அமராவதி from FB
கதைக்கலாம் வாங்க..
அடி வாங்கடி சிட்டுக்களா..
என்னை வட்டமிட்டு பாட்டு படிங்க..
விசில் சத்தத்தோடு படுக்கையறையில் இருந்து வந்த குரல் காதைப் பிளக்க சகுந்தலா பாட்டி காதை பொத்திக் கொண்டாள்.
இன்னிக்கு என்ன கூத்து அடிச்சாறதோ..அப்பப்பா பொழுது விடிஞ்சு பொழுது போனால் இந்த மனுசன் அடிக்கிற லூட்டி இருக்கே...என்று அலுத்தவாறு படுக்கையறையில் எட்டிப் பார்த்தவளின் வாய் ஒரு லட்டு போகும் அளவுக்கு திறந்து கொண்டது..
அடையாளமே தெரியலையே.இது அவரு தானா..அல்லது இவர் தான் அவரா என்று தன்னையே ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.ஆ வலிக்குது..இவர் தான் அவரு...
தலை எல்லாம் கருகரு என்று கேசம் அலைபாய அமெரிக்காவில் இருந்து மகன் அனுப்பியிருந்த ஒரு அரை டிராயர் டி ஷர்ட் சகிதம் எழுபது வயது கேசவ தாத்தா நாற்பது வயது கேசவன் அங்கிளாக மாறி கண்ணாடி முன்பு இப்படி அப்படி திரும்பி ஸ்டைல் கிரியேட் பண்ணியும் கம்பீரமாக நடந்து lion walk பண்ணியும் உற்சாக உராங்குட்டானாக மாறி சீட்டி அடித்துக் கொண்டிருக்க..
சகுந்தலா பாட்டியிடம் கேட்காமலேயே அவள் முகவாய் கட்டை தோள்பட்டையில் நங்க் என்று இடித்துக் கொண்டது.
"என்ன பாக்குறே சக்கு..ஐயா ஜம்முனு இருக்கேனா.."
"நேற்றுவரை கம்முனு தான் இருந்தீங்க. இப்போ என்னமோ ஜெம் கிடைச்சா மாதிரி துள்ளுறீங்க.."
"தோற்றம் இளமையா இருந்தா மாற்றம் வாழ்வில் வருமாம்"
"என்ன மாற்றம்..ஏ மாற்றமா.."
பாட்டி திடீரென்று சிரிக்க ஆரம்பித்தாள்..தாத்தா காற்று இறங்கிய பலூன் போல ஆகி விட்டார்.
"இப்போ எதுக்கு சிரிப்பாணி பொத்துகிட்டு வருது.."
"ஐயா கேசவன் அவர்களே..தங்களது கேசத்திற்கு சாயம் அடித்து கருக்க வைத்தீர்களே.மீசைக்கு அடிக்க மறந்து விட்டீர்களா..."
"இந்தா தமிழ்..ல் நீட்டி முழக்காதே.நல்லா இல்லைனா இல்லைனு சொல்லு.."
"உங்கள் தலை இளமையாகவும் மூக்கிற்கு கீழே வயோதிகமும் தெரியுதே.ஐயா யயாதி வம்சமோ..."
"யயாதிக்கு என்ன?. மகன் இளமையைக் கொடுத்தான்.எனக்கு டிரஸ் தான் கொடுத்தான்.."
"மீசைக்கும் டை அடிச்சா என்ன..செய்வன திருந்தச் செய்.."
"சேரிடம் அறிந்து சேர்..னு கூடத்தான் சொன்னாங்க. இது நமக்கு திருமண பொருத்தம் பார்த்த ஜோசியருக்குத் தெரியலையே.."
"எனக்கும் அவரை திட்ட வேண்டியிருக்கு. கண்டா வரச் சொல்லுங்க.."
"இப்போ மீசைக்கு டை அடிச்சா அலர்ஜி ஆகுதே.."
"தலைக்கு மட்டும் எனர்ஜி ஆகுதோ.."
"நான் ஒரு ஐடியா சொல்லட்டா.."
"நான் கேட்கலைனாலும் நீ சொல்லத்தான் போற.."
"ம்க்கும்..பேசாமல் மீசையை எடுத்துருங்களேன்.."
"என்னது...? இன்னொரு வாட்டி சொல்லு..."
இடியோசை கேட்ட நாகம் போல தாத்தா இருண்டு பின்பு புற்று அரவம் போல சீறினார்.
"என்னை யாருன்னு நினைச்சே.மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரி மான் பரம்பரையாக்கும்.."
"அது பெண்களுக்கில்ல சொல்வாங்க.."
"கற்பு எல்லாருக்கும் சமம். கற்பு நிலை என்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம்.."
