Friday, January 14, 2022

ஔவை

 👩🏿‍🦰🧑‍🦰🧑காலம் தோறும் பெண்🧒👩🏻👦🏾

  8. ஔவை|  

பெண்ணியமும் பெண்ணிய சிந்தாந்தங்களும் பேசிக் கொண்டிருக்கும் இந்நூற்றாண்டில், பெண்ணின் அங்கீகாரத்துக்கும் முக்கியத்துவத்துக்கும் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் சங்க காலத்தில் (சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்) சத்தமில்லாமல் ஒரு பெண்பாற் புலவர் கோலோச்சி இன்று வரை தன் பாடல்கள், செய்யுள்கள் உள்ளிட்ட படைப்புகள் மூலம் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அது ஔவை தான்.

ஔவை என்றதும் மனதுக்குள் முதலில் நினைவுக்கு வருவது பாடப் புத்தகங்களில் நாம் பார்த்திருக்கும் கையில் கோலூன்றி நெற்றியில் நீரு அணிந்து கம்பீரக் குரலில் பாடும் அறிவான ஒரு மூதாட்டியின் உருவம் தான். மேலும் ‘பழம் நீ அப்பா ஞானப் பழம் நீ அப்பா’ என்று சினிமாவில் பாடிய உருவமும் மனக்கண் முன் தோன்றத் தவறுவதில்லை.

ஆனால் சங்க கால ஔவை மூதாட்டி அல்ல. அழகும் இளமையும் அறிவும் வாய்த்த இளம் பெண். மை தீட்டிய விழிகளும், அழகான ஆபரணங்கள் அணிந்த இடையும், பிறை போன்ற நெற்றியும் பெற்றிருந்த மடவரவள். அவர் ஒரு இளம் விறலி. விறலி என்றால் பாடலின் பொருளை உணரும் வகையில் மெய்ப்பாடு தோன்ற ஆடிக் காட்டுபவள் என்று பொருள்.


ஒளவையைக் குறித்து பல கதைகளை குழந்தைப் பருவம் முதலே கேட்டும் படித்தும் இருக்கிறோம். அதில் ‘சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா பாட்டி’ எனக் கேட்டு முருகன் சோதித்தக் கதையும், அதியமான் ஔவைக்குக் கொடுத்த அதிசய நெல்லிக்கனி கதையும் அடிக்கடி கேள்விப் பட்டிருப்பவை. ஆயுளை நீட்டிக்கும் சக்தி பெற்ற நெல்லிக்கனியை உண்டதால் ஔவை நீண்ட நெடிய ஆயுள் பெற்று சங்க காலம் முதல் சிற்றிலக்கிய காலம் வரை வாழ்ந்தாரோ என்ற ஐயமும் உண்டாகிறது.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால் ஔவை என்பவர் ஒருவரல்ல நான்கு ஔவைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்து பாக்களையும் செய்யுள்களையும் எழுதி சென்றிருக்கின்றனர் என்ற செய்தி கிடைக்கிறது. சங்க காலத்தில் ஒரு ஔவை, பக்தி காலத்தில் ஒரு ஔவை, குழந்தை இலக்கியம் பாடிய ஒரு ஔவை, சிற்றிலக்கிய கால ஔவை என பல ஔவைகள் இருந்துள்ளனர்.

தமிழ் மரபில் அரச குலம், பாணர் குலம் இன்ன பிற பல குலங்களில் தத்தம் குடும்பத்தில் குலத்தில் சிறந்து விளங்கியவர்களின் பெயரை தங்கள் வாரிசுகளுக்கு சூட்டுவது மரபு. அது இன்றும் தொடரும் வழக்கமாகவே உள்ளது. பாட்டன் பெயரை பேரனுக்கும், ஈன்ற தாயின் பெயரை தன் மகளுக்கும் சூட்டுவது இன்றும் நம்மிடையே பல குடும்பங்களில் நடைபெறுவது தான். அது போலவே ஔவையின் பெயரும் குல வழக்கமாக ஒத்த அறிவும் ஞானமும் பெற்ற பெண் புலவர்களுக்கு சூட்டப்பட்டிருக்கலாம்.

ஔவையின் வரலாறு சரியாக வரையறுக்கப் படவில்லை. அவர் பகவன் ஆதி தம்பதியருக்கு ஏழாவது குழந்தையாகப் பிறந்தவர். ஆனால் பெற்றோரிடம் வளராமல் பாணர்களிடம் வளர்ந்து ஊர் ஊராகச் சென்று பாடியவர் எனக் குறிப்பு இருக்கிறது.

முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால ஔவையார். இவர் தான் தொண்டை நாட்டு மன்னன் அதியமானிடம் நெல்லிக்கனி பெற்றவர். அதியமானுக்கு நல்ல நண்பர். அதியமானைப் போற்றி நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். இந்த ஔவை பல மன்னர்களிடம் சென்று அவர்களை புகழ்ந்து பாடி பரிசில் பெற்றவர். சங்க இலக்கியத்தில் 59 பாடல்களை இவர் பாடியுள்ளார். அக்காலத்தில் வாழ்ந்தவரே கபிலர், கபிலரின் நண்பனான பாரியின் மகள்கள் தான் அங்கவை, சங்கவை. இருவரது திருமணத்திற்கு முயற்சி மேற்கொண்டது இந்த ஔவையே ஆவார்.

ஔவையார் ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்றிருக்கிறார். அப்போது அப்புலவர்கள் மிகவும் கவலையாகக் காணப்பட்டனராம். காரணத்தை வினவினார் ஔவை. அதற்கு அவர்கள்  ‘நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள்’ இயற்ற வேண்டும் என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம் என்று கூறினராம். இதைக் கேட்ட ஔவையார், ‘அடடே!, இதற்காகவா கவலை கொண்டுள்ளீர்கள்’ என்று கூறி கோடி என்ற வார்த்தையை அடக்கிய  நான்கு பாடல்களைக் சொன்னாராம்.

‘மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்’
‘உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்’
‘கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்’
‘கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்’

என்று ஒரு பாடலையே இயற்றிவிட்டாராம். இதுவே நாலு கோடிப் பாடல்கள் எனப்பட்டது.

தமிழ் நூல்களிலேயே மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். இன்று நம்மிடம் இருக்கும் தமிழ் நூல்களில் காலத்தால் முதன்மையான நூலும் தொல்காப்பியமே. தமிழின் சிறப்புவாய்ந்த நூல்களில் திருக்குறளே முதன்மை வகிக்கிறது. ஆனால் அனைத்து நூல்களுக்கும் இல்லாததொரு விசேஷ சிறப்பு ஒளவையின் நூலான ஆத்திசூடிக்கு உண்டு.

தொடர்வாள்

No comments:

Post a Comment