திருவேங்கடமுடையான் திருவருளாளன் 🙏
2021 அக்டோபர் மாதம். திருமலையில் வஸந்தோற்ஸவம். கண்கொள்ளாக் காட்சி. வண்ண மயம் பெருமாள் ஊரெங்கும்
இறைநகர் முழுவதும் பல இடங்களில் இருந்து தருவிக்கப்பட்ட பல்வேறு வகையான மலர்கள் கொண்ட அதி அற்புதமான அலங்காரம். ஆலயம் உள்ளேயும், சுற்றிலும் மலர்கள், வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருமலை
திருமலை சென்று ஸ்ரீ திருவேங்கடவனை தரிசிக்க வேண்டும். ஆசை இருந்தது. ஆனால் அது போதாதே. அனுமதி சீட்டு வேண்டும். ஆனால் எதுவும் இல்லை. இலவச தரிசனம் செய்யக் கூட இப்போது முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
300₹ தரிசனம், இலவச தரிசனம் எதற்கும் அனுமதி சீட்டு கிடைக்க வில்லை. ஆனாலும் "திருமலை சென்று ஸ்ரீநிவாசனை தரிசனம் செய்ய வேண்டும்."
இந்த நினைவோடு வழக்கமான வேலைகள். மனதில் மட்டும் "ஏதாவது ஒரு அதிசயம் நடக்காதா, திருமலை போகவேண்டும்" என்று ஓடும் எண்ண ஓட்டங்கள்.
ஒன்றல்ல. பல அதிசயங்களை பரம்பொருள் திருவேங்கடமுடையான் நிகழ்த்தினார் 🙏
அடுத்த நாள் காலை. சென்னையில் இருந்து நண்பர் அழைப்பு. அவர் பெயர் திருமலை !!
"அண்ணா" அவர் அடியேனை அப்படித்தான் அழைப்பார். "தாஸன், சொல்லும் திருமலை. தேவரீர் சுகர் லெவல் செக் பண்ணி சொல்லச் சொன்னேனே" இது அடியேன்
"அதுக்கு தான் அண்ணா ஃபோன் பண்ணேன்". பரிசோதனை விவரங்கள் சொன்னார்.
சில மாதங்களுக்கு முன் வரை இன்சுலின் போட்டு வந்த அவர் நான் தந்த சில ஆலோசனைகள் பின்பற்றவும், மாத்திரைகள் மூலம், இன்சுலின் இல்லாமல் சுகர் நல்ல கட்டுப்பாடு வந்ததில் அவருக்கு சந்தோஷம்
ஃபோன் சம்பாஷனை முடியும் சமயம் "அண்ணா, நானும் என் ஆத்துக்காரியும் நாளை மறுநாள் திங்கட்கிழமை பெருமாள் சேவிக்க காரில் திருப்பதி போகலாம் ன்னு இருக்கோம்"
உடல் முழுவதும் எனக்கு பரவசம் பாய்ந்தது. ஆஹா என்ன அதிசயம். திருமலை போகணும்னு நேத்தே நேத்து தான் நினைச்சேன். இன்னிக்கு அது பற்றி பேச்சு.
"சேவை டிக்கெட் எப்படி வாங்கினேள்" ??கேட்டேன்
"ஒரு ரெண்டு மாசம் முன்னாடி பண்ணி வச்சது அண்ணா" திருமலை பதில் சொன்னார்.
"உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா அடியேன் உங்கள் கூட வரலாமா" நான் கேட்க
"தாராளமா வாங்கோ. நாங்க ரெண்டு பேர் தான். கார் ஃப்ரீ". ஆனா தரிசனம் செய்ய டிக்கெட்" !!??
