Friday, January 14, 2022

மனதோடுமலர்கள்_53

மனதோடுமலர்கள்_53

அத்யாயம்  53

கதையாசிரியர்: பாஸ்கர் சத்யா 

'பாகி, அண்ணு எங்க? ரொம்ப நாழியா காணோமே? நம்மாத்துக்கு போயிட்டாளா?'

நிச்சயதார்த்தம் முடிந்து எல்லோரையும் ஆத்துக்கு போய் சாப்பிட அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி, பாகிரதியை கேட்டாள்.

அரசல் புரசலாக காதில் விழுந்ததை ஸ்ரீமதியிடம் எப்படி சொல்வது என்று முழித்துக் கொண்டிருந்த பாகிரதி விஷயத்தை போட்டு உடைத்தாள்.

'அடப் பாவமே? கூட யார் யார் போயிருக்கா ஆஸ்பத்திரிக்கு?'

'மாலதி, சந்துரு அப்புறம் க்ரோம்பேட்டையில் அவாத்துக்கு பக்கத்துல இருக்கற டாக்டர் ஃபரெண்டு ராஜி.'

'நன்னாதானடி சிரிச்சு பேசிண்டிருந்தா? சின்னதா தான் இருக்கும். எனக்கு அவளப் பத்தி தெரியும். உழைப்பாளி. அவளுக்கு ஒண்ணும் ஆகாது. நான் இப்ப இருக்கிற நிலைமைல எங்க போய் பார்க்கறது? இவாளெல்லாம் அனுப்பிச்சுட்டு, இங்கதானே பக்கத்தில இருக்கு ராஜு நர்ஸிங் ஹோம். எத்தனை நாழியானாலும் போய் பார்த்தா போச்சு.'

'எங்காத்து மாமாக்கு தெரிஞ்ச பெரிய பெரிய டாக்டரெல்லாம் இருக்கா. போய் பேசி அவ உடம்ப குணப்படுத்திடலாம். அவ பையன் கிட்ட பணம் கிணம் இருக்கொ என்னவோ. அதுதான் இப்ப எனக்கு கவலையா இருக்கு. அத மாத்திரம் இப்ப யார்கிட்டேயாவது கொடுத்தணும்.'

'நான் வேணா போகட்டுமா?'

'வேணாம் வேணாம். சித்த நாழி கழிச்சு கல்யாணத்தை அனுப்பறேன். இந்த விஷயம் பொண்ணாத்து காராளுக்கு தெரியுமோ?'

'தெரியும்னுதான் நெனைக்கிறேன். ஏன்னா அவாத்து மனுஷாதான் பேசிண்டிருந்தா இத பத்தி.'

திருடனுக்கு தேள் கொட்டியதைப் போல சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஸ்ரீனிவாசனும், ஸ்ரீதரும் முழித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் பேச்சுக்களும் எண்ணங்களும் மாலதி, அவள் 'மாமியார்(!)' என்பதிலேயே இருந்தது.

'மாலதிக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? தாலி கழுத்தில் இருந்தமாதிரி தெரியலையே? மெட்டி போட்டிருந்தாளா என்று கூட உன்னிப்பா கவனிக்கலையே? ஒருவேளை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிண்டாளா? இவள் திருச்சியிலே இருக்கா, அவனோ மெட்ராஸில இருக்கான். எப்படி சாத்தியம்? நம்ம கிட்ட ஏன் இத்தனை நாள் நடிக்கணும்? அந்த அளவிற்கு என்ன நிர்பந்தம் அவளுக்கு?'.

ஸ்ரீனிவாசன் அநியாயமாக தன்னைத் தானே குழம்பிக் கொண்டிருந்தார். நியாயம்தானே, இது இவரோட முடியற சமாச்சாரமா? ஊர் வாய், குடும்ப கௌரவம் எல்லாம் இருக்கே.

தனக்குத்தானே ஆயிரம் கேள்விகள், ஆயிரம் சிந்தனைகள், அவற்றை ஒட்டிய கற்பனை பதில்கள். அவளிடம் வெளிப்படையாக பேசும் வரை சரியான விடைகள் கிடைக்க சாத்தியம் இல்லை.

