Friday, January 14, 2022

அகலிகை 3

 🦰🧑‍🦰🧑காலம் தோறும் பெண்🧒👩🏻👦🏾

அகலிகை 3

அவள் செய்தது தவறென்றால் காமத்தை அடக்கி தப வாழ்க்கை வாழ விதித்திருக்கும் முனிவனுக்கு அப்ஸரஸ் போன்ற பேரழகி எதற்கு? குல விருத்திக்கு சாதாரண பெண் போதாதா? அகலிகையின் அழகு தானே இந்திரனை பிறன்மனை ஆன போதும், முனியின் பத்தினியான போதும் அவளை அடையத் தூண்டியது.

அகலிகையின் ஒரு நாள் சறுக்கல் வரலாறாகியது. கோபம் குறைந்து சுயம் உறுத்திய முனியின் மனம் தன் மனைவி சாப விமோசனம் பெற வேண்டும் எனத் தவித்தது. ‘ஆயிரம் ஆண்டுகள் கல்போல தவ வாழ்வு மேற்கொண்ட பின், அயோத்தியில் தசரதனின் மைந்தனாக கோசலை வயிற்றில் ராமர் பிரான் பிறந்து வளர்ந்து, இப்பக்கம் வரும் போது அவன் பாதத் தூளி என்று உன் மேல் படுகிறதோ அன்று உனக்கு சாப விமோசனம்’ என்று சொல்லிச் சென்றுவிடுகிறார்.

அன்றிலிருந்து அகலிகை கல் போல மண்ணோடு மண்ணாக படிந்து ஊண் உறக்கம் உணவின்றி தபஸ் செய்ய ஆரம்பிக்கிறாள். கல் போன்ற இதயம் கொண்ட மனிதர்களிடையே வாழ்வதைவிட கல்லாகக் கிடப்பதே பேறு என்று வாளாவிருந்துவிட்டாள் அந்த வனிதை. காலம் கரையக் கரைய அக்கல்லின் மீது தூசிகள் படிந்து, புற்கள் அடர்ந்து, உடலற்று, மனமற்று, உணர்வற்று கல் போலவே அப்பேதை தனை மறந்து கிடக்கிறது.  ஆண்டுகள் பல கடக்கின்றன. விஸ்வாமித்திர முனிவருடன் ராம லக்குவணர் அவ்வழி வருகின்றனர். ராமர் அவ்விடத்தைக் கடக்கையில் அவரின் பாதம் பட்ட தூசி ஒன்று காற்றில் பறந்து கல்லான அகலிகையின் மீது பட்டவுடன் அவள் சாபம் நீங்கி மீண்டும் பெண்ணாகிறாள்.

அகலிகையின் கதையே வினோதமானது. முரண்கள் நிறைந்தது. வெவ்வேறு கருத்தியல்களுக்கு ஆட்பட்டது. இத்தனை முரண்களுக்குப் பிறகும் இதிகாசத்திலும் ராமகாவியத்திலும் அவள் பத்தினியாகத்தான் பார்க்கப் படுகிறாள். பத்தினிகளின் வரிசையில் அவள் சீதா பிராட்டியையும் முந்தி முன்னே வருகிறாள்.

ஜீவனால் ஆன உடலானது சபலங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டது. அகலிகை தெரிந்தோ தெரியாமலோ கற்பு நெறி பிறழ்ந்துவிட்டாள். அதே சமயம் தவறு உணர்ந்து பரமாத்மாவோடு ஒன்றி ஐம்புலன்களையும் அடக்கி தன் தவத்தாலும் தியாகத்தாலும் அக்களங்கத்திலிருந்து மீள்கிறாள். அப்படி மீண்டவளை உலகம் அவளது தவறை மறந்து போற்றுகிறது.

ஒரு கணம்  மாயப் பிசகினால் அவள் ஓராயிரம் வருடங்கள் கல்லாய் சமைந்து தவமிருக்க நேர்ந்தது. தவத்தில் சிறந்தவரும் முக்காலத்தையும் உணர்ந்தவருமான சப்தரிஷிகளுள் முதன்மையானவருமான கௌதம முனிவருக்கான ஒரே ஒரு கேள்வியை அவள் கல்லாய் இருந்த ஆயிரம் வருடங்களும் மனதில் சுமந்திருந்தாள்’

கணவனின் தீண்டுதலுக்கும் பிற ஆடவனின் தீண்டலுக்கும் வித்தியாசம் அறியாதவள் என்று சாபம் இட்டீர்களே? நீங்கள் முக்காலமும் உணர்ந்தவர், சிறந்த தபஸ்வி. ஞான திருஷ்டி படைத்தவர். சேவலின் கூவலுக்கும் சந்திரனின் கூவலுக்கும் உள்ள வித்தியாசத்தை தாங்கள் அறியவில்லையா மாமுனியே?...

இசைக்கலாம்…

No comments:

Post a Comment