"அது பரவாயில்லை. திருப்பதி தாயார் சேவிச்சுட்டு ஒங்களோட மலைக்கு வர்றேன். திருமலை திருமண்ணில் கால் வைக்கற புண்ணியம் கிடைக்குமே, அதுவே போதுமே"
அடியேன் பதில்
"தரிசனம் அருள்வது அவரின் இஷ்டம். நீங்கள் இருவரும் பெருமாள் ஸேவித்து வர்ற வரைக்கும் அடியேன் கோயில் கோபுரம் எதிரே ஆஞ்சநேயர் சன்னதில உக்கார்ந்து இருந்தா ஆச்சு". மேலும் பதில் சொன்னேன்.
உடனே பார்த்தேன். அடுத்த நாள் ஞாயிறு. வைகையில் மெட்ராஸ் போக டிக்கெட்டும் புக் பண்ணி ஆச்சு. திருமலை ஸ்வாமி தாம்பரம் வந்து அவர் ஆத்துக்கு கூட்டிண்டு போனார். மதிய ஆகாரம் தந்தார்
வேறு விஷயம் காரணமாக இன்னொரு நண்பர் ஃபோன் பண்ணினார். நான் மெட்ராஸில் இருப்பதையும் திங்கள் அதிகாலை திருப்பதி பயணம் பற்றியும் கேட்டு " இப்பல்லாம் தரிசனம் டிக்கெட் இல்லை என்றால் மலைக்கு போகவே முடியாதே. அடிவாரத்தில் செக் பண்ணி நிறுத்தி வச்சுடுவா. எண்ண பண்ணுவீர்"??!!
கேள்வி கேட்ட அவரே, திகைச்சி போய் இருந்த எனக்கு ஒரு உபாயமும் சொன்னார். "நீர் ஸொரூபமா போங்கோ. ஒருவேளை வுட்டாலும் உட்ருவா"
"இதுவரைக்கும் என்னை நகர்த்தி கொண்டு வந்து உபாயமும் வழங்கியது சாக்ஷாத் பரம்பொருள் திருவேங்கடமுடையானே இனிமேலும் அவர் பார்த்துப் பார்" தைரியம் வந்தது
அடுத்த நாள் ஞாயிறு அதிகாலை காரில் கிளம்பி வழியில் நாகலாபுரம், மலைநரஸிம்ஹர், நாராயணவனம் கோயில்கள் தரிசனம் ஆச்சு. திருப்பதி தாயார் சேவிச்சுட்டு அலிப்பிரி செக் போஸ்ட் ரீச் ஆயாச்சு.
ஒரு போலீஸ் அதிகாரி கார் கிட்ட வந்து திருமலை கிட்ட டிக்கெட் காட்டச் சொன்னார்.அவர் தனது, தன் ஆத்துக்காரிது டிக்கெட் print out நீட்டினார்.
பின் சீட்டில் மனசுல பதைபதைப்பு, முகத்தில இயல்பா இருக்கிற மாதிரி அடியேன். பஞ்சகச்சம், அங்க வஸ்த்ரம், ஸஹிதம். உடலில் 12 திருமண் தரிப்புடன் "ஸொரூபமாக"
"இரண்டு பேரும் லக்கேஜ் ஸ்கேன் செய்து வாங்க" டிக்கெட் திருப்பி கொடுத்து விட்டு திருமலை மற்றும் அவரது மனைவி இருவரிடமும் சொன்னார் போலீஸ்.
என் டிக்கெட் பற்றி எதுவும் கேட்கவில்லை.என் காலுக்கு கீழே பெட்டி. என்னை அவர் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. காரை விட்டு இறங்கச் சொல்ல வில்லை. பெட்டி ஸ்கேன் செய்ய சொல்லவில்லை
நான் ஒருவன் காரில் இருப்பதாகவே அவர் கண்டுகொள்ளாமல் நகர்ந்து விட்டார்.
திரும்பி வந்த திருமலை, அவர் மனைவி காரில் ஏறிக் கொள்ள கார் திருமலை நோக்கி பயணித்தது.
