Friday, January 14, 2022

செருவாமணி 25

 செருவாமணி 25

Written by Baskar Sathya 

'பொண்ண அழச்சிண்டு வரேளா? பையன் பார்க்கட்டும்.'

இன்னும் கொஞ்சம் அலங்காரம் மிச்சமிருக்கே.  கம்மல் மாட்டணும், குண்டு மல்லிச் சரம் சூடணும்.  டிசம்பர் கனகாம்பரம் வெச்சு அழகை கூட்டணும்.  ஒரு நெத்திச்சுட்டி.  ச்சோக்கர் டைப்பில் ஒரு நெக்லஸ் கழத்தை ஒட்டி.  கூடவே ஒரு செயின் திக்கா, ரெட்ட வடம் மாதிரி.  கத்துரிப்பூ கலர் புடவைக்கு எடுப்பா ஒரு சிரிப்பை சேர்த்து அனுப்பணும்.  பாலு டாக்டரே வெட்கத்தை காட்டணும்.  மெட்ராஸுக்கு திரும்பறதுக்குள்ள ஓகே சொல்லணும்.

'டிஃபன் எல்லாம் ஆறிண்டிருக்கன்னா.  முதல்ல சாப்பிடலாமே? அவாளும் மெட்ராஸிலேந்து டயர்டா வந்திருப்பான்னா?'

அலங்காரம் இன்னும் கொஞ்ச நேரம் பிடிக்கும்னு டாக்டர் மூர்த்தி புரிஞ்சிண்டார்.

'என்னடா பாலு.  டிஃபன் சாப்பிடற வரை பொறுக்கலாம் தானே?'

கூச்சத்துடன் ஒரு நெளியல் எஸ் அவனிடமிருந்து.

'மாப்பிள்ளையாத்துக்காரா முதல்ல சாப்பிடட்டும். ஊர்க்கார நாங்க அப்புறம் சாப்பிடறோம்.'

வேணு மாமா சொல்லிவிட்டு பரிமாறல் களத்தில் குதித்தார்.

'மாப்பிள்ளையும் அவர் அப்பாவும் சேர்லியே உட்காரட்டும். அவா முன்னாடி ஒரு ஸ்டூல போடுங்கோ செருவாமணி.'

மற்றவர்கள் முற்றத்தை சுற்றி. முற்ற விளிம்புகளில் உள்ள தூண்கள் சற்று சாய்மானத்திற்கு.

'சொஜ்ஜி பிரமாதம்.  பொண்ணு செஞ்சாளான்னு கேட்க மாட்டேன். அப்புறம் நீங்க பொய் சொல்லுவேள்னு எனக்கு தெரியாதா என்ன?  சின்ன குழந்தை அவள்.  அனுபவத்துல சமையல் கத்துக்கறது ஒரு பெரிய விஷயமே இல்லை.'

டாக்டர் மூர்த்தி வெளிப்படையாகவும் எதார்த்தமாகவும் பேசியது ஊர்க்காராளுக்கு பிடித்திருந்தது.

சேஷாத்திரி மாமா உடனே, 'டாக்டராத்துல டாக்டர்தான் சமையலோ?' என்று கிண்டலடித்தார்.

'என் பையன் லைஃப் எனக்கு முக்கியம் ஓய்.  அந்த ரிஸ்கெல்லாம் நான் எடுக்கறதில்ல.  என் ஆத்துக்காரி தையு சமச்சாலே என் பையன் ஆயிரத்தெட்டு நொட்டு லொள்ளு சொல்வான்.'

எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.

'என் பொண்ணு உப்புமுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி சமைக்கவே தெரியாது.  இப்ப அவ ஆத்துக்காரர் ஆஹா ஓஹோங்கரார் அவ சமையலுக்கு.  பொதுவா ஆத்துக்காரி சமையல யாராவது விட்டு கொடுத்து பேசிட முடியுமா என்ன?'

சொஜ்ஜி ரௌண்ட் முடிந்தது.  இப்ப பஜ்ஜி டர்ண்.

'உங்காத்து மாமிக்கு மோதிரம்   பண்ணி போடுங்கோ.  பிரமாதமா இருக்கு எல்லாம்.'

'எல்லோருமே சாப்பிடுங்கோ.  அப்புறமே பொண்ண கூப்பிடலாம்.'

வந்திருந்த எல்லா ஆண்களும் சாப்பிட துவங்கினார்கள். குழந்தைகளையும் சாப்பிடச் சொன்னார் மூர்த்தி.

