சூடிக்கொடுத்த சுடர்க்கொடி : சுஜாதா
(கோகுலம் கதிர் 1998)
ஆண்டாளைப் பற்றிய சரித்திரக் குறிப்புகள் மிகச்சிலவே. குரு பரம்பரை அவர், கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் எடுத்து 'கோதை' எனப் பெயரிட்டு வளர்த்தார்.
அவர் பிறந்தது கி.பி. 885 நவம்பர் 25 அல்லது 886 டிசம்பர் 24. ('வெள்ளியெழுந்து வியாழம் உறங்கிற்று' ) என்கிற வான சாஸ்திரக் குறிப்பிலிருந்து திரு.மு.ராகவையங்கார் அவர்கள் ஆராய்ச்சி செய்து இந்தத் தேதிகளாக இருக்கலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.அவருடைய தந்தை தாய் யாரென்று தெரியவில்லை. அந்தக் காலங்களின் தெய்வீகம் எதும் கலக்காமல் இதை ஆராய்ந்தால் துளசித்தோட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட குழந்தை என்பது தெரிகிறது. பெரும்புலவரான பெரியாழ்வாரிடம் நிச்சயம் அவர் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் பயின்றிருக்க வேண்டும். பயின்று அதில் தந்தையின் பக்தி ரசம் மிகுந்த பாடல்களில் திளைத்து கண்ணனின் மேல் ஆசை வந்திருக்க வேண்டும். கடவுளுக்காக தன்னை அர்ப்பணித்த பெண்கள் சரித்திரத்தில் பலர் உள்ளனர்.
மீராபாய்,அக்கமகாதேவி,காரைக்கால் அம்மையார் போன்ற பல உதாரணங்கள் உண்டு. ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்தான கண்ணனை மணப்பதையே எண்ணிகொண்டிருப்பதற்கு சிகரம் வைத்ததுபோன்ற திருப்பாவை. பாவை என்பது ஒரு நோன்பு. இங்கே அந்த நோன்புக்கடவுளை அடைவதற்கு உடலை வருத்தி அதிகாலை எழுந்து பலவித விரதங்கள் அனுசரித்து ஒருவிதமான தவம்போல ஒரு மாதம் இருப்பது.திருப்பாவை நோன்பு,"மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் தீக்குறளை சென்றோதோம்"
என்று கட்டுப்பாடாக இருக்கும் நோன்பு. அதற்காக தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்களில் இருக்கும் நுட்பமான அன்றாட சங்கதிகள் பல நம்மை பிரமிக்க வைக்கின்றன.
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியம் தோளுடை பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர
மழைபோல் வாழ உலகினில் பெய்திடாய்"
என்பதில் மழையின் மின்னல் இடி முழக்கங்களை திருமாலின் ஆயுத முழக்கங்களுக்கு ஒப்பிடும் கவிதை நயத்துடன் விஞ்ஞானப்படி மழை பெய்வதன் காரணம். சமுத்திர நீர் மேலே சென்று உயர்ந்து மேகங்களாக மாறி மீண்டும் பெய்யும் உண்மை, அந்த ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்டாளுக்குத் தெரிந்திருந்தது விந்தையே.
காலை நேரத்தின் பலவித சப்தங்களையும் நடைமுறைகளையும் இயல்பாகச் சொல்லும் திருப்பாவை பக்தியும் இலக்கிய நயமும் கலந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்று. அதை எழுதிய இளம் பெண் நூற்றாண்டுகள் கடந்தும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறாள்.
ஆண்டாளின் பாடல்களின் அகச்சான்றுகளை வைத்து, டாக்டர் மு ராகவையங்கார் அவர்கள் இந்தக் கவிதாயினியின் காலத்தை ஆராய்ந்திருக்கிறார்.
தமிழில் முக்கியமான கால ஆராய்ச்சிகளில் ஒன்று அவருடைய புத்தகமான " ஆழ்வார்கள் காலநிலை" - பதினேழாம் திருப்பாவையில், " வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று" என்கிற வரியில் இருக்கும் வானவியல் சம்பவத்தை அந்தத் துறை நிபுணர்களோடு ஆராய்ந்து அது கி.பி. 885 - நவம்பர் மாதம் 25-ம் தேதி என்று ஆதாரப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்.
ஆண்டாளின் பாடல்களின் அமைப்பு, சொல்லாட்சி, பாவை நோன்பு பற்றிய விவரங்கள் இவைகளை ஆராய்ந்து பார்க்கையில், தெளிவாவது இரண்டு விஷயங்கள்:
1. ஒரு பெண்ணால் தான் இத்தனை நளினமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். ஆண்டாள் நிஜமான வர் என்பதை அவருடைய பெண்மை மிளிரும் பாசுரங்கள் அறிவிக்கின்றன.
2. ஆண்டாள் தமிழில் மிகுந்த புலமை பெற்றவர். திருப்பாவையின் யாப்பு கடினமான என்று அதை வகைபடுத்தியிருக்கிறார்கள். திருப்பாவை பாடல்களை சீர் தளை பிரித்துப் பார்க்கும்போது வெண்சீர், இயற்சீர் வெண்தலைகள் தடுமாற்றமின்றி அமைகின்றன. ஓரிரு இடங்களில்தான் பிறழ்கின்றன.
டாக்டர் பெ. சீனிவாசன் "வைணவ இலக்கிய வகைகள்" என்கிற நூலில் இதை விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.
திருப்பாவையின் முப்பது பாடல்களையும் மார்கழி மாதத்தில் அனுசரிப்பது வைணவர்கள் வழக்கம். பாவை நோன்பு என்பது பெண்கள் பழகும் ஒருவிதமான austerity. இது ஹிந்து மதத்திற்குப் பின்னால் தோன்றிய எல்லா மத நோன்புகளிலும் இருப்பதைப் பார்க்கலாம். கிறிஸ்துவர்களின் Lent. இஸ்லாமியர்களின் Ramzan - ஐயப்பன். விரதம் போன்றவைகளுடன் ஒப்பிட முடிகிறது.
எல்லா மதங்களிலும், நம்பிக்கைகளிலும் கடவுளை அடைய கொஞ்சமாவது மெய்வருத்தம் தேவை என்கிற கருத்து அடிப்படையானது.
• ஹிந்து மதத்தில், காவடி எடுப்பது அலகு குத்திக் கொள்வது, முதுகுத் தோலில் கொக்கி வைத்து தேர் இழுப்பது, ஏரோபிளேன் போலத் தொங்குவது,
• இஸ்லாம் மதத்தில் மொஹரம் விழாவின் போது சவுக்கால் , சங்கிலியால் அடித்துக் கொள்ளுதல், கத்தி போன்றவற்றால் கீறிக்கொள்ளுதல் .
• கிறிஸ்துவ மதத்தில் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் பிலிப்பைன்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் உட்பட பல நாடுகளில் ஈஸ்டர் சமயத்தில் சவுக்கால் அடித்துக்கொள்ளுதல், சிலுவையில் அறைந்து கொள்ளுதல்
போன்ற நம்பிக்கைகள் எல்லாமே தீவிர வழிபாட்டின் அம்சங்கள்தாம்.
No comments:
Post a Comment