எனக்கு கண்களில் வெள்ளமாக கண்ணீர். நடந்தது என்ன என்று தெரியவில்லை. டிக்கெட் இல்லை. அலிப்பிரி அடிவாரத்தில் தடுத்து நிறுத்தி வச்சுடுவா. எதற்கும் தயாராக இருந்த எனக்கு பகவான் கருணை அளப்பரியது என்று தெரிந்தது. நண்பர் திருமலைக்கு ஆச்சரியமான ஆச்சரியம்
அடுத்த சேலன்ஜ் தரிசனம் டிக்கெட். இப்போ முழு நம்பிக்கை வந்தாச்சு. அவரோட இடத்தில் தஞ்சம் புகுந்தாச்சு. இனி அவர் அருள்.
" திருமலை ஸ்வாமி. தரிசனம் முடிஞ்சு நீங்க ரெண்டு பேரும் மெட்ராஸ் திரும்புங்கோ. என்னை மலையில் விட்ருங்கோ. ஆண்டவன் ஆஸ்ரமத்தில ராத்திரி தங்கி விடிய கார்த்தால சாத்துமுறை ஸேவை ல பெருமாள் ஸேவிச்சுட்டு டிரெய்ன்ல மெட்ராஸ் திரும்பி வந்துடுறேன்". நான் சொல்ல
"அப்படியே ஸ்வாமி" பதில் தந்த திருமலை என்னை இறக்கி விட்டுட்டு ஆத்துக்காரி உடன் தரிசனம் செய்ய கியூ காம்ப்ளக்ஸ் போய்விட்டார்.
சாற்றுமுறை ஸேவை என்ற நித்திய ஸேவை தொன்று தொட்டு வைஷ்ணவ திருக்கோவில்களில் ஒன்றாகும். வைஷ்ணவ அடியார்கள் ஒன்று கூடி பெருமாள் முன்பு தனியன்கள் மற்றும் ப்ரபந்தம் கோஷ்டி யாக ஸமர்ப்பிக்கும் ஸம்ப்ரதாயம். அதற்கு சில வரைமுறைகள் மற்றும் அனுஷ்டானங்கள் உள்ளன.
திருமலை மாட வீதியில் கோயில் கோபுரம் மலர்களாலும் விளக்குகளாலும் அலங்காரம் பண்ணி இருப்பதை தரிசனம் செய்து கொண்டு நடந்து கொண்டிருந்த போது ஸ்ரீவராக ஸ்வாமி கோயில் எதிரே பார்வை போனது. கோயில் அர்ச்சகர்கள் தங்கும் விடுதி. திடீரென ஒரு பொறி தட்டியது
திருமலை ஸன்னிதியில் பெருமாள் கைங்கர்யம் புரியும் இரண்டு பட்டாச்சார்யா ஸ்வாமி குடும்பத்தினர் அடியேன் கிளினிக் வந்து பரிசோதனை செய்து ஆலோசனைகள் பெற்றது அப்போது சட்டென்று ஞாபகம் வந்தது. பெருமாள் கைங்கர்யம் புரியும் குடும்பம் என்பதால் அவர்கள் இடம் அடியேன் பணம் எதுவும் வாங்கவில்லை. இது அடியேன் வழக்கம்
படியேறி மேலே போய் பட்டர்கள் திருப்பெயர் சொல்லி விசாரித்தேன். ஒரு பட்டர் கீழே (திருப்பதி) இறங்கி விட்டார். "காத்திருங்கள். இன்னொரு பட்டர் ஸ்வாமின் இன்னும் கொஞ்சம் நேரத்தில் வந்து விடுவார்"
அங்கிருந்த பென்ச்சில் சிறிது நேரம் அமர்ந்து கண் எதிரே திருவேங்கடமுடையான் கோயில் தங்கக் கோபுரம் தகதக என்று மின்னுவதை தரிசித்துக் கொண்டு இருந்தேன்.
