#SERUVAAMANI
Written by Baskar Sathya
#Seruvaamani_30
தை மாதம் 12ம் தேதியில் நடக்கவிருக்கும் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செருவாமணிக்கு இனம் புரியாத சந்தோஷங்களை கொடுத்துக் கொண்டிருந்தன.
மெட்ராஸ் கோபு வாத்யார் இவர்கள் எடுத்து வரவேண்டிய பொருட்களை அடுக்கி விட்டார் ஃபோனில்.
பழவகைகள், சாக்லட் வகைகள், பல்லி மிட்டாய்கள், ஆரஞ்சு மிட்டாய்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா, காய்ந்த திராட்சை, ஐந்து வகை சீர் பக்ஷணங்கள் ஒவ்வொன்றும் ஐம்பத்து ஒன்று எண்ணத்தில், திரட்டுப்பால், மாப்பிள்ளைக்கு பட்டு வேஷ்டி, சில்க் ஜிப்பா, மூன்று சவரனில் ப்ரேஸ்லெட், மூன்றரை சவரனில் செயின், இரண்டு சவரனில் மோதிரம்.
'ஒரு தாரா வாழப்பழம் வாங்கிடலாமா, சாலி. இப்பவே சொல்லி வெச்சாத்தான் நாம கிளம்பும் போது பலாப்பழம் கிடைக்கும்.'
'ஏன்னா, இதெல்லாத்தையும் சுமந்துண்டு போகறதுக்கு பதிலா, ஒரு நாள் முன்னாடி மெட்ராஸ் போய், அங்கேயே வாங்கிண்டு, நீங்க சொல்றேளே கோபு மாமாவாத்துல வெச்சுக்கலாமே.'
'ஐடியா நல்லாத்தான் இருக்கு சாலி. என்னதான் இருந்தாலும் இங்கேந்து எல்லாத்தையும் நாமளே எடுத்துண்டு போய் அங்க அவாத்துல நேரா இறங்கினா அது ஒரு தனி சந்தோஷம் டி சாலி. நாமதான் ஒரு நாப்பத்தஞ்சு பேர் போறோமே. ஆளுக்கு ஒண்ணா தூக்கிண்டா போச்சு. அப்புறம் ட்ரெயின் தான எல்லாத்தையும் சுமக்கப் போறது?'
'நாப்பத்தஞ்சு பேரா? கணக்கெல்லாம் சரியா பார்த்தேளா?'
'நன்னா இருக்கு. எத்தனை தடவ உன் கிட்ட கணக்கு கொடுக்கறது. ஊர்க்காராளே பத்து பேர் வரா. சித்தப்பா குடும்பம். எங்காத்து மனுஷா, உங்காத்து மனுஷா, அப்புறம் செல்லக்குட்டி ஃபரெண்ட்ஸ் திருச்சிலேந்து. இன்னும் நிறைய பேர்கிட்ட இத பிரபலப் படுத்தல. பண்ணினா ரொம்ப கஷ்டம் நமக்குதான். நம்ம கடைல சாமான் வாங்கற நெருக்கமானவாகிட்ட கூட பட்டும் படாமலும்தான் சொல்லியிருக்கேன். கல்யாணத்துல ஜமாய்ச்சுடலாம். சித்தப்பா கூட சொன்னா, திருஷ்டி படப் போறது, எல்லார்கிட்டேயும் பிரஸ்தாபிச்சுண்டு இருக்காதேன்னு.'
'ஏன்னா, இங்கேந்தே பஸ் வெச்சுண்டு போலாமே. தானிக்கு தீனி செலவு சரியா இருக்குமே.'
'பண்ணலாம் சாலி. ஆனா, ட்ரெயினுல அரட்ட அடிச்சிண்டு, பாட்டு பாடிண்டு, ஏதாவது ஸ்டேஷன் வரும்போது அத்தயும் இத்தயும் வாங்கிண்டு, அது ஒரு தனி சுகம் சாலி. ஆயிஷா மெடிகல்ஸ் பாயோட சொந்தக்கார பையன் தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன்ல வேல பாக்கறானாம். அவன் மூலமா டிக்கெட்டெல்லாம் ஈஸியா எடுத்துடலாமாம். எனக்கு உதவறதுக்கு மனுஷாளுக்கா கொறச்சல்.'
'போரும் போரும் உங்க அலட்டல. என்ன மெடிகல் ஷாப் பாயும் வர்ராரா?'
