Friday, January 14, 2022

செருவாமணி 27

 செருவாமணி 27

Written by Baskar Sathya 

'அப்பா எங்கம்மா?'

'எங்கேன்னு தெரியலையே.  கோவில்லேந்து வந்து பிரசாதம் கொடுத்துட்டு போனா.  அப்புறம் காணல.'

விசாலம் அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே செருவாமணி உள்ளே நுழைந்தார்.  கையில் இரண்டு பொட்டலங்கள்.

'எங்க போயிருந்தேள்?  கையில என்ன?'

'ஒண்ணுமில்ல டி.  கடையத் தொறந்து ஓமம் அரை கிலோவும், கிராம்பு அரை கிலோவும் எடுத்துண்டு வந்தேன்.'

'இப்ப எங்கன்னா இத அரைக்க முடியும்?  நாளைக்கு கார்த்தால நந்து திருச்சி போகணும்.'

'எப்படியும் நான் தான் கூட போகப் போறேனே. அங்கேயே அரைச்சு அவ கிட்ட கொடுத்தா போறது.'

எப்படியோ டாக்டர் மூர்த்தி சொன்ன வைத்தியத்திலாவது நந்துவுக்கு குணமாகாதா இந்த வயத்து வலி என்கிற எதிர்பார்ப்பு அவருக்கு.

'இப்ப தேவலாமா நந்து உனக்கு?  கவலைப் படாதே.  பகவானா பார்த்துத்தான் உனக்கு டாக்டர் வரனா கொண்டு சேர்த்திருக்கார்.'

'ஆமாஆஆஆம்.  நாமதான் சொல்லிண்டு அலையணும்.  பையன் சரின்னு ஒரு வார்த்தை சொல்லல.'. விசாலம் தன்

ஏக்கத்தை வெளிப்படுத்தினாள்.

'அப்பா.  உங்க மனசு சங்கடப் படக் கூடாதேன்னுதான் நான் சரின்னு சொன்னேன்.  எனக்கு மேல படிக்கணும்னுதாம்பா ஆசை.  அந்த பையன் வேண்டான்னு சொன்னாக் கூட எனக்கு சந்தோஷம்தான்.'

'அச்சு பிச்சுன்னு ஒளறாதே.  மாப்பிள்ளயாத்துல எப்போதுமே முடிவ பட்டுன்னு சொல்ல மாட்டா.  பையன் உன் அழகுக்கு ஏத்த மாதிரி ஜம்முனு இருக்கான்.'

'சரி. சரி.  இப்ப என்ன பேச்சு.  சாப்டுட்டு படுத்துக்கலாம்.  எனக்கும் சோர்வா இருக்கு.  நாளைக்கு வேற சீக்கிரம் எழுந்துக்கணும்.'

உண்மைதானே.  கார்த்தாலேந்து அலைச்சல் ரெண்டு பேருக்கும்.

மறுநாள் நந்தினியோடு திருச்சி கிளம்பினார்.  ஹாஸ்டலில் அவளை கொண்டு விட்டுவிட்டு மருந்துப் பொடியையும் அரைத்து அவளிடம் சேர்த்துவிட்டு மன்னார்குடி திரும்பினார்.

'ஹாஸ்டல்ல வார்டன் கிட்ட சொல்லி மோர் வாங்கி மறக்காம டெய்லி வாங்கி பொடிய கலக்கி குடிச்சிண்டு வரையா செல்லம்?'

மறக்காமல் இந்த அறிவுரையையும் கொடுத்தார்.

அந்த வாரம் சீரா கஷாயம் அனுப்பிச்சு  கடுதாசி வந்ததே தவிர சீனிச் செய்தி அது கொண்டு வரவில்லை.

ஏதாவது கடைக்கு ஃபோன் வந்ததான்னா என்று விசாலமும் ஆத்துக்கு ஏதாவது ஃபோன் வந்ததா என்று செருவாமணியும் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருந்தனர்.