மேள தாளம், நாயனம் ஒலி முழக்கம் கேட்டது. வெளியே எட்டிப் பார்த்தேன். பெருமாள் கோயில் பட்டுக் குடை பிடித்து மேள தாளங்களுடன் அடியேன் கிளினிக் வந்து சென்ற பட்டர் ஸ்வாமின்ஐ மிகவும் மரியாதையாக கோயிலிலிருந்து அவருடைய ஜாகைக்கு அழைத்து வந்தனர்.
மஞ்சளில் தோய்க்கப்பட்ட பட்டு வஸ்த்ரம் அணிந்து வலது கரத்தில் பளபள என்று ஜொலிக்கும் தங்க கங்கணம் ஸகிதம் அவர் இருந்தார். அடியேனைப் பார்த்து அடையாளம் கண்டு புன்முறுவலுடன் தன் அறைக்கு அழைத்து சென்றார்.
"வாரும் டாக்டர் ஸ்வாமி. திருமேனி பாங்கு தானே. திருமலை ப்ரம்மோத்ஸவம் நடந்துண்டு இருக்கு. அடியேன் தான் இந்த முறை கங்கண பட்டர். இந்த பத்து நாளும் பெருமாள் வாகனம் கைங்கர்யம் அடியேன் தான். தேவரீர் இங்கேயே தங்கி பெருமாள் ஸேவித்து போகலாம்"
அடியேன் வாய் திறந்து பேசறதுக்கு முன்னாடி கடகடன்னு பட்டர் ஸ்வாமின் பேசினார். அவரா பேசினார். அளப்பரியதான கருணை கொண்ட பெருமாள் திருவேங்கடவன் அல்லவா அவர் ரூபத்தில் அருள் பாலித்தார் 🙏🙏
பெருமாள் மலையப்ப ஸ்வாமி திருமேனி தீண்டி கைங்கர்யம் புரியும் அந்த ஆச்சார்ய புருஷர் அறையில் அவருடன் சில மணி நேரம் தங்கி பெருமாள் பிரசாதங்களை ஸ்வீகரிக்கும் மிகப் பெரிய பாக்கியம் கெடச்சுது
"டாக்டர் ஸ்வாமி ஒரு கார்யம் பண்ணும். உடனே கிளம்பி பெரிய ஜீயர் சுவாமிகள் மடம் போங்கோ" ஸாயங்காலம் சுமார் ஆறு மணிக்கு திடீரென பட்டர் ஸ்வாமின் அவதானித்தார்
கட்டளை ஏற்று சென்றேன். அங்கு பெரிய ஜீயர் ஸ்வாமிகள் அடியார்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டு இருக்கையில் ஒருவர் ஸ்வாமிகள் இடம் அடியேன் பற்றி அறிமுகம் செய்து வைத்தார்
"ரொம்ப சந்தோஷம். டாக்டர் இங்கே இருங்கோ. சித்த நாழிகை கழிச்சு கோயிலுக்கு போகலாம். வாகனம் கோஷ்டி நடக்கும். வாரும்"
பெருமாள் மலையப்ப ஸ்வாமி யானை வாகனத்தில் ஏள்ளி (எழுந்தருளி)க் கொண்டு இருந்தார். ஸ்வாமிகள் கோஷ்டி வேத மந்திரங்கள் முழக்கம். சுமார் இரண்டு மணி நேரம். திருவேங்கடவன் திருக்கோயில் உள்ளே அமர்ந்து.... கண்களில் நிற்காமல் வெள்ளம் கொட்டியது.
பெருமாள் கோயில் உள்ளேயே வலம் வந்து மூலஸ்தானம் சேரும் போது மூலவர் நின்ற நெடுமேனி திருவேங்கடமுடையான் திவ்ய தரிசனம் அருளப் பெற்றேன் 🙏🙏. தீர்த்தம், ஸடாரி ஸேவையுடன்.
