Friday, January 14, 2022

செருவாமணி 26

 செருவாமணி 26

Written by Baskar Sathya 

'அம்மா நான் ஆத்தில் இல்லை'

சோர்ந்துபோன முகத்துடன் கொல்லைப் பக்கத்திலிருந்து வந்த நந்தினியின் குரல்.

நல்லவேளை சித்த நாழி முன்னாடி நடக்கவில்லை என்ற மகிழ்ச்சியிருந்தாலும் வயிற்றை வலிக்குமே என்ற ஆதங்கமும் விசாலத்திடம் இருந்தது.

'ஏண்டி வயத்த வலிக்கறதா?'

'மத்யானத்திலேந்தே வலிக்கறது.  பொறுத்துண்டு இருந்தேன்.  இப்ப பொறுக்கற வலியாத்தான் இருக்கு.'

'மாத்திரை வெச்சிருக்கியோன்னோ?'

'இல்லம்மா. கொண்டு வரலை.'

'ஏன்னா, நந்து ஆத்துல இல்ல.  மாத்திரை இல்லையாம்.  சித்த வாங்கிண்டு வரேளா?'

'நல்ல வேளை, அவா முன்னாடி இல்ல.'. செருவாமணிக்கும் சற்று சந்தோஷம்தான் இந்த விஷயத்தில்.

'சரி மாத்திரை பேரு என்ன?  எழுதிக்கொடு.  இன்னிக்கு ஞாயித்துக் கிழமை.  செண்பகா தியேட்டர் பக்கம் போனா ஆயிஷா மெடிகல்ஸ் மட்டும்தான் தொறந்திருக்கும்.  வாங்கி கொடுத்துட்டு கோவிலுக்கு போறேன்.  எப்படி இருந்தாலும் சந்தனக்காப்பு முடிச்சு தீபாராதனை பார்க்க முடியாது.  நீ கொழந்தைய பார்த்துக்கோ.'

'பெரால்கன்.  மாத்திரை பேரு.'

'நான் ஒண்ணும் படிக்கலையே.  சீட்டுல எழுதிக்கொடு.  நான் ஏதாவது மாத்திரைய வாங்கிண்டு வந்துடப் போறேன்.'

'இதோட விட்டமின் மாத்திரையும் வாங்கிக்கோ.  எது வேணா இருக்கலாம்.'

'டாக்டர் கொடுத்த மாத்திரையே சொல்லேண்டி.'

'பேர் மறந்துட்டேன்பா.  ப்ரூஃபன்தான் முக்கியம்.  அதோட எந்த விட்டமின் மாத்திரையும் போட்டுக்கலாம்னு டாக்டர் ஏற்கனவே சொல்லியிருக்கா.'

ஓட்டமும் நடையுமாக ஆயிஷா மெடிகல்ஸ் சென்றார்.

'வாங்க ஐயரே.  பொண்ணு நல்லா படிச்சிகிட்டு இருக்கா.  நம்ம வீட்டு நூர்ஜஹான் பாப்பாவ பத்தி சொல்லிகிட்டே இருக்கும்.  நீங்க வேணா பாருங்க, உங்க புள்ள கலெக்டரா இந்த ஊருக்கே வரும்.'. ஓனர் ரஃபிக் பாய் இவரைப் பார்த்தவுடன்.

மாத்திரை வருவதற்குள் நந்தினியின் திருமணம் பற்றி சிறிது பேசினார் செருவாமணி.

'ஏன் ஐயரே.  புள்ள நல்லா படிக்குமாமே.  அதுக்குள்ள ஏன் கல்யாணம்?'

'இப்ப பேச நேரமில்ல பாய்.  அப்புறம் சாவகாசமா வரேன்.'

வீடு திரும்பும்போது வீட்டு வாசலில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

'யாராயிருக்கும்?'

உள்ளே சென்றவருக்கு அதிர்ச்சி.  டாக்டர் மூர்த்தியும் அவர் பையனும் சேரில் அமர்ந்திருந்தனர்.

கொல்லைப் புறத்தில் நந்தினியின் முனகல் அழுகை கேட்டுக் கொண்டிருந்தது.

