Friday, January 14, 2022

அகலிகை 2

 👩🏿‍🦰🧑‍🦰🧑காலம் தோறும் பெண்🧒👩🏻👦🏾

அகலிகை 2

நாரதர் ‘கௌதமரே பிரம்மதேவன் வாக்கு ஒரு போதும் பொய்த்துப் போனதில்லை. அதோ பாரும் இருபுறமும் தலை உள்ள பசு’ என்று காட்டிய திசையில் பசு ஒன்று கன்றை ஈன்று கொண்டிருந்தது. கன்றின் தலை பசுவின் பின்புறம் தெறிய பசுவின் தலை முன்புறம் என இருபுறமும் தலையுள்ள பசுவாக தோன்றியது அக்காட்சி. பரவசமடைந்த முனிவர் உடனே பிரம்ம தேவரிடம் சென்று நாரதர் சாட்சியாக தான் இருபுறம் தலை உள்ள பசுவை பார்த்து விட்டதை தெரிவிக்க முனிவருக்கே உரித்தானவள் ஆனாள் அகலிகை. திரும்பி வந்த இந்திரனால் பெருத்த ஏமாற்றத்துடன் ஏக்கப் பெருமூச்சை மட்டுமே வெளிப்படுத்த முடிந்தது. என்றாவது ஒரு நாள் உன்னை அடைந்தே தீருவேன் என்று அகலிகையை பார்த்து அவன் மனம் உறுதி பூண்டது.

அன்று சப்த ரிஷிகளுள் ஒருவரான கௌதமரோ, தேவலோகத்துக்கே அதிபதியான இந்திரனோ உலகையே படைக்கும் பிரம்ம தேவனோ சதுர் வேதங்களையும் கரைத்துக் குடித்த தேவரிஷி நாரதரோ கூட அகலிகையின் விருப்பம் எது என்பதைப் பற்றிக் கேட்கவே இல்லை. 

காட்டில் முனிவரின் குடிலில் அவருக்கு சேவை செய்வதிலும் குடிலையும் குடிலைச் சுற்றியும் தூய்மைப் படுத்துவதிலும் தன் நாட்களைக் கழித்தாள் அகலிகை. தவத்துக்கு பெரும் தடை காமம், அக்காமத்தை அடக்காமல் கடந்து செல்ல வேண்டும் என்பதாலும் தனக்குப் பின் தன் குலம் தழைக்க பிள்ளை வேண்டும் என்பதாலும் மட்டுமே முனிகள் தபஸ்விகள் போன்றோர் இல்லற வாழ்வில் ஈடுபடுகிறார்கள் போலிருக்கிறது. அவர்களது இல்லறக் கடமை ஒரு பிள்ளை பெற்றவுடன் நிறைவுற்றுவிடுகிறது. அதன் பின் சுயம் அடக்கி புலன் அடக்கி தவம் செய்து வல்லமைகளை பெருக்கிக் கொள்வதிலேயே அவர்களது தன்முனைப்பு செல்கிறது.

அகலிகையும் மிகச் சிறந்த பத்தினி. தன் கணவருக்கு சேவை செய்வதில் தன் தேவைகளை கருக்கிக் கொண்டாள். இரவில் தென்றல் பட்டு அசைந்தனவோ இல்லையோ, குடிலைச் சுற்றி இருந்த கொடிகளும் மலர்களும் அவளின் பெருமூச்சுகளால் ஆடின. இப்படியாகக் கடந்து சென்ற நாட்களில் தான் தேவேந்திரனுக்கு தான் செய்த உறுதி திடீரென நினைவுக்கு வந்தது.

எப்படியாவது அகலிகையை அடையும் நோக்கத்துடன் அவன் சந்திரனின் உதவியை நாடினான். அவன் சொல் கேட்டு சந்திரன் நள்ளிரவில் கோழி போல் கூவினான். வெள்ளி வெளுக்கும் முன் (அதிகாலை நான்கு மணிக்கு முன்னரே) காலைக் கடன்களையும் நித்திய அனுஷ்டானங்களையும் முடிப்பது பெரியோர் வழக்கம். கோழி கூவிய சத்தத்தைக் கேட்ட கௌதமர் சுருக்கென்று எழுந்து தன் கமண்டலத்தை எடுத்துக் கொண்டு கங்கை நோக்கிச் சென்றார்.

