#SERUVAAMANI
Written by Baskar Sathya
#Seruvaamani_47
'ஏய், பாலு. உன் ஆத்துக்காரி டிஸ்டிங்க்ஷன் வாங்கியிருக்காளாம். எழுபத்தேழு பர்ஸென்டாம். சம்பந்தி ஃபோன் பண்ணியிருந்தார். உடனே நந்தினியோட பேசு.'
'உனக்கும் நாளையோட ப்ராக்டிகல் முடிஞ்சுடறது. நாம ரெண்டு பேரும் மன்னார்குடி போய் அங்க ரெண்டு நாள் தங்கிட்டு அவளை அழச்சிண்டு வந்துடுவோம் என்ன?'
'அப்பா, நானே இத பத்தி பேசலாம்னு இருந்தேன். நேத்திக்குதான் என் ஃபரெண்ட் கொடைக்கானல்ல ஏதோ கெஸ்ட் ஹவுஸ் வெச்சிருக்கானாம். அங்கேயும் ரெண்டு நாள் தங்கிட்டு வருவோம்பா எல்லாரும்.'
'வெரி குட். நாங்க எதுக்குடா கொடைக்கானலுக்கு. நீயும் அவளும் போயிட்டு வாங்கோ. நான் வேணா ரெண்டு மூணு நாள் மன்னார்குடில தங்கி சுத்தி இருக்கற கோவில்லாம் பார்த்துட்டு வரேன். நீ நந்தினியோட ஒரு வாரம் கொடைக்கானல்ல தங்கிட்டு வா.'
'சரிப்பா. அப்படியே செஞ்சுடலாம்.'
நந்தினியுடன் ஃபோனில் பேசினான். வாழ்த்தினான். புதுப் பருவ மலர்கள் சந்தோஷத்தின் உச்சத்தில்.
பிறகு செருவாமணியுடன் மூர்த்தி பேசினார். வரும் விவரங்கள் தெரிவிக்கப் பட்டன. செருவாமணி தம்பதியினருக்கும் ஆனந்தம் கரைபுரண்டோடின. பல வருடங்களுக்குப் பிறகு மலர்ந்திருக்கும் புது உறவுகள் சங்கமிக்கும் நாட்கள், கேட்க வேண்டுமா என்ன மகிழ்ச்சிக்கு.
'பாலு, உன் ஆத்துக்காரிக்கு நல்ல புடவையா ரெண்டு மூணு நீயே செலக்ட் பண்ணி வாங்கிண்டு அப்படியே டிக்கெட்டெல்லாம் சௌகர்யப்படி போட்டுண்டு வா. எல்லா ஏற்பாடும் பண்ணினோன சம்பந்திக்கு தெரியப் படுத்தலாம். நானும் அடையார் க்ராண்ட் ஸ்வீட்ஸ் போய் அவாளுக்கெல்லாம் ஏதாவது வாங்கிண்டு வரேன். ஐ அம் எக்ஸைட்டட் நௌ.'
'டிஸ்பென்ஸரி?'
'அது கெடக்கு. இப்பத்தான் எல்லாரும் அலோபதிக்கு தானே போறா. ஏதோ நாலஞ்சு கிழடு கட்டைங்க என்ன மாதிரி ஆயுர்வேதத்தை கட்டிண்டு அலையறா. அவாளுக்கு மாத்ரம் ஒரு மாச கஷாயத்தையும் பொடியையும் கொடுத்துட்டு வந்தா போறது.'
ஆச்சர்யமாக இருந்தது பாலுவுக்கு.
'டிஸ்பென்ஸரி டிஸ்பென்ஸரின்னு சதா சர்வகாலம் சொல்லிண்டு எங்கேயும் கிளம்பாதவர். இன்னிக்கு என்னடாண்ணா மாட்டுப் பொண்ணு சம்பந்தின்னு லோகத்தையே மறந்திண்டிருக்கார்.'. மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டான்.
பிராயண ஏற்பாடுகளை செய்து விட்டு புடவைகளோடு வந்தான் பாலு.
'பேஷ். பேஷ். ரொம்ப நன்னா இருக்குடா எல்லாம். படிப்ப தவிர ஒண்ணும் தெரியாது உனக்குன்னு நெனச்சேன். பரவாயில்லையே. ரெண்டு மூணு வாங்கிண்டு வரச்சொன்னா ஏகப்பட்டத புடிச்சிண்டு வந்திவந்திருக்கியே!'
'ஒண்ணும் இல்லப்பா. நந்தினிக்கு ரெண்டு புடவ, ரெண்டு சாதா புடவ அதுல ஒண்ணு ஆர்கண்டி, அப்புறம் மாமாவுக்கு ரெண்டு ரேமண்ட்ஸ் பேண்ட் ஷர்ட்.'
'ஏண்டா, நந்தினி சின்ன பொண்ணாச்சே. ஆர்கண்டியெல்லாம் பொடப்பா இருக்குமாமே, உப்புமு சொல்லுவா. போடுவாளா நந்தினி.'
'யாருக்கு தெரியும் இதெல்லாம். புது டிஸைன்னு சொன்னான். வாங்கினேன்.'
'ஆமாம், ஆமாம். ஆம்பிள்ளகள் ரெண்டு பேர் புடவ வாங்கிண்டு போறதே ஆச்சர்யமா இருக்கும் அவாளுக்கு.'
சிரித்தார்கள் இருவரும். மூர்த்திக்கு அவன் எதார்த்தத்திற்கு திரும்பிக் கொண்டு வருவதே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை கொடுத்துக் கொண்டிருந்தது.
மன்னார்குடி வந்தார்கள். தடபுடல் வரவேற்பு. தெருக்காராளும் ஊர்க்காராளும் மாப்பிள்ளையை பார்க்க வருவதும் போவதுமாக அமர்க்களப் பட்டுக்கொண்டிருந்தது. ஆயிஷா மெடிகல்ஸ் பாய் தன் காரை அவர்கள் உபயோகத்திற்கு கொடுத்துவிட்டார். இரண்டு நாட்கள் மன்னார்குடியில் உள்ள கோவில்களுக்கும் வடுவூர் கோதண்ட ராமர் கோவிலுக்கும் சென்றார்கள். கிரிஜா மாமியிடம் சாப்பாடு விஷயங்களை முற்றிலும் விட்டு விட்டு உபசரிப்பிலேயே கவனம் செலுத்தினாள் விசாலம்.
ஹனிமூன் புறப்பட்டனர் பாலுவும் நந்தினியும் கொடைக்கானலுக்கு.
மூர்த்தியும் நாகப்பட்டினம், சிக்கல், நாகூர், வேதாரண்யம், ஸ்ரீவாஞ்சியம், திருவாரூர் அது இது என்று ஏகப்பட்ட லிஸ்டை வைத்துக் கொண்டு கோவில் தரிசனங்களுக்கு தயாரானார் செருவாமணி தம்பதியினரோடு.
புது இடங்களும் புது உறவுகளும் மனங்களை எப்படி குதூகலிக்க வைக்கின்றன?
தொடரும்.....
No comments:
Post a Comment