'பையன் மூக்குக் கண்ணாடியை இங்கேயே வெச்சுட்டு போயிட்டான்.  அவாளெல்லாம் பெரிய கோவில்ல சாமி தரிசனம் செய்ய சொல்லிட்டு நான் இவனோட வந்தேன்.'

என்ன பேசுவதென்று தெரியவில்லை செருவாமணிக்கு.  தான் மருந்து வாங்கி வருவதற்குள் விசாலம் ஏதாவது நந்தினி பற்றி பேசியிருந்தால்?  குழப்பம் வேறு.

'நான் ஏதாவது மாற்றி சொல்லிவிட்டால்?'

'கொஞ்சம் இருங்கோ.  நான் பின்னாடி போயிட்டு வரேன்.'

ஒரு படபடப்போடு கொல்லைப் பக்கம் சென்று மாத்திரைகளை நந்துவிடம் கொடுத்தார்.

'நான் அவாள உள்ள கூப்பிட்டு உட்காரச் சொன்னேன்.  ஒண்ணும் பேசலை.  அவா கேட்டா எதையும் மறைக்க வேண்டாம்.  சொல்லிடுங்கோ.  அவாளும் டாக்டர்கள் தானே'. விசாலம் கொல்லைப் பக்கம் வந்து குசுகுசுத்தாள்.

'மன்னிச்சுக்கணும்.  நந்தினிக்கு உடம்பு சரியில்ல திடும்னு.  அதான் மாத்திரை வாங்க போனேன்.'

'என்ன ஒடம்புக்கு?  பொண் பார்க்கும் போது நன்னாத்தானே இருந்தா?  கொழந்தைய கூப்பிடறேளா, நானே என்னன்னு விசாரிச்சு மருந்து சிபாரிசு செய்யறேன்.'

செருவாமணி சற்று கலங்கிய கண்களோடு நந்தினின் பிரச்சனையை சொன்னார்.  பார்த்த டாக்டர்கள் சொன்னதையும் ஒன்று விடாமல் சொன்னார்.

'கவலைப் படாதீங்கோ.  இது ஒரு பெரிய விஷயமே இல்லை.  ஆயுர் வேதத்திலேயே குணப்படுத்திடலாம்.  உங்க பொண்ண பார்த்த டாக்டர் சொன்னது பொதுவா எல்லா டாக்டரும் சொல்றதுதான்.  ஆனா, பெரியவளாயி அஞ்சு வருஷத்துக்கு மேல ஆறது இல்லையா.  இந்த வலியோட வேற வருஷக் கணக்கா வேற இருக்கா.  அதனால எதுக்கும் கர்பப்பை வீக்கா இருக்கான்னு செக் பண்ணிட்டா நல்லது.  மெட்ராஸுல எனக்கு தெரிஞ்ச நல்ல ஜைனகாலஜிஸ்டுகள் இருக்கா.  வாங்கோ கொழந்தைய அழச்சிண்டு.'

'அவ ஹாஸ்டல்ல தங்கி படிச்சிண்டு இருக்கா.  எப்ப சௌகர்யப்படும்னு தெரியல.'

'புரியறது.  நான் ஊருக்கு போய் சீரக லேகியம் அனுப்பறேன்.  அத சாப்பிண்டு வரச் சொல்லுங்கோ.  அப்புறம் ஓமத்தையும் கிராம்பையும் ஒரே அளவுல எடுத்துண்டு அரச்சு வெச்சிக்கோங்கோ.  ஒரு ஸ்பூன் கால் டம்ளர் மோர்ல கரச்சு ரெண்டு வேள சாப்பாட்டுக்கு பிறகு போட்டு சாப்பிட்டுண்டு வரச் சொல்லுங்கோ.  சரியாயிடும்.  முடிஞ்சபோது மெட்ராஸ் அழச்சிண்டு வாங்கோ.'

செருவாமணி சற்று உணர்ச்சி வசப்பட்டு அழ ஆரம்பித்து விட்டார்.  அவரால் கட்டுப் படுத்த முடியவில்லை.  டாக்டர் மூர்த்தி அவரை தன் தோளில் சாய்த்துக் கொண்டு முதுகைத் தடவிக் கொடுத்தார்.