அவன் கருணை எல்லையற்றது. தரிசனம் முடிஞ்சு பட்டர் ஸ்வாமின் அறைக்கு திரும்பினேன். இரவு உணவிற்கு பக்கத்தில் உள்ள திருமலை நம்பி மடத்துக்கு அழைத்து சென்றார். சுடச் சுட நாலு தோசை, பால்
அதிகாலை 3 மணிக்கு எழுந்து தீர்த்தமாடி, பஞ்சகச்சம், பன்னிரண்டு திருமண் தரிப்புடன் "ஸொரூபமாக" காலை சாத்துமுறை ஸேவை. நெடிய திருமால் பெருமாள் திருவேங்கடமுடையான் ஸன்னதியில் தனியன்கள் மற்றும் பிரபந்தம் ஸமர்ப்பிக்கும் அன்றாட நிகழ்வுகள். அருகில் சில மணித்துளிகள் பெருமாள் திருவுருவம் முழுவதும் ஆற அமர ஸேவிக்கும் மாபெரும் பாக்கியம் 🙏🙏
வெளியே வந்த அடியார்களுக்கு பிரஸாத வினியோகம். பரவசம் பொங்க சுடச் சுட அந்த கதம்பம் ஸாதம். ஒரு கணம். "இந்த வேளையில் கொஞ்சம் வெண் பொங்கல் கெடச்சா நன்னா இருக்குமே"
முழுசா யோசிச்சு முடிக்கறதுக்குள்ள
"டாக்டர் ஸ்வாமி நமஸ்காரம்" அருகில் ஒரு வைஷ்ணவ ஸ்வாமி. இதுவரைக்கும் அவரைப் பார்த்தது இல்லை. அவரும் சாற்றுமுறை ஸேவை முடிந்து ப்ரஸாதம் ஸ்வீகரித்துக் கொண்டு இருந்தார்
"டாக்டர் அடியேன் பெயர் முகுந்தன். மெட்ராஸ் வாஸி. அடியேன் மாமனார் இங்கு திருமலை.....மடத்தில் ஸ்ரீ கார்யம் ஆ பல வருஷம் இருந்து சமீபத்தில் பரமபதம் அடைஞ்சுட்டார். நேத்து தேவரீர பெரிய ஜீயர் மடத்தில் பார்த்தேன். திருச்சி டாக்டர் ன்னு தெரிஞ்சுது."
முகுந்தன் ஸ்வாமி கைகளில் வெண் பொங்கல் மற்றும் பெருமாளுக்கு அமுது செய்யப் பட்ட ததியோதனம் (தயிர் சாதம்).
"டாக்டர் இந்தாரும்" வெண் பொங்கல், தயிர் சாதம் பிரசாதம் தொன்னைகளை என்னிடம் நீட்டினார்.
எனக்கு பேச்சே வரவில்லை. என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இப்போ தான் நினைச்சேன். வெண் பொங்கல் கிடைச்சா நன்னா இருக்குமே ன்னு. திருவேங்கடமுடையான் முன் பின் பார்த்திராத ஒரு ஸ்வாமின் மூலம் அதையும் நிறைவேற்றி விட்டார்
முகுந்தன் ஸ்வாமி கூட அவர் நண்பர் சேஷாத்ரி ஸ்வாமி என்பவரும் வந்திருந்தார். மூவரும் பேசிக் கொண்டே சின்ன ஜீயர் மடத்தில் காலை ஆஹாரம் காஃபி முடித்தோம்.
"டாக்டர் ஸ்வாமி அடுத்த ப்ரோக்ராம் என்ன" கேட்டார் முகுந்தன். மலை இறங்கி ட்ரையின் பிடிச்சு மெட்ராஸ் போக வேண்டும் ஸ்வாமின். அப்புறம் திருச்சி.
" எதுக்கு ட்ரெயின், கார் ல எங்க கூட மெட்ராஸ் வாங்கோ. " வந்தேன். திருச்சி திரும்பினேன்
நடந்ததவை நாராயணன் செயலே 🙏🙏
ஹரே கிருஷ்ணா 🙏🙏 ராதே ராதே 🙏🙏
Dr . Raguraman Varadhachari.
No comments:
Post a Comment