'ஸ்ரீதர், தயவு செஞ்சு இதை இப்ப பெரிசு படுத்தாத, பழைய கோபத்தையெல்லாம் மனசுல வெச்சிண்டு. சம்பந்தி மாமாக்கு கூட தெரிய வேண்டாம் இப்ப சப்திக்கு.'

'இப்போதைக்கு நம்மாத்து மனுஷாள் கிட்ட, மாலதியின் கூட வந்த ஃபரெண்டுக்கு உடம்பு சரியில்லை, மாலதியும் அண்ணு மாமியும் கூட போயிருக்கான்னு சமாளிச்சிண்டு இருப்போம். வேற வழி தெரியலடா எனக்கு. ப்ளீஸ், உன் கையில் தாண்டா இருக்கு நம்ம குடும்ப மானம், மரியாதையெல்லாம். ப்ளீஸ்'.

காலில் விழாத குறையா கெஞ்சிக் கொண்டிருந்தார்.

எல்லோரும் சாப்பிட்டார்கள். பலவித சித்ரான்னங்கள். ஸ்வீட்ஸ் அது இதுன்னு எதுக்கும் குறைவில்லை.

சாப்பாடு நடந்து கொண்டிருந்த போது, கல்யாணத்தை கூப்பிட்டாள் ஸ்ரீமதி. விஷயத்தை சொன்னாள். ஆயிரம் ரூபாய் பணத்தை அவன் கையில் கொடுத்தனுப்பினாள்.

'கொடுத்துட்டு உடனே வந்துடு. அப்புறம் இங்க மாப்பிள்ளை எங்கேன்னு எல்லாரும் கேட்க ஆரம்பிச்சுடுவா. சீக்கிரம் என்ன?'

அவனை அனுப்பி வைத்துவிட்டு பந்திகளையும் உபசரிப்புகளையும் தாம்பூல ஏற்பாடுகளையும் கவனித்து கொண்டிருந்தாள்.

ரகோத்தமனும் சாந்தியும் அவளுக்கு உதவியாக இருந்தார்கள். எண்ணங்கள் என்னவோ அண்ணுவை சுற்றிக் கொண்டிருந்தன.

எப்படாப்பா இவாளெல்லாம் கிளம்புவார்கள் என்ற அளவிற்கு பரிதவிப்பு.

பெண்ணாத்துக்காராளைத் தவிர கிட்டத்தட்ட அனைவரும் கிளம்பிவிட்டார்கள். பாகிரதி மட்டும் பக்க பலமாக.

அப்பாவை கூப்பிட்டான் ஸ்ரீதர். 'எல்லோரும் வேலூருக்கு கிளம்புங்கோ. நான் மாத்திரம் என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு வரேன். நான் தனியா ஒரு காரை வாடகைக்கு எடுத்துக்கறேன், வேலூர் வரதுக்கு.'

'வேண்டாம்டா, நீ தனியா இருக்காத. நானும் இருக்கேன் உன்னோட.'

'அப்பா உங்க தங்க புத்திரி மாலதிய ஒண்ணும் செஞ்சுட மாட்டேன்.'

வேறு வழியில்லை. அவ்வப்போது மாலு எங்கேன்னு கேட்டுக் கொண்டிருந்த கமலத்துக்கு மாத்திரம், 'சித்த பொருத்து ஸ்ரீதரை அனுப்பி பார்த்துட்டு வர சொல்றேன். நீ கவலைப் படமா இரு.'

எப்படி எப்படியோ என்னன்னெவோ சொல்லி எல்லோரையும் அனுப்பி விட்டான் ஸ்ரீதர். கார்களில் ஏறியவர்களை வழி அனுப்ப வந்த மாப்பிள்ளை ஆத்துக்கார்ர்களிடம், தனக்கு மெட்ராஸில் ஒரு வேலை இருப்பதாக சொன்னான் ஸ்ரீதர்.

நர்ஸிங் ஹோம் சென்ற கல்யாணமும் அம்மாவிடம் திரும்பி வந்து அண்ணு நலமாக இருக்கும் விஷயத்தை சொன்னான்.

இந்த களேபரத்திலும் காரில் ஏறிய ஜானாவின் பார்வைக்காக கல்யாண ராமன் சற்று ஏங்கினான். ஒரு சிரிப்பு, ஒரு டாட்டா,.. அது போதுமே. அது கிடைத்தது அவனுக்கு.

தொடரும்

No comments:

Post a Comment