பெண் பார்க்கும் போது வந்திருந்த ஓரிருவரும் அவர்களிடம் ஏதாவது தகவல் வந்ததா மாப்பிள்ளை ஆத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்கும் அடுத்த ஞாயிறு.  காலை பத்து மணியிருக்கும்.  செருவாமணி சித்தப்பா வீட்டுக்கு சென்றிருந்தார்.

ஆத்து வாசலில் ஒரு காரிலிருந்து அழகான பெண்ணும் ஒரு இளவயது ஆணும் இறங்கினர்.

'செருவாமணி பாலு மாமா ஆம் இதுதானே?  நந்தினி....?'

இழுத்து கேட்கும்போதே புரிந்தது விசாலத்திற்கு.  வந்தவள் பையனுக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று.

'என் பேர் மீரா.  உப்புமுன்னு கூப்பிடுவா.  போன வாரம் உங்க பொண்ண பார்த்துட்டுப் போனானே பாலச்சந்தர்.  அவனோட சகோதரி நான்.  கனடாலேந்து நேத்திக்குதான் வந்தோம்.  இவர் என் ஆத்துக்கார்.'

கேட்கவா வேணும் விசாலத்தின் சந்தோஷத்தை.

'வாங்கோ, வாங்கோ.  மாமா இப்பத்தான் வெளிய போனார்.  வந்துடுவா.  உட்காருங்கோ.'

'நந்தினி இருக்காளா?'

'அரையாண்டு பரிட்சை முடிஞ்சு நேத்திக்குதான் வந்தா.  கூப்பிடறேன் இருங்கோ.  நந்தினீஈஈஈஈஈ.'

புன்சிரிப்பு உப்புமுவிடமிருந்து நந்தினிக்கு.

'ரொம்ப அழகா இருக்காளே.  என் கண்ணே பட்டுடும்போல இருக்கே.'

'கூச்சப்படாம என் பக்கத்திலேயே உட்காரும்மா.'

பிறகு என்ன படிக்கிறாய், எப்படி போகிறது படிப்பு அது இதுன்னு கொஞ்சம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

செருவாமணியும் வந்துவிட்டார் இவர்கள் பேசிக் கொண்டிருந்த போது.  விசாலம் அவரிடம் உப்புமுவை அறிமுகம் செய்து வைத்தாள்.

'மாமா.  என் தம்பி சித்த கூச்ச சுபாவம்.  அதனால உடனே இங்கேயே பதில் சொல்லல.  நான் போனவாரமே கனடாலேந்து வந்திருக்க வேண்டியது.  இவருக்கு கிளம்ப முடியாம போச்சு.'

'அப்பா ஏதோ சூரணம் அனுப்பிச்சதா சொன்னாரே. வந்துடுத்தா?'

'உங்க பொண்ண அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு.  எனக்கும் ரொம்ப பிடிச்சுப் போச்சு.  பாலுதான் MD முடிச்சிட்டுத்தான் பண்ணிப்பேன்னு அடம் பிடிக்கறான்.  கொஞ்சம் பொறுத்துக்க முடியுமா உங்களால.'

இங்கிதத்தோடு நந்தினி அங்கிருந்து நகர, உப்புமு தடுத்தாள்.

'உன்னையும்தான் கேட்கறேன் நந்தினி.  கொஞ்சம் பொறுத்துக்க முடியுமா?'

என்ன பதில் சொல்ல என்று யோசித்துக் கொண்டு அப்பாவைப் பார்த்தாள்.  அவரும் பேசவில்லை.

'உங்கள அக்கான்னு கூப்பிடலாமா?'

'ஓ.  தாராளமா.'

'அக்கா. எங்க அப்பா அம்மா படிக்காதவா.  நான் படிக்கணும்னுதான் ஆசப் படறேன்.  எங்க அம்மா அப்பா மனசு சங்கடப் படக் கூடாதுன்னுதான் நான் பொண் பார்க்கறதுக்கு தட சொல்லல.  எனக்கு IAS படிக்கணும்.  மார்ச் ஏப்ரல்ல டிகிரி எக்ஸாம் முடிஞ்சுடும்.  நான் மேற்கொண்டு படிக்க உங்காத்துல சம்மதிச்சா சந்தோஷப் படுவேன்.'