தாத்தா வெள்ளை மீசையை முறுக்கி விட்டவாறு முண்டாசு கவி போல முழங்க பாட்டி " உஷ் "என்று ஒரு விரலை உதட்டில் வைத்து எச்சரித்தாள்.
"என்ன...?"
"உங்களுக்கு டங் ஸ்லிப்பாகுது. கற்பை கருப்புனு சொல்றீங்க. இரண்டு கட்சிக்கும் அது பொதுனு வேற சொல்றீங்க. இங்கே கருப்பு இரண்டு கட்சி கொடியிலும் இருக்கும். தனியா வேற ஒரு கொடி கருப்பா பறக்குது. சூதானமா பேசுங்க."
தாத்தா வாய் சுவிட்ச் ஆஃப் ஆன ஏசி பொட்டி மாதிரி மூடிக் கொண்டது.
தாத்தாவுக்கும் பாட்டிக்கும் அரசியல் என்றால் பிபி சுகர் மாதிரி படுத்தும்.
"அந்தக் காலத்துல இந்த மீசையை பார்த்து தானே என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சே ..ஆசை வைச்சது இந்த மீசை மேலே தானே.இப்போ எடுக்கச் சொல்றியே கிழவி.."
"அப்போ இருந்தது அரும்பு மீசை.குறும்பு மீசை.இப்போ முள்ளம் பன்றிக்கு இருக்கிற மாதிரி தாறுமாறா..ல்ல இருக்குது."
"முள்ளம் பன்றிக்கு மீசை இருக்கா.."
இல்லாம என்ன. அதுக்கு உடம்பெல்லாம் மீசை தான்..கரப்பானுக்கு கூடத்தான் இருக்கு. பூனைக்கு கூட இருக்கு.."
"மீசை பகவானே கொடுத்ததுடி.."
"அப்போ பகவான் ஏன் யானைக்கும் குதிரைக்கும் மயிலுக்கும் மீசை கொடுக்கல.."
"ஏறி உட்காந்தா குத்துமோன்னா..."
"மீசையை எடுத்தா நார்த் இண்டியன் மாதிரி இருக்கு. தமிழர்களுக்கு மீசை தான் ஆண்மையின் அடையாளம்.."
"முறுக்கு மீசையை வீரப்பன் மாதிரி முறுக்கி..." தாத்தா முடிக்கவில்லை.பாட்டி பூர்த்தி செய்தாள்.
"சந்தன மரத்தை வெட்டலாம்..."
"அடடா..அவனை விடு. அவன் ஒரு வுட் பெக்கர்...மரங்கொத்தியோடு என்னை ஒப்பிடாதே.."
"வீரப்பாண்டிய கட்ட பொம்மன் மீசையை உதாரணம் சொல்லு.."
ஏன் ..மூக்கிற்கு சின்னதா டை கட்டிவிட்ட மாதிரி சார்லி சாப்ளின் மீசைக்கு உதாரணம் சொல்லட்டுமா.."
"அவன் காமடி வீரனாச்சே.."
"காமடி மீசை தான் நல்ல வரவேற்பு பெறும். இம்சை அரசன் இருபத்து மூணாம் புலிகேசி மீசையை மறந்துட்டீங்களா..அதை மூக்கில் விட்டு தும்மலாம்.."
"பென்சில் வைத்து வரைந்த மாதிரி ஒரு மீசை இருக்கே.வளர்ந்தும் வளராத பாதி முடி போல..."
"அடியே உனக்கு கொழுப்பு ஜாஸ்திடி..ரோமம் வளர்வது ஜீன். எல்லாரும் ரோமாபுரி ராஜாவாக இருக்க முடியுமா.."
"நேரு காந்தி எல்லாரும் மீசையே இல்லாமல் தான் இருந்தாங்க. அவங்களுக்கு வீரம் இல்லையா..சுவாமிக்கு எல்லாம் மீசையே இல்லை.அருள் சொட்டுதே முகத்திலே.."
தாத்தாவுக்கு திடீரென்று மயிலை காபாலியோ திருவல்லிக்கேணியிலே பார்த்தசாரதியோ மீசை வைத்திருப்பது நினைவுக்கு வந்தது. தப்பாக சொன்னால் கிழவி கலாய்ப்பாள். வல்லாரை வேரிலிருந்து பிறந்தவள் இந்தக் கிழவி.
"பாரதியாரின் அடையாளமே அந்த முண்டாசும் மீசையும் தான். வால்டர் தேவாரம் மாதிரி அது தனி ஐடென்டிபிகேஷன். அது இல்லை என்றால் அவர்களை கார்ட்டூன் வரைய முடியுமா.."