அவர் தலை மறைந்த சற்று நேரத்திற்கெல்லாம் அவரின் உருவம் கொண்டு குடிலின் கதவைத் தட்டினான் இந்திரன். கதவைத் திறந்து ‘இத்தனைச் சுருக்கில் திரும்பிவிட்டீர்களா?’ என்று கேட்டபடியே அரையிருட்டில் போலி கௌதமரைப் பார்த்து கேட்டவாரே அதிசயித்த அகலிகை, அதற்கான காரணத்தை அவன் இழுத்து வளைத்து அணைத்த வேகத்தில் உணர்ந்து வெட்கினாள்.

பல ஆண்டுகள் கழித்து அவள் உடல் வேதனைக்கு கிடைத்த மருந்து அலைவுற்ற ஆத்மாவிற்கு கிடைத்த சாந்தி அவளை அமைதி கொள்ளச் செய்தது. கங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த கௌதமர் இன்னும் இருள் விலகவில்லையே என ஆச்சரியம் அடைந்து, காலம் தவறாக கணிக்கப்பட்டுவிட்டதை அறிந்து தன் குடிலை நோக்கித் திரும்பினார்.

அகலிகையை அழைத்தவாரே கதவைத் தட்டியவருக்கு உள் நிகழ்ந்த செயல் நிழல் போல திருஷ்டியில் தெரிய கோபத்தால் எட்டி உதைத்தார் குடிலின் கதவை. வெளியில் தன் கணவன், தன் அருகிலும் தன் கணவன் என இருவரையும் ஓர் உருவத்தில் கண்ட அகலிகை பதறிப் போனாள். அதற்குள் குட்டு வெளிப்பட்டுவிட்ட பயத்தில் இந்திரன் பூனை உருவெடுத்து குடிலின் கூரை வழியாக தப்பியோடினான்.

கொண்டவனுக்கும் வந்தவனுக்கும் வித்தியாசம் அறியாமல் இந்திரனுடன் கூடிய பாவத்திற்காக அகலிகையை ஊண் உணவு உறக்கம் இல்லாமல் கல்லாகக் கிட என்ற சாபத்தை இட்டார் கௌதமர். தப்பியோடிய இந்திரனும் அவர் சாபத்தில் இருந்து தப்பவில்லை. எந்தச் சுகத்துக்காக அலைந்து பிறன் மனையைக் கூடினானோ அந்த சுகம் இனி அவனுக்கு கிடைக்காத வண்ணம் அவனை ஆண்மையற்றவனாக போகக் கடவது என்று அவனையும் சபித்தார் முனிவர்.

அகலிகையின் இச்செயல்பாடு இரண்டுவிதமாகப் பார்க்கப்படுகிறது.

ஒன்று, விரக தாபத்தில் தகித்துக் கொண்டிருந்ததால் அவள் போலி கௌதமரை அடையாளம் காணமுடியாமல் கணவன் என நம்பி ஏமாந்திருக்கலாம். அத்தனை ஆண்டுகளுக்குப் பின் தன் நினைவு தன் கணவனுக்கு வந்ததே, என்ற தவிப்பும் எதிர்ப்பார்ப்பும் அவளை மயங்கச் செய்திருக்கலாம். ரிஷி பத்தினி என்றாலும் அவளும் ரத்தமும் சதையும் உணர்ச்சிகளும் கொண்ட பெண் தானே.

அடுத்து. காலடி ஓசையைக் கொண்டே வருபவன் தன் கணவனா மாற்றானா என்பதை உணர்ந்து கொள்வாள் பத்தினி. அவன் வாசம், அவன் தொடுதல், அவன் இயல்பு என எதுவுமே அறியாமலா இத்தனை ஆண்டுகள் இல்லறம் நடத்தி இருப்பாள்? ஒருவேளை வந்தவன் தன் கணவனல்ல என்றறிந்து கொண்டே, தன் உடல் தேவையை நிறைவேற்றிக் கொண்டாளா? அப்படி என்றால் அகலிகை கற்பிழந்தவளாக, கீழ் மகளாக கருதப்பட வேண்டியவளா?

அகலிகை தொடர்வாள்

No comments:

Post a Comment