Friday, January 14, 2022

உயில்

 உயில்

(சிறுகதை)

அந்த வக்கீல் நண்பர் உயிலப் பிரிச்சு எல்லாத்தையும் ஒக்கார வைச்சிப் படிச்சிக் காமிக்க ஒருத்தர் மொகத்துல ஈ ஆடல. கெழவன் இப்புடிப் பண்ணிட்டானே... அதையும் அவனோட ஃபிரண்டு வக்கீல வைச்சி காதும் காதும் வைச்சது போல முடிச்சிட்டானே சரியான மன அழுத்தக்காரன் தான் கெழவன்ன்னு ஒரு அம்மா திட்டுச்சு... 

சொத்த எதிர்பாத்து இருந்த அவரோட மகன் அப்புறம் பேரன்களுக்கு அவர் மேல கோவம் கோவமா வந்துச்சு.. இருந்தப்ப அவர் சொல்லிக் கேக்காததுனால இப்புடி ஒரு சிக்கல எழுதி வைச்சுப்புட்டானேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாக. 

இந்த எழவு முன்னாடியே தெரிஞ்சிருந்தா பொணம் கெடந்து நாறட்டும்னு போட்டுட்டு போயிருந்துருப்போம்ல . கெழவன் வைச்சி செஞ்சிட்டானே,,,,ன்னு அவர் மகன் கத்திட்டு இருந்தான்

சொத்து அவரோட சுய சம்பாத்தியம். கடைசி வரைக்கும் சொத்தப் பிரிச்சிக் குடுக்கல எல்லாம் எனக்கு அப்புறம்தான்னு சொல்லிட்டாரு. அதுனால அண்ணன் எப்ப மண்டயப் போடுவான் திண்ண கெடைக்கும்னு காத்திருந்தது கத்த ஆரம்பிச்சிடிச்சி..

அவருக்கு ரொம்ப ஒடம்புக்கு முடியல. வயசு வேற ஆயிடுச்சு. எப்ப அவன் வந்து கூப்புட்டுகுவான்னு தெரியல. சீக்கிரமே கூப்புட்டுக்கப்பா.. இனி இருந்து என்னத்தைப் பண்ணப்போறேன்னு தெரியலன்னு வேண்டிக்கிட்டு இருந்தாரு. 

அவருக்கு ஏகப்பட்ட சொத்துக.மூணு கார வீடு அப்புறம் நெலம் ஒன்னரை ஏக்கர் காலி எடமுன்னு கெடந்துச்சு. அதை ஒடனே பிரிச்சிக் குடுக்கச் சொல்லி அவரைப் போட்டுப் படுத்துக் கிட்டு இருந்தாக பிள்ளையும் பேரன்களும்.

அவரோட மகளை வெளியூர்ல கட்டிக் குடுத்திருந்தாரு. கட்டிக் குடுக்கும் போது அவ வசதியாத்தான் இருந்தான். ஆனா அவ புருசன் சரியில்ல. எல்லாப் பழக்கமும் அவனுக்கு இருந்துச்சு. அதுல இருந்த சொத்தெல்லாம் அழிச்சான்.  இவரும் எம்புட்டோ முயற்சி பண்ணினாரு அவனத் திருத்த முடியல அவன் மூஞ்ச சுத்தி மசிறுமா ஊரச்சுத்திக்கடனுமா இருந்து ஒருநாள் போய்ச் சேந்துட்டான், 

அவளுக்கு ரெண்டு மகளுக. பாக்க லட்சணமாத் தான் இருந்தாங்க ஆனா வசதி வாய்ப்பு இல்ல. பத்துப்பவன் போட்டுக் கூடக் கட்டிக்கொடுக்க வக்கில்லாமப் போச்சு... அப்ப பெரியவர் மகனக் கூப்புட்டுச் சொன்னாரு தங்கச்சி மகளுக அதான் என் பேத்திகள்ல ஒருத்திய உன் மகனுக்குக்குக் கட்டி வை  செலவு நகைநட்டு எல்லாம் நான் பாத்துக்கிறேன்னு சொன்னாரு

அதுக்கு அவர் மகனும் அவன் சம்சாரமும் ஒத்துக்கல. போயும் போயும் அந்த அன்னாடங்காச்சி பொண்ணக் கலியாணம் பண்ணனுமா. எங்க மகனுக்கு பெரிய பெரிய எடத்துல இருந்தெல்லாம் சம்பந்தம் வருது. உங்களுக்கு அப்புறம் இம்புட்டுச் சொத்தும் பேரனுக்குத் தான வரணும்.  