தெருக்காராளோடு அவர் சங்கோஜமில்லாமல் பழகியது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.  அவரே சட்டினி வாளியை தூக்கிக் கொண்டு உபசரித்தது கொஞ்சம் டெலிகேட்டா உணர்ந்தாலும் ரசித்தார்கள்.

'இப்பவாவது வருவாளோண்ணோ பொண்ணு?'

இதோ.  வருகிறாள்.  தலையைக் குனிந்து கொண்டு, மெல்ல மெல்ல.  தலையை குனிந்து கொண்டிருந்தாலும் பார்வை மற்றும் அவ்வப்போது முடிந்த வரை போய்க் கொண்டிருந்தது, யாரும் பார்க்காத அளவில்.

'அம்மா, அப்படியே ஜமக்காளத்துல உட்கார்ந்துக்கோம்மா.  வெட்கமா இருந்தா ஃப்ரெண்ட்ஸ பக்கத்துல கூப்டுக்கோ.'

'பாலு, நன்னா பார்த்துக்கோ.  அப்புறம் மெட்ராஸ் வந்து சரியா பார்க்கலைனு சொல்லக் கூடாது என்ன.'

'உன் பேரென்னம்மா?'

செருவாமணி முந்திக் கொண்டு நந்தினி என்றார்.

'அவளுக்கு பேசத் தெரியாதா என்ன?  அவ சொல்லட்டும்.'

பதில் சொல்லவில்லை நந்தினி.

'சொல்லும்மா, நானும் உங்க அப்பா மாதிரி தான்.  சொல்லு.'

'நந்தினி'

'ஆத்துல இப்படித்தான் கிணத்துலேந்து பேசற மாதிரி பேசுவியா?  சத்தமா சொல்லு.'

எங்கே போனது இவளது கணீர் குரல்?  செருவாமணிக்கே ஆச்சர்யம்.

'சரி, சினிமா பாட்டு தெரிஞ்சா ஒண்ணு பாடு.  பாலுக்கு ஜெமினி கணேசனை ரொம்ப பிடிக்கும்.  அவன் படத்திலேந்து ஏதாவது பாடு.  இல்ல, கர்நாடக சங்கீதம் தெரிஞ்சா பாடு.'

அவளை பாடு பாடு என்று அவள் தொடையை தட்டிக் கொண்டே இருந்தார்கள் ப்ரியாவும் ப்ரபாவும்.  குமுதா நானும் சேர்ந்து பாடுகிறேன், தைரியமா பாடு என்றாள்.  அவர்கள் கைகளை விலக்கிக் கொண்டே தலையை குனிந்து கொண்டே இருந்தாள் நந்தினி.

சற்று நிஸப்தம்.  யாரும் பேசவில்லை.  தப்பிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டாள்.

'என்ன பாட்டு பாடறது?'. 

அவள் கேட்டது மிக மெல்லிய குரலில் ப்ரியாவிடம்.

நிலவிய நிஸப்தத்தில் டாக்டர் மூர்த்தி காதிலா அது விழவேண்டும்.

'கே பி சுந்தராம்பாள் பாட்டு வேண்டாம்.  பி.சுசீலா பாட்டு பாடு.'

எல்லோரும் சிரித்து விட்டார்கள்.  மீண்டும் வெட்கம்.  இந்த முறை கொஞ்சம் சந்தோஷ அழுகையும் சேர்ந்தது.

சமையலுள்ளில் விசாலத்துடன் பேசிக் கொண்டிருந்த டாக்டர் மூர்த்தியின் சித்தி பெண் திரிபு அங்கு வந்தாள்.

'அண்ணா, அவ சின்ன குழந்தை.  அவள போய் இப்படி கலாட்டா பண்றேளே.  நீ சங்கோஜப் படாம பாடுமா.'

அப்பன்னு பார்த்து இந்தப் பாட்டா வரணும் வாயிலேந்து?

'தனிமையிலே இனிமை காண முடியுமா?

நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?...'

மீண்டும் கலாட்டா டாக்டர் மூர்த்தியிடமிருந்து.

'இந்த பாட்டுக்கு என் பையன்தான் பதில் சொல்லணும்.  கேட்டுட்டு சொல்றேம்மா.  கொஞ்சம் பொறுத்துக்கோ என்ன?'

அவளாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.  கர்சீப்பால் வாயை அழுத்தி மூடிக் கொண்டாள்.

அப்போது ஒரு பெரிய ட்ரேயில் காஃபி டபரா டம்ளர்களோடு வந்தது.  விசாலம், நந்தினியிடம் கொடுத்து 'பெரியவாளுக்கெல்லாம் கொடும்மா.  முதல்ல மாப்பிள்ளைக்கு.'