'ரொம்ப சந்தோஷம் நந்தினி.  இதுக்கு எங்காத்துல பிரச்சனை இருக்காது.  அவனுக்கும் MD அடுத்த வருஷம் முடிஞ்சுடும்.  நம்மாத்துல நீதான் வேலை செய்யணும்னு இல்ல.  நீ பாட்டுக்கும் படிக்கலாம்.'

'நான் இன்னும் ஒருவாரம் மெட்ராஸுல இருப்பேன்.  எங்கம்மா இருந்தா இதெல்லாம் அம்மாவே பார்த்துண்டு இருப்பா.  எங்கப்பாவுக்கு இதெல்லாம் எடுத்து பேச அன்னோன்யமா உறவுக்காரா இல்ல.  அவரும் ஆஸ்பத்திரி, பேஷன்ட்ஸுனு இருந்துட்டார்.  நான் கனடா போறதுக்குள்ள நிச்சயம் பண்ணிக்க முடியுமா?'

செருவாமணி ஆரம்பித்தார்.

'அம்மா.  எனக்கு நந்தினி ஒரே பொண்ணு.  நிச்சயத்தை எல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி அவ்வளவு சீக்கிரமெல்லாம் பண்ணிக்க முடியாது.  இந்த ஊர்க்காராள விடமுடியுமா?  சொந்தக்காரா கிட்ட சொல்லணும்.  மெட்ராஸுக்கு வந்து நிச்சயம் பண்ணினாலும் பத்து பதினைந்து பேரையாவது அழச்சிண்டு வரவேண்டாமா?'

'அதுக்கில்ல மாமா.  இப்ப நான் இருக்கும் போதே நிச்சயம் பண்ணிண்டா நான் கல்யாணத்தும் போது கனடாவிலேந்து வர சௌகர்யமா இருக்கும்.  கனடா என்ன பக்கத்துலயா இருக்கு?  அடிக்கடி வந்து போக.'

அதுவரை பேசாமல் இருந்த உப்புமுவின் ஆத்துக்காரர் முத்துகிருஷ்ணன் பேச ஆரம்பித்தார்.

'என்ன மீரா.  உன்னோட பிரச்சனையெல்லாம் அவா மேல திணிக்கப் படாது.  காதும் காதும் வெச்சமாதிரி நிச்சயம் பண்ற மாதிரி அவா ஏன் அவசரப் படணும்?  அந்த பொண்ணுக்கு அப்படி என்ன வயசாச்சு?  முதல்ல உன் தம்பிகிட்ட இன்னொரு தடவை பேசி சம்மதம் வாங்கி இவாளுக்கு தெரியப்படுத்து.  அப்புறம் அவா சௌகர்யப்படி லௌகீகம் அது இதுன்னு ப்ரொஸீட் பண்ணட்டும்.  எனக்கென்னவோ இந்த மாமா சொல்றதுதான் சரியா படறது.'

நல்ல வேளை செருவாமணிக்கு முத்துகிருஷ்ணனே தன் பக்க ஞாயத்தை சொன்னது ஆறுதலா இருந்தது.

'சரி மாமா.  நான் உங்க பொண்ண பார்த்துட்டு இந்த வரனை விடக் கூடாதேன்னு அவசரப் பட்டுட்டேன்னு நினைக்கிறேன்.  நானும் சின்னப் பொண்ணுதானே மாமா.'

எல்லோரும் சிரித்தார்கள்.

பிறகு, உப்புமு நந்தினியோடு அவளுடைய மாதாந்திர பிரச்சனையை தனியாக பேசிவிட்டு இருவரும் கிளம்பினர்.

'மாமி, நீங்க பண்ணியிருந்த வெண் பொங்கல் பிரமாதம்.  எங்க அம்மா பண்ணின மாதிரியே இருக்கு.'

கிளம்பும் போது ஒரு பாராட்டும் விசாலத்திற்கு கிடைத்தது.

தொடரும்...

No comments:

Post a Comment