செருவாமணி 28
Written by Baskar Sathya
சொன்னபடியே உப்புமுவிடமிருந்து ஃபோன் வந்தது.
அன்று செருவாமணிக்கும் விசாலத்திற்கும் எல்லையில்லா மகிழ்ச்சி.
'மாமா, என் தம்பிகிட்டேந்தும் அப்பாகிட்டேந்தும் சம்மதத்தை வாங்கிண்டு உங்க கிட்ட பேசறேன். நீங்க நல்ல நாள் பார்த்துண்டு நம்மாத்துக்கு வந்து லௌகீகம் பேசலாம். நான் திங்கட்கிழமை கனடா திரும்பறேன். முடிந்தால் அதற்குள் வந்து பேசினால் நல்லது.'
இதைவிட வேறு என்ன வேண்டும்? டாக்டர் மாப்பிள்ளை, வசதியான குடும்பம், குடும்பத்துக்கு சர்டிஃபிகேட் கோபு மாமா, நாமும் நேரில் போயாச்சு, தெருக்காராளுக்கும் பிடிச்சிருக்கு, நந்துவும் சரியென்று சொல்லிவிட்டாள், அவள் விருப்பப்படியே மேற்கொண்டு அவள் IAS பரிட்சைக்கு படிக்கலாம், சம்மந்தி மாமாவும் நல்ல குணம், தன் பொண்ணு மாதிரியே பார்த்துப்பார், குழந்தை கஷ்டப்படமாட்டான்னு நம்பிக்கை இருக்கு, ஜாதகமும் பொருந்தியிருக்கு, பிரார்த்தனைகளும் நல்ல சகுனங்களை கொடுத்திருக்கு.
உடனே மாப்பிள்ளை பிடிச்சிருக்குன்னு சொல்லல. அதுக்காக மாத்திரம் சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிட முடியுமா என்ன?
அவாளுக்குள்ள நடந்த பேச்சுக்கள் எப்படியிருந்தா என்ன? கடைசியில்தான் நாம எதிர்பார்த்த சம்மத முடிவு வந்துடுத்தே.
நந்தினிக்கோ அவள் விருப்பப்படி மேலே படிக்கலாம். IAS எழுதலாம். கலெக்டர் ஆகலாம். மற்றபடி அப்பா அம்மா நமக்கு நல்லதைத் தானே செய்வா என்ற நம்பிக்கை.
'நான் சொல்லல, இந்த அலையன்ஸ்தான் முடியும்னு'
பெருமிதம். தான் நினைப்பது நடந்தால் பெருமிதம்தானே நடக்குமா நடக்காதாங்கற பிரச்சனை இப்போ இல்லை. நாம நெனச்சோம். அதுவே நடந்தது.
'சித்தப்பா கிட்ட முதல்ல இத சொல்லிட்டு வரேன் சாலி. ரொம்ப சந்தோஷப் படுவார். அப்படியே அவருக்கு எப்ப தோதுபடும் லௌகீகம் பேசிட்டு வரன்னு கேட்டுண்டும் வரேன். அப்படியே ஜம்பு ஜோஸ்யரையும் பார்த்து நிச்சயதார்த்தத்துக்கு நாள குறிச்சிண்டு வரேன்.'
'ஜம்பு ஜோஸ்யரான்னா?'. இப்படி கேட்கும் போதே சாலியின் அவநம்பிக்கை ப்ரத்யக்ஷமா தெரிந்தது.
'பழசெல்லாம் அவர்கிட்ட பேசிண்டு இருக்காதீங்கோ. தீர்மானிச்சிட்டோம், நாள மாத்திரம் குறிச்சி கொடுங்கோன்னு கேளுங்கோ, என்ன?'
'மறக்காம ஒரு செதர் தேங்காய் பிள்ளையாருக்கு போட்டுட்டு சித்தப்பாவாத்துக்கு போங்கோன்னா. அவர்தான் மாப்பிள்ள மனசுல புகுந்து சம்மதம் சொல்லச் சொல்லியிருக்கார்.'
'தை பன்னிரெண்டு ஞாயிற்றுக் கிழமை நிச்சயதார்த்தம் வெச்சிக்கலாம். ஹோரை நன்னா இருக்கு. கார்த்தால பன்னண்டரை நாழில வரது. சுமார் பத்தரைனு வெச்சுக்கோங்கோ. யோகமும் அன்னிக்கு நன்னா இருக்கு.'
லௌகீகம் பேச சித்தப்பா, சித்தி, விசாலம், செருவாமணி மற்றும் சேஷாத்திரி மாமா, மெட்ராஸ் போக முடிவானது. கோபு வாத்யாரை அங்கே போய் சேர்த்துக் கொள்வது என்றும் தீர்மானிக்கப் பட்டது.
