தப்பு மருந்து - சுஜாதா
(கற்றதும் பெற்றதும்)
நன்றி திரு. Jayaraman Raghunathan
ஒரு தாட்டியான பெண்மணி கதறிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குள்ளே ஓடிவந்தாள். இரண்டு மூக்கிலும் பேஸரி பளிச்சிட்டது. நடு பாகம் சிவந்திருந்தது.
"டாக்டரைப் பாத்தே ஆகணும்"
"விஷயம் என்ன சொல்லு. டாக்டரை எத்தனை தரம் பாக்கறது?
இப்பதான மருந்து வாங்கிண்டு போன?"
அவள் கையில் இருந்த மருந்து பாட்டிலைக் காட்டினாள். "லேபிள்ல என்ன பேர் போட்டிருக்குப் பாருங்கோ, கோவிந்தராவ்"
அவர் கண்ணாடி மாட்டிக்கொண்டு "மகாலட்சுமினு போட்டிருக்கு. நீ அலமேலு, சாப்ட்டுட்டியா இதை?'
"ஒரு வேளை சாப்ட்டாச்சு, படபடன்னு வரது. வயத்தை என்னவோ பண்றது. தலைசுத்தறது. டாக்டரைப் பாக்கணும் எனக்கு. இப்படித்தான் எச்சுமிப் பாட்டி தப்பு மருந்து சாப்ட்டு கிஷ்ணாம்பேட்டை கொண்டு போய்ட்டா. அய்யோ.. நான் என்ன செய்வேன், ஏது செய்வேன் ! பாரும். ஓய்! மாட்டுப்பொண்ணு பாத்திருக்கா. கமுக்கமா அவுன்ஸ் கிளாஸ்ல ஊத்திப் பரிவா 'சாப்டுங்கோ அம்மா'னு கொடுக்கறா.'
"கூவாதே, கூவக்கூடாது. அந்த பாட்டிலைக் கொடு." கொடுத்தாள். அதில் இன்னும் இரண்டு வேளை மருந்து பச்சையாக பாக்கியிருந்தது. '
"அய்யோ..கண் இருட்டறதே! என்ன ஆகுமோ?"
"ஒண்ணும் ஆகாது. உம் பேரு அலமேலுதானே?" கோவிந்தராவ் தன் பேனாவை எடுத்தார். மகாலட்சுமி என்று எழுதியிருந்ததை அடித்து அதன் மேலேயே அலமேலு என்று எழுதினார்.
"இந்தா.. சரியாப்போச்சு. இனிமே தலைசுத்தல் வராது."
அந்தப் பெண்மணி இதைப் பிரமிப்புடன் பார்த்து, "அப்படியா சொல்றேள். நல்லவேளை தப்பு மருந்தை சாப்ட்டிருந்தேன்னா இத்தனை நேரம் மாட்டுப்பொண் பச்சை மூங்கிலுக்கு சொல்லி இருப்பா" என்று புன்னகைத்துக் கொண்டே சென்றாள்.
No comments:
Post a Comment