Saturday, January 22, 2022

சென்னை To பெங்களூரு பகுதி 33

சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 31

சிரவண பெல்கோலா..

சிலையின் பெருமையினையும் வரலாற்றையும் அறிந்துகொண்டே, வெளியில் காணப்பட்ட திருச்சுற்றினை நிறைவு செய்தபோது அங்கு மூலையில் மண்டபம் போன்ற அமைப்பினைக் கண்டோம்.

சுற்றை நிறைவு செய்தபின் முன் மண்டபம் வழியாக நுழைவாயிலை நெருங்கினோம். குனிந்துகொண்டே நிலையைக் கடந்தோம். உள்ளே நுழைந்தவுடன் பிரம்மாண்டமாக நிற்கின்ற கோமதீஸ்வரரைக் கண்டோம். “நெடிது உயர்ந்த இச்சிலையின் அமைப்பு பார்ப்பவர்களின் கண்ணையும் 

கருத்தையும் ஈர்க்கும் தன்மையுடையது. உயர்ந்த புருவம். படர்ந்த நெற்றி. சுருண்ட முடி. கருணையும், புன்முறுவலும் நிறைந்த முகம். நீண்ட அழகிய செவிகள்.  தியான நிலையிலும் சிறிது அலர்ந்த கண்கள். உயர்ந்தும், பரந்தும் காட்சிதரும்  மார்பு. நீண்ட கொடி போன்ற இரு கைகள். தொழுது வணங்கும் தொண்டர்களுக்கு இன்பம் பயக்கும் திருவடிகள். உடலில் மாதவிக் கொடி. முழங்காலுக்கருகே படமெடுத்தாடும் பாம்புள்ள புற்று. திருவடிக்கு கீழே மலர்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை. இச்சிலையின் மீது, எத்தகைய நிழலும் விழுவதில்லை.”

கோமதீஸ்வரரைப் பற்றி சற்று சிந்திப்போம். சமணர்களால் போற்றப்படும் 24 தீர்த்தங்கரர்களுள் ரிஷபதேவர் முதலாமவர் ஆவார். அவருக்கு நூறு புதல்வர்கள் இருந்ததாகவும் அவர்களில் முதலாமவர்  பரதன் என்றும், இரண்டாவது மகன் பாகுபலி என்றும் கூறுவர். பரதனுக்கு முடிசூட்டு விழா நடைபெற்றதால், பாகுபலி தன் சகோதரனோடு போரிடுகிறார். பெற்றி பெறுகிறார். தோற்றுப்போன தன் தமையனின் வாடிய முகத்தைக் கண்டு, பாகுபலி துறவறம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சிலைக்கு முன்பாக கொடி மரம் போன்ற அமைப்பு இருந்தது. சிலையின் காலுக்குக் கீழே சிறிய அளவிலான உருவம் இருந்தது. வணங்க வருவோர் அச்சிலைக்கு அபிஷேகம் செய்வதைக் காணமுடிந்தது.

இந்தச் சிலைகளைக் காணும் போது அச்சமும் பயபக்தியும் ஏற்படுகிறது. அங்கங்கள் அனைத்தும் பரிபூரண அழகில், கன கச்சித அளவுகளில் அளவில் செதுக்கப்பட்டுள்ளன.

சிலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் பலர் அமர்ந்த நிலையில் தியானம் செய்துகொண்டிருந்தனர். அவர்களுடன் சிறிது நேரம் அமர்ந்து அமைதி தவழும் கோமதீஸ்வரரின் முகத்தைப் பார்த்தோம். முகப்பில் சுதையாலான உருவங்களை அங்கு அதிகமாகக் காணமுடிந்தது. பின்னர் சிலையின் வலப்புறம் உள்ள பாதையின் வழியாக உள்ளே காணப்பட்ட உள் திருச்சுற்றினைக் கண்டோம். அங்கு பல தீர்த்தங்கரர் சிலைகளைக் கண்டோம். பிறகு சிலையின் இடது புறம் வழியாக வந்து முன் மண்டபத்தை அடைந்தோம்.ஒரே கல்லால் வடிக்கப்பட்ட சிலையைக் கண்டு வெளியே வந்தபோது கோட்டைச்சுவர் போன்று காணப்பட்ட சுற்றுச்சுவரை மறுபடியும் கண்டு வியந்தோம். சிறிது நேரம் அங்கிருந்து இயற்கையின் அழகை ரசித்துவிட்டு கீழே இறங்க ஆரம்பித்தோம்.

ஏறும்போது சுமார் முக்கால் மணி நேரம் ஆனது. இறங்கும்போது சுமார் 20 நிமிடமே ஆனது. மிக எளிதாக அடிவாரத்தை வந்தடைந்தோம். வாய்ப்பு கிடைக்கும்போது சரவணபெலகோலா செல்வோம், அமைதியே உருவான கோமதீஸ்வரரைக் காண்போம், கலையழகை ரசிப்போம். இறையுணர்வைப் பெறுவோம்.



No comments:

Post a Comment