"அவர்கள் எல்லாம் புல் செதுக்குவது போல மீசையை டிரிம் ஆக்கி செப்பனிட்டு பராமரிக்கிறார்கள்.."
"நானும் தானே..வெட்டுக்கிளி சைசில் சின்ன கத்திரிக்கோல் வச்சி மீசைக்கு பாத்தி கட்டுறேனே.."
"கூழுக்கும் ஆசை..மீசைக்கும் ஆசை..னு சும்மாவா சொன்னாங்க. கருப்பாக டை அடிக்க ஆசை.ஆனா மீசையை எடுக்க பயம்.."
"மீசை நரைச்சாலும் ஆசை நரைக்காது தெரிஞ்சுக்கோ.."
"மதுரையிலே அடிபட்டு மானா மதுரையிலே போய் மீசையை முறுக்குனாம்...ரோசத்தை காட்ட வேண்டிய இடத்துலே காட்டனும்."
"கூந்தலிலே நெய் தடவுற மாதிரி மீசைக்கும் தடவுனா அது போஷாக்கோடு இருக்கும்"
"வயசானா நெய் சேர்க்க கூடாது..னு டாக்டர் சொல்லி இருக்காரு.."
"நெய்யா.."
"ஆமா.."
"பொய்..
"நெய் முழங்கை வரை ஒழுக ஒழுக கூடார வல்லிக்கு அக்கார அடிசல் சாப்பிடலையா.."
"ரொம்ப பேசுறே..உனக்கு கூட இப்போ லேசா பூனை மீசை இருக்கு..நான் ஏதாவது சொன்னேனா."
"தாராளமாக சொல்ல வேண்டியது தானே. அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பா..னு.."
"அப்போ சித்தப்பாவுக்கு மீசையை எடுத்தா அத்தையா"
"😂😂😂😂"
"எல்லாத்துக்கும் சிரி..அந்தக் காலத்துல பந்தயத்துல தோத்தா ஒரு பக்க மீசையை எடுக்குறதா சவால் விடுவோம். டிராமாவிலே பொய் மீசையை வைச்சு ஸ்டேஜ்ல அதை முறுக்கும் போது மீசை நமத்து போன முறுக்கு மாதிரி கையோட வந்துரும்..."
தாத்தா ப்ளாஷ் பேக்குக்கு போனால் ஆபத்து. காயாத கானகத்தே பாட ஆரம்பிச்சுருவாரு..
"சக்கு..உன்னை பார்த்தாலே வருதுடி கிக்கு. அடியே செல்ல மக்கு ..நல்லா இருக்கேனா இல்லையா நெஞ்சை தொட்டுச் சொல்லு"
"பாட்டி தாத்தாவின் நோஞ்சான் நெஞ்சை தொட்டு பார்த்தாள்."
"ஏன்..டி. உன் நெஞ்சை தானே தொடச் சொன்னேன்.."
"என் நெஞ்சை தொட்டு சொன்னா பாஸிட்டிவ் ஆன்சர் வராது. உங்கள் நெஞ்சுக்கு நீங்கள் நல்லா இருந்தா போதும்.."
"டீச்சரா இருந்தவளாச்சே. மார்க் போட மனசு வருமா.."
❤️❤️மன்மத ராசா மாதிரி இருக்கீங்க❤️❤️
தாத்தா தனது காதை சந்தேகமாக தொட்டுப் பார்த்துக் கொண்டார். காது இருந்தது. விசிலடித்து பார்த்தார். கேட்டது. அப்போ காது வேலை செய்கிறது.பாட்டி மன்மத ராசானு சொன்னது உண்மை தான்.
"மீசை வெள்ளையாக இருக்குன்னு சொல்றீயே..."
"அதுக்கு தான் ஐடியா சொல்றேன்னு சொல்றேன். மேலே மேலே பேசிக்கிட்டே போயிட்டீங்க.."
"நானா..நீயா..நீயா நானா.. "
"எதுக்கு கோபிநாத்தை இழுக்கிறீங்க"
"அந்த ஐடியாவைத் தான் சொல்லேன். கண்மை தடவுங்கனு சொல்லாதே..கருமாந்திரம்.."
"உங்க புத்திக்கு வண்டி மையைத் தான் தடவனும்.."
"இப்போ சொல்லப் போறியா இல்லையா.."
"வெளியே போகும் போது மாஸ்க் போடுறோம்..ல்ல. மீசை இருந்தா என்ன..இல்லைனா என்ன..அது கருப்பாக இருக்கா வெள்ளையாக இருக்கா..யாருக்கு தெரியுப் போகுது.."
❤️அப்படி சொல்லுடி என் ராசாத்தி... நீ ஐடியாவின் அரசி..டி..ரசனையின் ராணி..டி❤️
No comments:
Post a Comment