'என்ன இது பச்ச கொழந்தையாட்டம்.  இது ரொம்ப சாதாரண பிரச்சனைதான்.  தைரியமா இருங்கோ.'

'கர்பப்பைக்கு ஒண்ணும் ஆயிருக்காதே?  நான் படிக்காம அசமஞ்சமா ஏதோ இருந்துட்டேன்.  நந்து மேல என் உசுரையே வெச்சிருக்கேன்.'

செருவாமணியின் தழு தழுத்த குரலை கேட்டு விசாலம் சமையலுள்ளிலிருந்து வந்தாள்.

'என்னன்னா இது?  இப்படி நொடிஞ்சு போறேளே!  மாமா சொன்ன மாதிரி செஞ்சா போறது.  எல்லாம் சரியாயிடும் நந்தினிக்கு.'

'சரி.  நாங்க வரோம்.  தைரியமா இருங்கோ.  நான் சொன்ன மாதிரி ஓமம் கிராம்பு பொடி பண்ணி மோர்ல கரச்சு சாப்டுண்டு வர சொல்லுங்கோ.  நானும் ஜீரா லேகியம் அனுப்பறேன்.'

டாக்டர் மூர்த்தி பேசிக் கொண்டிருந்தபோது ஒரு வார்த்தை அவர் பையன் பேசவில்லை.

கிளம்பினார்கள் மூக்குக் கண்ணாடியை எடுத்துக் கொண்டு.

ஒரு விதத்தில் செருவாமணிக்கு சற்று நிம்மதி.  ஏதோ வயித்து வலிய மறச்சு கல்யாணம் பண்ணிட்டான்னு இனி யாரும் அவாத்துல சொல்ல முடியாது.

அவர்ரகள் சென்றவுடன் முகம் கை கால்களை அலம்பிக் கொண்டு ஆனந்த விநாயகர் கோவிலுக்கு கிளம்பினார்.

'என்ன லேட்?'. வாசலில் இவரைப் பார்த்த குருக்கள் கேட்டுக் கொண்டே சந்நிதிக்கு சென்றார்.  செருவாமணி அவரைத் தொடர்ந்தார்.

சந்தனக்காப்பை எவ்வளவோ முறை பார்த்திருந்தாலும் இன்று என்னவோ பிள்ளையார் வித்தியசமாக கொள்ளை அழகுடன் தெரிந்தார்.  எல்லாவற்றிற்கும் மனம் தானே?

'ஆத்துலேந்து யாரும் வரலையா?'

'இல்ல.  பொண்ணு ஆத்துல இல்ல.  தனியா விட்டுட்டு வரமுடியாதோண்ணோ?'

சங்கல்ப்பம்.  நந்தினி பெயரில்.  அர்ச்சனை.  தீபாராதனை.  கைங்கர்யம் செய்த செருவாமணிக்கு ஆனந்த வினாயகர் மாலை போட்டார்.

பிரசாதங்கள் கொடுத்தார் ஒரு சின்ன பேப்பர் பார்ஸலுடன்.

'பத்து பதினைந்து நேவேத்ய கொழக்கட்டை வெச்சிருக்கேன்.'

நத்தினிக்கு கொழக்கட்டைனா உசுரு.  பேருக்கு ஒண்ணு ரெண்ட அப்பாம்மாக்கும் பாட்டிக்கும் கொடுந்துட்டு பாத்தி்த்தோட ஓடும் கொல்ல பக்கத்துக்கு.

இன்னிக்கு கொல்ல பக்கத்திலேந்து உள்ள வரமுடியாது.  

'இப்படி பண்ணலாமா பிள்ளையாரப்பா?'

விடை கிடைக்காத வினாவை கேட்டு விட்டு பிரசாதங்களோடு நடையை கட்டினார் செருவாமணி.

வரும் வழியெல்லாம் சிந்தனைகள்.

'புள்ளையாண்டான் ஒரு வார்த்தை கூட பேசலையே. தெகையுமா இந்த வரன்?'

'என்னோட சந்தனகாப்ப ஏத்துண்ட பிள்ளையாருக்கு அந்த புள்ளையாண்டான் கிட்ட சம்மதத்தை வாங்கத் தெரியாதா என்ன?'

தொடரும்....

No comments:

Post a Comment