அந்தப் பொண்ணுக ராசி இல்லாத பொண்ணுக அதான் அப்பனையும் பறிகொடுத்து சொத்தையும் தொலைச்சிட்டு நிக்கிதுக அதைக் கட்டிட்டு வந்தா நம்ம வீடும் அதே மாதிரி தரித்திரம் தான் புடிக்கும்ன்னு சொல்லி முடியாதுன்னு ஒத்தக்கால்ல நின்னுட்டங்க...

ஆனா சொத்த மகன் பேருக்காவது இல்லை பேரன் பேருக்காவது நெதானத்துல இருக்குறப்பவே உயில் எழுதச் சொல்லிப் பாடாப்படுத்துனாக. ஆனா பெரியவர் அசைஞ்சு கொடுக்கல... அவர் பேத்தியக் கல்யாணம் பண்ணச் சொல்லியே தான் கடைசி வரைக்கும் சொல்லி ஓஞ்சு போய் ஒரு நாள் போய் சேந்துட்டாரு.உடனே எல்லாரும் அவர் ஃபிரண்டு வக்கீலத் தான் தேடுனாங்க  ஆனா அவர் சொல்லிட்டாரு அவரை நல்லபடியா அடக்கம் பண்ணிட்டு வாங்க அதுக்கப்புறம் தான் உயில காமிக்கச் சொல்லி என் கிட்ட சொல்லிருக்காரு. அவர் முன்னாடியே எழுதி ரெஜிஸ்ட்டரும் பண்ணி வைச்சிட்டாரு. அது அவரோட சுய சம்பாத்தியம்ன்றதால  யாருக்கு வேணுமானாலும் கொடுக்கலாம்னு சொன்னாரு

ஒருவழியா அவரோட காரியம் எல்லாம் முடிஞ்ச பின்னாடி  துக்க வெத்தலைபாக்கு பரிமாறினப் பின்னாடி அவர் உயில கொண்டாந்து வாசிச்சாரு.. அதைக் கேக்கக் கேக்கத் தான் ஒருத்தர் மொகத்துலயும் ஈ ஆடல

அந்த உயில்ல அவர்  சொத்துல ஒருபங்கு  மக பிள்ளை பேத்திகளுக்கு எழுதியிருந்தார். மீதில தான் வில்லங்கத்தை வைச்சிருந்தாரு. அதாவது அவரது பேத்திகள்ல ஒருத்திய அவரது பேரன்( அதாவது மகனின் மகன்) கல்யாணம் பண்ணிக்கிற பட்சத்துல அந்த மீதிச்சொத்து அவங்க ரெண்டுபேருக்கும் கெடைக்கும்.  

அப்படி ஒருவேளை பேத்தியக் கல்யாணம் பண்ணிக்கலைன்னா சொத்து முழுக்க அந்த ரெண்டு பேத்திகளுக்கே போயிடும்.சொத்துல ஒரு பைசா கூட மகனுக்கோ கெடைக்காதுன்னு எழுதி இருந்தது....

அதைக் கேட்டுத் தான் மகனுக்கும் அவன் சம்சாரத்துக்கும் மொகத்துல ஈ ஆடல. ஆனா அவங்க மகன் சொன்னான் சொத்துக்காகவெல்லாம் நான் அந்தப் பிள்ளைகளைக் கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொன்னான்.