தட்டை நீட்டிக் கொண்டே ஒரு பார்வை அவனிடத்து.  பரிமாற்றமும் அவனிடத்திலிருந்து.

'ஐ டோன்ட் டேக் காஃபி.'. அவளிடம் சொன்னான்.  இப்போது என்ன செய்வது என்று அவளுக்கு புரிபடவில்லை.

'பாலு, ஒரு நாள்தானே.  எடுத்துக்கோ.  முதல் முதல்ல கொடுக்கறா.  மறுக்காதே.  நான் அவா கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கணும் நீ பால் தான் சாப்பிடுவேன்னு. மறந்துட்டேன்.'

'அதனால என்ன.  பாலை எடுத்துண்டு வரச் சொல்றேன்.'

'இல்லை செருவாமணி சார்.  பரவாயில்லை.  இதுல சென்டிமெண்ட் அது இதுன்னு ஏகப்பட்டது இருக்கு.  உங்க குழந்தை மனசு கஷ்டப் படக் கூடாது.  அவன் குடிப்பான்.'

எப்பேற்பட்ட குணம் டாக்டர் மூர்த்திக்கு

'சரி.  லேட்டாகிறது...பொண்ணுக்கு பையனையும் பையனுக்கு பொண்ணையும் புடிச்சிருக்கான்னு கேளுங்கோ.  நேரம் வேற ஆயிண்டிருக்கு.  மெட்ராஸுக்கு திரும்பணும் வேற.'

கோபு மாமா சற்று டாக்டர் மூர்த்தியைப் பார்த்து பேச்சுக்களை திசை திருப்பினார்.

'என் பொண்ண பத்தி கவலைப் படாதீங்கோ.  நாங்க சரின்னா அவளும் சரிங்கப் போறா.  எங்களுக்கு இந்த சம்பந்தத்தில இஷ்டம்.'

'இல்லை செருவாமணி சார். அவ சம்மதத்தை அவ கிட்ட கேட்கறதுதான் முறை.  நாம குணத்துக்கு வேணா உத்தரவாதம் கொடுக்கலாம்.  ஒருத்தொருக்கொருத்தர் அழகு அவாதான் தீர்மானிக்கணும்.  கேளுங்கோ.'

உள்ளே சென்றார்.  கேட்டார்.  திரும்பி வந்தார்.  'பிடிச்சிருக்குன்னு சொல்றா.'

'என்னடா, நீ என்ன சொல்ற?'

'அப்புறம் சொல்றேம்ப்பா?'

'எப்போ?  ஊருக்குப் போய்யா?'

'ம்ம்ம்'

'என் பையன் இந்த விஷயத்துல ஷை டைப்புனு நெனக்கிறேன்.  எனக்கு உங்க பொண்ண மாட்டுப் பொண்ணா ஏத்துக்கறதுல பரிபூரண சம்மதம்.  ரெண்டு நாள்ல பையன் சம்மதத்தை கேட்டு ஃபோன் பண்றேன்.  என் பையன் உடனே சொல்லலைனு எனக்கே வருத்தம்தான்.'

'இன்னிக்கு பிள்ளையார் கோவில்ல சந்தன காப்புக்கு சொல்லியிருக்கோம்.  நீங்களும் பார்த்துட்டு கிளம்புங்கோளேன்.'

'இல்லை டைம் இல்லை.  நாளைக்கு அவன் ஒரு மெடிகல் கேம்ப் போகணும்.  நாங்க எல்லோரும் ராஜகோபால ஸ்வாமிய பார்த்துட்டு, அப்படியே கிளம்புறோம்.'

'நா வேணா...'

'வேண்டாம் சார்.  வந்தவாள கவனிங்கோ.  சந்தன காப்பு வேற சொல்லியிருக்கேள்.  கார்த்தால்லேந்து அலைச்சலா இருந்திருக்கும் உங்களுக்கு.  நாங்க பார்த்துக்கறோம்.'

விடை பெற்றுக் கொண்டனர்.  வெற்றிலை பாக்கு மற்றும் இதர மரியாதைகளோடு செருவாமணி தம்பதியினரும் தெரு மக்களும் வழி அனுப்பி வைத்தனர்.

அவர்களை அனுப்பிவிட்டு அவர்கள் அழைப்பிற்கு மதிப்பளித்து வந்த அனைவரையும் நன்றி சொல்லி அனுப்பி வைத்தனர்.

எல்லோர் நம்பிக்கையும் இந்த வரன் கண்டிப்பாக முடியும் என்பதாகவே இருந்தது.

தொடரும்...

No comments:

Post a Comment