சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 28
தல காவேரி கோயில் கதை தொடர்கிறது….
பிரம்மஹத்தி தோஷத்தால் சித்திரவதை தாங்காத அவன், ஆன்மிக பெரியவர்களின் யோசனைப்படி, சிவபெருமானுக்கு ஒரு கோயில் கட்டினான்.
காசியிலிருந்து லிங்கத்தை கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்தான்
இங்கு, ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, ஆன்மிக முறைப்படி, தினமும் பூஜைகள் நடக்க அந்த மன்னன் ஏற்பாடு செய்தவுடன், அவனுக்கு வந்துகொண்டிருந்த துர்சொப்பனங்கள் மறைந்தன.
கோயில் மத்தியில் வசீகரமான குவி மாடமும், அதன் நான்கு முனைகளில் ஸ்தூபிகளும், அதைச் சுற்றி ரிஷபங்களும் உள்ளன. குவி மாடத்திற்கு மேல் முலாம் பூசிய உருண்டையும். திசைகாட்டும் கருவியும் இருக்கிறது.
கோயில் படிகளில் ஏறியதும் வளைந்த வாசல் உள்ளது. அதன் கீழே இரு மணிகள் முழக்கமிடுகின்றன.
ஏறியவுடனேயே மூலவர் சந்நிதி வந்து விடுகிறது. மற்ற கோயில்களை போல் பக்தர்கள் தரிசிப்பதற்கு என விஸ்தாரமான கூடமோ அல்லது தூண்கள் அடங்கிய மண்டபமோ இல்லை.
இதன் கட்டுமானம் ஹைதர் அலி / திப்புசுல்தான் ஆட்சி செய்த காலத்தில் நடைபெற்றதால், கோயிலின் வெளியமைப்பு ஒரு மசூதியைப் போலவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருவறை கதவின் சாளரங்கள் (ஜன்னல்) பஞ்சலோகத்தால் ஆனவை.
பிரகார சுவரில் புராண, இதிகாச சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இங்கு பிரதோஷம், அமாவாசை, சிவராத்திரி ஆகியவை முக்கிய விழாக்களாக, சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றன.
வேண்டுதல் நிறைவேறியதும், பக்தர்கள் ஸ்வாமிக்கு, நெய் விளக்கு ஏற்றியும், புது வஸ்திரம் அளித்தும் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதற்கு காணிக்கை செலுத்துகிறார்கள்.
தரிசனம்
காலை 05:00 மணி முதல் 08:00 மணி வரை மாலை 06:00 மணி முதல் வரை
மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படும் இந்த இடத்தின் சுத்தமான காற்றும், பசுமையான மலைகளும் நமக்குப் பரவசம் தருகின்றன. இதன் அருகே இருக்கும் பிரம்மகிரி மலை ஏறினால், தலைக்காவிரியையும், பசுமை போர்த்திய மலைகளையும் 360 டிகிரி சுற்றளவில் பார்க்க முடியும். ஆன்மிகப் பயணமாகவும், இயற்கையை ரசிக்கும் பயணமாக வும் தலைக்காவிரி கொண்டாடப் பட்டுவருகிறது.
பக்கத்திலிருக்கும் மலைக்கு சிலர் ட்ரெக்கிங் போனார்கள். நாங்களும் கஷ்டப்பட்டு ஏறினோம். . சுற்றிப் பார்க்க வெரைட்டியான பொழுதுபோக்கு இடங்கள் இல்லை; வாங்கித் திங்க கடைகள் இல்லை; கொண்டாட்டங்கள் இல்லை. ஆனாலும், ம.நீ.ம. தலைவர் கமல் அவசர அவசரமாக பரமக்குடி டூரை முடித்ததுபோல், சட்டு புட்டென கிளம்பி வர முடியவில்லை. பச்சைப் பசேல் மலைகளை வைத்து கடவுள் கன்னாபின்னாவெனக் கையெழுத்துப்போட்டதுபோல் மனம் மயக்கியது பள்ளத்தாக்கு. பனி படர்ந்திருந்த அந்த ஏரியாவில் செல்ஃபி எடுத்து D.P வைத்தால், ‘போட்டோஷாப்தானே’ என்று கிண்டல் பண்ணுவார்கள் குரூப் மெம்பர்கள். பொறுமையாக ரசித்துவிட்டுத்தான் கீழறிங்கினோம். .
தலைக்காவிரி செல்லும் வழியில்தான் பாகமண்டலம் இருக்கிறது. காவிரி, கனிகா, ஜோதி என்று மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம். இதை திருவேணி சங்கமம் என்கிறார்கள். காசி மாதிரி இங்கே தலை முழுகிக் கொண்டிருந்தார்கள். காலும் நனைக்கலாம்.
No comments:
Post a Comment