'செருவாமணி சார். டௌரி அது இதுன்னு பேசவே வேண்டாம். நீங்க உங்க கொழந்தைக்கு எதை செய்ய பிரியப் படறேளோ அத மாத்திரம் செஞ்சா அதுவே போதும்.'
'முப்பத்தஞ்சு சவரன், அஞ்சு கிலோ வெள்ளி, வைர மூக்குத்தி, பாத்திரம் பண்டம் குறைவில்லாமல் செஞ்சுடறோம். எங்களுக்கு இருக்கறது ஒரே பொண்ணு. இத செய்யறதுக்கு மறுப்பு சொல்லாதீங்கோ.'
'மாப்பிள்ளை ட்ரெஸ்ஸுக்கும் உங்க உறவுக்காராளுக்கு ட்ரெஸ் எடுக்க இருபதாயிரம் கொடுத்துடறோம். உங்க ஃபரெண்ட்ஸ்களையும் உறவுக்காராளையும் ரெண்டு பஸ்ஸுல அழச்சிண்டு வர செலவுக்கு பத்தாயிரம் கொடுத்துடறோம். வேற ஏதாவது வேணும்னா தயங்காம கேளுங்கோ.'
கேட்டுக் கொண்டிருந்த உப்புமு, 'மாமா, ரொம்ப அகலக் கால வைக்காதீங்கோ. கல்யாணத்த நன்னா பண்ணினா போதும். எங்களுக்கு உறவுக்காராள விட ஃபரெண்ட்ஸ்தான் ஜாஸ்தி.
'நிச்சயதார்த்தத்துக்கு தை பனிரெண்டாம் தேதி நன்னாயிருக்குன்னு எங்க ஊர் ஜோஸ்யர் சொல்லியிருக்கார். கார்த்தால பத்தரை மணிக்கு குரு ஹோரைல ஆரம்பிக்கலாம்னு சொல்லியிருக்கார். ஊருக்குப் போய் நாங்க எத்தனை பேர் வரோம்னு சொல்றோம். கல்யாணத்த வைகாசியில வெச்சுக்கலாம்.'
'உப்புமு, உங்க ரெண்டு பேருக்கும் இதெல்லாம் சௌகர்யப் படுமோன்னோ?'
'மாமா, நான் வர முடியலேன்னாலும் மீராவ அனுப்பிச்சுடறேன் நிச்சயதார்த்தத்துக்கு. கல்யாணத்துக்கு எங்க அப்பா அம்மோவோட வந்துடறோம்.'. முத்து கிருஷ்ணன் உடனே பதில் சொல்லிவிட்டார்.
'சீர் பக்ஷணம் எல்லாம் எவ்வளவு எண்ணம், உங்காத்து சம்பிரதாயமெல்லாம் என்னன்னு நிச்சயதார்த்தம் போது பேசிக்கலாமோல்யோ?'. விசாலம் கேட்டாள்.
'மாமி, இதெல்லாம் உங்க சௌகர்யப்படி செய்யுங்கோ. அப்படி இல்லைனா, கோபு மாமாவே உங்களுக்கு சொல்வார். அவர் தான் உங்களுக்கும் பழக்கம் ஆச்சே. அவர் என்ன சொல்றாரோ, அதான் எங்காத்துப் பழக்கம்.'
எல்லாம் நல்ல படியாக முடிந்தது.
'நந்தினிய அழச்சிண்டு வந்திருக்கலாம்.'
'சித்தப்பாவாத்துல விட்டுட்டு வந்திருக்கோம். அவா கொழந்தைகளும் தனியா இருப்பாளோல்யோ? அதுக்கென்ன நிச்சயதார்த்தம் போது பார்த்துண்டா போச்சு.'
'எங்கம்மா மாதிரியே பேசறேள் மாமி. இந்த அலையன்ஸ் அமஞ்சதுல நாங்க கொடுத்து வெச்சிருக்கோம்.'
'நாங்களும்தான் உப்புமு. என் பொண்ணுக்கு இந்த மாதிரி ஒரு அக்கா கிடைக்க அவளும் பாக்யம் செஞ்சிருக்கா. கனடா போனாலும் நம்மாத்துக்கு ஃபோன் பண்ணிண்டு இரு.'
'பையன இருக்கச் சொன்னேன். அவன் ஏதோ கேம்ப் இருக்குன்னு போயிட்டான். லௌகீகம்தானேன்னு நானும் சரின்னு சொல்லிட்டேன்.'
'அதனால என்ன? பரவாயில்ல.'
எல்லாம் நல்ல படியாக முடிந்து மன்னார்குடி திரும்பினார்கள்.
தொடரும்...
No comments:
Post a Comment