுகள். மூன்று ஜோடிகளுக்கும், பட்டாபி நீங்கலாக (அவனுக்கு ஏற்கனவே இருந்ததால்).

ஏன் மூன்று ஜோடிகளுக்கு? சந்திரசேகர் மற்ற இரண்டு ஜோடிகளுக்கு சிங்கப்பூரில் ஹனிமூன் வைத்துக் கொள்ளலாம் என்று உத்தேசித்தார், மற்றவர்கள் சம்மதத்தையும் பெற்றார்.

மாலதி தன் வருங்கால மாமியாரையும் சிங்கப்பூர் அழைத்து செல்ல விருப்பபட்டதால் அண்ணுவுக்கும் பாஸ்போர்ட் ஏற்பாடுகள் இவர்களோடு.

ஜானாவிற்கும் லலிதாவிற்கும் ஜனவரி மாதம் 27ம் தேதி ஒரே மேடையில் இரு வேறு லக்னங்களில் மெட்ராஸில் திருமணங்கள் தீர்மானமாயிற்று.

மாலதி கல்யாணமாவது தன் சொந்த ஊரான வேலூரில் நடக்க ஸ்ரீனிவாசன் விருப்பப்பட்டதால் அவர்கள் திருமணம் மாத்திரம் ஒரு மாதம் தள்ளிப் போனது.

அண்ணு மனதில் சற்று வருத்தமே. தன் பிள்ளை கல்யாணம் மாத்திரம் ஒரு மாதம் தள்ளிப் போனதில். என்ன செய்வது? சில விஷயங்களில் அனுசரித்துதானே போக வேண்டியிருக்கிறது?

ஸ்ரீமதி தன் பையன் கல்யாணம் மெட்ராஸில் தான் நடத்தப் படவேண்டும் என்றதாலும், சிங்கப்பூரில் பட்டாபிக்கு உள்ள அக்கமாடேஷன் மற்றும் விசா பிரச்சனையாலும், ஜானா மற்றும் லலிதா திருமணங்கள் மெட்ராஸில் ஒரு தேதியில்.

அண்ணு ஸ்ரீமதியிடம் வருத்தப் பட்டு அழுதே விட்டாள். ஸ்ரீமதி 'ஒரு மாசம்தானே தள்ளிப் போகிறது. சகோதரிகள் கல்யாணங்கள் ஒரே நாளில் ஒரே மேடையில் நடப்பதும் திருஷ்டி படும்னு சொல்றா. சந்துரு கல்யாணம் ஸ்பெஷல் கல்யாணம் இல்லையா? அதனால ஸ்பெஷலா அவா ஊரில் நடக்கறதுன்னு எடுத்துக்கோ அண்ணு. என் பையன் விவாஹம் ஒரு மாதம் தள்ளிப் போனாலும் பரவாயில்ல. ஆனா, கோமதி பையன் உத்தியோக பிரச்சனையும் பார்க்க வேண்டியிருக்கே. ஜானா மூத்தவளா இல்லைனா கூட எப்படியாவது அனுசரிக்கலாம்.'

'பரவாயில்லை ஸ்ரீமதி. எல்லாம் நல்லதுக்குனு எடுத்துக்கறேன்.'

தொடரும்

No comments:

Post a Comment