ஆனா அவங்க அப்பாவும் அம்மாவும் அவன் கிட்டச் சொன்னாங்க டேய் அது யாருடா நம்ம மொறப்பொண்ணுடா நாம கல்யாணம் பண்ணாம விட்டுக் கொடுக்க முடியுமாடா...

நாம் தான் அதுகளுக்குத் தாய் மாமன் நமக்குத் தான் உரிமை  அதுகளுக்கு என்ன கொறைச்சல்  பேசாம கல்யாணம் பண்ணிக்கோ அப்பத் தான் சொத்துபூராம் நமக்கு வந்து சேரும் ,எப்புடியும் சொத்துமதிப்பு மூணுல இருந்து நாலு கோடி தேறும் வலிய வார சொத்த ஏண்டா விடனும்னு அவன வற்புறுத்துனாங்க ஆனா அவன் அடம் புடிச்சான்..

அப்ப அவனோட அம்மா சொல்லிச்சி அதுக்கு நீ சம்மதிக்கலைன்னா நான் தூக்குப் போட்டு தொங்கிடுவேன்னு மிரட்டுனாங்க 

எப்படியோ அவன் தலைய ஆட்டினான். ஒடனே அவனோட அம்மா பொண்ணுகளோட அம்மாவப் பாத்து அப்புறம் என்ன ஒரு கெட்டது நடந்த எடத்துல நல்லதப் பேசிடனும்.. எப்ப கல்யாணம் வைச்சிக்கலாம்னு கேட்டாங்க 

ஆனா அதுக்கு முந்தி அந்தப் பொண்ணு அதான் பெரியவரோட பேத்தி சொல்லிச்சி எனக்குக் கல்யாணத்துல இஸ்டம் இல்ல. ஏன்னா இது சொத்துக்காக  நடக்குற கல்யாணம் என்ன விரும்பிச் செய்யிற கல்யாணமில்ல.  தாத்தா இருக்குறப்ப எம்புட்டோ சொன்னாரு அப்பையெல்லாம் ஒத்துக்கல. சொத்துல சிக்கல் வந்தவன்ன அதுக்காக வந்த கல்யாணத்துல நிம்மதி இருக்காது.... எனக்கு இஸ்டம் இல்லன்னு சொல்லிச்சி....

அப்ப பையனோட அம்மா கேட்டா அதாவது என் மகனையும் கட்டிக்காம சொத்தைப் பூராம் நீங்களே அனுபவிக்கலாமுன்னு ஐடியாப் பண்ணுறீங்களா..... அதப்பாத்துட்டு நாங்க சும்மா இருப்போம்னு நெனச்சீங்களான்னு கத்துச்சு...

அப்ப அந்தப் பொண்ணு அமைதியாச் சொல்லிச்சி அய்யா வக்கீலய்யா எங்களுக்கு இந்தச் சொத்து வேணாம் எல்லாத்தையும் நாங்க அவங்க பேருக்கே எழுதிக் கொடுத்துடுறோம்.  எங்களுக்கு கைகால் இருக்கு எங்க சொந்த ஒழைப்புல பொழைச்சிக்குவோம் எல்லாத்தையும் அவங்களே  எடுத்துக் கிட்டு அனுபவிக்கட்டும்.....

எங்களுக்கு தாத்தாவோட அன்பும் ஆசியும் இருந்தது தெரிஞ்சிடுச்சு.அது போதும் அவரது ஆசி ஒண்ணு போதும் நாங்க பொழைச்சிக்கிடுவோம்  நீங்க எங்களைச் சும்மா விட்டாப் போதும்... நு சொல்லி கண்ண தொடச்சிக்கிச்சி

என்ன சொல்றதுன்னு தெரியாம எல்லாரும் மலைச்சிப்போய் நின்னாங்க...

அவளோட தன்னம்பிக்கையையும் குணத்தையும் பாத்து... பையனோட அம்மாவும் அப்பாவும் அதான் பெரியவரோட மகனும் மருமகளும் தலை குனிஞ்சி நின்னாங்க......

No comments:

Post a Comment