'கூப்டேன். அவரே இங்கிதமா வரலைனு சொல்லிட்டார்.'
'சனிக்கிழம டே எக்ஸ்ப்ரஸ்ஸுல தஞ்சாவூர்லேந்து கிளம்பறோம். கோபு வாத்யாராத்துக்கு பக்கத்துல ஒரு சின்ன சத்திரம் இருக்காம். அங்க தங்கறோம். கார்த்தால குளிச்சிட்டு கிளிச்சுட்டு நிச்சயதார்த்தம் நடக்கற இடத்துக்கு ஒம்போதரைக் கெல்லாம் போறோம்.'
'ஏன்னா சத்திரம் கித்திரம்னு பெருசா இழுத்து வுட்டுண்டிருக்கேளே?'
'பெருசா ஒண்ணுமில்லடி. முப்பது ரூபாதான் வாடகையாம், கேட்டுட்டேன்.'
குழந்தைகள் கல்யாணத்திலேதான் பெற்றோர்களுக்கு எவ்வளவு ஆர்வம்? எவ்வளவு ப்ரேமை? எப்படியெல்லாம் திட்டமிடுகிறார்கள். அவா சந்தோஷமா இருக்கணும். அவா சௌக்யமா இருக்கணும். அவாளுக்கு நல்ல விஷயங்களா நடந்துண்டே இருக்கணும். நமக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பரவாயில்ல. அவா துளி கஷ்டங்கூட படக்கூடாது.
அவாளுக்கு எத்தனை வயசானாலும் கொழந்தை. அவாளுக்கு ஒண்ணும் தெரியாது. நம்மள விட்டா அவாளுக்கு யாருமே இல்ல.
என்ன ஒரு அதீத நினைப்பு பெற்றோர்களுக்கு!
'சாலி, சீர் பக்ஷணத்துக்கு யார் கிட்ட சொல்லியிருக்க?'
'அதான்னா, கிரிஜா மாமி கிட்ட. பைங்காநாட்டுலேந்து இங்க போன வருஷம் ஜாகை வந்தாளே. ஆம்படையான் போய் ஒண்டிகட்டையா கஷ்டப் படறா. இங்க இருக்கறவா கிட்ட வஜ்ரமா ஒட்டிண்டுட்டா. தெவசம் திங்கள்னா அந்த மாமிதான் திருப்பாற்கடல் தெருவுல.'
'அந்த மாமிக்கு பக்ஷணத்துக்கு வேணுங்கற மளிகைய நம்ம கடைலேயே எடுத்துக்க சொல்லு. அட்ட கணக்கு பொட்ட கணக்கெல்லாம் பார்க்க வேண்டாம்.'
'உங்க தாராளம் குணம் நேக்கு தெரியாதா? நானே அந்த மாமிகிட்ட அதத்தான் சொன்னேன்.'
'என்ன கிண்டல் பண்ணு. நம்ம பண்ற தர்மம் நந்து குட்டிய எப்படி வைக்கப் போறது பாரு.'
'சாலி, அந்த கிரிஜா மாமிகிட்ட நைஸா கேட்டு வை. நந்து கல்யாணமாகிப் போனா அவளுக்கு அங்க சமச்சு போட மெட்ராஸ் போவாளான்னு.'
'மொதல்ல இந்த எடத்த விட்டு கிளம்புங்கோ. ஏன்னா எப்ப பார்த்தாலும் நந்து குட்டி சிந்தனையாவே இருக்கேளே. எனக்கு கூட மாட ஒத்தாசையா இருக்க யாரையாவது வைக்க தோணித்தோ ஒங்களுக்கு? பொண்ணுன்னா அப்படி என்ன ஒசத்தியோ. என்னோட அரும ஒருநாளைக்கு தெரியும்.'
வேண்டுமென்றே ஒரு சிணுங்கல். செருவாமணி கெஞ்சல். நடு நடுவே வாசல் கதவு சாத்தியிருக்கான்னு ஒரு பார்வை வேற.
'நீ தாண்டி எனக்கு முதல்ல.'
'ஓஹோ. நந்துக்கு முன்னாடி மட்டும் இத சொல்லிடுங்கோ பார்க்கலாம்.'
சந்தோஷங்கள் கூடும்போது அன்னோன்யமும் சேர்ந்துண்டு வயசானாலும் விளையாட்டையும் கொடுத்துடறது.
தொடரும்....
No comments:
Post a Comment